பெயரழிந்த வரலாறு” பண்டைய வரலாறு பற்றி 19,20-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த விவாதங்களை மையமாக வைத்து வரலாறு என்றால் என்ன? வரலாறு எவ்வாறு உருவாக்கப்படுகிறாது, தரவுகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன போன்ற கேள்விகளைக் கேட்டது. “எண்பதுகளின் தமிழ் சினிமா” அதையே பண்பாட்டு தளத்தில் செய்தது. ‘எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்’ அதே வழியில் சம கால அரசியலை, குறிப்பாக திராவிட இயக்கதையும் தலித் அரசியல் இயக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது.

ஸ்டாலினின் முன்னுரை புத்தகத்தின் நோக்கத்தைச் சொல்கிறது, “தலித் வரலாற்றை எதிர்மறையாக அமையும் விமர்சன வரலாறாகவே சுருக்கிவிடக் கூடிய அபாயத்திலிருந்து விலகி தனக்கான சுயமான தரவுகளிலிருந்து தலித் வரலாற்றியல் தன்னை இங்கு கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தலித் வரலாற்றாஇ விரிந்த தளத்தில் விவாதிப்பதே கூட இன்றைய திராவிட இயக்க விடுபடல்களுக்கான பதிலாக இருக்க முடியும்”.

“பரந்த சமூக அனுபவங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ‘உண்மை’களின் பதிவே வரலாறு என்று ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரலாற்றிற்கு வெளியே நிறுத்தப்பட்ட அனுபவங்களைத் திரும்ப அழைத்து வரௌவதன் மூலம் நிலவி வரும் வரலாற்றை எதிர்க் கொள்ள விரும்புகின்றன இக்கட்டுரைகள்”

என்று வாசக முன்னுரையில் சொல்கிறார் ஸ்டாலின்.

“வரலாற்றிற்கு வெளியே நிறுத்தப்பட்ட அனுபவங்களை” என்றவுடன் பல சராசரி வாசகர்கள் தவறாக ஸ்டாலின் ஏதோ அடிப்படைகளே அற்ற கற்பனைக் கட்டுக் கதைகளை வரலாறு என்று ஜோடித்து விடுகிறார் என்று நினைக்கிறார்கள். இது மிகத் தவறு.

ரெட்டியூர் பாண்டியனின் கதை ஸ்டாலினின் வரலாற்று முறைமைக்கு நல்ல எடுத்துக் காட்டு. காட்டு மன்னார்குடிப் பேருந்து நிலையத்தின் வாயிலில் ஒரு மார்பளவு சிலை ‘ரெட்டியூர் பாண்டியன்’ என்கிற பெயர் பொறிக்கப்பட்டு நிற்கிறது. அச்சிலை பிரபலமான யாருடையச் சிலையும் அல்ல. ஸ்டாலின் அச்சிலையின் கதையை விவரிக்கிறார். (இக்கட்டுரை தினமலரில் வெளி வந்திருக்கிறது.  https://m.dinamalar.com/weeklydetail.php?id=15028

என் போன்ற பலருக்கும் தெரியாத, இன்னும் அநேக பேருக்கும், ஒரு செய்தி தமிழ் நாட்டில் சிறிதும் பெரிதுமாக பல இடங்களில் தலித்துகள் ‘இழி தொழில் செய்ய மறுப்பு’ போராட்டங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இது வரை நான் படித்த எந்த வரலாற்று நூலும் அது பற்றி பேசியதில்லை. எண்பதுகளில் கூட தலித் தலைவர் எல். இளைய பெருமாள் அத்தகையப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். “செத்த மாட்டெடுக்க மறுப்பு, பிணக்குழி தோண்ட மறுப்பு” போன்ற போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன.1962-ஆம் ஆண்டு முதல் காட்டுமன்னார்குடி வட்டாரத்தில் யாரும் பறையடிக்கப் போகக் கூடாது, உள்ளூரில் பறை அடிக்கப்படவும் கூடாதென்று என்று தீர்மானம் இயற்றப்பட்டது. 1985 ஆகஸ்டு மாதம் தீ மிதி விழாவுக்கு பறையடிக்க யாரும் வராததால் வெளியூரில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட ஊர் கலவர பூமியானது. கலவர்த்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த பாண்டியன் என்பவர் கொல்லப்பட்டார். போலீஸுக்கோ, எதிர் தரப்புக்கோ எந்த பாதகமுமில்லை. அப்படி இறந்த பாண்டியனின் நினைவாக பாடல் இயற்றப்பட்டு இன்றளவும் ஒப்பாரியாகவும், வயற்காட்டில் நடவுப் பாட்டாகவும் பாடப்படுகிறது. அக்கட்டுரையில் இளையபெருமாளின் போராட்டங்கள் குறித்து சொன்னாலும் ஸ்டாலின் தெளிவாக அப்போராட்டங்களால் பாண்டியன் உந்த பட்டாரா என்பதற்கு ஆதாரம் இல்லை என்கிறார். மேலும் அந்த சிலை பாண்டியனின் உருவமாக கூட இருக்காது, அது ஒரு நினைவுச் சின்னம் தான் என்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலினை வரலாற்றாய்வாளராக நான் வியப்பது இங்கு தான். ஒரு சிலை இருக்கிறது, அதற்கென்று மக்களிடையே ஒரு கதை இருக்கிறது ஆனால் அது வெறும் கதையாக இருந்தால் அதற்கு மதிப்பிராது. அதையொட்டி நாம் வரலாறு என்று புரிந்துக் கொள்ளும் தரவுகளுடைய நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தி வரலாற்றின் இடை வெளியை நிரப்புகிறார். அவர் குறிப்பிடும் பாடல் இன்றும் புழக்கத்தில் இருப்பது ஒரு வகை தரவு தான். இக்கட்டுரை வாயிலாக ஒரு வாசகன் அறிந்துக் கொள்ளக் கூடியச் செய்திகள் அநேகம். சரி, பாண்டியன் வரலாற்றையே ஒதுக்கி விட்டு பார்ப்போமே. இளையபெருமாள் நடத்திய போராட்டங்கள் பொய் அல்லவே!! அப்போராட்டங்கள் பற்றி பொதுவில் பலரும் அறியாததே நமக்கு செய்திகளும் வரலாறும் எப்படி கட்டமைக்கப்படுகிறதென்று சொல்கிறதே. அதுவும் 1980-களில் இப்படிப்பட்ட போராட்டங்களின் தேவைகள் சமூகத்தைப் பற்றி ஒரு சித்திரத்தையும், இங்கு தமிழகத்தில் சமூக நீதியின் நிலைப் பற்றிய புரிதலையும் அளிக்கிறதே.

அரிஜன சேவா சங்க செயல்பாட்டாளர் ஆனந்ததீர்த்தரின் கதையை ஸ்டாலின் ஒரு துப்பறிவாளனின் ஊக்கத்தோடு தேடித் தேடி தொகுத்து, “தலித்துகள் மத்தியில் காந்தி தொண்டர்கள் செயற்பட்டிருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கக் கூட யாருமில்லை. அப்படியே இருந்தார்கள் என்று அறியப்பட்டாலும் அவற்றை உள் நோக்கமாக ‘கட்டுடைத்து’விட்டு, அது பற்றி தலித்துகளின் நினைவுகள் எவை என்று ஆராயமலேயே விட்டிருக்கும் அரசியல் வரலாறுகளே இங்குண்டு”. இதை பேஸ்புக் விவாதத்திலேயே கண்டிருக்கிறேன். ஸ்டாலின் சொல்வது நிஜம்.

“இந்தி எதிர்ப்புப் போராட்டம்: தலித் தலைமையும் தமிழ் அடையாளமும்” கட்டுரையும், “டி.எம். நாயர் கலந்துகொண்ட ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம்” கட்டுரையும் முக்கியமானவை. ஸ்டாலின் எவ்வித சார்பும் இன்று எழுதுபவர் என்பதற்கு சான்று மீனாம்பாள் குறித்து திராவிட இயக்க சார்புடைய நம்பி ஆரூரனின் மேற்கோள்களையும் நேர்மையாகவே கொடுத்திருப்பது. ஓரிடத்தில் இந்தி எந்திர்ப்பு போராட்டத்தின் போது ராஜாஜி வீட்டின் முன் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை பெரியார் நிறுத்தியதையும் ஸ்டாலின் பதிவுச் செய்கிறார்.

ஏன் ஸ்டாலினின் எழுத்து இன்று முக்கியமானது? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் என்று பலரும் சொல்வது, ‘தாளமுத்து-நடராசன்’ என்கிற இருவரை. இருவரில் தலித் இளைஞரான நடராசனே முதல் உயிர் நீத்தவர். அப்புறம் ஏன் வரிசை மாறியது? தலித் சமூகத்துக்கும் பொதுப் பிரச்சனையான இந்தி எதிர்ப்புக்கும் எப்படி இணைப்பு ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? நீதிக் கட்சிக்கு ஆரம்ப காலத்தில் தலித் சமூகமும் எம்.சி.ராஜாவும் எப்படி ஆதரவளித்தார்கள்? நீதிக் கட்சி, காங்கிரசுடனான தலித் சமூகத்தின் உறவுகள் எப்படி இருந்தன? ஏன் டி.எம். நாயரை எம்.சி.ராஜாவும் அயோத்தி தாசரும் உயர்த்திப் பேசினார்கள்? என்று பல கேள்விகளுக்கான விடைகள் ஸ்டாலினின் புத்தகம் மூலம் “சான்றுகளோடு” கிடைக்கின்றன.நீதிக் கட்சி, காங்கிரசுடனான தலித் அரசியலின் உறவைப் பற்றி சொல்லும் போது ஸ்டாலின் அநேகமாக நிகழ் காலத்தையும் மனத்தில் வைத்து எழுதுகிறார், “தலித்துகளின் அரசியல் உறவு நிலையற்றதாக மாறிக் கொண்டிருப்பதற்குத் தலித்துகள் மட்டுமே காரணமல்ல”.


மூன்று தகவல்கள் இங்கு குறிப்பிடக் கூடியன.

“சிதம்பரம் தாலுகா போர்டுக்கு ஆதி திராவிடரை ஏன் நியமிக்கவில்லை என்று எம்.சி.ராஜா கேட்ட போது, ‘தாலுகா போர்டு அலுவலகம் சாதி இந்து ஒருவரின் கட்டடத்தில் இயங்கி வருவதால், அக்கட்டத்தில் ஆதி திராவிடர் நுழௌவதை விரும்பாததா; பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை’ என்றார் அமைச்சர்”

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை “கொச்சைப்படுத்த” நினைத்த அரசு அப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட அநேக தலித்துகளைச் சுட்டிக் காட்டி, “அற்பக் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களென்றும் சிறையில் ஒழுங்காகச் சோறு கிடைக்குமென்பதாலும் பல அரிஜனங்கள் கைதாகியிருந்ததாக ராஜாஜி மட்டுமல்லாமல் பிராமணரல்லாத தமிழரான டாக்டர் சுப்பராயனும் சட்ட மன்றத்திலேயே கூறினார்.”

“1920 முதல் 1927 வரை நீதிக் கட்சி ஏழு முறை அமைச்சரவைகளை அமைத்தும் ஒரு முறை கூட அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளைத் தலித்துகளுக்கு வழங்கியதில்லை. 1929-ஆம் ஆண்டில் தான் ஓர் இக்கட்டான சூழலில் எம்.சி.ராஜாவை சட்டமன்ற துணைத் தலைவராக்கியது.”

Eugene Irschick-இன் “Politics and Social Conflict in South India: The Non-Brahman Movement and Tamil Separatism 1916-1929” மிக அற்புதமான புத்தகம். தலித் சமூகத்துக்கும் நீதிக் கட்சிக்குமிடையே நடந்த உரசல்களை 1969-இலேயே இர்ஷ்சிக் எழுதியிருக்கிறார். ஆனால் அப்புத்தகத்தில் எம்.சி.ராஜாவுக்கு கிடைத்த இடம் ஒன்றரை பக்கம். 1969-இல் ஓர் அமெரிக்க ஆய்வாளர் இவ்வளவு தெளிவாக எழுதியிருப்பதே ஆச்சர்யம். இர்ஷ்சிக்கைத் தாண்டி செல்ல நமக்கு முரசொலி மாறன், நெடுஞ்செழியன் எழுதிய வரலாறுகள் போதாது அந்த இடத்தில் நம் தேவையை இன்று பூர்த்திச் செய்வது ஸ்டாலினின் புத்தகம்.


  • அரவிந்தன் கண்ணையன்
நூல் தகவல்:
நூல்: எழுதாக் கிளவி - வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்
வகை : கட்டுரைகள்
ஆசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு 2017
பக்கங்கள் : 208
விலை : ₹  225
கிண்டிப் பதிப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *