தமிழர்களுக்கு சினிமா உயிர்மூச்சு. அரை நூற்றாண்டுக்கு மேலாக திரைத்துறையோடு சம்பந்தப்பட்டவர்களே ஆளும் மாநிலம். தற்போதய முதல்வர் உட்பட. சினிமா எங்கோ வானில் இருந்தா விழுகிறது? சினிமா நம் சமுகத்தை பிரதிபலிக்கிறது. அதே சமயம் நம் சமூகத்தை கட்டமைக்கவும் செய்கிறது. இவ்விரண்டிலும் துலக்கமாக பண்பாட்டு வரலாறு, சாதியம், பெண்கள் குறித்த கட்டமைப்புகள் நிகழ்ந்த சினிமாக்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.“எண்பதுகளின் தமிழ் சினிமா” என்று தலைப்பிட்டாலும் 90-களையும் சேர்த்தே கணக்கில் எடுக்கிறார் ஸ்டாலின். அந்த 90-களின் அடிப்படை எண்பதுகளின் சினிமா என்பதால் அத்தலைப்பு.

ரஜினி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோடு, தமிழ் நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வர், கொண்டிருந்த எதிர்ப்பையும் ரஜினியின் வெற்றிப் படங்களான ‘மன்னன்’, ‘படையப்பாவையும்’ ஸ்டாலின் தொடர்பு படுத்தி பார்க்கிறார். ரஜினியின் திரைக்கு வெளியான பெண் முதல்வரை எதிர்க்கும் நிலைக்கும் திரையில் தன் சுயமாக நிற்கும் பெண்களை எதிர்க்கும் பிம்பத்துக்கும் தொடர்புண்டு.

தமிழ் பண்பாட்டு தளத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களான நீலியையும், கண்ணகியையும் ‘மன்னன்’, ‘படையப்பா’, ‘பாட்ஷா’ படங்களின் கதையம்சங்களோடு ஸ்டாலின் விவாதிக்கிறார். காப்பிய கண்ணகி எப்படி ‘பத்தினி’யாக முன்னிறுத்தப்பட்டாள் என்பதை சுட்டி படையப்பாவில் நீலாம்பரி நிராகரிக்கப்பட்டு வேலைக்காரப் பெண்மணி முன்னிறுத்தப்படும் ஒற்றுமையை ஸ்டாலின் சுட்டிக் காட்டுகிறார்.இத்தொகுப்பில் அற்புதமான ஒரு கட்டுரைல் “பொதுமகளும் குலமகளும்: 1990 சினிமாக்களில் நடந்த ஊடாட்டம்”. தமிழ் சினிமாவில் வெகு காலம் நிலவி வந்த தேவதாசி சித்தரிப்பை விவரிக்கிறார். “மூவலூர் ராமாமிர்தத்தின் நாவலின் தலைப்பே கூட தேவதாசி மரபை எதிர்மறையாக குறிப்பிடும் வகையில் ‘தாசிகளின் மோசவலை அல்லது மதிப்பெற்ற மைனர்’ என்றே அழைத்தது. இவ்விடத்தில் முற்போக்கு இயக்கம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் திமுகவினரின் சினிமாவிலும் இத்தகைய சித்தரிப்பே தொடர்ந்தது. பின்னாளில் ஜெயலலிதாவை வசந்தசேனை என்று மேடைகளில் விளிக்கப்பட்டதும் நடந்தது. 1990-களின் ஆரம்பத்தில் வெளி வந்த கிழக்கு வாசல், தெய்வ வாக்கு, சின்னத்தாயி ஆகியப் படங்களில் பொது மகளிரின் சித்தரிப்பு குடுமபத்தை சிதைப்பவர்கள் என்கிற நிலையில் இருந்து மாறுகிறது.

இன்னொரு கட்டுரையில் “பல்வேறு அம்மன்களும் வழிபாடுகளும் சாதிமாறிக் காதலித்ததால் கொல்லப்பட்டுத் தெய்வமாக்கப்பட்ட பெண்களின் கதைகளாக இருக்கின்றன” என்பதை சுட்டிக் காட்டி திரைப்படங்களில் மரபு கதைகள் எப்படி மாற்றமடைகின்றன என்றும் விளக்குகிறார். ‘துளசி’, தெய்வவாக்கு’, ‘சின்னத்தாய்’ படங்களில் பிரதான கதாபாத்திரங்களை “முன்பிருந்த தெய்வ நிலையோடு விட்டுவிடாமல் அதிலிருந்து மனித நிலைக்கு மாற்றிவிட்டிருக்கிறார்கள். மூன்று இடத்திலும் காதல் தான் மீட்பை நிகழ்த்துகிறது. அது யாரோடு கொண்ட காதல் என்பது முக்கியமானது. அவ்விடத்தில் தெய்வ நிலையிலிருந்து மனித நிலைக்கு கொணருபவர்களாக தலித் கதா பாத்திரங்கள் இருக்கின்றன”.

பாரதிராஜாவின் மண் வாசனை படம் பற்றி ஸ்டாலின் எழுதுகிறார், “நிஜத்தில் அறுத்துக்கட்டும் கலாச்சாரமுடைய ஒரு இனக்குழுவை சித்தரித்த படம். முத்துப் பேச்சி இன்னொருவரை மணம் செய்யாமல் இருப்பதை தமிழ்பண்பாடு என்று உயர்ந்தோர் பண்பாடாக்குகிறார் (பாரதிராஜா). பாலியல் தூய்மையைப் புனிதமாக்குகிறார்.

தேவர் மகன் படத்தின் மிகப் பிரபலமான வசனம், “போங்கடா, போய் புள்ளக் குட்டிங்களை படிக்கை வைங்கடா”. “படித்த அவனை பாரம்பர்யம் என்னவாக்கியது என்பதை அவன் ஏனோ அனுபவமாக்கிக் கொள்ளவில்லை” என்று ஆசிரியர் சுட்டிக் கேட்கிறார்.

தமிழ் சினிமா பற்றி பேசும் போது திரையிசைப் பாடல்கள் பற்றி பேசாமலிருக்க முடியாது. அவ்வகையில் தமிழ் சினிமாவில் வட்டாரப் பாடல்கள் சினிமாவில் ராஜாவும் தேவாவும் எடுத்தாண்டதை ஸ்டாலின் தனிக் கட்டுரையில் சொல்கிறார்.

சினிமா என்பது தமிழருக்கான மிக முக்கியமான பண்பாட்டு அடையாளம். அவ்வடையாளத்தில் மக்களிடையேப் புழங்கும் தொன்மன்ங்கள், சாதியம், பெண்கள் பற்றியப் பார்வைகள், பட்லர்கள் பற்றிய பரிகாசங்கள் எல்லாம் அங்கம் வகிக்கின்றன. ஸ்டாலின் பெண்களின் ஒடுக்குதல் பற்றி அதிகமாக எழுதியது இக்கட்டுரைகளில் தான் என்று நினைக்கிறேன்.சினிமாக்களில் எத்தனையோ சித்தரிப்புகள் மதம், சார்ந்து தான் இருக்கின்றன. ‘நாயகன்’ படத்தில் வரும் படித்த, பயந்த சுபாவம் உள்ள ஐயர் கதாபாத்திரம் முதல் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் வரும் கிறிஸ்தவர்கள் பற்றிய ஸ்டீரியோடைப், அப்புறம் இஸ்லாமியர் குறித்து வரும் சித்தரிப்புகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.சினிமா பற்றி தொடர்ச்சியாக எழுதும் சிலர் இப்புத்தகம் குறித்து விரிவான விமர்சனம் எழுதினால் இன்னும் நன்று. ஒரு கமல் ரசிகனாக சின்ன வருத்தம் அட்டைப் படத்தில் கமல் இல்லாதது.


  • அரவிந்தன் கண்ணையன்
நூல் தகவல்:
நூல்: எண்பதுகளின் தமிழ் சினிமா –
திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்ச்சமூக வரலாறு
வகை : கட்டுரைகள்
ஆசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம்
வெளியீடு: நீலம் பதிப்பகம்
வெளியான ஆண்டு 2020
பக்கங்கள் :
விலை : ₹  150
அமெசானில் நூலைப் பெற

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *