இன்னும் துவங்காமல் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்த பெரிய உரையாடலை தொடங்குவதற்கான முன்னெடுப்பு இந்நூல்.
கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பே இந்த புத்தகத்தை வாசிக்க ஒரு தோழியின் மூலம் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நேரத்தில் ஏதோ காரணத்தினால் வாசிக்க முடியாமல் போனது. அன்றிலிருந்தே எசப்பாட்டைத் தேடிக்கொண்டே இருந்தேன். கண்டடைந்தேன். வாசித்து வியந்தேன்.
முதல் கட்டுரையிலேயே ஆண்கள் சிறுவயதில் ஓடு கடைக்கு என்ற அம்மாவின் குரலில் துவங்கி வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கிடைக்கும் பட்டம் ஆணாதிக்கம்.
அட ! இது ஆண்களோடு பேசுவோம் என்று முகப்பில் போட்டிருந்ததே என்ற யோசனையோடு வாசிக்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்த கட்டுரைகள் மனதில் நின்றது மட்டுமல்ல, சில இடங்களில் வலி, சில இடங்களில் வேதனை, சில இடங்களில் துரோகம், சில இடங்களில் ஆமாம் மிக சரிதானே! சில இடங்களில் உண்மை, சில இடங்களில் அடடே! இப்படியும் நடந்து இருக்கிறதே! இன்னும் பலப்பல கேள்விகள், சில இடங்களில் விடைகளும் கண்டிருக்கின்றேன் பல பல கேள்விகளுக்கு.
நிர்பயா வழக்கில் வல்லுறவு செய்தவன் அவன் அப்படி செய்ததற்கு கூறிய காரணம் படித்தபோது உன்னை எல்லாம் என்ன செய்தால் தகும் என்று மனதில் தோன்றியது. தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்று தோன்றியது.
தாம்சன் ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஆய்வுக்குப் பின் வெளியிட்ட பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. சிக்மண்ட் ஃப்ராய்டு சொன்ன ஒரு உலகப் புகழ்பெற்ற வாசகம் உண்டு கணவன் என்பவன் ஒரு பெண்ணுக்குக் கிடைத்த பதிலி தான். ஆண்கள் எல்லாம் ஒருபோதும் ராமரும் அல்ல பெண்களெல்லாம் சூர்ப்பனகைகளும் அல்லர்.
ராமசாமி நாடார், ராமசாமி தேவர், ராமசாமி உடையார் என்று இருப்பதைப் போல கல்யாணி நாடார், கற்பகம் உடையார் என்று எப்போதும் இருந்ததில்லை. ஜாதியும் ஆண்மையில் ஓர் அங்கமாகி நிற்கிறது.
போர் வந்துவிட்டால் எதிரி நாட்டுப் பெண்களை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்வது தேசியக் கடமை ஆகிவிடுவதை வரலாறு பதிவு செய்கிறது. இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான தமிழ் பெண்களின் கதறல் ஒலி இன்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்க வில்லையா? இங்கெல்லாம் ஆண்மை தேசியத்தை முகமூடியாக அணிந்து வந்தது.
கிபி 15ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் ஒரு நூற்றாண்டு போரில் நாட்டை காப்பாற்றுவதற்காக போரில் பங்கேற்க விரும்பிய இளம்பெண்ணான ஜோன், பெண் என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆண் வேடம் பூண்டு படையில் சேர்ந்தார். அவரின் வீரத்தையும் போர்கலைத் திறனையும் கண்டு வியந்தது உலகம். போரில் வென்றது பிரான்ஸ். ஆனால் அவர் ஆண் என்று பொய் சொல்லி படையில் சேர்ந்தவள் என்பதற்காக அவளை விசாரித்து, மரண தண்டனை விதித்தது. உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்.
இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் வெள்ளையத் தேவனின் மனைவி தான் வளர்த்த காளையை அடக்கிய வீரனைக் பிடித்தவள். அவளைப் பற்றி மீண்டும் மீண்டும் நம் மனங்களில் கட்டமைக்கப்படும் பிம்பம் ஏதுவாக இருக்கிறது வெள்ளையத்தேவன் போருக்குப் புறப்படும் போது வெற்றித் திலகமிட்டு வழி அனுப்பாமல் போகாதே! போகாதே! என் கணவா! என்று கூறியதுதான். அதையும் தாண்டி அவள் ஆண் வேடம் பூண்டு வெள்ளை அறைக்குள் புகுந்து தன் கணவனைக் கொன்ற தளபதி கொன்று தன் கூந்தலை முடிந்தவுடன் கட்டபொம்மன் கதையில் தடம் பதித்திருக்கிறார். அதை மறைத்து வரலாறு.
வரலாற்றில் பெண்கள் என்று வாய் திறந்து இருந்தால் காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாய், நேருவின் மனைவி கமலா, நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட், கொஞ்சம் முந்தைய வரலாறு என்றால் ஜான்சி ராணி, வேலு நாச்சியார் என்று ஒரு பட்டியலை வாசித்து துணை கதாபாத்திரங்களாக சில பெண்களைக் காட்டி விடுவார்கள். வரலாற்றுக் காலங்களில் கூட பெண்கள் சில இடங்களில் மதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இரண்டு நோபல் பரிசு பெற்ற மேடம் கியூரிக்கு பிரான்ஸ் நாட்டின் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பெண் என்ற காரணத்தால்.
ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கும் 1962-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் டிஎன்ஏவின் வடிவத்தை எக்ஸ்ரே புகைப்படம் எடுத்து அது இரட்டை சுருள் வடிவம் கொண்டது என்பதை முதன் முதலாக கண்டுபிடித்தவர் ரோசலின்ட் பிராங்க்ளின் என்ற பெண் விஞ்ஞானி தான் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ரோசலின்ட் பிராங்கிளின் எழுதி வைத்திருந்த குறிப்புகளை வைத்தே அவர்களுடைய அந்த ஆராய்ச்சியின் வெற்றி அமைந்தது. ஆனால் எந்த இடத்திலும் அவர்கள் ரோசலின்ட் அவர்களைக் குறிப்பிடவும் இல்லை அவர்களுக்கு நன்றியும் கூறவில்லை.
யசோதரை கைவிட்ட கௌதம சித்தார்த்தன், ரத்னாவளியைக் கைவிட்ட துளசிதாசர், சகுந்தலையை கைவிட்ட துஷ்யந்தன், சுவர்ச்சலாவைக் கைவிட்ட ஹனுமன் என்று பட்டியல் நீள்கிறது. தங்கள் திருமண பந்தத்தை மதிப்பளித்து இருந்தால் இதை செய்திருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு கட்டுரையும் கோட்டோவியம்…. ! நான் சொல்லாமல் விட்ட கட்டுரைகளை நீங்கள் வாசித்தால் வாசிப்பின் அர்த்தம் கிடைக்கும்.
கண்டிப்பாக ஒலித்தே ஆகவேண்டும் வீடுகளிலும் வெளிகளிலும் அரச சபைகளிலும் எசப்பாட்டு..!
நூல் : எசப்பாட்டு
பிரிவு: கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
வெளியான ஆண்டு : 2019
விலை: ₹ 190