2009, மே மாதம் ஈழத்தில் போர் முடிவுக்கு வந்தது. 2011, ஜுலை மாதம் நான் தமிழீழம் சென்றேன். போர் நிகழ்ந்த இடங்களைப் பார்த்தேன். போரில் பாதிக்கப்பட்ட மக்களையும், ஒன்றிரண்டு புலி வீரர்களையும் பார்த்துப் பேசினேன். இளைஞர்களுடன் கலந்துரையாடினேன். இந்த அனுபவங்களை www.eelanation.com இணையத்தில் எழுதினேன். இந்தக் கட்டுரைகள், இலங்கையில் வெளிவரும் உதயன் நாளிதழில் மறுபிரசுரம் ஆனது. நம் காலத்தைய கடைசிப் போரின் பதிவு இது.

  • சூ.ம.ஜெயசீலன்

 


அணிந்துரை : கவிஞர் காசி ஆனந்தன்

 

கடலோடு ஈழத்தமிழர்களின் செந்நீர் கலந்த முள்ளிவாய்க்கால் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தன.

தவத்திரு அருள்தந்தை சூ.ம.ஜெயசீலன் தமிழீழம் செல்கிறார்.

கொழும்பில் இறங்கி, யாழ்ப்பாணம் நோக்கிய கொடிய பயணம்.

“எப்போது வேண்டுமானாலும் நாம் நிறுத்தப்படலாம். தமிழர் தம் சட்டைப் பையில் அடையாள அட்டை இல்லையென்றாலோ – அடையாள அட்டையில் திருப்தி இல்லையென்றாலோ சிக்கல் தான். ஒவ்வோர் இராணுவ வீரனையும் கடந்து செல்வதென்பது தமிழர்களுக்குத் தினந்தோறுமான அறுவைச் சிகிச்சை” என்கிறார் அருள்தந்தை ஜெயசீலன்.

சிக்கல்களையெல்லாம் கடந்து தமிழீழத்தில் அவர் முதலில் கால் வைத்த சிற்றூர் வசந்த கிராமம். 

“1983 ஜுன் 23-ஆம் தேதி 80 வீடுகளைக் கொண்ட வசந்த கிராமம் திறக்கப்பட்டது. இன்று அதற்கான தகவல் கல் மட்டுமே இருக்கிறது. அந்த ஊர் அங்கு இல்லை”.

முள்ளிவாய்க்காலுக்குப் பின் அழிந்து போன ஒட்டுமொத்தமான தமிழீழத்தின் முகம் வசந்த கிராமம்

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரோடு நின்ற ஊர் மக்களை 17.07.2011 இல் அழைத்துக் கலந்தாய்வு நிகழ்வொன்றை நடத்துகிறார் அடிகளார்.

“இப்போது கலாச்சாரச் சுரண்டல் நடந்துகொண்டிருக்கிறது. மீள் குடியேற்றம் நடைபெறுகிறது என்பதெல்லாம் அபத்தம். சொந்த வீடு இருந்தும் இன்னும் அந்நியமாகத்தான் நிற்கிறோம். முன்பு யாழ்ப்பாணம் வீர சிங்கம் மண்டபத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது. அதே வீர சிங்கம் மண்டபத்தில் அண்மையில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. சிங்களம் கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. சிங்களம் தெரிந்தால் தான் வாழலாம் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். குடிப்பழக்கமும், ஆபாசக் குறுந்தகடுகளும் இங்கே பலரின் மூளையைச் சிதைத்துவிட்டன. கடைசிக்கட்டப் போர் ஆரம்பிக்கும் முன்பே குப்பை மேட்டிலும் பேருந்து நிறுத்தத்திலுமாகப் பல்வேறு இடங்களில் ஆபாசக் குறுந்தகடுகள் கேட்பாரற்றுக் கொட்டிக் கிடந்தன.”

விம்பி வெதும்பி நின்ற மக்கள் முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய தமிழீழத்தின் தொடர் அடிமை வாழ்வை அடிகளாரிடம் விளக்குகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் சாவுக்குத் தப்பிய போராளிகளையும் பொதுமக்களையும் சந்தித்து அருள்தந்தை ஜெயசீலன் அவர்கள் பெற்றுள்ள வாக்குமூலங்கள் நம்மை முழு அளவில் உடைத்து நொறுக்குகின்றன.

“நாங்கள் கண்ணாரப் பார்த்தோம். ஒரு தாய் அழுத குழந்தையை மடியில் கிடத்தி பாலைக் குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கிறது. எங்கிருந்தோ வந்த குண்டு தாயின் கழுத்தை முறிக்க, அவள் பிணமாய் விழுகிறாள். தாய் இறந்தது குழந்தைக்குத் தெரியவில்லை. பசி ஆறாத குழந்தை பால் நின்ற தாயின் மார்புக் காம்பினைச் சப்பிப் பார்த்துவிட்டுக் கதறி அழத் தொடங்கிற்று…”

இன்னொரு வாக்குமூலம்…

“ஆரம்ப காலத்தில் எங்கள் பிள்ளைகள் மூக்கைப் பிடித்துக்கொண்டு பிண நாற்றத்தைத் தவிர்க்கப் பார்த்தார்கள். காற்றே தன்னைப் பிணங்களுடன் கரைத்துவிட்ட பிறகு நாசியைப் பிடிப்பதென்பது நாடியை நிறுத்துவதற்குச் சமம் என்பதை உணர்ந்து எங்களைப் போலவே அவர்களும் சுவாசிக்க ஆரம்பித்தார்கள். எங்கும் பிணங்கள். நாங்கள் பார்க்காத உடல்களே இல்லை. கால் இடறும் இடமெல்லாம் பிணங்கள்.”

மதங்கொண்டு தமிழர் உயிர் குடித்த சிங்கள இன வெறியர் கொலை வெறியாட்டம் பற்றிய மற்றொரு பதிவு.

“நாங்க தலை இல்லாத உடல்களைப் பார்த்தோம். தலை பிளவுண்ட உடல்களும் கிடந்தன. குடல் வெளிவந்த மனிதர்களைப் பார்த்தோம். ஆடை எரிந்து நிர்வாணப் பிணங்களாகக் கிடந்த பெண்களைப் பார்த்தோம்.”

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழர்களை முற்றிலுமாக நொறுக்கிப் போட்டிருப்பதால் இனியும் அவர்களால் விடுதலைப் போராட்டத்தைத் தொடர முடியுமா? சாவுக்குத் தப்பி, உறவினர்களின் பிணங்கள் மீது நடந்து கரையேறிய அந்த மக்களிடமே கேட்டுவிடுவது என்று முடிவு செய்கிறார் அடிகளார்.

“எல்லாம் முடிந்தது போல் இருக்கிறீர்களே! எதிர்காலம் குறித்த நம்பிக்கை உங்களிடம் உண்டா?”

குமுறி வெடிக்கிறது ஒரு குரல்.

“நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. எங்கள் பிள்ளைகளிடம் வரலாற்றைக் கதைப்போம். தமிழர்களாகிய நாங்களே இலங்கை மண்ணின் பூர்வீக மக்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்வோம். எங்களுக்கு ஆட்சி வேண்டும் என்பதை உரக்கக் கூறுவோம். இப்போதைய அமைதி சிறிய ஓய்வாகக் கூட இருக்கலாம். எங்களுடைய விடுதலையை நிச்சயம் நாங்கள் மீட்டெடுப்போம்.”

விடுதலை நெருப்பு இன்றும் அணையாதிருக்கும் தமிழீழ மண்ணை நம் விழிமுன் நிறுத்துகிறார் அடிகளார்.

இளைஞராயினும் மாந்த நேயமும் விடுதலை உணர்வும் சுமந்து தமிழீழம் சென்று இழப்புகளின் நடுவில் நின்ற அந்த மக்களை அணைத்து ஆறுதல் தந்து திரும்பியுள்ள இறை அருளாளர் ஜெயசீலன் அடிகளாரை வணங்குகிறேன்.

எழுத்தாற்றலைவிட உங்கள் நூலில் நான் காண்பது அருளாற்றலையே!  

 

நூல் தகவல்:
நூல் : ஈழயுத்தத்தின் சாட்சிகள்

ஆசிரியர் : சூ.ம. ஜெயசீலன்

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விலை :  ரூ. 130

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *