இருண்ட காலக் கதைகள் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் அ.மார்க்ஸ் எழுதிய முன்னுரை.


ந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதிலுள்ள பதினாறு கதைகளில் தமிழ்ச்செல்வனின் ‘என்ன கதை இது’ எனும் சிறுகதை தவிர பிற அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகளும் கூட. சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின் “படை” யும் கூட முகமது பின் துக்ளக் காலத்தைப் பேசினாலும் துக்ளக்கள் இன்றும் உள்ளனர் எனச் சொல்லும் படைப்புத்தான். அந்த வகையில் நாம் வாழும் இக் காலம் ஒரு இருண்ட காலம் என்றாகிறது.. இதற்கெல்லாம் என்ன முடிவு, நாம் எங்கு போய்க் கொண்டுள்ளோம் என நம் யாருக்கும் புரியவில்லை என்பதைத்தான் இந்தப் படைப்புகள் அனைத்தும் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

சம்சுதீன் ஹீராவின் “மயானக் கரையில் வெளிச்சம்” கதை தம் குடியுரிமையை நிறுவ இயலாத ஒரு முஸ்லிம் குடும்பம் சந்திக்கும் கொடுமைகளை விவரிக்கிறது. தந்தை, மனைவி, மகள் என மூன்றுபேர்கள் உள்ள அந்த முஸ்லிம் குடும்பம் தம் குடியுரிமையை இந்த அரசு திருப்தி கொள்ளும் அளவிற்கு நிறுவ இயலாத துயர் தாங்காமல் அந்த மனைவி கணவனையும், குழந்தையையும் விட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். குடியுரிமையை நிறுவ இயலாமல் குழந்தையைச் சுமந்து கொண்டு மறைந்து திரியும் அந்தக் கணவன் இறுதியில் அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்படும் நிலையில் மகளை நண்பன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு அகல்கிறான். சரி. அந்த நண்பந்தான் என்ன செய்ய முடியும். அந்தக் குழந்தையின் குடியுரிமையை அவன் எப்படி நிறுவுவான்? குழந்தையை ஒப்படைத்த அந்தத் தந்தை, அதை வாங்கிக் கொண்ட நண்பன், கதையைப் படித்துக் கொண்டுள்ள நாம் என யாரிடமும் பதிலில்லை. ஒரு வேளை நரேந்திரமோடி அல்லது இந்தக் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் அமித்ஷா இவர்களிடமாவது பதிலிருக்குமா?. அவர்களிடம் உள்ள ஒரே பதில் ‘தடுப்புக் காவல் முகாம்கள்’ தான்.

சம்சுதீன் ஹீராவின் இந்தக் கதை எதிர்காலம் இப்படி இருக்கும் எனச் சொல்வதாக நினைத்துக் கொண்டு இந்தக் கதையை வாசிக்காதீர்கள். அஸ்ஸாமில் ஏற்கனவே குடியுரிமைக் கணக்கெடுப்பு முடிந்து விட்டது. அங்கே தடுப்புக்காவல் முகாம்கள் செயல்படுகின்றன. இன்னும் பல முகாம்கள் இப்போது கட்டப்படுகின்றன. அப்படிக் கட்டப்படும் முகாம்கள் சிலவற்றைப் பற்றி நான் படங்களுடன் என் முகநூல் பக்கங்களில் பதிவிட்டுள்ளேன். அப்படிக் கட்டப்படும் முகாம்களில் கொத்தனார்களாகவும், சித்தாள்களாகவும் பணி செய்பவர்கள் யார் தெரியுமா? நாளை அந்த முகாம்களை நிரப்பப் போகும் இந்தக் “குடியுரிமை அற்ற” மக்கள்தான். ஏற்கனவே தடுப்புக் காவலில் இருக்கும் மோமீரான் நெஸ்ஸா என்கிற முஸ்லிம் பெண்ணின் கதை சில மாதங்களுக்கு முன் வெளிவந்த என் குறுநூல் ஒன்றில் (NRC என்ன செய்யும்) உள்ளது. மொமீரான் நெஸ்ஸாவுக்கு இரண்டு குழந்தைகள். மொமீரான் மட்டும் முகாமில் அடைக்கப்படுகிறாள். கணவனும் குழந்தைகளும் வெளியில். கணவன் இறந்து போகிறான். மொமீரான் இறந்த கணவனின் உடலை இறுதியாக ஒருமுறை பார்க்க வேண்டுமானால் நீதிமன்ற ஆணை பெற வேண்டும். அதற்கு வழக்குரைஞர் ஒருவரை அணுக வேண்டும். அவருக்கு ஃபீஸ் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல நீதிமன்ற ஆணையைப் பெற எடுத்துக்கொள்ளும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் இறந்தவனின் உடலை ஏதேனும் ஒரு மருத்துவமனை மார்ச்சுவரியில் குளிர் பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். அதற்குப் பணம் கட்ட வேண்டும்.

மொமீரான் நெஸ்ஸாவால் கடைசி வரை இறந்த கணவனின் உடலைப் பார்க்க இயலவில்லை. அவளது சகோதரனின் வீட்டில் அந்தக் குழந்தைகள் இப்போது அடைக்கலமாகியுள்ளன. கதை முடியவில்லை. இப்போது அந்தச் சகோதரனுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மொமீரான் நெஸ்ஸா நீதிமன்றத் தலையீடொன்றில் ஒரு சிறிது காலம் இப்போது வெளியில் வந்துள்ளாள். அவள் இருந்த முகாமில் இரண்டே வேளைகள்தான் உணவு தரப்படுகிறது. இரவில் கால்களை நீட்டிப் படுக்க இயலாத குறுகிய கொட்டடியில்தான் அவள் தூங்க வேண்டும். இதை நான் முதல்முறை வாசித்த போது டால்ஸ்டாயின் “புத்துயிர்ப்பு” நாவலில் தண்டனை உறுதி செய்யப்பட்ட கத்யூஷா அவளது சிறைக் கொட்டடியில் சக கைதிகளின் அனுதாபச் சொற்களைக் கேட்டுக் கொண்டு தலை குனிந்து அமர்ந்திருப்பாளே அந்தக் காட்சி என் நினைவில் நீண்டு கண்களில் நீர் கசிய வைத்தது.

ஒரு முன்னுரைக்குப் பொருத்தமற்ற அளவுக்கு அதிகமாக நான் பேசிக் கொண்டுள்ளதை உணர்கிறேன். மன்னியுங்கள்.

கரீமின் ‘இன்று தஸ்தகீர் வீடு’ சிறுகதையும் எனக்குப் பல நினைவுகளைத் தூண்டின 2016 இல் மதுரையில் நெல்பேட்டை முதலான பகுதிகளில் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை நாங்கள் சந்தித்தோம். அது குறித்த அறிக்கை என் இணையப் பக்கத்தில் (amarx.in) உள்ளது. விரிவாகச் சொல்ல இங்கு இடமில்லை. முகம்மது அலி ஜின்னா என்றொரு வழக்குரைஞர், அவர் மீது ஏழு வழக்குகள் போடப்பட்டு ஆறு வழக்குகளில் குற்றங்கள் நிறுவப்படாமல் அவர் விடுதலை ஆகி இருந்தார். அதில் தமிழ் வீரன் என்றொரு இந்து முன்னணி அமைப்புத் தலைவரை அவர் கொல்ல முயன்றார் என் ஒரு வழக்கு. செய்தியை நாளிதழ் ஒன்றில் வாசித்த அந்தத் தமிழ்வீரனே நீதிமன்றத்தில் தோன்றி அது பொய்வழக்கு எனச் சொன்னபின் அந்த வழக்கிலிருந்து ஜின்னா விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் இப்படி விடுதலை ஆவதற்குள் அவர்கள் என்ன மாதிரியெல்லாம் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். கரீம் ஒரு வழக்குரைஞரும் கூட. ஒரு வகைமாதிரியான (typical) காவல்துறை (NIA) அதிகாரி ஒருவரை இதில் அவர் சித்திரிக்கிறார். இந்த அதிகாரிகள் எப்படியெல்லாம் வந்து தொல்லை செய்வார்கள், அவர்களிடையேயான உரையாடல்கள் எவ்வாறு அமையும் என்பதை எல்லாம் கரீம் மிக நுண்மையாகப் பதிவு செய்கிறார்.

ஆதவன் தீட்சண்யாவின் “காமிய தேசத்தில் ஒரு நாள்”, உதய சங்கரின் “துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்”, இரா. முருகவேளின் “ஒரு எழுத்தாளரின் ஒப்புதல் வாக்குமூலம்”, புலியூர் முருகேசனின் “கழற்றி வைக்கப்பட்ட மகளின் தலை” ஆகியன வழமையான எதார்த்தவாதக் கதை சொல்லும் முறையிலிருந்து வழுவியவை. இத் தொகுப்பில் உள்ள பிர்தௌஸ் ராஜகுமாரனின் “இருண்மை”. பொள்ளாச்சி அபியின், “புயலின் மறுபக்கம்” முதலானவை வழமையான எதார்த்த வடிவில் கதை சொல்வன. இப்படியான கதைகளில் கதை தொடங்கும் போதே அதன் போக்கும் முடிவும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஏனெனில் அவற்றில் விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏராளமாக இன்று கண்முன் நிகழும் கொடூரங்கள். ஆனால் இவைதான் அன்றாட நிகழ்வுகள்தானே என ஒரு எழுத்தளன் சமகாலக் கொடுமைகளிலிருந்து விலகி நிற்க முடியாது.

இப்படியான சூழலில்தான் எழுதுபவர்கள் புதிய உத்திகளைக் கையாள வேண்டி உள்ளது. குடும்பத்துக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித்தந்த சொந்த மகளாயினும் சாதியில் குறைந்த ஒருவரைத் திருமணம் செய்யும்போது அதை ஏற்காமல் இருவரையுமோ இல்லை மகளை மட்டுமோ கொன்றுவிடும் பெற்றோர்களின் கதைகள் சமகால நிகழ்வுகள். அவற்றை அப்படியே முன்வைப்பது ஒரு செய்தி ‘ரிப்போர்டிங்’ என்கிற அளவில் தேங்கிவிடாதா என்கிற நிலையில் உரிய தாக்கத்தை விளைவிக்கவும், வாசிப்பவர்களின் சிந்தையில் சில கேள்விகளை எழுப்பவும் நாம் வழமையான எதார்த்த வடிவங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. ஆதவன் தீட்சண்யாவின் கதையில் “தேசிய பள்ளியறை சேவா சமிதி”, “உத்தம சந்ததி திட்டம்”, “ஆரோக்கிய பாரதி அமைப்பு” என்றெல்லாம் வாசிக்கும்போது அவை நகைச்சுவை என்பதைத் தாண்டிப் பொருள் கொள்கின்றன. அரசு தற்போது அறிவித்துள்ள கல்விக் கொள்கையைச் சற்றுப் பாருங்கள் எத்தனை அமைப்புகள், எத்தனை விதமான ஒழுங்காற்று நிறுவனங்கள் புதிது புதிதாக அதில் முன்வைக்கப்படுகின்றன.

“அந்தரங்கம் புனிதமானது’ என்றார் ஜெயகாந்தன். இன்று அந்தரங்கம் என்பது அர்த்தமற்றதாகி விட்டது. நினைவிருக்கட்டும் “ஆரோக்ய சேது” என்கிற ‘ஆப்’ அரசு ஊழியர்களுக்குக் கட்டாயமாக்கப்படும் காலம் இது. சுருங்கச் சொல்வதானால் அதீத கற்பனைகள் தம் அதீத நிலையை இழக்கும் காலம் இது.

மலையோர நகரத்துக் காற்றை எல்லாம் டொகோடா நாட்டைச் சேர்ந்த டுமீலா நிறுவனத்துக்கு விற்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என   முருகவேள் சொல்வதெல்லாம் நகைச்சுவை அல்ல. 2000 ஆண்டிலேயே மக்களிடம் எந்த ஒப்புதலும் பெறாமல் வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க அரசு கல்வி, மருத்துவம், நீர், காற்று உட்பட்ட அனைத்து சேவைத் துறைகளையும் உலக வர்த்தகத்திற்கு அர்ப்பணம் செய்யும் GATS ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பொருள் விற்பனைக்கான GAT ஒப்பந்தத்தின் ஊடாக தன் வணிகக் கொள்ளையை உலக அளவில் எந்தத் தடையும் இல்லாமல் விரிவாக்கி ருசிகண்ட உலக முதலாளியம் அதே வடிவில் சேவைத் துறைகளுக்கான GATS ஒப்பந்தத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டாம் கட்ட ஒப்புதலுக்கு நைரோபியில் மாநாடு கூட்டிய போது மீண்டும் இங்கே பா.ஜ.க ஆட்சிதான் இருந்தது. நரேந்திரமோடி அரசின் வணிக அமைச்சர் அதில் கையொப்பமிடத் தயாராகச் சென்றார். ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகளே அதற்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் இறுதி ஒப்புதல் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. எனினும் முதற்கட்ட ஒப்புதலில் அன்றைய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கையொப்பமிட்டது இன்றும் தொடர்கிறது. இன்று உள்நாட்டிலேயே மோடி அரசு நீரை விற்பனை செய்யும் திட்டத்தை அறிவித்து விட்டது. முருகவேள் சொல்வதுபோல காற்று விற்பனை ஆகும் காலம் தொலை தூரத்தில் இல்லை.

இளங்கோ கிருஷ்ணனின் “படை” அன்றைய துக்ளக் ஆட்சியை (கி.பி 1324 – 1351)  இன்றைய துக்ளக்களின் ஆட்சியுடன் ஒப்பிடுகிறது. அண்டை நாடுகளுடனான போர்ப் பயத்தைச் சுட்டிக் காட்டி இராணுவத்தைப் பெரிய அளவில் வலிமையாக்கி வரியைக் கூட்டியது, நாணயத்தைச் செல்லாததாக்கி மக்களைச் சொல்லொணாத் துயரங்களுக்கும், இழப்புகளுக்கும் ஆளாக்கியது, நகரங்களின் பெயர்களை மாற்றியது, நடந்தே வந்து மக்கள் செத்தொழிந்தது என இப்படிப் பல்வேறு வடிவங்களில் அன்றைய துக்ளக் ஆட்சிக்கும் இன்றைய துக்ளக்களின் ஆட்சிக்கும் இடையேயான ஒப்புமையை அவர்களே கூட மறுத்துவிட இயலாது.

ஆனால் அன்றைய துக்ளக்கிற்கும் இன்றைய துக்ளக்குகளுக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. அவன் தனது தவறை ஏற்று மீண்டும் பழைய முறைகளுக்குத் திரும்பினான். இன்றைய துக்ளக்குகள் இதுவரை தங்களின் நாணயச் செல்லாமை ஆணையின் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை.

அகிலாவின் ‘மாகாளி’ நிர்பயா படுகொலை மற்றும் வழக்கு ஆகியவற்றின் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு பெண்ணிய நோக்கிலான படைப்பு. நிர்பயா வழக்கில் ஒரு சிறுவன் இளையோர் சிறையில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டான். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறையிலேயே தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வழக்குகளின் ஊடாக நான்கைந்து ஆண்டு காலம் தாமதித்தே மற்ற நால்வரும் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டனர். நிர்பயாவின் பெற்றோர், குறிப்பாக அவரது தாய் அந்த வழக்கைத் தொடர்ந்து சென்று விரைவாக அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்தார்.

மனித உரிமைகள் மற்றும் மரண தண்டனை ஒழிப்பு ஆகிய நோக்கில் அவர்களுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் எனும் கருத்து முன்மொழியப் பட்டபோது, அது பெரிய அளவில் பெண்கள் தரப்பில் எதிர்க்கப்பட்டது. தவிரவும் ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்கிற வகையில் வழக்கு விசாரணை நீடிக்கப்படுவது குறித்து வெளிப்படையாகப் பெண்கள் தரப்பிலிருந்து கண்டனக்கள் வந்தன. மனித உரிமைப் போராளிகள் தவிர பெரும்பான்மை ஆண்களின் கருத்தும் கூட விரைவில் அவர்கள் தூக்கிலேற்றப்பட வேண்டும் என்பதாதாகத்தான் இருந்தது. அகிலாவின் இந்தக் கதையில் இந்த நால்வரில் ஒருவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர்கள் அந்தக் குறிப்பிட்ட குற்றவாளியை சிறைக்குள்ளேயே மிகத் தந்திரமாக விஷம் வைத்துக் கொல்கின்றனர். உயர் வர்க்க / சாதிப் பெண் தயங்கிய நிலையில் அடித்தள சாதி / வர்க்கப் பெண் அதைச் செய்து முடிக்கிறாள்.

மரண தண்டனையை ஆதரிப்பவர்களைப் பொருத்த மட்டில் அவர்களின் நியாயங்கள் இரண்டு. கொலைக்குக் கொலை என்பது ஒன்று. மற்றது மரண தண்டனை என்பதனால் கொலைக் குற்றங்கள் குறையும் என்பது. இரண்டாவதாகச் சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது குறித்து மறைந்த வழக்குரைஞர் மோகன் குமாரமங்கலம் முதலானோர் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அதை நிறுவியுள்ளனர்.

கொலைகளைப் பொருத்தமட்டில் அதைச் செய்தவர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்தமான சமூகத்திற்கும் அதில் பொறுப்பு உண்டு. நிர்பயா கொலையில் மிக மூர்க்கமாக வன்முறையில் ஈடுப்பட்டவன் அந்தச் சிறுவன் என்றொரு குறிப்பு உண்டு. ஒரு சின்னஞ் சிறுவனுக்கு அத்துணை வன்மம் எப்படி உருவனது? மிகச் சிறிய வயதில் வறுமை காரணமாகப் பெற்றோரை விட்டுப் பிரிந்து, தன் வயதொத்தவர்களுடன் பள்ளியில் கழிக்க வேண்டிய வயதில்  நகர வாழ்க்கையில் அவனை விட வயது மூத்தவர்களுடன் வாழ நேர்ந்தவன் அச்சிறுவன். அவனிடம் வெளிப்பட்ட வன்முறையின் பின்னணியில் அவன் வளர்ந்த இந்தச் சூழலுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம். மொத்தத்தில் எந்தக் குற்ற நடவடிக்கையிலும் சமூகத்திற்கும் ஒரு பங்குண்டு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது..

வனக் குடிகளை அவர்களின் வாழ்க்கைச் சூழலிலிருந்து பிரிப்பது எத்தனை கொடுமை என்பதை மிக அழகாகச் சொல்கிறது வே.பிரசாந்த்தின் “காடர் குடி”. ஒரு முஸ்லிம் மாட்டுத் தரகருக்கும் ஒரு இந்துக் குடியானவருக்கும் உள்ள ஒரு அற்புதமான உறவையும்  இன்றை வகுப்புவாத அரசியலில் அப்படியான உறவுகள் எல்லாம் எவ்வாறு பாழாக்கப்படுகிறது என்பதையும் அரும்பாவூர் இதாஹிர் பாட்சாவின் படைப்பு முன்வைக்கிறது. சாதி மீறிய திருமணதிற்காக ஊர்விலக்கு செய்யப்பட்ட ஒரு எளிய உழைப்பாளியின் நிலை இன்றைய கோரோனா தாக்குதல் ஏற்படுத்தும் பாதிப்பை எப்படியெல்லாம் விரிவாக்குகிறது என்பதைச் சொல்கிறது ஷக்தியின் கதை.

பண்டைய கிராம சமூக அமைப்பைக் கொண்டாடுபவர்கள் நம்மிடையே உண்டு. ஆனால் நமது சாதிய அமைப்பு இறுக்கமாகக் கடைபிடிக்கப் படுகிற ஒரு அமைப்புதான் நமது கிராம சமுதாயங்கள். ஒற்றைக் குடியாக இருக்கும் ஊர் வண்ணார்கள் இந்தக் கிராம சமுதாய முறையில் எப்படி எல்லா வகையிலுமான கொடுஞ் சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள் என்பதை தமிழ்ச் செல்வனின் “என்ன கதை இது” – எனும் சிறு கதை முன்வைக்கிறது. வண்ணார்கள் மீதான சாதீயச் சுரண்டல்களை இமயம் அவர்களின் மிக முக்கியமான படைப்பான ‘கோவேறு கழுதைகள்’ தவிர வேறு யாரும் அதிகம் எழுதியதில்லை. தலித் சமூகங்களுக்கு இடையேயான சாதியச் சுரண்டலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என அதன் மீது சில எழுத்தாளர்கள் விமர்சனம் வைத்ததும் உண்டு. தமிழ்ச்செல்வனின் இக் கதை ஆதிக்க சாதியினர் எவ்வாறு சில பத்தாண்டுகளுக்கு முன்வரை இம் மக்களை இழிவாக நடத்தினர் என்பதை விளக்குகிறது. எந்திரமயம், நவீனத்துவம் ஆகியன இன்று பெரிய அளவில் வண்ணார்கள் மீதான இந்த சாதீயச் சுரண்டலை எவ்வாறு பெரிய அளவு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதற்கு இந்தக் கதை வித்திடுகிறது.

சல்மாவின் ‘இருண்மை’ வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹின் பா போராட்டப் பின்னணியில் சொல்லப்படும் ஒரு சிறுகதை. முஸ்லிம்களின் பிரச்சினை ஒன்றிற்காக முஸ்லிம்கள் நடத்தும் இந்தப் போராட்டத்தின் நியாயத்தை மாFற்றுச் சமூகத்தினர் எதிர்கொள்ளும்போது ஆண்களைக் காட்டிலும் பெண்கள் சிறுபான்மை மக்களின் இந்தப் பிரச்சினையை ஆதரவுடன் அணுகுவதைச் சுட்டிக் காட்டுகிறது.

மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இந்தச் சூழலைச் சமகால எழுத்தாளர்கள் பதினான்கு பேர்கள் எவ்வாறு காண்கின்றனர் என்கிற வகையில் இத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அ.மார்க்ஸ்,

ஆகஸ்ட் 14, 2020

நூல் தகவல்:

நூல் : இருண்ட காலக் கதைகள்

பிரிவு: சிறுகதை தொகுப்பு

தொகுப்பாசிரியர் : அ.கரீம்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2020

விலை: ₹200

அமெசான்னில் நூலைப் பெற: 

 

 

எழுதியவர்:

2 thoughts on “இருண்ட காலக் கதைகள்

  1. “இருண்ட காலக் கதைகள்” எனும் எனும் தலைப்பு கொரோனா காலமாகச் சொல்லப்படலாமா? அது அப்படி இருந்தால் அந்தக் கால கட்டத்தில் 14 கதைகள்தான் எழுதப்பட்டிருக்குமா? அ.மார்க்ஸின் விமர்சனத்தைப் பார்க்கையில் அனைத்துக் கதைகளும் கொரோனா சூழலைத் தொடவில்லை என்பது தெரிகின்றது. புகலிடத்தில் வாழும் Mano Sinnathurai தான் “கொரோனா வீட்டுக்கதைகள்” எனும் தொகுப்பை முதலில் புகலிடத்திலிருந்து வழங்கியுள்ளார். ஆனால், இந்த நோய் தொடங்கியபின் எழுதிய கதைகளைக் கொரோனா கதைகளாகவும், இருண்ட காலக் கதைகளாகவும் கொள்ளமுடியுமா? இந்த கால கட்டத்தில் அனைத்து விதமான கதைகளும் வந்ததென்பதுதான் உண்மை.

    “மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இந்தச் சூழலைச் சமகால எழுத்தாளர்கள் பதினான்கு பேர்கள் எவ்வாறு காண்கின்றனர் என்கிற வகையில் இத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.” என்கின்றார் அ.மார்க்ஸ். இந்தக் குறிப்பு பலமற்றதாகத்தான் உள்ளது. இருண்ட காலம் எப்போதும் உள்ளது. “இருண்ட காலக் கதைகள்” எனும் தலைப்பு ஓர் தனித்துவ அர்த்தத்தையும் தராதது.

  2. இதில் கொரானோ கால கதைகள் எதுவுமே இருக்காது (ஒன்றை தவிர அதுவும் சாதி அரசியல் பேசுகிறது ).
    மற்றபடி 17எழுத்தாளர்கள் சமகால பல்வேறு நெருக்கடிகளை பதிவு செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *