நமக்குத் தெரிந்த அமெரிக்கா, நிஜமான அமெரிக்கா அல்ல. அதன் பள பளப்புக்குப் பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்குப் பின்னால் இருக்கும்சறுக்கல்கள், அதன் ஜனநாயகத்துக்குப் பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் பணபலத்துக்கு பின்னால் இருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்கு பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள் இவையெல்லாம்தான் நிஜமான அமெரிக்கா என்று ஒரு எள்ளுருண்டை சுருக்கத்தை உலக உருண்டை சைஸுக்கு விரித்துக் காட்டும் இந்த நூல் நிஜமாகவே நமக்கு அமெரிக்க அரசியல் வரலாற்றை வாசிக்கவே தூண்டும். அந்த அளவுக்கு இந்த புத்தகத்தின் கணபரிமாணமும் 800 பக்க அளவிற்கு மேல் அதன் அரசியல் பேசுகிறது.
அமெரிக்காவைப் பற்றி அடிக்கடி வியந்து வியந்து பேசும் நம் மக்கள் மேற்கூறிய அதன் பளபளப்பான மேல்தோலை மட்டுமே பார்த்து வருகின்றனர் என்பதற்கும் இந்தப் புத்தகம் அதன் தோலை உரித்து அதன் ரத்தம், சதை, எலும்புகளையெல்லாம் வரலாற்று நோக்கில் நமக்கு காட்சிப் படுத்துவதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது !
ஆனால் அது யாருடைய ரத்தம் ?…. யாருடைய சதை?…. யாருடைய எலும்பு?… என்றெல்லாம் பார்க்க வேண்டாமா… !? இதை தெரிந்து கொண்ட பிறகு அமெரிக்கா எப்படி அமெரிக்காவாகவே இருக்கிறது? என்ற கேள்விக்கு, அமெரிக்கர்கள் அமெரிக்கர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அந்த பதில் என்று ஒரு இடத்தில் பா. ராகவன் எழுதுகிறார். அது எப்படி சாத்தியம்? அதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? என்ற கேள்வியில் தான் இந்த முழுப் புத்தகமும் அடங்கியிருக்கிறது.
நமது பள்ளிப் பாடப் புத்தகத்தை நினைவுபடுத்திப் பார்த்தால் அமெரிக்காவை கண்டு பிடித்தவர் “கொலம்பஸ்” என்று நினைவுக்கு வரும். இந்த இடத்திற்கு மேல் எந்த அமெரிக்கனும் பள்ளிக்குள் நுழைய வில்லை. பாடப் புத்தகத்திலும் இல்லை.
சரி, சுருக்கமாக புத்தகம் என்ன சொல்கிறது? என்று வந்து விடுவோம். முதலில், இது ஆய்வு நோக்கில் பார்க்க வேண்டிய புத்தகம் அல்ல. அறிஞர்கள், அறிவு ஜீவிகள், இலக்கிய ஆளுமைகள் என்ற வகைப்பாட்டிலிருந்து விலகி சாதாரண வாசகனும் தன் வாசிப்பில் ஓரளவாவது அமெரிக்க அரசியலை எளிதாக புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சக நடையில் எழுதப்பட்டுள்ளது. பா. ராகவனின் எழுத்து நடை வாசிப்பவருக்குள் ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் சொல்லும் முறையில் அமெரிக்க அரசியல் காட்சிகள் கண்ணுக்குள் விரிகின்றன. சற்றேறக்குறைய அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒரு திரில்லர் திரைப்பட ரேஞ்சுக்கு தன் எழுத்து முறையால் வாசிப்பை வாசகனின் நேரடி அனுபவமாக்குகிறார்.
அமெரிக்கா என்பது குடியேறிகளின் தேசம். அதற்கு முன்பு அதாவது கொலம்பஸின் 1492 அமெரிக்க பயணத்துக்கு முன்பு வரை அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த தொல்குடி மக்களான செவ்விந்தியர் பற்றிய வரலாற்றோடு புத்தகம் தொடங்குகிறது. குடியேறிய பிரிட்டிஷ் காலனிகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நிறைய விஷயங்கள் ஒத்துப் போகவில்லை. பிரித்தானிய நாடாளுமன்றம் இந்தக் குடியேற்றங்கள் மீது தனது அதிகாரத்தை நிலை நாட்டியும், புதிய வரிகளை விதித்ததாலும், தங்களுக்கு சார்பாண்மை இல்லாத பிரிட்டானிய நாடாளுமன்றத்தின் செய்கைகளை எதிர்த்தும், போரிட்டும் இறுதியில் 1776இல் இக் குடியேற்றங்கள் பெரிய பிரிட்டானிய அரசிடம் இருந்து விடுதலை பெற்றன. பிறகு தாமஸ் ஜெபர்சன் இயற்றிய அரசமைப்பு சட்டப்படி அமெரிக்க ஐக்கிய இராச்சியம் உருவானது. இது முன் கதை சுருக்கம்.
அமெரிக்காவின் முதல் அதிபர் வாஷிங்டன் தொடங்கி இந்த நூலின் இறுதியில் வரும் அதிபர் புஷ் வரைக்கும் அதிபர்களின் ஆட்சியும், அரசியல் சாதனைகளும், அதன் சரித்திரங்களும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளும், ரஷ்ய அமெரிக்க பனிப் போர்களும், அமெரிக்கா நட்பு பாராட்டும் தேசங்களும், அதன் மீதான ஏகாதிபத்திய வர்த்தக உறவுகளும், வியட்நாம் கியூபா போன்ற நாடுகள் அதை வெற்றி கொண்ட விதமும் என புத்தகம் விரிவாகவே பேசுகிறது.
அமெரிக்கா எப்போதும் பள பளப்புடன் இருப்பதற்கு அதன் நட்பு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொண்டதும் மிக முக்கிய காரணம். அதே வேளையில் அமெரிக்காவை எதிர்க்கும் எந்த ஒரு தேசமும், அதன் மன்னரையும், மண்ணையும் மக்களையும் நேசிக்கும் எந்த ஒரு புனிதரையும் கூட வாலை ஒட்ட நறுக்கி விட்டுத்தான் வேறு வேலை பார்க்கும். இது அமெரிக்காவின் இன்னொரு முகம்.
இந்த புத்தகத்தை படித்து முடித்த பல மணி நேரங்கள் பிறகும் அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்திய பின்லேடனின் சாகசங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
சதாம் உசேனின் சர்வாதிகாரமும், ஆட்சியில் நடக்கும் கொடுங்கோல் முறையும் இராக் மக்கள் கொண்ட வெறுப்பும் அந்த நாட்டின் மீது நமக்கு அனுதாபத்தையே ஏற்படுத்துகிறது. எண்ணெய் வளம் கொண்ட தேசங்கள், அதன் பொருளாதார வளம் யாவும் அமெரிக்காவின் சுரண்டலுக்கு உட்படுகிறது. இதன் விளைவாகவே அரபு தேசங்கள் அமெரிக்காவின் மீது வெறுப்பும் கோபமும் அடைகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகளின் வளங்களைச் சுரண்டி தன் சுண்டு விரலுக்குள் சுருட்டி வைத்துக்கொண்டே, ஆட்காட்டி விரலால் மற்ற நாடுகளின் மீதான தனது ஆளுமையை தனது பலமான ராணுவக் கட்டமைப்புகளாலும், நவீன தொழில் நுட்ப ஆயுதங்களாலும் உலகையே அச்சுறுத்தி இன்று வரை தன்னை உலகை ஆளும் வல்லரசாக
நிரூபித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் மறுபக்கத்தை அங்குலம் அங்குலமாக அதே போல் தனது திறமை மிக்க காட்சி மொழியால் விவரிக்கும் பா ராகவன் அவர்களின் பெரு முயற்சியில் டாலர் தேசம் உருவாகியுள்ளது.
அரசியல் போரடிக்காமல் படிக்க நினைப்பவர்களுக்கும், அமெரிக்க அரசியலை பற்றிய உண்மைகளை ஓரளவேனும் தெரிந்து கொள்ள வேண்டி படிக்க நினைப்பவர்களுக்கும் அமெரிக்க அரசியலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு துண்டு அல்வாவை விழுங்குவதைப் போல் தேர்ந்த ரசனைக்குரிய எழுத்து முறையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பா. ராகவன். அந்த வகையில் வாசிக்கப் பட வேண்டிய அரசியல் பிரதி இது.
மஞ்சுளா
நூலிலிருந்து:
இது அமெரிக்காவின் அரசியல் வரலாறு.
அமெரிக்காவின் அரசியல் சரித்திரத்தை அறிந்துகொள்வதென்பது ஒரு வகையில் உலக சரித்திரத்தையே ஓர் அவசரப் பார்வை பார்ப்பதற்கு ஒப்பாகும். நல்ல விதமாகவும் மோசமான விதமாகவும் அமெரிக்கா உறவு கொண்ட தேசங்கள் அனைத்தின் அரசியல் நிலைமையையும் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளாமல் - அமெரிக்கா ஏன் அத்தேசங்களுடன் உறவு அல்லது குறைந்தபட்சம் தொடர்பு கொண்டது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம்.
தனக்கு லாபமில்லாத எந்த ஒரு தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதில்லை; உள் நாட்டு விவகாரங்களில் பங்கு கொண்டதில்லை; யுத்தங்கள் தொடுத்ததில்லை என்பது அதன் சரித்திரம் முழுவதும் காணக் கிடைக்கும் உண்மை. இது தொடர்பாக, ஏராளமாகக் கிடைத்த ஆதாரங்களே இந்நூலின் மௌன அடித்தளம்.
டாலர் தேசம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளியானது. தமிழில் மிக அதிகம் விற்பனையான, வாசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட அரசியல் பிரதி இதுவே.
நூல்: | டாலர் தேசம் - அமெரிக்காவின் அரசியல் வரலாறு |
பிரிவு : | வரலாறு, அரசியல் |
ஆசிரியர்: | பா.ராகவன் |
வெளியீடு: | Zero degree /எழுத்து பிரசுரம் |
வெளியான ஆண்டு | 2021 |
பக்கங்கள்: | 1116 |
விலை : | ₹ 1000 |
கிண்டில் பதிப்பு : |
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.