ரு புதினத்தை ஒரே மூச்சிலோ ஒரு சில நாட்களிலோ படிக்கும் வழக்கம் கொண்டிருக்கும் எனக்கு ‘தலையணை’ நாவல்களைப் பார்த்தால் கொஞ்சம் தலைவலி வரத்தான் செய்யும்! ‘ சுந்தரவல்லி சொல்லாத கதை’ யை எழுத்தாளர் உத்தமசோழனின் மகன் மணிமார்பனிடமிருந்து பெற்றதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. வீட்டின் புத்தக அலமாரியில் சில வாரங்கள் இதை ஓய்வெடுக்க விட்டு விட்டு,  ஒரு சுபயோக சுப தினத்தில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்! நல்ல வெயில் நேரத்தில் குளத்து நீரின் குளிர்மையை உடல் முழுவதும் பரவ விட்டு திளைத்தபடி, குளத்தை விட்டு வெளிவர மனமில்லாமல் கிடக்கும் ஒருவனின் மனநிலைக்குக் கடத்தப்பட்டேன்.

கீழைத்தஞ்சை மண்ணின் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கையைப் பேசும் புதினம் என்று இதை எளிதாக வரையறுக்க முடியாது. வேளாண்மை, பல்லுயிர்கள், விருட்சங்கள், மூலிகைச்செடிகள், இயற்கை மருத்துவம் இவற்றைப் பற்றிய கிராம மக்களின் பாரம்பரிய அறிவுத்திரட்சி, இயற்கையோடு பிணைக்கப்பட்ட இவர்களின் வாழ்க்கை , இயற்கை என்ற மெளனகுருவிடமிருந்து இவர்கள் கற்ற அரிய வாழ்வியல் செய்திகள், அறத்தின் மீதும் விழுமியங்களின் மீதும் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறை என பிரமாண்ட கேன்வாஸில் தீட்டப்பட்ட ஒரு கிராமத்தின் துல்லிய விவரணைகளைக் கொண்ட உயிரோட்டமான சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளது இந்தப் புதினம்.

தமிழ் இலக்கியப் புனைவுலகில் இந்த நாவலின் சுந்தரவல்லியை ஒத்த வலிமையான ஒரு பெண் கதாபாத்திரம் இது வரை உருவாக்கப்படவில்லை எனத் துணிந்து கூறலாம். உழைப்பை விதைத்து வறுமையை அறுவடை செய்யும் கணக்கற்ற விவசாயக்கூலிகளில் கதிரேசனும் ஒருவர். ‘ ராசியில்லாதவள்’ என்று ஊராரால் ஏசப்பட்ட சுந்தரவல்லி எதிர்பாராமல் இவருக்கு வாழ்க்கைத்துணை ஆகிறாள். அடி நிலை விவசாயக்கூலி நிலையிலிருந்து பல ஏக்கர் நிலங்களுக்கு உரிமையாளராக கதிரேசனை உயர்த்துகிறாள் சுந்தரவல்லி.இதற்காக அவள் படும் பாடுகளும், அனுபவிக்கும் வாதைகளும், செய்யும் தியாகங்களும், காக்கும் பொறுமையும்தான் எத்தனை! கணவருக்கு ஒரு ஆலோசகராக, அதிகாரியாக, வழிகாட்டியாக, நம்பிக்கை வறட்சியைப் போக்குபவராக சுந்தரவல்லி செய்யும் பணிகள் பல. ஒரு ஆணுக்குரிய பலவீனத்துடன் கணவர் மனம் தடுமாறித் தடம் மாறியபோதும், பெண்ணுக்குரிய பெருங்கருணை கொண்டு அவரை மன்னிக்கிறாள்.

ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளி: நரியோடும் சம்பா…வண்டியோடும் வாழை…தேரோடும் தென்னை… மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல்லு.. இந்த நெல்லோட அரிசியை வடிச்சு, தண்ணி ஊத்தி ராத்திரி பூரா ஊற வச்சு, காலையில அந்தப் பழைய சோத்தை நாப்பத்தெட்டு நாள், ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சோனிப்பயல் கூட மாப்பிள்ளை மாதிரி முறுக்கிட்டுத் திரிவானாம். அப்படி ஒரு தெம்பு கிடைக்குமாம். அதனாலேயே மாப்பிள்ளைச் சம்பான்னு பேரு வந்துச்சாம்!

நகர மக்கள் பலர் அறியாத பல அரிய செய்திகளை இது போல நாவல் முழுதும் உழுத நிலத்தில் விதைகளைத் தூவுவது போல வஞ்சகமில்லாமல் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர்.
இது எளிய வேளாண்குடி மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் குடி மக்கள் காப்பியம் என்ற திருக்கோட்டியூர் திரு.சிதம்பர பாரதி அவர்களின் கருத்தோடு நான் முழுமையாக உடன்படுகிறேன்.

நூலாசிரியர் நடத்தும் ‘ கிழக்கு வாசல் உதயம் ‘ மாத இதழின் முகப்பில் ‘ எது மாதிரியுமில்லாத புது மாதிரி இதழ்’ என்ற வாசகம் காணப்படும். இந்தப் புதினமும் எது மாதிரியுமில்லாத புது மாதிரிப் புதினம்தான்!

தேர்ந்த வாசகர்கள் யாரும் தவற விடக்கூடாத புதினம்.


– பா.சேதுமாதவன்

நூல் தகவல்:
நூல்: சுந்தரவல்லி சொல்லாத கதை
பிரிவு : நாவல்
ஆசிரியர்: உத்தமசோழன்
வெளியீடு: கிழக்கு வாசல்
வெளியான ஆண்டு  2020

 

பக்கங்கள்: 920
விலை : ₹ 950