கவிஜி-யின் “சிப்ஸ் உதிர் காலம்” கட்டுரைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சி நாடன் எழுதிய அணிந்துரை.
பயண அனுபவக் குறிப்புகளாக இருக்கும் முன்முடிவோடுதான் கவிஜியின் ‘சிப்ஸ் உதிர் காலம்’ எனும் தலைப்புக்கொண்ட இந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன். முன்முடிவுகள் என்றுமே மூர்க்கத்தனத்தின் அடையாளம் என்பதுணர்ந்தேன். நவீன தமிழ்ப் படைப்பிலக்கியத்தைப் பற்றியிருக்கும் நோய்களில் ஒன்று இந்த முன் முடிவு. Pre- conceived notion. இந்த நோய்த்தன்மையின் புறத்தாக்கங்களை இளைய படைப்பாளிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதை சட்டகத்தின் விளம்புகளில் இருந்து நீங்கி நின்று கண்காணிக்கும் போது நமக்குப் பொருளாகிறது. ஊடகங்களின் வெளிப்படையான புறக்கணிப்புகளை அவர்கள் தீவிரமாக உணர்ந்திருப்பார்கள். இந்த முன்முடிவுகளுக்கு மூலப் பொருள்கள் என்பன- இனக்குழு, வட்டாரக்குழு, அணிக்குழு, அரசியல் சார்புக்குழு எனப் பற்பல. மூத்தவரோ அல்லது இளையவரோ, எந்தப் படைப்பாளியும் தனது படைப்பின் வீரியம் கொண்டே அவற்றைத் தகர்த்தெறிய வேண்டும், கண்ணாடியை வைரம் அறுத்தெறிவதைப் போல. கண்ணாடி வைரம் என்று நான் தெளிவுடன் தான் பேசுகிறேன்.
இந்த நூலை வாசித்து முடித்தபின் எனக்கு உறைத்தது இது பயண அனுபவங்களின் தொகையல்ல, வாழ்ந்த நினைவுகளின் சாரம் என்பது. விடுமுறை நாட்களில்
குடும்பத்தினருடன் அல்லது நண்பருடன் கொடைக்கானல், கோத்தகிரி, உதகமண்டலம், ஏர்க்காடு, ஏலகிரி, டாப்சிலிப், மூணாறு என்று காலையில் சென்று, முடியுமானால் ஓரிரவு தங்கிவிட்டு மறுநாள் மாலையில் திரும்புவது அல்ல அவ்விடங்களில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, பள்ளி சென்று ஆளாகி வருவது என்பது. சமவெளியில் இருந்து சென்று திரும்புவோருக்கு அது உல்லாசப்பயணம். தேயிலைத் தோட்டம், பசும்புல்வெளிகள், சோலைகள், காட்டின் விளிம்புகள், சிற்றருவிகள், குளிர், மேக மூட்டம், குன்றுகள், சில காட்டு மாடுகள் கூடி அமர்ந்து மது அருந்தி குப்பிகளை அங்கேயே போட்டு உடைத்தல், கட்டிச் சோறு தின்று களித்தல்.
காப்பி, தேயிலைத் தோட்ட வாழ்வென்பது கண்காட்சிப் பொருளல்ல. சென்ற நூற்றாண்டின் தோட்டக்காட்டு வாழ்வுதனை இலங்கை, மலேசிய, தமிழ் நாட்டு இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன சில நாவல்கள், சிறுகதைகள் மூலம். ஆனால் இரண்டுமல்லாத தளத்தில் தோட்ட வாழ்க்கைப் பதிவென்பது கவிஜியின் இந்த நூல் ஒரு இளம் படைப்பாளியின் நவீன பதிவு. நாவல் வடிவிலும் இதனைச் செய்திருக்க இயலும் அவரால். அதற்கான களம், காட்சி, கதை, கற்பனை, கலை உண்டு இதனுள். சிலசமயம் தோன்றும் வடிவத்திலும் பெயரிலும் என்ன உண்டு, கூறுமுறையின் தெளிவொன்று போதாதா என்று.
படைப்பிலக்கியம் வாசிப்பது போலவே, இந்த அனுபவப் பதிவுகளை நாம் தோய்ந்து வாசித்துச் செல்ல இயலும். அடிப்படியில் கவிஜி கவிஞர் என்பதால், மொழி நேர்த்தி சிறந்த வாசிப்பு அனுபவம் தருகிறது. கோவையில் வாழும் எனது இந்த முப்பத்தோராண்டு காலத்தில் எண்ணற்ற முறைகள் உதகமண்டலம், கோத்தகிரி, ஏர்க்காடு, வால்பாறை என ஒரு பயணியாகச் சென்று திரும்பியுள்ளேன். “பரதேசி” படப்பிடிப்பின் போது இருகிழமைகள் மறையூர், மூணாறு என்று தங்கியும் இருக்கிறேன். அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் பல மலைத்தலங்கள் ஏறி இறங்கியிருக்கிறேன். ஆனால் ஒன்று நாம் அறிய வேண்டும். விடுமுறையில் பயண சுகத்துக்காகச் சென்று கண்டு திரும்புதல் அல்ல வாழ்வது என்பது. அண்மையில் நாம் கண்டு புளகாங்கிதம் அடைந்த பெரு வணிகத் திரைப்படம் காட்டிய தாராவி வேறு. அதில் சில ஆண்டுகள் வாழ்வது வேறு. வாழ்ந்த அனுபவம் எனக்குண்டு. குளிர் சாதனப் பெட்டியில் இருந்து ஐஸ் துண்டங்களை எடுப்பதற்கும் அமெரிக்காவின் ஓரேகான் மானிலத்தின் மவுண்ட் சாஸ்தா அல்லது ஜப்பானின் ஃபுகி சிகரங்களின் பனிப் படுகைகளைக் காண்பதற்குமான வேறுபாடு அது.
கவிஜி இந்த சிறுநூல் மூலம், தேயிலைத் தோட்ட வாழ்க்கை பற்றிய நம்பத் தகுந்த பருந்துப் பார்வையைத் தருகிறார். மலங்காட்டுப் பிரதேசத்தில், பள்ளிப்படிப்பும் பருவத்தில் வேடிக்கை, விளையாட்டு, உறவு, சடங்கு, கொண்டாட்டம், பயணம் எனத் தெளிந்த நற்சித்திரம் ஒன்றை உருவாக்கித் தருகிறார்.
வால்பாறையைச் சுற்றியுள்ள வரைபடம் ஒன்றினை வழிநெடுக உருவாக்கிக் கொண்டே போகிறார். வரலாற்றுச் செய்திகள், அணைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், ஊர்கள், தேயிலைத் தோட்டங்கள், மாறுகள், சாலை வளைவுகள் எனப் பல செய்திகள். கவித்துவமான உரைநடை, பாசாங்கும் படோடோபமும் இல்லாத மொழி. ‘யானையை முதல் முறை எதிர் கொள்பவன் அப்போதே யானையை சுமக்கத் தொடங்கி விடுகிறான்’ என அர்த்த கர்ப்பமுள்ள வரிகள் ஆங்காங்கே! கடந்தகால நினைவுகளை அகழ்ந்து தரும்போது ‘ யாரும் அறியாத காயம் மனமெங்கும். யாவரும் அறிந்த காயம் வனமெங்கும்’ என திட்டமிட்ட அழிவை எதிர்கொண்ட வளங்களைப் பேசுகிறார்.
தேயிலைத் தோட்டங்களுக்கே உரிய பல தமிழாக்கப்பட்ட சொற்களை அறிமுகப்படுத்துகிறார். ஆங்கிலம் தமிழ் வழக்காகப் புழங்கிய சொற்கள். எடுத்துக்காட்டுக்கு ஒரு சொல் கானு. canal எனும் சொல்லின் தமிழ்த் திரிபு. தொல்காப்பியரே திசைச் சொல், திரி சொல், வடசொல், இயற்சொல் யாவுமே செய்யுள் ஈட்டச் சொற்களே என்பார், பிறகென்ன நமக்கு சில்காப்பியரைப் பற்றிய கவலை?
‘உருளிக்கல்’ எனும் பெயரிய தேயிலைத் தோட்டம் தமிழ் இலக்கியத்தில் என்றும் நின்று வாழ வழி வகுத்த சொற்சித்திரம் இந்த நூல். இப்பதிவு வழங்கும் தகவல்கள் பலவற்றைப் பட்டியலிட இயலும். ஒன்றேயொன்று சொல்வேன். சாலக்குடி ஆற்றின் கிளை ஆறான சோலையாறு நீர்த்தடத்தின் குறுக்கே கட்டப்பட்ட அணையே சோலையாறு அணை எனும் தகவல்.
சோலையாறு அணையில் இருந்து வேகமாகச் செல்லும் நீரின் பாய்ச்சலை, ‘ நீரின் கொழுப்பு’ என்கிறார் கவிஜி. நவீன இலக்கியம் எனும் பெயரில் கொள்முதல் செய்த மேதமைகளை விநியோகம் செய்யாமல், பிரகடனப் படுத்தாமல், இளம் பருவத்து எளிய வாழ்வின் தரிசனம் இது. எந்த வகை எழுத்துக்கும் இருந்தாக வேண்டிய வாசிப்பு ஈர்ப்பும் கொண்டது.
எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
நட்புடன்
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர்- 641 042
06 ஜூலை 2020.
நூல் : சிப்ஸ் உதிர் காலம் (The gateway of vaalpaarai)
பிரிவு: கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர் : கவிஜி
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
வெளியான ஆண்டு : முதற்பதிப்பு 2020
விலை: ₹ 120