படித்து முடித்து விட்டு நிமிர்கையில் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. அது எங்கோ தூரத்தில் ஒரு பாலைவனத்தில் எனக்கு பிடித்தவர்களெல்லாம் சேர்ந்து என்னை தனியாக விட்டு விட்டு வந்து விட்டதை போல உணர வைக்கிறது. சொல்ல இயலாத துயரம் ஒன்று சொல் அற்று நீர் பரப்பும் தூர தேச காட்டாற்றின் தனித்த கதறலென ஆகிறது.
ஒரு மனிதனின் ஒரு குடும்பத்தின் ஒரு கூட்டு குடும்பத்தின் மொத்த வாழ்வு கண் முன்னே காட்சியாக விரிந்து பின் தோகை அடக்கி மழை கண்டு புறப்படும் தனித்த மயிலின் ஆழ்மன சிராய்ப்புகளால் விம்ம செய்தது போல ஓர் எண்ணம் எனக்குள் பக்கம் பக்கமாய் பரவுகிறது. மனிதனின் நம்பிக்கையும், பிடித்தலும் ஒரு கட்டத்தில் பற்றற்று நிற்கும் வயதும் மூப்பும் இளமையின் கானல் நீரென மாறி சுவற்றில் அடிக்கும் எழுத்துக்களாக என் அறை முழுக்க தெறித்ததாகவே நம்புகிறேன்.
தான் காதலித்த பெண்ணே அண்ணியாக வருவதும் ஓரிரு வருடங்களிலேயே அண்ணன் இறந்து விடுவதும், பிறகு அந்த அண்ணி மீண்டும் கதை நாயகனை நினைத்துக் கொண்டே அதே வீட்டில் 20 வருடங்கள் ஒரு சிற்பத்தை போல வாழ்வதும், ஒரு கட்டத்தில் இருக்கும் அத்தனை அன்பும் காதலும் வெறுப்பாய் மாறி தீ அள்ளி கொட்டி விட்டு சென்று அதன் பிறகு திரும்ப வராமலே போவதும் மிக பெரிய ஆகிருதிய அச்சத்தை எனக்குள் மூட்டி விடுகிறது. உள்ளும் புறமும் அலசி கொட்டும் தி.ஜா-வை மெய் சிலிர்த்து பார்க்கிறேன். கொஞ்சம் அசைந்தாலும் கரணம் தப்பி விடும் கதைக்களம். ஆனால் மரண சாசனத்தில் சின்ன அண்ணன் கொடுக்கும் வாழ்வு அது. காதலின் கண்ணியத்தை கடைசி வரை காக்கும் கதை நாயகன் மூலம் அவர்களின் உறவை மலை சேர்த்து விடுகிறார் தி.ஜா. பெரிய அண்ணியாக ஒரு கதாபாத்திரம் வருகிறது. அது தான் சந்திரமுகி திரைப்படத்துக்கான ரெபரென்ஸாக இருக்கலாம். தம்பியை அண்ணி பழைய காதலனாக நினைத்து இழுத்து அணைத்துக் கொள்ளும் ஓரிடம் அப்படியே “தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுக”ளை நினைவூட்டுகிறது. பெண்களின் ஆழ்மனதின் மாயத்தை மனோதத்துவ ரீதியில் விளக்கி செல்லும் தி.ஜா.. என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார். மனதின் குகைக்குள் கண்ணைக் கட்டிக் கொண்டு துழாவுகிறேன். செம்பருத்தி வாசம் என என் அடையாளம் மாறுகிறது.
கதைக்குள் வரும் அனைத்து கதா பாத்திரங்களையும் அவரவர் வெளியில் அவரவராகவே மனோதத்துவ அணுகுமுறையில் உலவ விட்டு அலசி ஆராய்ந்து உயிரூட்டியிருப்பது…. விளங்கிய புதிரின் முன் பின் தழுவல்களும் தகவமைப்புகளும் தவிப்புகளுமாக இந்த வாழ்வின் அங்கம் இருப்பதை உணர செய்கிறது. கதை நடக்கும் கால கட்டம் ஆங்காங்கே அரசியல் பேசுகிறது. காலராவுக்கு நேரும் மரணம் நம்மை திடுக்கிட வைக்கிறது டெங்குக்கு நேர்ந்ததை போலவே. வாழ்ந்து கெட்ட பெரியண்ணன், அவரின் காதலியாக ஒரு சாமி பெயர் கொண்ட பெண். அவளே முதல் துளியாக அவர் மீது காலத்துக்கும் விழுகிறாள். காதலில் ஏது நல்ல காதல் கள்ள காதல் என்று ஒரு வரி நினைவுக்கு வருகிறது. ஒரு கூட்டு குடும்பம் மூன்று அண்ணன் தம்பிகள் அவர்களை சுற்றி எழுப்பப்படும் கதைக்களம். பெரிய அண்ணிக்கும் அவன் மீது காதல் இருந்திருக்குமோ… அதன் பொருட்டே அவள் வாழ்க்கை முழுவதும் அவன் உள்பட மற்றவர் மீது எப்போதும் சந்தேகப்பட்டும் பழி சொல்லியும்… சண்டையிட்டுமே வாழ்ந்து செத்து போகிறாளோ என்ற கேள்வியை நாமே யூகிக்கும்படியான அவள் பற்றிய பக்கங்களை நமக்குள் பற்ற வைக்கிறார் தி ஜா. பற்றிக் கொண்டு எரிவது பக்கம் பக்கமான செம்பருத்திக் காடுகள்.
மாமனாரின் உபதேசங்கள்… அம்மாவின் இருத்தல் கதையின் கை பிடித்த நிலா சோறு. எள்ளலும் துள்ளலும் வாழ்வின் மீது தொடுக்கும் பகடிகள் என்று நுட்பத்தின் திறவுகளை வார்த்தை நுனி கொண்டு திறப்பதும் மூடுவதும் பிரமிப்பின் உச்சம். நூதனமாக பல அந்தரங்க இடங்களை நாமே கோடிட்டு நிரப்ப விட்டு விடும் நிதானம் அந்திக்கும் பந்திக்கும் இடையே அசைந்தாடும் இலை கொண்ட தூரிகை. முழுக் குடும்பத்தையும் சுமந்து சுமந்து ஒரு கட்டத்தில் துறவு நோக்கி தள்ளப்படும் சூழலைக் கண்டு கதை நாயகனோடு சேர்ந்து நாமும் அயற்சியோடும் கற்ற பாடங்களின் திகட்டு நிலையோடும் நின்று தடுமாறுகையில் எல்லாம் கொஞ்சம் காலத்துக்கு தான் என்று அசரீரி கூறுவது கேட்கிறது.
அவள் பிரிந்த பின்பு தன் உடல் மொழியே கூட மாறி விட பிடிப்பில்லாமல் அல்லது அதுவரை இருந்த தனக்கென்ற அடையாளம் ஒன்றை இழந்த அகதியை போல அவன் தள்ளாடும் அந்த மூப்பு பருவம்… தொடர் கேள்விகளை நமக்குள் புகுத்துகிறது. மூப்பை சுமப்பது கொடுமையிலும் கொடுமை என்றே நம்புகிறேன். நம்பாதவரும் செத்தே தான் போகிறார்கள். ஆலிங்கன தொலைதலை காடு முழுக்க விதைக்கும் செம்பருத்தி செவ்வானம் முட்டும் அன்பின் அழுகையின் பாசத்தின் பேரிழப்பின் துரித நினைவை நிகழ்வை மாற்றி மாற்றி நட்டுக் கொண்டே இருக்கிறது. வாழ்வென்பது இருப்பது தான். இருப்பதில் இருக்கும் எல்லாமுமே மனதோடு தோள் சாய்ந்தவையே.
பொதுவுடைமைவாதி பொம்மை நண்பனாக இருக்கட்டும். எப்போது வேண்டுமானாலும் கடன் கொடுக்கும் ஒரு கட்டத்தில்… புதையலின் பணத்தையே எடுத்துக் கொடுக்கும் சுலைமானாக இருக்கட்டும். எல்லா பாத்திரங்களுமே தத்துவார்த்தமாக இந்த வாழ்க்கையை விலக்கி பார்க்கிறார்கள். சின்ன அண்ணனின் கடுமையான முகம் உள்ளே நெகிழ்வான பாசம் பெரிய அண்ணனின் மரியாதையான வாழ்வு ஆனால் வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் தவிப்பு… ஆயுசுக்கும் எதுவுமே பகிராமல் காதலை மட்டுமே சுமக்கும் சின்ன அண்ணி எல்லாமே தெரிந்தும் எது எப்போது தெரிய வேண்டுமோ அது அப்போது தெரிந்தது போல காட்டிக் கொண்டு அந்த குடும்பத்தையே கட்டி மேய்க்கும் தம்பி மனைவி புவனா என பாத்திர நிறைந்தும் மிச்சமென சொட்டும் இந்த செம்பருத்தி துளிகளில் நான் வெடித்து சிதறுகிறேன்.
நினைத்த கணமே காதலில் நிறையும் கிணற்றடியில் அவளைத் தேடுவதில் அந்த சிறு வயது காதல் வழிந்தோடுகிறது. யாருமற்ற வீட்டில் அவனின் திடீர் வருகைக்கு அவளால் முகம் கழுவி.. தலை வாரி பளிச்சென்ற புன்னகையோடு ஒரு வாய் காபி தான் போட்டு தர முடிகிறது. அவள் வெறுப்பாய் பேசி எறிந்து விழுந்து ரயிலில் கிளம்பும் போது ரயிலைப் பார்த்தபடியே வெகுநேரம் அந்த இருக்கையில் அமர்ந்து விடுவதில் அவனின் தீரா துயரமும் காதலே என்று கத்துகிறது. காரணம் இல்லாமல்தான் அவள் விட்டு சென்று விட்டது போல தான் இருக்கும். ஆனால் அது அப்படியா…? காரணம் இல்லாமலா பொதுவுடைமைவாதி நண்பனை யாரோ குத்தி கொள்கிறார்கள். காரணம் இல்லாமலா பெரிய அண்ணனின் அவள் பெரிய அண்ணன் மரணத்துக்கு வந்து அத்தனை ஒப்பாரி வைக்கிறாள். காரணம் இல்லாமலா புவனாவுக்கு கடைசி கொஞ்ச நாள் மனநிலை சரி இல்லாமல் போகிறது….?
எல்லாம் இந்த மனம் செய்யும் மாயை. அது காரணத்தை கற்பித்துக் கொண்டே இருக்கிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வெறும் காரணங்களே இந்த வாழ்வு.
நான் என்ற இருத்தலின் கனம் மெல்ல உள்வாங்கி தளர்வதில் சரி நீயும் என்று யாரையாவது அணைத்துக் கொள்ள தோன்றும் சின்னஞ் சிறு வயதை எங்கெங்கும் விதைத்து சென்ற செம்பருத்தியை நடுக்கத்தோடு பறித்த இடத்திலேயே வைக்கிறேன். அது அவளுக்கானது… அவளுக்கானது மட்டுமா… அவனாகி சாளரம் திறக்கிறேன். இந்த வாழ்வு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரை நம்மிடமிருந்து பிரிக்கிறது. அது இயல்பெனவே நடக்கிறது. அவளுக்காக மிச்சக் கதவையும் திறக்கிறேன். எப்போதேனும் வரக் கூடும்… பேரன்பின் சுவடுகள் எப்படி அழியும்….?
தி ஜாவின் பாதம் தொட குனிகிறேன். எத்தனை சொட்டு கண்ணீர் விழுந்தது என்று தெரியவில்லை.
சொன்னால் தீர்வதில்லை இந்த செம்பருத்தியின் பக்கங்கள்.
நூல் : செம்பருத்தி
பிரிவு : நாவல்
ஆசிரியர்: தி.ஜானகிராமன்
பதிப்பகம் : காலச்சுவடு (மறுபதிப்பு - 2013)
பக்கங்கள்: 512
வெளியான ஆண்டு : முதல் பதிப்பு - 1968
விலை : ரூ 540
அமெசானில் நூலைப் பெற:
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.