நூல் விமர்சனம்புதியவைபுனைவு

கைநிறை செந்தழல்


பொதுவாகவே தமிழ் அழகானது. அதுவும் கவிஞர்களின் மொழியில் இன்னும் அழகாகும். இந்த நூலின் ஆசிரியர் சவிதா ஒரு ஆசிரியர். சேலத்தைச் சேர்ந்தவர். அவர் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு இது என்று கருதலாம். ஏனெனில் ஒரே நாளில் மூன்று கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்தார். “உபாசகி”, “யாமத்தில் அடர்ந்த மழை”  என்பவை மற்ற இரண்டு நூல்கள்.

கவிதை ஒரு உணர்வு நிலை. இந்த நூலும் அப்படித்தான்.  இருந்தாலும் படிமங்களாக இவர் கைகொள்ளும் பாத்திரங்கள் நம் இலக்கியப் பாத்திரங்கள். தற்போதைய ஒரு சூழ்நிலையை விளக்கும் போது சடாரென்று தெரிந்த இலக்கியப் பெயர்கள் வந்து விழுகின்றன. அதன் கதை தெரியாவிட்டால், கவிதையில் அதற்குப் பின் செல்ல முடியாது.

 

எரிந்து கொண்டிருக்கும் விளக்கை,

திரியில் எரியும் தழலின்

தன் முறைமைக்கென கணம்தோறும்

தவமிருக்கிறது

ஒவ்வொரு எண்ணெய்த் துளியும்..

 


நிறைய இடங்களில் அன்பின் மேன்மை பற்றி எழுதிச் செல்கிறார். புறச்சூழ்நிலைகள் கவிதையாகின்றன.

இருளைப் பாட வந்தவர்,

அசையாத ஊமைப்

புதர்களிடையே

வழிந்து நிறைகிறது

இரவின் ஆணவம்…

சின்னச் சின்ன

மின்மினிகளால் இருளைத் தின்று

செரிக்க முடிவதில்லை

நிலவையும் மிஞ்சி மிஞ்சி

இரு நாட்களுக்கு மேல் ஒளிர்வாய்

இருக்க முடிவதில்லை.

 


இந்த ஒரு கவிதையில் எவ்வளவு படிமங்கள், தொன்மங்கள் பாருங்கள். எங்கே வந்து முடிக்கிறார் என்பது முக்கியம்.

இணையாய் சபையில் ஆட உடை ஒத்துவராத உபத்திரவம் விடியற்காலை மோகத்தில்

ஒரு

நிமிட முயக்கத்தின்

இயலாமை..

பிடித்தவனை விட்டு

வென்றவனுக்கு மட்டுமாவது

வாக்கப்படாமல்

ஐவருக்கும் சொத்தான பிறகும்

சபையில் அழிந்த துர்பாக்கியம்… 

காமுற்றதற்கே மூக்கை இழந்த பரிதாபம், கோட்டைத் தாண்டியதற்கும், காதலில் தவித்து இருந்ததற்கும் வீழ்ந்த அக்னிப்பிரவேசம்..

வெல்வதற்கு அரியவனை

நேரே வெல்லாமல்

இல்லாளின் கற்பைத் திருடிய அவதாரம்..

 

நடுக்காட்டில் அடர்நிசியில் தனியே விட்டு

நீங்கியவனை சனியின் மேல் பழி சுமத்தி

நல்லவனாக்கிய காவியம்..

வந்த அதிதியை வா வென அழைக்காததற்கு

வாழ்க்கையையே கெடுத்த

துர்வாச சாபம்..

மயங்கிய பிறகும் தெளிந்த பிறகும்

அறிவீனமாய் அவளையும் குழந்தையையும் கைவிட்ட

பிரம்மரிஷி பாவம்..

 

இன்னும்.. இன்னும்..இன்னும்..

 

நம்புதலைக் கைவிட்டு தொண்டை நரம்புகள் எரிய எரிய நடிகையர் திலகத்தில் புட்டியைக் கவிழ்த்துக் கொள்கிறாள் கீர்த்தி சுரேஷ்..

ஒட்டு மொத்த யுகாந்திர துரோகத்தை விழுங்கும் பொருட்டு… 

 


மேலும் சில படிமங்கள்

 

டான்டேலியனின் இறகு பிய்த்தல்,

நீலியின் கதை கேட்டல்,

பிரகலாதனின் தாயென வாழ்தல்,

தேவகியாய் வாழ்ந்த சாபம்,

ஜமதக்னியின் நீர்த்துப் போன பிடிமானங்கள்,

யூதாஸின் ரத்தம்

கிளியோபாட்ராவின் குப்பிநஞ்சு,

ஹெலனின் உதட்டுச் சாயம்,

என்று எவ்வளவு படிமங்கள்.

இதையெல்லாம் காண நூலைப் படிக்க வேண்டும்.

 


நினைவின் புனைவில் வார்த்தைகள் வருகின்றன.

இருந்து விட்டுப்போயேன்

சேர்த்து வைத்திருக்கும் இசையின் புண்ணியத்தில்

ஓரஞ்சேரும் மண்ணில்

பூத்துவிட்டுப் போகிறேன்

சிறு பூவென…


ஒரு கவிஞனுக்கு எது வேண்டும். கொஞ்சம் எழுத வேண்டும். அதை இப்படிச் சொல்கிறார்.

மழைக்கொதுங்கிய கூரையின் ஈரக்கசிவு

சாலையோரப் புதரின் சலசலப்பு

வழிப்போக்கனின் தத்துவ பேதங்கள்

சிதறவிட்ட சில சில்லறைகள்..

மடியில் இறுக்கப்பட்ட சோற்றுமூட்டை

மதிமேவிய சில பாடல்கள்

வழிச்செலவுக்கான உன் முத்தம்

பறவையின் சில பயணக் குறிப்புகள்

சிறுகுறிப்பு வரைதலின்

பெருங்குவிய மையங்கள்

ஒரு மசிப்புட்டி

இரு பேனாக்கள்

சில காகிதங்கள்…

..

..

..

ஒரு வாழ்க்கை.!


இந்த இடத்தில் இன்னொன்றையும் பார்த்து விடுவோம். கவிஞர் தஞ்சாவூர் செல்கிறார். அவரது வாசிப்பனுபவம் எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்.

கடந்த விடுமுறைக்கு

தஞ்சைக்குச் சென்ற போது

ராசேந்திரனின் வருகைக்கு ஓரமொதுங்கி நின்றதும்

கில்ஜியின் படையெடுப்புக்கு பயந்து ஊர்விட்டு வந்ததும்

பரஞ்சோதியின் பிள்ளையாருக்கு அருகம்புல் கொடுத்ததாகவும்

இளைய பல்லவனின்

காஞ்சனை கண்டு வாய்பிளந்ததும்

கபிலரின் நாவல்பழத் தேடலைக்

கண்டு நகைத்ததுவும்

நா. பா. சத்தியமூர்த்தியின் வகுப்பறையில் அமர்ந்திருந்ததாகவும் அகிலனின் சித்திரப்பாவையில் வரும்

நாகலிங்க மரத்தருகே வாசம் முகர்ந்ததும்

துரைக்கண்ணையும்

ஹென்றிபிள்ளையையும்

பார்த்து வியந்த கண்களில்

ஒன்றாகவும்

ராகவனின் கால்பட்ட அகலிகை பேசும்போது

புதுமைப்பித்தனின்

கைவிரல் பற்றிய சிறுமியாகவும் ஒரே வாழ்க்கையெனவே

தோன்றுகிறது.

 

அழகுல்ல!


தனிமையின் நினைவுகளை எண்ணிப் பார்க்கும் நேரம்..

சேமித்து வைத்திருந்த காதலர்களின் தொடர்புக் கண்ணிகளை நேற்றிலிருந்து துலவிக் கொண்டிருக்கிறாள்

சிலருக்கு புறா விடுதூது

சிலருக்கு புலரிக் கனவுகள்

சிலருக்கு..

அவர்களின் பரிசுகளை அவள் அணிந்தாலே போதும்..

என பலவிதமாய்

தொடர்பு எல்லைகளின் முழுவிளிம்பையும்

ஒரு சுற்று முடித்தாயிற்று.

 

துணையேதும் தேவையிருக்காத

விளக்கேதும் ஏற்றமுடியாத

நிலவுக்குக்கூட வழிவிடாத

இந்தத் தனியான இரவு

எனக்கு அவசியமாயிருக்கிறது

அகவிளக்கேற்றி வைக்க!


புடவைக் கவிதை ஒன்று மனசைத் தொடுகிறது.

கௌதம் மேனனின்

நாயகிகளால்

புத்துயிர் மீண்டிருக்கிறது புடவைகளுக்கேனும்..

….

முதல்முறை தொட்ட போது

அணிந்திருந்த புடவையை துவைக்காமல் வைத்திருக்கிறேன்

உன் வாசத்தைத் தொலைத்துவிடும் பயத்தில்..

…இப்படி புடவை பற்றிப் பல சொன்ன பிறகு

அடர்ந்த கருப்பில்

வாடாமல்லி பூக்கள் இறைத்த புடவையில் உத்தரத்தில் தொங்கியிருந்த

சரசு அக்கா

துணிக்கடைக் காரரின் பாக்கியை அலமாரிக்குள் வைத்துவிட்டே

இறந்திருந்தாள்.

என்று முடிக்கிறார்.

புடவையைப்பற்றி ஏன் இப்படி என்ற ஆரம்ப எண்ணம் தவிடுபொடியாகிறது.


Single mother பற்றி நிறைய எழுதிய பின் இப்படி முடிக்கிறார்.

“அப்பாவும் நம்மகூட இருந்திருந்தா போரடிக்காதுல்லம்மா”

என நேற்றிரவு கேட்டிருந்த கேள்வியை..

விடிய நேரமிருக்கிறது இன்னும்..

 

எனக்கு எந்த சீரியல் ஞாபகம் வந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.


 

கறை நல்லது என்ற விளம்பரம் பார்த்திருப்பீர்கள். சவிதா இப்படிப் பார்க்கிறார்.

நனைத்து வைத்த நிலவுக்கு

சலவை சரிவர

செய்யப்படவில்லை..

கறை நல்லது.


 

கடைசியில் கொஞ்சம் சந்தோஷமாய் முடிக்கிறேன்.

விடியற்காலையில் தலைக்குக் குளித்துவிட்டு நுனிமுடிச்சிட்டு

செக்கச் சிவப்பில் கிளம்புகிறாள் அனுசித்தாரா.. நான் எச்சரிக்குமுன்

அவள் தன் ஆயுதங்களை அணியக்கண்டு

மெல்ல ஒதுங்கி இறுகப்

பற்றிக் கொண்டேன்

வளைஓடு பொருத்தப்பட்ட கீழ்தாழ்வாரத்தின் கூரையில்..

ஆண்கள்சூழ் உலகில்

அனுசித்தாராக்கள்

வாழட்டும்!!


 

“தொன்மங்களின் வழியாக நீங்கள் அறியாத அன்றாடங்களின் தரிசனம்” என்ற தலைப்பில் அமிர்தம் சூர்யா அழகானதொரு முன்னுரை தந்திருக்கிறார்.

கவிதைகளுக்கு தலைப்புகள் இல்லை. ஒரு விதத்தில் படிப்பவருக்கு சுதந்திரம் தந்தாலும், கவிஞர் எதைச் சொல்ல வருகிறார் என்பதும் தெரிய வேண்டியது அவசியம்.

 


நூல் தகவல்:

நூல் : கைநிறை செந்தழல்

பிரிவு:  கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்   : சவிதா
வெளியீடு  : பரிதி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2021
விலை     : ₹ 150 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “கைநிறை செந்தழல்

  • நல்ல விமர்சனம்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *