தமிழில் புதுக் கவிதைகள் என்ற வடிவம் பாரதியிடமிருந்தே பிறந்தன என்பதுதான் அனைவரும் அறிந்திருக்கிறோம். இலக்கியத்தில் ஒரு மரபு மாற்றம் அல்லது மரபை உடைத்தல் என்பதுமே அவனிடமிருந்துதான் தோன்றியிருக்கின்றது என்பதும்கூட உண்மை. வடிவ மாற்றம் மாத்திரமல்ல, கருத்துகள், பாடுபொருட்கள் என தன்னுடைய உள்ளடக்கங்களிலும் புதுமையைப் புகுத்தி இலக்கியத்தில் புரட்சி என்கிற வகையிலும் பாரதியின் செயல்கள் ஓங்கி நிற்கின்றன. இலக்கியவாதிகளின் படைப்புகளில் சமூக அரசியல் சார்ந்த சிந்தனை இரண்டறக் கலந்திருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு சமரசமுமின்றி தன்னுடைய கவிதைகளைப் படைத்த வகையில் பாரதி உலகத் தமிழர்களுக்கான முன்னத்தி ஏராக பெருமிதத்துடன் நிற்கிறார்.
நம்முடைய நாட்டின் பூகோள அமைப்பின் படியும், அரசியல் சாசன அடிப்படையிலும், ஏற்ற இறக்கப் பொருளாதாரச் சூழலிலும், மத மற்றும் சாதி மக்களிடையே ஊடுறுவி எத்தகைய வகையில் மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து அவர்களை இழி நிலைக்குத் தள்ளுகின்றன என்கிற நிலையிலும், வர்க்கப் போராட்டங்கள் எந்த அளவில் தீவிரமாக்கப்பட வேண்டும் என்கிற புரிதலிலும் பார்த்தோமானால், ஒருவனுக்கு இங்கு “நிலம்” எத்தனைய முழுமைத்தன்மை அளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நிலமற்றவன் நவீன அடிமை என்கிற உண்மையை அறியாமல் இருந்து வருதைவிட ஒரு அறியாமை இருக்க முடியாது. பாரதியின் கவிதைகள் குறித்து ஏதேனும் நாம் எழுதிட வேண்டும் என்று எண்ணினால் முன்வந்து நிற்கும் கவிதை “காணி நிலம் வேண்டும் பராசக்தி” என்ற கவிதைதான். சமகால அரசியல் சூழலில் இக்கவிதை எத்தகைய தாக்கத்தை ஏற்படுகிறது என்று சீர்தூக்கிப் பார்க்கும்போது வரலாற்றில் பாரதி ஒரு தீர்க்கதரிசி என்று பதிவு செய்யப்பட்டிருப்பது எவ்வளவு வலிமையான உண்மை என்பதை அறிந்துகொள்ள முடியும்.
காணி நிலம்வேண்டும், — பராசக்தி
காணி நிலம்வேண்டும்; — அங்குத்
தூணில் அழகியதாய் — நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் — அந்தக்
காணி நிலத்திடையே — ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும்; — அங்குக்
கேணி யருகினிலே — தென்னைமரம்
கீற்று மிளநீரும்,பத்துப் பன்னிரண்டு — தென்னைமரம்
பக்கத்திலே வேணும்; — நல்ல
முத்துச் சுடர்போலே — நிலாவொளி
முன்பு வரவேணும்;-அங்குக்
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற் படவேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
இப்பாடலை ஏதோ வெறும் கடவுளிடமான வேண்டுகோளாகப் பார்த்துவிடக் கூடாது. ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலையைக் கண்டு, அவர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்கிற ஏக்கத்தில், ஒரு கவிஞனுக்கே உரிய தேர்ச்சியோடு வைக்கப்பட்ட குறியீடு இது. பாரதி காலத்திலிருந்தும், அதற்கு முன்பும், ஏன் இப்போது வரைக்குமே நில அரசியல் இந்தியாவில் எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்தோமானால் “இரட்டை இந்தியா” அல்லது வர்க்கப் பிளவு கொண்ட இந்தியா என்று வர்ணிக்கப்படுகின்ற நிலையின் பின்னணியில் அதிகாரத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளின் மூடுண்ட முகத்தை நாம் காண முடியும்.
இக்கவிதையின் ஒவ்வொரு வரியுமே பல்வேறு அர்த்தப் பொருத்தஙகளை உள்ளடக்கியிருக்கிறது எனலாம்.
” பத்துப் பன்னிரண்டு — தென்னைமரம்
பக்கத்திலே வேணும்” பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் எப்போதும் அது தொடர வேண்டும் என்பதோடு, அதற்கு இடையூறாக எந்த சக்திகளும் வந்து நிற்கக்கூடாது.
“நல்ல முத்துச் சுடர்போலே — நிலாவொளி
முன்பு வரவேணும்” ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில், அவர்கள் ஒடுக்கப்படவில்லை என்கிற நிலையும், வசந்தமும், ஒளியும் அவர்களின் கண்களில் மிளிர வேண்டும், அதுபோன்ற வாழ்வை இந்த மக்களுக்குத் தந்துவிடு பராசக்தி என்கிற வேட்கை கொண்ட வேண்டுகோளாகத்தான் இந்தக் கவிதையை பாரதியார் படைத்திருக்கிறார் என்பது என்னுடைய பார்வை.
இதுபோன்று பாரதியின் அனைத்து கவிதைகளுமே அதனதன் தளத்தில் ஒரு அரசியலையும் மக்கள் விடுதலையும் மேன்மை குறித்துமே இருக்கின்றன என்பதை அறிய முடியும். பாரதியிக் கவிதைகள் மாத்திரமல்ல, ஏராளமான கட்டுரைகளும், சிறுகதைகளும் இத்தகைய எண்ணங்களையே பிரதிபலிக்கின்றன. அந்த வகையில் பாரதியை உண்மையான மக்கள் படைப்பாளர்களுக்கான முன்னோடி என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்கள் விடுதலை குறிப்பாக பெண் விடுதலைக்கு உறுதியோடு பாடிச் சென்ற தீரமிகுக் கவிஞன் பாரதியை எப்போதும் நினைவில் கொள்வோம், புரட்சி மிகு படைப்புகளைப் படைப்போம், அவன் வழி நின்று உலகை வென்றாள்வோம்.
- அம்பிகா குமரன்