“ஒரு கவிதையை – நல்லதொரு கவிதையை – ஒரு வாசகன் தன் வாழ்நாள் முழுவதும் வாசிக்க முடியும். அவன் அகவளர்ச்சிக்கேற்ப அந்தக் கவிதையும் அவனுடன் சேர்ந்து வளரும். கவிதை வாசகன் தன் முகம் பார்க்கும் கண்ணாடி”
– கவிஞர்.ஆனந்த், கவிதை என்னும் வாள்வீச்சு.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட “முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல்” என்ற வரிகள் இன்றும் கூட ஒரு பெண் மனதின் அலைக்கழிப்பை உணர வைக்கிறது. கவிதையின் வீச்சு காலம் கடந்தது. கவிதையின் புத்துணர்வு வாசிக்குந்தொறும் மீட்டெடுக்கப்படுகிறது. கவிஞர்கள் பல உணர்வு நிலைகளில் உலவுபவர்கள். எல்லாக் காலங்களிலும் கவிஞர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்திருக்கின்றன. இரு கவிஞர்கள் இணைந்து நட்பு கொள்வது, அந்த நட்பு பல்லாண்டு காலம் தொடர்வது என்பதைக் கேள்வியுறும் போது கற்பனை என்று தான் நமக்கு தோன்றும். ஆனால், நட்பின் இலக்கணமாக நவீனத் தமிழ்க் கவிதை உலகில் தனித்துவமான ஒரு கவிதைத் தொகுப்பு கவிஞர் தேவதச்சன், கவிஞர் ஆனந்த் இருவரின் கவிதைகளுடன் “அவரவர் கை மணல்” என்ற தலைப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியானது. கவிதைத் தொகுப்புகள் வெளியாவது அரிதான காலகட்டத்தில் இது வெளியானது. இன்று வரை இருவரும் படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வருபவர்கள். நல்ல நண்பர்களாகவும் தொடர்கிறார்கள் என்பதை வாசகர்களும் கொண்டாட வேண்டிய அம்சம் தான்.
தேவதச்சனின் “அடுத்த கட்டத்தில்” என்ற கவிதை
“அடுத்த கட்டத்தில் கால் வைத்துக் கொண்டது
மனிதகுலம். இது வெளிப்படை.
சமூகவியலார் மனிதப்பயணம் பற்றி நிறைய சொல்லியாயிற்று.
கூடவே எந்திரமெனும் துணையும் கூட்டாயிற்று.
இந்தச் சிட்டுக்குருவியும் நானும் சுமந்து செல்கிறோம்.
நான் போரை, அது அமைதியை”
என்பதாக தொடர்கிறது. 1981 ல் அடுத்த கட்டத்தில் என்பதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்பதை யோசிக்க யோசிக்க டிவி ஆண்டனாக்கள் முளைக்கத் தொடங்கிய காலமா, கறுப்பு நிற தடிமனான தொலைபேசிகள் வீடுகளுக்குள் வரத் துவங்கிய காலமா என்று மனம் விரிகிறது. மனிதப் பயணத்தில் எந்திரத் துணை என்பது டிரான்சிஸ்டராக இருக்கவே அதிக சாத்தியங்கள். நிச்சயம் இன்றைய கூகுள் மேப் இல்லை. அவரின் மனம் அடுத்த வரியில் சிட்டுக்குருவியை இணையாக்கிக் கொண்டு, போரையும் அமைதியையும் சுமைகளாக்குகிறது. இவ்வாறு வெவ்வேறு இணைகளை அவரின் கவிதைகளில் காண முடிகிறது.
“தன் நிலையத்துக்கு வந்து போனதை
வண்ணாத்திப் பூச்சியிடம் கேள்
வைரஸிடமும் கேட்டுப் பார்”
என்று முடிகிறது ஒரு கவிதை. கவிதையில் வண்ணாத்திப்பூச்சி வருவது இயல்பே. வைரஸையும் இணைத்தது தான் கவிஞரின் தனித்துவம்.
“மரவுரி என்றும்
டெரிகாட் என்றும்
எத்தனை ஆடை
எத்தனை நிறாம்
என்றாலும்..”
எனத் தொடங்கும் கவிதையில் ஒரு வரிக்கும் இரண்டாவது வரிக்கும் பல்லாயிரம் ஆண்டுகளின் பரிணாமம் ஊசலாடுகிறது. முதல் கவிதைத் தொகுப்பு கவிஞனின் சிந்தனை வீச்சை காட்டித்தந்து விடுகிறது. அதன் பின்னர் நிகழ்வதெல்லாம் அவ்வீச்சின் வெவ்வேறு பரிமாணங்களே. சுயத்தின் வெளிப்பாடுகளே கவிதைகளானாலும், தேவதச்சனின் கூறு மொழி கச்சிதத்தன்மையாலும், சோர்வான அன்றாடத்தை புத்துருவாக்குவதிலும் மிளிர்கிறது. என் பிறப்புறுப்பு கவிதையை வாசிக்கும் போது துணுக்குறும் மனம், என் வீட்டுப் பரண் பொருள் கவிதையில் பிரமிப்படைகிறது.
“காட்சியும் தன்னுணர்வும் சந்திக்கும் அகப்புள்ளியில் ஏற்படும் பரிவர்த்தனையின் வெளிப்பாடாகவே கவிதை எப்போதும் இருக்கிறது.”
என்று ஆனந்த் கவிதை என்னும் வாள்வீச்சில் சொல்கிறார். தேவதச்சனின் கவிதைகள் இத்தொகுதியில் அவ்வாறானவையே.
ஆனந்தின் கவிதைகள் புதிர்த்தன்மையும், எளிய பகிர்வுகளாகவும் ஒருங்கிய உணர்வை த் தருகின்றன.
“ இல்லாத கோடு எரிந்து செல்லும்
கருகிய பகுதியில்
கடவுளர் மானுடருடன் பேசி
மகிழ்ந்த நாட்கள்
என்று பாட்டி சொல்வாள்…”
என்பதில் இல்லாத கோடு வாசக மனதில் நெடிய, சிறிய கோடுகளாக உருமாறுகின்றன.
“மரமாய் இருப்பதை விட
மலராய் இருப்பேன்
வெயிலில்
மழையில்
சுழன்றடிக்கும் காற்றில்
உதிர்ந்து விடலாம்
வேர்களால்
தொடர்ந்து நிலத்தைப் பற்றிக்
கொண்டிருக்க வேண்டியதில்லை”
என்பதில் ஏற்படும் விடுதல் உணர்வு அபாரமானது.
“நாளை வருமெனச் சொல்கிறார்
வெறும் இன்றுகள் தான் வருகின்றன
இடையறாது
எங்கிருந்து வருகுதிந்த இன்றுகள்?..” எனும் கேள்வியும்
“சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்து கொண்டிருந்த
பறவை எங்கே?
அது
சற்றைக்கு முன்
பறந்து கொண்டிருக்கிறது”
என்ற கேள்வி பதிலும் ஆனந்தின் தனித்துவமான காலம் குறித்த சிந்தனைமுறையின் வெளிப்பாடு தான். ஒரு சிறுகதையின் கருவை உடைய “எனக்கு விதிக்கப்பட்டிருந்த நாள்” கவிதையின் தத்துவ விசாரம் பகவான் ரமணரின் “நான் யார்” என்பதன் தொடர்ச்சியே.
கவிமனத்தின் அகவளர்ச்சி சார்ந்த முறைபாடுகளை வெளிக்கொணருவதில் கவிதை பெரும்பங்கை வகிக்கிறது.அந்த ஆழ்மன முறைபாடுகள் அருமையான கவிதைகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வாசக மனத்தின் அகவளர்ச்சியிலும் தன்னளவில் பங்கு கொள்கின்றன.
என்று ஆனந்தின் வரிகளைக் கொண்டே ஆனந்தின் கவிதைகளை நான் புரிந்து கொள்கிறேன்.
இரு கவிஞர்களும் முதல் தொகுப்பிலேயே மொழியாளுமையிலும், சிந்தனை வெளிப்பாட்டிலும் தமிழ்க்கவிதை உலகில் தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கின்றனர். வாழ்வின் மீதான கேள்விகள் எழுந்தாலும், நேர்மறை சிந்தனைகளுடனேயே நகர்வது இருவரின் தன்மையாக இருக்கிறது.
“எங்கே என்று தேடுகிறாயா
உன் காலிடைப் பேரோடையில்
மிதக்கிறேன்
பிடித்துக்கொள்”
என்ற தேவதச்சனின் குரலும்,
“இருந்த இடத்தில்
இருந்தபடியே
நீ இரு
நான் வருவேன்
உன் கால்களை வருடிச் செல்லும்
நீரெல்லாம் கழிந்த பின்னே”
என்ற ஆனந்தின் குரலும் ஒன்று போல தெரிந்தாலும், பிடித்துக்கொள் என்று அவரும், நான் வருவேன் என்று இவரும் சொல்வதன் வேறுபாடு தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது.
“கவிஞனின் மனம் ஒரு வாள். கவிதை ஒரு வாள்வீச்சு. வாளைப் பிடித்து நிறுத்தி விடலாம். வாள்வீச்சைப் பிடித்து நிறுத்தி விட முடியாது. மறுபடி ஒரு முறை வாளை வீசலாம். ஆனால் அது வேறொரு புதிய வீச்சு”
என்ற ஆனந்தின் வரிகளைக் கொண்டே இக்கவிதைத் தொகுப்பை படிக்க வேண்டியதன் அவசியத்தை நான் கூற விரும்புகிறேன். ஆனந்த்-தேவதச்சன் இருவரின் முதல் வாள் வீச்சினை தரிசிக்க வாசியுங்கள்.
– ரஞ்சனி பாசு
நூல் : | அவரவர் கைமணல் |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர்: | ஆனந்த் & தேவதச்சன் |
வெளியீடு: | காலச்சுவடு பதிப்பகம் |
வெளியான ஆண்டு : | முதல் பதிப்பு: 1981
காலச்சுவடு பதிப்பு : 2012 |
பக்கங்கள் : | 64 |
விலை : | ₹ 90 |