நான் பெரும்பாலும் இளையராஜாவின் இசையை அதிகம் விரும்பிக் கேட்பேன். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை நான் தேர்வு செய்து கேட்டது இல்லை. காரணம் அதுவெல்லாம் துள்ளலிசை. மெல்லிசை பாடல்கள் இல்லை என்ற நினைப்பு. யூடியுப்பில் பாடல்களைத் தேர்வு செய்து கேட்கும் போதெல்லாம் இளையராஜாவைத் தவிர வேறு இசையமைப்பாளர்களைத் தேர்வு செய்தது கிடையாது.
தற்போது எழுத்தாளர் விஜய் மகேந்திரன் அவர்கள் எழுதிய ‘ஏ.ஆர்.ரஹ்மான் நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்’ என்கிற நூலினை வாசித்தேன். இந்நூலினை விஜய் மகேந்திரன் அவர்களைச் சந்தித்த போது நட்பின் தொடக்க அடையாளமாகக் கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட உடனே நான் வாசிக்கவில்லை. தொடர்ந்து அவருடைய முகநூல் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகம் குறித்து பிறர் வாசித்த அனுபவங்களைப் பகிர்வதை பார்த்த பின்பே என்னை வாசிக்கத் தூண்டியது எனலாம்.
ஓர் இசையமைப்பாளர் குறித்த புத்தகம் அதில் அப்படி என்ன இருக்கப் போகிறது என்ற மேலோட்டமான இசை குறித்த போதிய நாட்டம் இல்லாததால் அப்படி நினைத்திருந்தேன் என்றுகூட சொல்லலாம். ஆனால் நான் நினைத்ததைவிட அபூர்வமான தகவல்கள் நிகழ்வுகள் இதில் இருந்தன.
இரண்டு ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் தான் பெரிய இசையமைப்பாளர் என்கிற கர்வத்தில் இருப்பார் என்று குருட்டுத் தனமாக நினைத்திருந்த எனக்கு அது தவறு எனச் சுட்டிக் காட்டியதோடு சுவாரசியமான தகவல்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார் விஜய் மகேந்திரன். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற எளிமையான நபர் வேறு இசையமைப்பாளர் இருக்க முடியுமா? என நினைக்கத் தோன்றியது.
அவர் சிறுவயது முதல் வளர்ந்து வந்த விதம் தன்னுடைய கடின உழைப்பு விடாமுயற்சி எதிலும் புதிய அணுகுமுறை நிதானம் இரவு பகல் பாராமல் உழைப்பை செலுத்தும் பண்பு என ஏ.ஆர்.ரஹ்மான் கடந்து வந்த பாதை வாசிப்போரை மலைக்க வைக்கிறது. தன்னுடைய தந்தையின் மறைவிற்குப் பின் துவண்டுவிடாமல் தொடர்ந்து பல்வேறு இசையமைப்பாளர்களிடம் வேலை செய்து இசையை நுணுக்கமாகக் கற்றுக் கொண்டு இசையமைப்பாளாராக உருவாகி இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் நம் கண் முன்னால் நிற்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இசையமைத்த முதல் படமான ரோஜாவிலேயே தேசிய விருது பெற்றாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத மனப்பான்மையை அவர் இன்று தொட்டிருக்கும் உச்சத்தின் அடையாளமாக விளங்குகிறது. இதுபோன்ற மனப்பான்மையை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என நமக்கு வழிகாட்டியாக ஏ.ஆர்.ரஹ்மான் திகழ்கிறார் என்பதை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் விஜய் மகேந்திரன்.
திலிப் என்ற இயற்பெயரைக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படமான ரோஜாவிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் என அறிமுகமாகியிருக்கும் வரலாறு மிக அருமை. ரோஜா படத்திற்கு மகேஷ் என்கிற இசையமைப்பாளர் இசையமைக்க இருந்த நேரத்தில் அவருக்கு அதற்கான சூழல் இல்லையென தெரிந்ததும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவ்வாய்ப்பு கொடுப்பட்டு அவர் சாதித்த வரலாறு மிகவும் சுவாரசியமானவை. எப்போதுமே புதிதாக நுழையும் ஒருவரின் பணி எடுபடுமா? என்ற ஐயம் பொதுவாக இருக்கத்தான் செய்யும். அந்த அனுபவத்தையும் கடந்து முதல் படத்திலே சாதித்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அதிலிருந்து ஏறுமுகம் கிடைக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் தான் பல்வேறு இசையமைப்பாளர்களிடமிருந்து எத்தனையோ விசயத்தைக் கற்றுக் கொண்ட அவர் இளையராஜாவிடம் ஆன்மீகச் சிந்தனையை உள்வாங்கியதை மிகப் பெருமையாக குறிப்பிடும் அளவுக்கு அவரின் பால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டியிருப்பது சிறப்பு.
சாதாரண கீபோர்டு வாசிப்பாளாராக 11 ஆம் வயதிலிருந்து தொடங்கி 20 க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய இளைஞனான ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கென பஞ்சதன் எனத் தனி ஸ்டூடியோ அமைத்து பல வாத்திய கருவிகளை வாங்கியதோடு பல புதிய பாடகர்களை பாடவைத்தும் பெரிய பாடகர்களோடு பணியாற்றிய அனுபவமும் வியக்க வைக்கிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனையே இரண்டு பாடல்களுக்கு பாடவைத்து ரிக்கார்டு செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இது அவரின் இசை பயணத்தின் உச்சத்தை உணர்த்துகிறது.
தமிழ்ப்படங்கள் மட்டுமல்லாது இந்திப் படங்களிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கொடிக் கட்டி பறந்திருக்கிறார் என்ற தகவல் உள்பட ஆங்கிலப் படங்களிலும் இசையமைத்த பெருமை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உண்டு என்ற தகவல் எனக்குப் புதுமையாக இருந்தன. காரணம் எனக்கு இசை குறித்த போதிய நாட்டம் இல்லாததுதான்.
ஏ.ஆர்.ரஹ்மான் எந்தவொரு பாடலுக்கு இசையமைத்தாலும் தனக்கு திருப்தி கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் அவற்றை செழுமைப்படுத்திக் கொண்டே இருப்பார் என்பது அவரின் இசைப் பயணத்தின் உன்னதத்தை உணர முடிகிறது. அவரோடு இசைப் பயணத்தில் மிக முக்கிய பங்காற்றிய பணியாற்றிய கலைஞர்களையும் சுட்டிக் காட்டி மேடைகளில் அவர்களுக்குரிய அந்தஸ்து அங்கீகாரம் ஆகியவற்றை அனுமதிக்கும் பண்பு ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருப்பதையும் விஜய் மகேந்திரன் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதுவே அவரது பலம் என நினைக்க வைக்கிறது. தன்னுடன் பயணித்த பிற கலைஞர்களை மேடையில் உரிய முறையில் அங்கீகரிக்க பலர் தயங்கும் வேளையில் இவர் அதை சிறிதும் தயக்கமின்றி செய்திருக்கிhர் என்பதே அவரின் தனிச் சிறப்பு.
ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளியானதும் தேடிச் சென்று வாங்கி அவரின் இசையைக் கேட்டு மகிழ்வதும் ரசிப்பதுமாக அவரின் தீவிர ரசிகராகவே இருந்திருக்கிறார் விஜய் மகேந்திரன். இந்தளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது பற்று இருந்ததால்தான் அவரின் பேட்டிகள் பத்திரிகைகளில் வெளியாகும் போது ஓடோடி வாங்கி படித்து மகிழ்ந்திருக்கிறார்.
விஜய் மகேந்திரன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் மீதிருந்த காதலால்தான் அவர் குறித்த தேடுதலுக்கு அவரை முடுக்கிவிட்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பதிவுகளைச் சேகரிப்பதும் அவரின் இசைப் பயணம் குறித்த ஆழ்ந்த தேடுதலுமே இப்படியொரு நூலை படைக்க காரணமாக இருந்திருக்கிறது.
விஜய் மகேந்திரனுக்கு சினிமா மீதான அவரது ஆர்வம் சினிமா உலகில் அவரது புது முயற்சிகளுமே இசைத் துறையில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பதிவுகளைத் தொடர்ந்து தொடராக எழுதி பின்பு புத்தக வடிவில் வெளிவர காரணமாக இருந்திருக்கிறது. தொடராக மின்னம்பலம் டாட் காமில் எழுதிய போதே பெரும் வரவேற்பை பெற்றதோடு புத்தகமாக வந்த பின்பு அதே வரவேற்பு இந்நூலுக்குக் கிடைத்திருக்கிறது என்பதே இதன் சிறப்பு எனலாம்.
இத்தகைய படைப்பை புலம் பதிப்பகம் வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது. தரமான அட்டை வடிவமைப்பு கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள படங்களும் இந்நூலுக்கு சிறப்பு சேர்த்துள்ளன.
ஓர் இசையை உருவாக்கப் பின்னணியில் எவ்வளவு மெனக்கெடல்கள் செய்ய வேண்டியதிருக்கிறது என்பதை இசை குறித்த நாட்டம் இல்லாத நபர்கள் படித்தால்கூட இசையின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டிவிடும் அளவுக்கு எளிமையான முறையில் சரளமாக சொல்லப்பட்டுள்ளது. உண்மையாகவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பல படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருப்பார் என்று நினைத்திருந்த நான் அது இளையராஜா அல்ல ஏ.ஆர்.ரஹ்மான் எனத் தெரிந்ததும் ஆச்சர்யமே மிஞ்சியது. இன்னும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசைக் கலைஞர்களின் இசையை ரசிக்கத் தொடங்காத என் போன்றோரை அவரது இசை மழையில் நனைய தூண்டு கோலாக இந்நூல் அமைந்தது எனலாம்.
ஓர் இசையை கேட்கும் போது மனது எவ்வளவு சாந்தமடையுமோ? அதுபோலவே இந்நூலை வாசித்த தருணத்திலும் உணர்ந்தேன். இத்தகைய நூலினை படைக்க பெரும் முயற்சி மேற்கொண்ட எழுத்தாளர் விஜய் மகேந்திரன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்… இன்னும் இதுபோன்ற சினிமா சார்ந்த படைப்புகளை அவர் படைக்க வேண்டும் என்பதே என் ஆவல்!
– மு.தமிழ்ச்செல்வன்
நூல் : | ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம் |
பிரிவு : | கட்டுரைகள் |
ஆசிரியர்: | விஜய் மகேந்திரன் |
வெளியீடு: | புலம் வெளியீடு |
வெளியான ஆண்டு : | டிசம்பர் 2016 ( முதற் பதிப்பு) |
பக்கங்கள் : | 150 |
விலை : | ₹ 120 |
தொடர்புக்கு: | 98406 03499 |
Buy on Amazon |
நூலாசிரியர் குறித்து:
விஜய் மகேந்திரன்
நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ''இருள் விலகும் கதைகள்'' என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.
அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ''நகரத்திற்கு வெளியே'' இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ''நகரத்திற்கு வெளியே'' பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ''படி''அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ''ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ''புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ''சாமானிய மனிதனின் எதிர்குரல்'' இவரது நாவல் ''ஊடுருவல்'' ஆகியனவும் வெளிவந்துள்ளது.
இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ''அசோகமித்திரன் படைப்பூக்க விருது ''கொடுத்துள்ளது.