13 மற்றும் 14 வயதுகளில் தனது நாட்குறிப்புகளை எழுதிய ஒரு சிறுமியின், அன்றாட வாழ்க்கை ஏற்பட்ட ஒரு சோகமான கதை தான் இந்த புத்தகம். கண்டிப்பாக எல்லா பெற்றோர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
ஆனி பிராங்க் ஜெர்மனியில் பிராங்பேர்ட் நகரத்தில் 1929ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி பிறந்ததார் , தனது சகோதரி மார்க்ரெட், மற்றும் தாய் தந்தையருடன் ஹிட்லரரின் அடக்குமுறைக்கு பயந்து தப்பி ஓடி, ஆம்ஸ்டர்டாமில் வாழ்ந்த நிகழ்ச்சியைத் தான் இங்கே தனது நாட்குறிப்பில் இரண்டு வருடகாலமாக எழுதியுள்ளார்.
டச்சு மொழியில் எழுதப்பட்ட இந்த நாட்குறிப்புகள் 1950ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது . அதனைத்தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்நூல் வெளியாகி உள்ளது. இந்த நாவலில் மூன்று விஷயங்களை நாங்கள் வாசிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது அவளது காதல் உணர்ச்சிகள், அதில் ஏற்படும் தவிர்ப்பு, இனம் புரியாத இன்பம். தலைமறைவு வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள். அவர்கள் எ ப்படி ஒளிந்து இரண்டு வருடங்களாக வாழ்ந்தார்கள் என்பது பற்றிய அனைத்து விடயங்களையும் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
ஆனி தனது நாட்குறிப்புக்கு கிட்டி என்று பெயர் வைத்து தனது தோழியிடம் கூறுவது போல் இந்த நாட்குறிப்பை நகர்த்தியிருக்கிறார்.ஹிட்லரின் ராணுவ போர் வீரர்களிடம் இருந்து தப்புவதற்காக, அவர்கள் ஒரு பதுங்குழியில் தங்களது மறைவு வாழ்வை ஆரம்பிக்கிறார்கள்.(( 8 பேர் அடங்கிய)
நாவலின் ஆரம்ப கட்டமாக அந்தப் பகுதிக்கு சென்ற போது, அதிகப்படி அலங்கோலமாக கிடந்தது என்பதையும், அதனை நாங்கள் ஒழுங்கு படுத்திய விதம், படுக்கை அறை, வாசிப்பு என்பவற்றை ஒழுங்குபடுத்திய தனையும், அதன் பின்னர் ஒரு சில சட்ட திட்டங்களை அங்கு நாங்களாகவே அமைத்துக் கொண்டோம். அதற்கு என்னுடைய டாடியும் மம்மியும் எங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தவர்களும் வகுத்துக் கொண்டார்கள்.
ஒரு குடும்பத்தில் அதுவும் ஒரு சிறிய இடத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வந்து சேருகின்றன, அதற்குள் ஹிட்லரின் போர் விமானங்களும், ஆங்கிலேயே அமெரிக்க போர் விமானங்களும், சத்தம் போட்ட வண்ணம் இருக்கின்றது. இவற்றையும் தாண்டி அவர்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளை அன்றாடம் தனது நாட்குறிப்பில் பதிவு செய்கிறார் ஆன்.
மிகச் சிறு வயதிலேயே ஆன் தனது எண்ணங்களை சிறப்பாகப் பதிவு செய்கிறார் .
பீற்ரருடன் தனக்கு ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறுவதையும், ஒரு இளம் பெண்ணின் மனநிலை எப்படிப்பட்ட உணர்வுகளைத் தாங்கி நிற்கும் என்பதனையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். ஒரு ஆண் மகன் தனது பதின்ம வயதை அடைந்தவுடன் அவன் எதனைத் தயார் செய்யவேண்டும், அதே போல் ஒரு இளம் மங்கையின் விருப்பங்கள் எப்படியிருக்கும், அதனைப் பெற்றோர்களும் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற அருமையான கோட்பாடுகளை ஆன் இங்கே பதிவு செய்கிறார்.
ஆன் தனது எண்ணங்களையும், வருங்காலக் கனவுகளையும் இங்கே தனது கிட்டிக்குஅடிக்கடி நினவு படுத்திகிறார். ஒரு பிள்ளையின் சிந்தனைகளை பெற்றோர்களும் ஏன் செவிமடுக்கக் கூடாது என கேட்கிறார் ஆன் .
அந்த தலைமறை முகாமில் புத்தக வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதனை ஆன் மூலமாக அறியக்கூடியதாக இருக்கின்றது. அவர்தான். ஒரு பத்திரிகையாளராகவோ அல்லது ஒரு எழுத்தாளராகவோ வர விரும்பினார்.
தங்களது முகாமில்(8 பேர் கொண்டது) சாப்பாட்டைப் பொறுத்த மட்டில், மிகவும்மட்டுப்படுத்தப்பட்ட உணவே தாங்கள் உட்கொண்டதாயும், பல நாட்களில் அழுகிய உருளைக்கிழங்கும், ஓட்ஸ் கஞ்சியும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
போர் தொடர்ந்து உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் எந்நேரமும் நாங்கள் கைது செய்யப்பட்டு வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்படலாம் என்ற பீதியிலே வாழ்நாட்களைக் கழித்ததாகவும், அதே வேளை பஞ்சம், பட்டினி, களவு, கொள்ளைகள், இளம் பெண்கள் காணாமல் போவது போன்ற துயரமான சம்பவங்களை ஆன் இங்கே தனது நாட்குறிப்பில் எழுதத் தவறவில்லை.
முரண்பாடுகளின் சிறிய மூட்டை என்பதன் விளக்கம் என்னவென்று அறிய ஆனியின் நாட்குறிப்பு வாசியுங்கள். பொதுவாக ஒருவர் எழுதிய தினசரி நாட்குறிப்பை மற்றொருவர் வாசிக்க அனுமதிப்பதில்லை. ஆனால் ஆனின் நட்குறிப்பை எல்லோரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அது அவ்வளவுக்கு துயரமான செய்திகளையும், ஏக்கங்களையும், உணர்வுகளின் வெளிப்பாடுகளையும், சிறந்த சிந்திக்க வைக்கும் வரிகளையும் தாங்கியே நிற்கின்றது.
அத்துடன் மிக முக்கியமாக, இதனைத் தமிழ் வாசகர்களுக்கு மொழியாக்கம் தந்துள்ள உஷாதரன் அவர்களின் ழொழி நடை, நேரடியாகவே ஆனி எங்களுடன் கதைப்பது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லலாம்.
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். பிள்ளைகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதற்கு ஆனியின் பல வரிகள் உங்களைச் சிந்திக்க வைக்கும் என்பதில் முழு நம்பிக்கை உண்டு. எனவே வாசியுங்கள், வாசியுங்கள், வாசியுங்கள்.!
பொன் விஜி
– சுவிஸ்
நூல்: | ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் |
பிரிவு : | நாட்குறிப்புகள் |
ஆசிரியர்: | ஆனி ஃபிராங்க் |
தமிழில் : | உஷாதரன் |
வெளியீடு: | எதிர் வெளியீடு |
வெளியான ஆண்டு | 2011 |
பக்கங்கள்: | 400 |
விலை: | ₹ 400 |
நூலைப் பெற : | +91 9942511302 |
சிறந்த இலக்கியம் சார்ந்த பார்வை