எம்.ரிஷான் ஷெரீஃப் எழுதிய ஆட்டுக்குட்டிகளின் தேவதை கவிதை நூலுக்கான அணிந்துரை.
3-டி திரைப்படம் ஓடுகிற படமாளிகையில் சீட்டு வாங்கிக் கொண்டு நுழைகையில் காணக் கிடைக்கும் காட்சி இது. முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றைத் தரும்போது கூடவே அதைத் துடைப்பதற்கான முக்கோணமாய் மடக்கப் பட்ட காகித நாப்கினையும் சேர்த்தே தந்து உள்ளே அனுப்பும் தியேட்டர் ஊழியன் சற்றே சேட்டை செய்பவன் என்று யூகிக்கிற பொடியனை மாத்திரம் தேர்ந்தெடுத்து “கண்ணாடியை உடைச்சாலோ தொலைச்சாலோ ஃபைன் கட்டணும்,தெரியும்ல” என்பது அவனது கூடுதல் வேலை. பொடியனோ, படம் நெடுக அவ்வப்போது தன்னை மீறி அந்தக் கண்ணாடி உடைந்துவிடக் கூடுமோவென அச்சமொன்றைக் கொள்வதும் விலகுவதுமாக மற்றவர்க்கு வாய்த்திராத படமொன்றாய்ப் பார்க்கிறான். பல நோக்கங்களுக்காகத் திரையில் பாய்ந்து பாய்ந்து பல லீலைகளைப் புரிகிற ஸ்பைடர்மேன் அல்லது சூப்பர்மேனிடம் தன் கண்ணாடியையும் சேர்த்துக் காப்பாற்றித் தரமுடியுமாவென மௌனமாய் இறைஞ்சுகிறான். அத்தகைய அச்சம் அன்றொரு தினத்துக்கு மாத்திரமானதல்ல என்பதைப் புரிய வாய்க்கையில் கவிதை என்பது தன்னைக் காட்டிலும் பெருத்த நிழல்களை உண்டு பண்ணத் தொடங்குகிறது. முப்பரிமாணக் கண்ணாடியின் வழியே காணக்கிடைக்கிற அதிமனிதர்களின் வசனங்களுக்கு ஊடாகத் தன் பிரார்த்தனையை எப்படி முன்வைப்பதென்று தெரியாமல் திகைக்கும் சிறுவனின் மனோபாவ ஊடாட்டங்களைத் தன்மொழியெனக் கைக்கொண்டு எழுதப்பெற்ற கவிதைகள் அரியவை.
எம்.ரிஷான் ஷெரீஃபின் ஆட்டுக்குட்டிகளின் தேவதை கவிதைத் தொகுதிக்கு ஒரு அணிந்துரையை வழங்கவேண்டுமென்று நண்பரும் கடல் பதிப்பகத்தின் நிறுவனருமாகிய விஜய் மகேந்திரன் கேட்டுக் கொண்ட போது என்னிடம் அந்தத் தலைப்பு குறித்த ஈர்ப்பு மட்டுமே திரண்டிருந்தது. பிற்பாடு கவிதைத் தொகுதியை வாசித்த பொழுது ஞாபகத்தின் முதல் துளி தொடங்கித் தற்கணம் வரையிலான லட்சோப லட்சம் சீட்டுக்களை ஒரு பெட்டியிலிட்டுக் குலுக்கி எடுத்தாற் போன்ற கலவையான மனச்சித்திரங்களுக்குள் செல்வதும் மீள்வதுமாக இருக்க நேர்ந்தது
பல்பொருள் அங்காடியின் சீர்மிகுந்த அடுக்குகளில் வரிசையாகக் காணக் கிடைக்கிற லட்சோப லட்சம் மாதிரிகளில் ஒன்று அல்லவே அல்ல, மாறாகக் கவிதை யாரும் நுழைந்து பாராத வன இருளின் நடுவாந்திர ஆழத்தில் வீற்றிருக்கும் பேரற்ற உப தெய்வத்தின் உதட்டோரம் தொக்கிக் கிடக்கும் மர்மம் பொங்குகிற குறும்புன்னகையினைப் போன்றதொரு ஒற்றை. ரிஷான், தன் கவிதைகளினூடாகக் கட்டமைக்கிற உலகமானது உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் ஊடாடுகிற அந்தரத்தின் இல்லா இருளினுள் வாசிப்பவனை எறிந்தபடி விரியத் தொடங்குகிறது. நுழைவதற்கும் மீள்வதற்கும் இடையில் ஒன்றாக உடைந்து இன்னொன்றாகத் திரும்புகிற மாயத்தின் உட்புற நோக்கெனக் கசியும் வினோத இருப்புமாற்றத்தை உருவாக்குகிற கவிதைகள் இவை.
“பாம்பும் ஒன்றுதான்
புழுவும் ஒன்றுதான்
செலுத்தும் விஷத்தில்தான் இருக்கிறது
இரை மடங்கும் தந்திரம்”
அறிந்த சொற்களின் அறியக் கிட்டியிராத அர்த்த இருளுக்குள் சென்று திரும்புவதற்கான ஒளிர்தலை சாத்தியம் செய்வது தான் கவிதைக்கான ஆகச்சிறந்த பண்பாக அமைய முடியும்.
இந்தத் தொகுதியின் பல கவிதைகள் மனத்தைக் கையிலள்ளி வான் நோக்கி எறிந்தன. விலாசம் வந்து சேருங்கணம் கதவெண்ணை மாற்றியெழுதி அட்டகாசம் செய்கிற குறளியின் கணிதக்ரூரமெனத் திகைக்க வைத்தன. “தெளிதல்” என்று ஒரு கவிதை அப்படியான அவஸ்தை மொத்தத்திற்கும் உதாரணம் போல் விளங்குகிற கவிதை. இதன் தொடக்கத்திலேயே “வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை” என்று அறிவிக்கிற ரிஷான் தொடர்ந்து செல்கையில் வாசக மனத்தை வரைபடத்தின் வெவ்வேறு கையளித்தல்களுக்கான துண்டுகளைப் போல் கிழித்தெறிகிறார்.
“கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்
அகலும் போது உறுத்துவதைத்
தட்டிவிடத் தான் வேண்டியிருக்கிறது
ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க
அலைகளும் எங்குமில்லை
நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது.”
மந்திரப்பாடலை வாசித்தபடி ஊரைக் கடக்கிறான் புதிய பைப்பர். அவனைப் பின் தொடர்ந்தபடி வெளியேறுகிறார்கள் எல்லா ஊர்களின் சிறார்களும். அப்படியான பைப்பரின் கவிதையாக இதனை ஏன் சொல்லக் கூடாது.
“வெளிச்சம் எதிலுமில்லை” என்கிற வரியின் ராட்சஸம் அதனைக் கடந்து அடுத்த கணத்திற்குள் நுழைய விடாமல் ஒரு கயிற்றைப் போல் கால்களைத் தடுக்கிவிட்டுக் கொண்டே இருப்பதைச் சொல்லியாக வேண்டும்.
“நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை” என்பதை வாசிக்கையில் “அடப்பாவிக் கவிஞா!” என்று மனதாரக் கத்தினேன். எனக்கு மட்டுந்தான் கேட்குமெனினும் அப்படிக் கத்தாமலிருக்க முடியவில்லை. சிறந்த கவிதை ஒருபோதும் எதிர்பார்த்த எதுவொன்றையும் நிகழ்த்துவதே இல்லை. மாறாக அது நெடுமரமொன்றையே சின்னஞ்சிறு பூவாக்கிப் போன்ஸாய் உலகைக் கட்டிவிடுகிறது. சமீபத்தில் வாசிக்கக் கிட்டிய ஆகச்சிறந்த கவிதை என்னளவில் “தெளிதல்” தான்.
இன்னொரு கவிதையில்,
சிறுமியின் கூரிய பற்களும் நகங்களும் வேட்டைக்கானவை என அவளுக்கு ஏலவே அறிவுறுத்த மறந்துவிட்டாய் அம்மா எனக் கவிதை முற்றுகிற புள்ளியிலிருந்து முடிவற்ற இருளில் கண்கள் கூசுகிற வலியொன்றைச் சுமந்தபடி அப்படியே மடங்கிச் சரிந்துவிட நேர்கிறது.
“பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்.”
யார் முன் வந்து நின்றாலும் பொருந்திவிடக் கூடிய உலகளாவிய துக்கத்தைப் பகிரத் தருகையில் கவிதையின் நிணம் காற்றாய் மாறிவிடுகிறது. இந்தக் கவிதைகள் நிலத்தை இழப்பதும் ஊரைத் தொலைப்பதுமான பறிகொடுப்பின் வழமையான அர்த்தங்களைத் தாண்டிய மேலதிகங்களைப் பேச விழைகின்றன. மருத்துவக் காரணங்களைச் சொல்லிக் குடலைப் பாதியாகக் கத்தரித்துத் தைக்கப் பட்டவனின் வெட்டி எறியப்பட்ட குடலின் நீளம் அவன் கனவுகள் எல்லாவற்றின் மீதும் படர்ந்துவிடுகிறாற் போல் சமரசம் செய்து கொண்ட வாழ்வுகளின் அத்தனை துகள்களையும் வெளியின் மீது மாத்திரமல்ல அண்ட சராசரத்தின் மீதும் துகள்களாக்கிப் படரச் செய்துவிடுகிற மாபெரும் எத்தனத்தை மறைபொருளாக்கிப் பேச முனைகிற ரிஷானின் கவிமொழி நுண்மையானது.
“உன் எதிர்பார்ப்புக்களையெல்லாம் வெள்ளத்தில் சுமந்துசென்று
ஆற்றில் சேர்த்தது பருவம் கடந்து வந்த மழை”
என்று எழுதுவதற்கு முந்தைய கணத்தின் மனோநிலையை எத்தனை யூகித்தும் சென்றறிய முடியாமல் திகைக்கிறேன். இப்படியான கவித்துவத்துக்கு முந்தைய கணங்களை மாத்திரம் கத்தரித்துச் சேகரம் செய்து மாபெரும் ஆல்பத்தைத் தயார்படுத்தினால் என்ன என்று தோன்றுகிறது.
இந்தத் கவிதைத் தொகுதியின் இன்னுமோர் பலம் என நான் கருதுவது, எந்தக் கவிதையைத் திறந்தாலும் வழமையினூடாடித் திகைக்கையில் சரித்து விடுகிற அம்பு நுனி ஒத்த வரிகளைக் கண்ணுறாமல் கடக்க முடியாமற் போவது தான். இத்தனை செறிவுமிக்க கவித்துவத்தைப் பங்குபாகம் செய்து அனேகக் கவிதைகளில் தெளித்து வைப்பதைத் தன்னியல்பு என்று கருதினால் வருகிற வியப்பைக் காட்டிலும் கவனத்தோடு செய்து பார்த்த எத்தனம் என்று எண்ணுவதால் வருகிற ஆச்சர்யத்தின் எடை சில டன்கள் அதிகம் என்றே சொல்லத் தோன்றுகிறது. கவிதைக்குள் கவிதையாக அப்படியான தருணத் திரிகள் வாசிப்பனுபவத்தை வண்ணப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு இப்படி முடிகிற இந்தக் கவிதையைச் சொல்வேன்.
“எல்லாவற்றையும் குறித்துத் தெரிந்திருக்கிறாய்
ஆனாலும் சகா
நீ உணர்வதற்கும் நம்புவதற்கும்
அப்பாலுள்ளது எனதுலகம்”
உருக்கொண்ட புள்ளியினின்றும் மெல்லத் தன்னை வளர்த்திக் கொண்டு ஒரு கட்டத்தில் தாளவொண்ணாப் பெருவாதையாய்ப் பெருக்கங்கொள்ளும் ஒரே வலியின் பல்வேறு தருணக் கிளைத்தல்களாகவே இந்தக் கவிதைகளைக் கொள்ள முடிகிறது. எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் தன்முனைப்பால் எழுகின்ற சத்தமொன்றில் இயல்பாக இருக்கவாய்க்கிற லய ஒழுங்கென இந்தக் கவிதைகள் ஏற்படுத்த விழைகிற உணர்வுகளும் மௌனமும் விரிகின்றன. வேறொரு கவிதையில் அரூபமான கண்களைக் கொண்ட பூனைகள் பூனைகள் மாத்திரமேயல்ல. என்று எளிதில் சொல்லிப் போகிறார் என் பூனைகளை இனி எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் அல்லாடுகிறேன்.
எந்த ஒரு தொகுப்பும் நிறைக்கையில் வாசகனின் அகவுலகில் முன்பின் எதோவொரு சலனத்தை நிகழ்த்துவது நல்வினை. குறைந்த பட்ச அசைவும் வாய்க்காத கற்சொற் கவிதைகளைக் காட்டிலும் உசிதம் என்று இன்னொன்றைக் கருதுகிறேன். பெருஞ்செல்வன் மதியவுறக்கம் நடுவே புரண்டு புரண்டு அலைகிறாற் போலவோ, எளிதில் தலைகீழாய்ப் படர்கிற எடையற்ற இலையின் விரவலைப் போலவோ, உலர்ந்த மன அடைவினைச் சாத்தியப்படுத்துகிறவையே உத்தமக் கவிதைகள். எம்.ரிஷான் ஷெரீஃப் இன்னும் புரவியோடுவதற்கான திசைகள் பல உண்டு. தேட்டம் குறையாப் பித்துமனத்தோடு தன் முன்னே வந்து நிற்போர்க்குக் கூடுதலாய்ச் சிலபல உருவங்களைக் காணத் தருவது கவிதை என்கிற பைத்திய ஆடியின் மாயப் பேரன்பு. ரிஷானின் “ஆட்டுக்குட்டிகளின் தேவதை” தொகுதி பெருவெற்றி பெற வாழ்த்துகிறேன்.
வாழ்தல் இனிது !
பேரன்போடு.
ஆத்மார்த்தி
[email protected]
15/12/2021
நூல் : ஆட்டுக்குட்டிகளின் தேவதை
வகை : கவிதைகள்
ஆசிரியர் : எம். ரிஷான் ஷெரீப்
வெளியீடு : கடல் பதிப்பகம்
வெளியான ஆண்டு: 2022
பக்கங்கள் : 144
விலை: ₹ 190
நூலைப் பெற : Vimarsanam Web - Online Book Store