புத்தகத்தின் தலைப்பும் இதன் அட்டைப் படமுமே.. இதன் உள்ளிருக்கும் சாரத்தை உரக்கச் சொல்லிவிடுகின்றன. நமக்குத் தான் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.

மொத்தம் பத்து கதைகள் இருக்கின்றன. ஆணி, விரல்கள், ஆண், காது, கூந்தல் என்று நீளும் ஒவ்வொரு கதைக்கான தலைப்புமே அதனுள்ளே கனன்று கொண்டிருக்கும் காத்திரங்களின் வெப்பத்திற்குக் கட்டியங் கூறுகின்றன.

உறவுகளுக்கிடையேயான சிக்கல்களும், குடும்ப வன்முறைகளும், குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைகளுமாக புத்தகம் நெடுக பத்து கதைகளும் பத்தாயிரம் கரங்களாக நீண்டு நம் இதயத்தின் பக்கங்களையெல்லாம் கிழித்துக் கூறுபோட்டு வேடிக்கை செய்கின்றன.

ஆண்-பெண் உறவுக்கிடையேயான காதலும் காமமும் புணர்ச்சியுமாக உணர்ச்சியெழுச்சிகளும் அதனூடே ஊடுபாவிக் கலந்திட்ட துரோகத்தின் வீச்சங்களுமாக.. நிஜத்தைப் பேசுகின்றன கதைகள்.

எந்தத் தவற்றுக்கும் ஆணியைக் கொண்டு கையில் கீறல்களைக் கோடிழுப்பது தான் சேகரின் அப்பாவுக்குப் பழக்கம். இது அம்மாவுக்கும் தொடரும். தாங்க முடியாத ஒரு கட்டத்தில் வீடகன்றவனை அப்பாவின் “ஆணி” த்தர வடுக்கள் நொடிதோறும் துரத்தியடிக்க.. மண்டை கொள்ளா ஆணிகளோடே மண்ணைத் தழுவுகிறது ஒரு சீழ்ப்பிடித்த ஆத்மா.

25 ஆண்டுகளுக்கு முன்பான காதலொன்று.. இரண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகும் கூட ஒரு துயரக் கனவாகத் துரத்திக் கொண்டேயிருக்கிறது சுசியை. அவளும் அதை நோக்கியே பயணிக்கிறாள். இரண்டாவது கணவன் நவீன் அதைப் புரிந்து கொண்டு விலகுகிறான்.

அம்மாவின் இரண்டாவது கணவனின் விரல்களுக்கு அஞ்சி தன் ஆறாவது வயதிலேயே கன்னியாஸ்திரீ மடத்துக்கு வந்து சேரும் எமிலியின்.. கனவெங்கும் விரல்கள் துரத்துகின்றன. பொத்திப் பொத்திக் காத்த உடலை.. ஆணின் வாடைக்கே வாய்ப்பில்லாத மடத்துக்குள்ளும் எட்டிப் பிடிக்கின்றன மனோவின் விரல்கள்.

நகரின் புகழ்பெற்ற நகை வடிவமைப்பாளரான அருணாவுக்கு மிகப்பெரிய நகை வியாபாரி சதாசிவத்தோடு விரும்பிப் பூசிக்கொண்ட காதல் வாழ்க்கை தான். எனினும் ஆறுவயதில் அவளைக் கிளர்த்திப் போட்ட சங்கடமாக வாழ்வின் இறுதிவரைக்கும் அலைக்கழித்துப் பைத்தியமாக்கி அலையவிடுகிறது அப்பாவின் விரல்கள்.

சேவியரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காகத் தன் அம்மாவே தேடிவந்து நைச்சியம் பேசி அழைத்துப் போய் காதுக்குள் மருந்திட்டுக் கொலையுண்டு போகும் ஒரு மேல் வர்க்கத்துப் பெண்ணின் மீதான ஆணவக் கொலை..

15 வயதில் சந்திக்க நேர்ந்த ஒரு வக்கிரக் காட்சி தந்த கசப்பின் துரத்தலோடு கவிதைகளுக்குள் தன்னைப் புதைத்துக் கொள்ளுகிற சுகந்திக்கு 35 வயதில் விடாது கருப்புயென கதவைத் தட்டுகின்றன பீமனின் விரல்கள்.

உறவுச் சிக்கலுக்குள் பகடைக் காயென தவித்தலைகின்ற அருணா, சுகந்தியென்று இன்னும் இன்னும் கதையின் பக்கங்களெங்கும் இப்படி நீளும் பெண்களெல்லாம் உங்களையோ என்னையோ நம் பயணப் பாதையில் நாம் கடந்து வந்த எவரையுமோ நிச்சயம் நம் நினைவில் நிறுத்திப் போகிறார்கள்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் தமிழகத்துக்கு 3 வது இடமென்றும், தமிழகத்தில் தினசரி 4 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகவும் புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.

இன்றைய தினத்தில் குழந்தைகளுக்குத் தனது சொந்த வீடென்பதே பாதுகாப்பில்லாத நிலையில் தான் இருக்கிறதென்பது மறுக்க முடியாத கசக்கும் உண்மை. இப்படியான வன்முறைகளில் ஈடுபடுவது அந்தக் குழந்தைகளுக்கு மிக நன்றாகப் பரிச்சயமானவர் தான் என்பதுவே இந்தக் குற்றங்கள் யாவும் வெளித்தெரியாது போவதற்கும் இன்னும் மலிந்து போவதற்குமான இருளை நீட்டிக்கின்றன.

அப்படியே ஒன்றிரண்டு முட்டிமோதி வெளிவரினும்.. எந்த ஒரு செய்தியும் அன்றைய தினத்துக்கான பேசுபொருளாகிக் கடந்து போய்விடுவதான நமது வாடிக்கைக்குள் அடங்கிப் பிசுபிசுத்துப் போய்விடுகிறது.

ஆனால்.. சம்பந்தப்பட்ட அந்த குழந்தை அத்தனை எளிதாக அதனைக் கடந்துவிட முடிவதில்லை. கனவிலும் நனவிலுமாக தன் நினைவின் அடுக்குகளெங்கும் வக்கிரம் தோய்ந்த அந்த விரல்களின் தீண்டல்கள் தந்த நடுக்கங்களோடும் பதற்றங்களோடுமே அலையாடுகிறாள்.

அப்பாவின் ஆணைக்கு விரைந்தோடும் செயல் தவிர பேச்சறுந்த.. காதுகள் தேவைப்படாத அம்மக்கள்.,  ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட பாலினச் சமத்துவமின்மையைத் தனது ஆறாவது விரலாக்கிக் கொண்ட அப்பாக்கள்..,  எங்கேயும் எப்போதும் எந்த நிலையிலும் காத்துக் கொள்ள முடியாத பாதுகாப்பில்லாத உடல்கள்..  என்று “விரல்கள்” பற்ற வைத்த நெருப்பு புகைந்து கொண்டே இருக்கிறது. தணியக் கூடியதா.. இந்த துயரச் சாபம் !!.


 

நூல் தகவல்:

நூல் : விரல்கள்

வகை :  சிறுகதைகள்

ஆசிரியர் : குட்டி ரேவதி

வெளியீடு :   எழுத்து பிரசுரம்

வெளியான ஆண்டு:  2020

பக்கங்கள் :  125

விலை:  ₹  150

Buy On Amazon :