ரு கவிதை, கவிஞரின் உணர்ச்சியின் உச்சக்கட்டமாய்க் கிடைக்கும் உள்ளொளியில் பிறக்க வேண்டும். அவ்வாறு பிறக்கின்ற கவிதை, காலத்தில் உணரும்  உண்மையை கடிகாரத்தின் சின்ன முள்ளாகவும், பொங்கிப் பெருகும் அழகியலை பெரிய முள்ளாகவும், கவிதைக்கான கோட்பாடுகளை நொடி முள்ளாகவும் கொண்டிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் வகுத்திருக்கிறார்கள். இம்மூன்றையும் கொண்ட கவிதையின் இயக்கம் மக்களிடையே பெருந்தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மாற்றத்திற்கான அடிநாதமாகவும் அமையும். இயல்பிலேயே இவைகளைனைத்தையும் உள்ளடக்கியதோடு, பழைய கோட்பாடுகளையும் உடைத்தெறிகின்ற துணிச்சலான பாங்கையும் தன்னகத்தே கொண்டிருப்பவர் அம்பிகா குமரன். அது ஒரு இசைஞானியின் துணிச்சலைப் போன்றது.  துணுக்குக் கவிதைகள் முதல் நீண்ட கவிதைகள் வரை மிகவும் லாவகமாக கையாளும் ஆற்றல் கொண்டவர் அம்பிகா குமரன். அவரின் கவிதைகள் எளிமை என்னும் உச்சத்தில் அமர்ந்துகொண்டு கம்பீரமாய் பெண்களின் வலியை, பாடுகளை வலிமையாக உணர்த்துபவை.

“காலம்” என்ற இந்தத் தொகுப்பின் கவிதைகளும் அவ்வாறே பறை சாட்டுகின்றன. ஒரு தேர்ந்த அரசியலாளருடைய சமூக அக்கறையாகவும், சமூக மேம்பாட்டை நோக்கிய பார்வையாகவும், இலக்கிய நயமிக்க, துயரம் மிகுந்த பகடியாகவும், தம்மை அழுத்தி நிற்பவையை எட்டி மிதிக்கும் பெண்மைத் தினவாகவும், பெண்களின் பாடுகளை அச்சு அசலாகப் பிரதி எடுக்கின்ற கண்ணாடியாவும் இக்கவிதைகள் அனலாய் தகிக்கின்றன. மேலும், பொதுவாக தன் படைப்புகளில் அம்பிகா மௌனத்தை வலுமிகு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார். அந்த வகையில், நயமானதும், பகடியானதும், நெற்றியடி போன்றதுமான கீழ்காணும் ஒரே ஒரு கவிதையைப் பகிர்கிறேன். (ஒரு சோற்றுப் பதம்)

அவஸ்தை
————–
மெதுவாக
உள்பாவாடையையும்
புடவையையும்
தனியாகப் பிரித்தாக வேண்டும்

கீழிருந்து மேலிழுக்கும்போது
தவறிக்கூட முழங்கால்
தெரிந்துவிடக்கூடாது

எதையோ
திருட வந்தவள் என்று
எண்ணும்படியாக
பதற்றம்
முட்டிக்கொண்டு வருகிறது
அடக்க முடியாமல்
வியர்வையும்

நடத்தடத்தில்
குத்தவைத்து உட்கார்ந்திருக்கின்ற
அவன்
எழுந்து போகும் வரை
காத்திருக்க வேண்டும்

அருகில் தண்ணீர் இல்லை
தொடைகள் உரசிய சிராய்ப்பில்
உப்புப் பட்டால் எரியும்
நியாயமானவர்களே

புரையோடிய சமூகக் கண்களை
சற்று மூடிக்கொள்ளுங்கள்
பொதுக்கூட்டத்திற்காக
அழைத்துவரப்பட்டவள்
வேன் சந்துக்குள் நின்றபடியே
சிறுநீர் கழித்துக்கொள்ளட்டும்.

கவிதைத் தீப்பந்தமாகத் திகழும் யவனிகா-வின் அறிமுகத்தோடு வந்திருக்கின்ற இந்தத் தொகுப்பின் அட்டைப்படம் அருமைத் தோழர் லார்க் பாஸ்கரனால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அம்பிகாவின் இந்தக் “காலம்” கவிதைத் தொகுப்பின் மொத்தச் சாரத்தையும் அழகிய வண்ணக்கலவையோடு முகப்பாக்கித் தந்திருப்பது சிறப்பிலும் சிறப்பு. டிஸ்கவரி வேடியப்பன், லார்க் பாஸ்கரன், யவனிகா மற்றும் அம்பிகா குமரன் அனைவருக்கும் எனது அன்பும் வாழ்த்தும். “காலம்” முன்பும், இப்போதும், நடப்பு அரசியல் சூழல் நீடிக்கும் வரை அது எப்போதும் பொருந்தக்கூடிய ஒரு கவிதைத் தொகுப்பு. மற்றும் ஒரு தீர்க்கதரிசனத்தின் முரசொலி.

அம்பிகாவிற்கு மீண்டும் வாழ்த்துகள்.!


-விசாகன்.

நூல் தகவல்:

நூல் :  காலம்

வகை :  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : அம்பிகா குமரன்

வெளியீடு :  டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு:  டிசம்பர் – 2021

பக்கங்கள் : 104

விலை:  ₹ 120

நூலைப் பெற :  +91 8707070