ரு மழைநேரத்தில் உடலை வருடி மழையின் நீர்மையை நம்முள் கடத்தி சிலிர்க்கவிடும் இதமான தென்றலை அனுபவிப்பது போல இருக்கிறது இந்த ஏழாம் வானத்து மழை..! தலைப்பே தனி கவிதை..!

இறைவன் அர்ஷில் அமர்ந்து அரசாட்சி செய்யுமிடம் எனும் சமய நம்பிக்கை. இது மிகச்சரியான தலைப்பு தான். அன்பு என்பது தானே இறை. ஏழாம் வானத்திலிருந்து பொழிவதெல்லாம் அன்பன்றி வேறெதுவுமாக இருக்க இயலாது..!

பக்கத்துக்குப் பக்கம் காதல் ததும்புகிறது.
முதற்பக்கத்தில்,

“ஆப்பிளை ஒரு புதிய அன்பாக
அர்த்தப்படுத்திக் கொண்ட குழந்தை
குறுங்கரங்களால் வாங்கிக் கொண்டது.
மேலும் கீழும் கைகளால்
உருட்டியும் சிரித்தபடி முகர்ந்தும்
கன்னத்தில் தேய்த்தும்
யாரையோ அடிப்பதும் போல் ஓங்கியும்
புதிய அன்போடு விளையாடத் தொடங்கியது குழந்தை..
அடுத்த முறை பழக்கடைக்குப் போய்
“அரைகிலோ புதிய அன்பை ” கேட்கப்போகும்
என்னை எப்படி எதிர் கொள்ளப்போகிறார் கடைக்காரர்.?”

இப்படிப் புதிய அன்போடு தொடங்கும் கவிதைகள் பக்கத்துக்குப் பக்கம் மனதை வருடிப்போகிறது.

“போர்க்காலம்,
நீயிட்ட முத்தம்
எழுத முடியாத கடிதம்” எனக் காதலைச் சொற்களுக்குள் பொதித்துச் சுவைக்கத் தந்திருக்கிறார்.

பயண விரும்பிகளுக்கும் தனிமை விரும்பிகளுக்கும் “ஜன்னல் சீட் ” கவிதை உயிரைத் தொட்டு விடும்

’மன்னிப்பு’ என்ற கவிதையில், மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் வெறும் செயல் அல்ல
“ஞானத்திற்கான சிறு ஒத்திகை” என வாழ்வைப் புரிய வைக்கிறார்.

‘அத்தை மகள்’  கவிதை நிச்சயம் காலக்கண்ணாடி.! 40களில் இருந்து தற்காலம் வரையான பெண்களின் வாழ்வை அழகாய் சொல்லியிருக்கிறார்.

மழையின் நிழல்…??’ நிழலெனத் தொடரும் ஒரு உறவை மழைக்குள் பொதித்து நம்மைக் காதலில் நனையச் செய்கிறது இந்த கவிதை.

’தேநீர் அழைப்பு’ -ஆகச்சிறந்த நுண் ரசனையின் மொழி இந்த கவிதை. வரிக்கு வரி மழைநேர தேநீரின் கதகதப்பும் காதலின் சுகமும் என இதமளிக்கிறது ..!

அடுத்த தேநீர் பருகிய சுகம்

“தேநீர்..
உனக்கான தேநீரை என்றோ தயாரித்துவிட்டேன்
பறிக்கப்படாமல் செடியில்
இருப்பதென்னவோ நமக்கான அதிகாலை ..!! “

’ஏழாம் வானத்துமழை’, இன்னும் குறுகுறுக்கிறது மனதுள் பட்டாம்பூச்சிகள் போல..

’முத்தத்தில் முடியும் மரணம்..!’

“முத்தம் தொடக்கமா? முடிவா? எனக் கேட்பவர்கள்
முத்தங்களை அவமானப்படுத்துகிறார்கள்.
இசைக்குறிப்புகளை வீசி எறிந்துவிட்டு
வாத்தியங்களைக் கையாளும்
இசைஞர்களுக்காகவே
முத்தம் பூமியை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறது”

என்று சொல்லி “முத்தத்தில் முடியும் ஒரு மரணத்தை யாசித்து நிற்கிறேன்” என்னும் வரிகளில் தெரிகிறது ரசனையின் உச்சம்.

இப்படி நுட்பமான ரசனைகள் பலவற்றை ஒருபூங்கொத்தாய் கொடுத்திருக்கிறார். ரசித்த கவிதைகளில் சிலவற்றை மட்டும் ருசிக்கக் கோடிட்டிருக்கிறேன்.. நீங்களும் தொகுப்பை ரசித்து ருசித்துப் பருகுங்கள்.. ஏழாம் வானத்து மழையின் ஏழாம் சுவையை உணர்வோம். .!


நூல் தகவல்:

நூல் : ஏழாம் வானத்து மழை

வகை :   கவிதைகள்

ஆசிரியர் : மானசீகன்

வெளியீடு :  வாசகசாலை பதிப்பகம்

ஆண்டு :  -

பக்கங்கள் : -

விலை:  ₹  130

நூலைப் பெற :  +91 9790443979

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *