வைன் என்பது குறியீடல்ல
தேவசீமாவின் கவிதைகளை முன்வைத்து
“ஜப்பானில் பறக்கும் ஒரு பட்டாம்பூச்சியால் நியூஜெர்ஸியில் மழை வரவழைக்க முடியும்” என்ற ஒரு பட்டாம்பூச்சி தத்துவத்தை (Butterfly Theory) நம்மில் அநேகர் கேள்விப்பட்டிருப்போம்.
மொழி என்பதும் அத்தகைய ஒரு பட்டாம்பூச்சி தான். பண்டைய இலக்கண, இலக்கிய மரபிலிருந்து புதுமைக்கு வந்த மொழி இப்போது, நவீனம், பின் நவீனம் என்று தனது சிறகுகளை விரித்திருக்கிறது.
இதில் ரியலியசம், மேஜிக்ரியலிசம் போன்ற மாய யதார்த்த வாதங்கள் எல்லாம் கவிதையில் பேசப்பட்டு வருபவை. நான் அதற்குள் போக விரும்பவில்லை.
ஆங்கிலத்தில் பெர்பெக்ஷன் (Perfection) என்று ஒரு வார்த்தை இருக்கிறது. இந்த பெர்பெக்ஷன் அதாவது முழுமை நமது கவிதை மொழியில் இருக்கிறதா? இந்த கேள்வி நம்மிடம் வேறு ஒரு தொனியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எது கவிதை? என்பது தான் அந்தக் கேள்வி.
மொழியின் வழியாக வாழ்க்கையை தேடுபவர்களாக நாம் இருந்து வருகிறோம். சங்க காலம் முதல் நவீன காலம் வரை நமக்கு கிடைத்து வரும் செய்யுள்கள், பாடல்கள், கவிதைகள் வழியாக நமது தமிழ் சமூக வரலாற்றையும் நாம் அறிந்து வருகிறோம்.
ஆனால், வாழ்வின் புதிர் நிறைந்த முடிச்சுக்களை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத வேளைகளில் மொழியையும் அவ்வாறே கடந்து வர வேண்டிய சூழலும் இருந்திருக்கிறது. எனவே, மொழியிலும் நாம் தேடும் அந்த பெர்பக்ஷன் (முழுமையை) அந்த மொழியால் தர இயலாமல் போகலாம்.
அதனால் தான் காலம் காலமாக எது கவிதை? என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டு வருகிறோம். விடையில்லாத இந்த கேள்வியின் பின்னே அவரவருக்கான தேடல் கவிதையில் தொடர்ந்து நிகழ்கிறது. இந்தத் தேடல் தான் அவரவருக்கான இயல்பில் கவிதை மொழியை இயங்க வைக்கும் ஒரு உயிர்நாடி போல் என் கருத்திற்கும் அறிவிற்கும் தோன்றுகிறது.
கவிதை மொழி தனக்குள் பல்வேறு விதமான இயங்கியல் கூறுகளையும் முரண்பாடுகளையும் ஒத்திசைவுகளையும் இன்னும் பல்வேறு விதமான வாழ்வியல் தொழில்நுட்பக் கூறுகளையும் கொண்டு இயங்கக் கூடியது. இது பல்வேறு விதமான சூழல்களில் வாழக்கூடிய மனிதர்களின் மொழியால் நிகழ்ந்து வரக்கூடியது. இது தற்செயலாளது அல்ல. காலம் காலமாக மொழியின் மீது ஏற்படும் மாற்றங்கள் என்பது நமது வாழ்வின் ஊடாக நிகழும் சமூக பண்பாட்டு கூறுகளில் ஏற்படும் மாற்றங்களையும் உள்ளடக்கியது தான்.
நமது கலை, இலக்கிய வெளிப்பாடுகள் யாவும் இவையனைத்தையும் பிரதிபலித்துக் கொண்டே வருகின்றன. கவிதை மொழியும் விரிந்து கொண்டே போகிறது.
தற்காலக் கவிதைகளில் மொழியின் தேடல் தான் என்ன? நமது சமகால வாழ்வின் மீது நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது நிகழ்த்திக் கொண்டிருக்கும் பல சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் அவை சார்ந்த அமைப்பியல் உளவியல், மொழியியல் மாற்றங்கள் நமது கவிதை மொழியின் தேடுதலாகவும் தீவிரமடைந்துள்ளன.
நவீன கவிதைகள் அதற்கான தேடுபொறிகளை தனது தொழில்நுட்பமாக்கிக் கொண்டு சமூக நீதிகள், கொள்கைகள், கோட்பாடுகள், யதார்த்த உண்மைகள் போன்ற எல்லா வரையறைகளிலிருந்தும், ஒழுங்கு நியதிகளிலிருந்தும் கவிதையை மீட்டெடுத்து அதீத மனவியல் சார்ந்த மொழியின் செயல்பாடுகளை நோக்கி கவிதையை இட்டுச் செல்வதாகவும் அமைகிறது.
“சொற்களின் மேய்ச்சல் நிலத்தில் கால்நடைகளாய் நாம்” என்று ரமேஷ் பிரேதன் கூறுவதைப் போல படைப்பாளர் ஒருவர் அவர் நிலத்தில் பயிரிட்ட (வடிவமைத்த) சொற்களை வாசகர்கள்தான் அறுவடை செய்ய வேண்டியுள்ளது.
இன்று நான் கண்டெடுத்த அந்த அறுவடைப் பயிர் தேவசீமாவின் ‘வைன் என்பது குறியீடு அல்ல’ என்ற கவிதைத் தொகுப்புதான்.
வாழ்வின் எதிர்பாராத ஓட்டங்களில்… சுழிகளில்… திருப்பு முனைகளில் சிக்கித் தவிக்கும் மனித மனங்கள் விநோதமான அகவய மனங்களையும், புறவயமனங்களையும் ஈன்றெடுக்கின்றன. வாழ்வின் தவிர்க்க முடியாத நேரங்களில் பிறந்த இந்த சிசுக்கள் தான் மனிதர்களை படைப்பாளர்களாக சமூக வாழ்விலும் அடையாளப்படுத்துகின்றன. அந்த சிசுக்கள் நவீன வாழ்வின் சுய அடையாளங்களாக தேவசீமாவின் கவிதைகள் வழியே பிரசவித்திருக்கின்றன.
மனித வாழ்வின் அசாதாரண நேரங்களில் சில சந்தர்ப்பவாத மூளைகள் மனிதர்களின் பொது வாழ்வில் நிகழ்த்தக் கூடிய அநீதிகளைக் கண்டு பதறக்கூடிய அல்லது தான் வாழத் தகுந்த இடத்தில் வந்து சேரும் சமூக இன்னல்களுக்கிடையே தனது கரங்களை அவற்றோடு இறுகப் பற்றிக் கொண்டு அதன் மீதான கரிசனத்தையும், வாஞ்சையையும் செலுத்திக் கொண்டே தனக்கும், தான் வாழும் இந்த சமூகத்திற்கும் நியாயம் செய்யாத அதன் வக்கிரங்களை அடித்து நொறுக்கவும் அல்லது அழுத்தமும், துயரமும் கொண்ட சமத்துவமற்ற சூழலில் அது எதிர்கொள்ளும் வாதைகளாலும் அடையாளப்படுத்தப்பட வேண்டிய அதன் பல்வேறு பரிமாணமங்களாலும் இயங்க வேண்டிய சூழலில் தனது கவிதைகளை குறியீட்டுத் தளங்களாகவே வரையறுத்துக் கொள்கிறார்.
தொகுப்பு முழுவதும் குறியீடுகளும், படிமங்களுமாகவே நிறைத்து கொண்டுள்ளன. அவ்வாறு வாசித்து வரும் சூழலில் பளீரென்று என் கண்களை நிறுத்தி வைத்த கவிதை தான் பட்டாம்பூச்சி.
கவிதை இயற்ற சில சொற்களே போதுமானவை தான். அப்படியான செறிவும் அழகும் கூடவே கொஞ்சம் விஷமமும் கலந்த ஒரு கவிதை தான் ‘பட்டாம்பூச்சி’.
கொஞ்சம் விஷமோ
கொடுத்து இருக்கலாம் கடவுள்
தொடு முன்
ஆயிரம் முறை
யோசித்திருப்பார்கள்”
அழகும் அச்சமும் எப்போதும் கூடுதலான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. அஃறிணை உயர்திணை என்று கூட இங்கு பேதம் இல்லை. சிறிய கவிதை என்றாலும் அதிக முக்கியத்துவத்தைப் பெறுவது அதன் உள்ளடக்கிய பொருள் பற்றித்தான். அந்தப் பொருள் பற்றிய உண்மையை விரிந்த வாசிப்பனுபவம் மட்டுமே உணர்த்தும்.
சுயம் (பக்-56) என்றொரு கவிதை.
“கீறிக் கொண்டே இரு
ஆறிவிடக் கூடாது
எதைக் கீறுவது? யார் கீறுவது?
விஷமிடு புரையோடட்டும்
யார் யாருக்கு விஷமிடுவது?
வலியின் முன் சுயமில்லை
சுயம் யாருக்கு?”
காலம் எல்லாவற்றையும் திருப்பிப் போட்டு பார்க்கிறது. அன்றிருந்த காலத்தின் கணக்குகள் வேறு’ இன்று வேறு’ அன்று பார்த்த என் தாயின் பார்வையில் இன்று நான் இந்த உலகத்தைப் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. வாழ்க்கை அதன் பழைய சட்டைகளை கிழித்துத் தூர எறிந்து கொண்டே போகிறது. கவிஞர் தேவசீமாவும் காலத்தின் கணக்குகளை சுயமாகவே போட்டு (போட்டுத் தான் வாங்குகிறார்…!)
கையேத்தும் ஆட்டுக்குட்டி (பக் – 75)
“தேவையற்றவர் தீண்டாதிருக்க
கொஞ்சம் சயனைடு தோய்த்த
முட்கள் விரவிவிடு இவ்விடங்களில்
தவறான ஒரே தொடுதலில்
நிகழட்டும் உடனடிச் சாவு
பின் மானுடம் எப்படி
தழைக்குமென்றா கேட்கிறாய்?
தழைக்கும் தழைக்கும்
மீனாட்சியின் மூன்றாம் மூலை போல
சொக்கன் வருகையில்
மறையட்டும்
சயனைடு சொர்க்கங்கள்”
நிர்தாட்சணியமில்லாத வரிகள் தன்னை கூர்தீட்டி, தன் எதிரே வருபவரை விமர்சனம் செய்கையில், ஒரு வாசகராக இருந்து பார்வையிடும் தருணம் மட்டுமே நிகழ்கிறது. ஆனால், கேள்விகள் குடைகின்றன. எளிதில் கடந்து விட முடியாதவை தான் என்ற போதிலும் மௌனத்தை மட்டுமே ஒரு வாசகன் இங்கு பதிலாகவும் கொள்ள முடியாது போகலாம். வாசகர்களே இங்கு கேள்வியாகவும் பதிலாகவும் மாறிக் கொள்ள வேண்டியது தான். தப்பித்தல் என்பது இங்கு கிடையவே கிடையாது.
பக் (37)ல் ‘அது அல்ல’ என்றொரு கவிதையில்
“போலிச்சாவி என்றாலும் அதுவும் திறக்கும் அதே உண்மையை”.
காதல், சாவி என்ற இந்த இரண்டு சொற்களிலிருந்து நம்மை நாமே மறைத்துக் கொண்டிருக்கும் சில முகமூடிகள் உடனே கழன்று விடுகின்றன. அசல், போலி என்பதான நமது பழைய மதிப்பீடுகள் விசாரணைக் கூண்டில் ஏற்றப்படுகின்றன.
சமூகத்தின் பல தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் நியாய, அநியாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் சமூக, கலாச்சார மதிப்பீடுகளாக நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கக் கூடிய பல பைத்தியக்காரத்தனங்களின் மீது சம்மட்டி அடி கொடுக்கக் கூடியதாகவும் சாவி, காதல் என்ற இரு சொற்கள் ஒன்றின் மீது ஒன்று ஏறி நின்று குறியீட்டுத் தளத்தில் அர்த்தம் பெறுகின்றன.
‘பயணம்’ குறித்த கவிதையில் சர்வதேச வாகனங்களாக இவர் உவமைப்படுத்தியிருக்கக் கூடிய பேர்ல் துறைமுகமும், பிதா எக்ஸ்பிரஸும், பெருயானைக் கப்பலும், தங்கை வாய்த் துறைமுகமும், பழுது நீக்கப்படாத மாநகர கிழப் பேருந்தின் குரல் வலையை விழுங்கி வைத்திருக்கும் நீலகண்ட அண்ணனும், க்ரையோஜெனிக் ஏவுகணையை விடுவிக்கும் தம்பியின் தகர வாயும், அம்மாவின் வென்ட்ரிலோகிசக் குரலும்… இப்படியாக எதிர் வரும் வாகனங்களிலிருந்து தப்பிக்கும் ஒரு வழியாக ஒரு சர்க்கஸ் கோமாளியாக மாற வேண்டியிருப்பதும் இறுதியில், தன் வாகனத்தை பாதுகாப்புக் கருதி நடைபாதையில் நடைபழக வைப்பதுடன் முடிக்கிறார்.
வாழ்க்கையில் தான் எதிர்கொள்ள வேண்டிய சிறு சம்பவங்களைக் கூட ஒரு பயணம் மேற்கொள்வது போல் மிக எளிதாகக் கடந்து விட முடிவதை இத்தகைய காட்சிப்படுத்துதல் மேலும் சில ‘ஒலி வாங்கி’ அனுபவங்களை இணைத்து அதன் வழியாக நிகழ்வுத் துணுக்குகளை கவிதையின் களமாக மாற்றுவது என்பது கவிஞருக்கே உரிய இந்த வாழ்வின் மீதான தனித்ததொரு பார்வையையும், அதன் மீதான ஒரு அழுத்தமான பகடியையும் வைத்திருப்பது புலனாகிறது. இத்தகைய பகடிகள் தேவசீமாவின் பல கவிதைகளில் இலைமறை காயாக வெளிப்படுகிறது. கவிதையின் குறியீட்டுச் சொற்கள் குத்தல், குதறல், பிறாண்டுதல் என்பன போன்ற ஆயுதப் பிரயோகங்களை எடுத்துள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறை.
கவிதை என்பதற்கு நம்மை நிரப்பிக் கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். சமூகத்தில் நிகழும் சில உள்ளீடற்ற நிகழ்வுகளை நாம் காணும் பொழுது எப்படி உங்களை நிரப்புவீர்கள்? என்றதொரு கேள்வியும் அதன் பின்னே நமக்குக் கிடைக்காத பதில்களும்!
கவிதைப் பிரியர்களையும், வாசகர்களையும் கூட இந்த கேள்வி-பதில் போராட்டத்தில் இருந்து விலக்கி வைத்து விடுவோம். ஆனால், இத்தொகுப்பை படைத்தளித்த தேவசீமாவின் மீது இந்த கேள்வி-பதில் தற்போதைக்கு ஏற்றப்படுகிறது. சொல்லுங்கள் தேவசீமா, உங்களை எப்படி நிரப்புகிறீர்கள்? இந்தத் தொகுப்பை படைக்கும் போது நீங்கள் எத்தகைய நிறைவை அடைகிறீர்கள்? அல்லது உங்களை எது நிறைப்பது போல் உணர்கிறீர்கள்?
சொற்களின் மீது ஏற்றப்பட்டிருக்கும் ஒலிக் குறிப்புக்களாலா? அல்லது நினைவிலிகளுக்குள் பொதிந்திருக்கும் அதன் அசலான தன்மைகளாலா? அல்லது படிமங்கள், உத்திகள், குறியீடுகள் போன்றவைகளை உங்கள் கவிதைக்கான வரையறைகளாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டதிலா? அல்லது கவிஞரின் உள்ளார்ந்த… தனித்துவமான வாசிப்பின் தாகத்தில், தன்னிகரற்ற கவிதை மொழியின் வழியே அகமும் புறமுமாய் தான் கண்ட வாழ்வின் தரிசனங்களை பன்மைகளை தன் கவிதை மொழியில் விரித்துக் கொண்டதாலா? மொழியின் வழியே வைக்கும் போர்க் குரல்களை இந்த சமூகத்தின் முன்னே நீங்கள் வைக்கும் ரகசியக் குறியீடுகளாலா? ஏன்?… ஏன்?… இவ்வளவு ஆவல்?
பூனைக்குட்டிகளை பிரசவிக்க தயாராகும் வீட்டில் கள்ளமானது பூனைக்குட்டிகள் மட்டும் தானா? கேள்விகள் கவிதையைக் கடந்து வருகிறது.
மனச்சாவி (பக்.81)
“புறக்கணிப்பின் மொழி
பதிலற்ற மௌனம்
என்பதை அறியாத
சிறுமியா நீ
தொடர்ந்து ஒலிக்கும் ஒரு பெயர்
நீ கவனிக்கப்பட ஏதுமில்லாத
ஒருத்தி
என்ற உண்மையை உணர்த்தும்
வேளையில் உள்தாழிட்டு
கழுத்தில் சுருக்கிட்டு கொள்பவளின்
மனச்சாவி தோட்டத்து புல்தரையில்
சத்தமேதுமன்றி வீசப்படுகிறது.”
(பக்.82)
“எறிந்து விட்டே வருகிறேன்
போராட்டக் களங்களில்
சொற்களோடு
சில புழுக்களையும்
அதுவோ, இதுவோ
குடைந்தே தீரும்
ஏதாவது ஒன்று”.
இதுபோன்ற சில கவிதைகளில் படைப்பாளியுடன் இணையும் வாசகரின் கூட்டு நனவிலிகளில் கேள்விகளும், பதில்களும், பதிலற்ற மௌனங்களும், மனச்சாட்சிகளுமாய் சொற்கள் விரிந்து விரிந்து பல்வேறு பரிமாணங்களில் அர்த்தங்கள் அநாயசமாய் ஏறி உட்கார்ந்து கொள்கின்றன. தேவசீமாவின் மொழி தொகுப்பு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியபடியே இருக்கிறது.
சுருக்கமாகக் கூறினால், வாழ்வின் மீதான இவரது பார்வைகள், பிடிமானங்கள், அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவும் ஒன்று திரண்டு படிமங்களாகவும் குறியீடுகளாகவும் சொற்களை ஆட்சி செய்கின்றன.
சமகால நிகழ்வுகளின் சுய அடையாளங்களை நிர்தாட்சணியமில்லாத தனது புதிய நாதங்களாக ஒலிக்கவிட்டிருப்பது தேவசீமாவின் கவிதைகள் மீதான நவீன வாசிப்பை வாசகர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டிய ஒரு அவசியத்தை கோருவதாக உள்ளது. தேவசீமா தனது கவிதைகள் வழியாகவே நவீன வாழ்வின் மீதான பகடியை எதிர் அரசியலை தன் மொழியின் வழியாகவே முன் நகர்த்துகிறார்.
– மஞ்சுளா
பிரிவு: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : தேவசீமா
வெளியீடு : தேநீர் பதிப்பகம்
வெளியான ஆண்டு : ஜனவரி 2020
விலை: ₹100
தொடர்புக்கு: +91 9080909600
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.