உன்னதப் படைப்புகள் யாவும் வாசகன் உள்ளத்தில் எழுத்தாளர் மீதான மாபிம்பத்தை உருவாக்கி விடுகிறது. அத்தகைய எழுத்தாளர்களை நெருக்கமாக அறியக் துடிப்பது வாசகர்களின் இயல்பான உணர்வு.
எழுத்தாைளரை நெருக்கமாக உணர்ந்து கொள்ள மூன்று வழிகள் உள்ளன. ஒன்று அவரது படைப்புகளை சாரமாக கொண்டு அதன் வழியே அடைவது. இரண்டாவது (வாய்ப்பிருந்தால்) அவரோட நெருக்கமாக பழகி நேரேடியாக அறிந்துக் கொள்வது.
முதலாவதில் முழுமையாக உணர முடியாது . அது வாசகனின் வாசிப்பு ஆழத்தின் அவதனிப்ப்பாகவே இருக்கும். இரண்டாவது நிறைய பேருக்கு செயலளவில் சாத்தியமில்லை.
மூன்றாவது வாய்ப்பு தீவிர வாசகர்கள் இது போன்ற அரிய வாய்ப்ப்புகள் வழியே எழுத்தாளரிடம் முன் வைக்கும் கேள்விகளால் பெறப்படும் பதில்கள்.
வாசகர்களால் தொடுக்கப்படும் கேள்விகள் நிறைய எழுத்தாளுமைகளின் பரிமாணங்களை திறந்துக் காட்டியுள்ளன.
படைப்புகள் மூலம் கொண்டாடப்படும் எழுத்தாளர்களின் உண்மை சொரூபத்தை வாசகனின் தீர்க்கமான கேள்விகள் வெளிக் கொண்டு வந்து விடுகின்றன.
நிறைய பேருக்கு சரியான கேள்விகள் கேட்கத் தெரிவதில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதில் இருப்பதில்லை. அந்தரங்கத்தை எட்டி பார்க்கும் அத்துமீறலாகவும், “உனக்கு தெரிந்திருக்கிறதா ..? என்பதற்காக கேட்டேன் .”என்கிற கெக்கொலிப்பும் தான் நிறைய மனிதர்களின் கேள்விகள். இதனால் மன அரிப்பு அதிகமாகுமே தவிர அதனால் கிஞ்சித்தும் உபயோகமில்லை.
விஷாதயோகம் என்பது துன்பமும் குழப்பமும் நிறைந்த சூழலில் இருந்து விடுபடுவதற்கான தெளிவைத் தரும் வழிமுறை. குழப்பமும் துன்பமும் கேள்விகளை சாதனமாக்கி கொள்கிறது. இந்த வகை தேடலானது அமைதியை பதில்கள் மூலம் கண்டடைகிறது.
பாலகுமாரனின் எழுத்தும் வாழ்வும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பது யாவரும் அறிந்ததே. அவரின் தீர்க்கமான வாசகர் சரஸ்வதி சுவாமிநாதன். அந்த அடிப்படையை தன் வாழ்வின் தளமாக மாற்றி வாழ்ந்து வருபவர். சிறந்த மொழிபெயர்ப்பு திறன் கொண்டு அவரால் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் ஆன்மீகம் சாரம் கொண்ட கனமான நூல்கள்.
இவரது கேள்விகள் தேடலின் பலம் பொருந்தியவை. பாலகுமாரன் யார் அவரிடம் கேட்க வேண்டியதை என்ன என்பதை மட்டும் அறிந்து கேட்டுள்ளார். இந்த கேள்விகள் மூலம் கிடைத்த பதில்கள் ஆன்மீக தேடல் கொண்டவருக்கனதாக மட்டுமல்லாது குடும்பத்தின் மீது தீரா காதல் கொண்டு வாழ முயற்சிப்பவர்களுக்குமானதாக இருப்பது தான் இந்நூலின் சிறப்பு. முக்கியமாக ஆன்மீகத்தையும் குடும்பத்தையும் முரன்படுத்திக் கொள்பவர்கள் வாசிக்க வேண்டிய நூலும் கூட.
பாலகுமாரன் தனது அகத்தை நுட்பமான பதில்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
குருவைப்பற்றி, அவருடனான அனுபவங்கள் பற்றி, சரணாகதி, சந்நியாசம், பக்தி, தனிமை, மனம், அவரது படைப்புகளின் மூல நோக்கம், மனிதனை பக்குவமாக்கும் வழிகள், மந்திரங்கள், பூஜைகள், இல்லறம்,முதுமை, மரணம் இவைகளைப் பற்றி தனது சுய அனுபவங்கள் மற்றும் சிந்தனைகளில் மூழ்கி மிகத் தெளிவான பதில்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கேள்விகளுக்கான பதில்களாக மட்டுமே இதைக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த கேள்வி துவக்கத்திற்கான அடிப்படை வரை அவர் செல்கிறார்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் நீங்கள் பெற்றதை அடைவதற்கான வழிகள் என்ன? என்று கேள்விகள் வரும் போது அவர் மெளனமாகவே இருப்பார். அதை அடைவதற்கான வழிகள் என்ன என்பதைப் பற்றிய பேச்சிற்கே அங்கு இடமில்லை.அது வழியற்றது. அதைத் தான் அவர் தனது உரைகள் வழியே போதித்து வந்துள்ளார்.
அது அவரது வழிமுறை.
திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான் யோகிராம் சுரத்குமார் ஒரு குறிப்பிட்ட மந்திர ஜெபத்தின் மூலம் தனது இருப்பதிர்வு மூலமாக நிறைய பேர் வாழ்வில் அதற்கான வழிகளை திறந்து வைத்தார். அந்த வாசல் வழியே வந்த பாலகுமாரன் தனது இறுதி மூச்சு வரை இலக்கிய சமரசங்களுக்கு பணியாமல் தனக்கான வாசகர் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினார்.
அவரது பெருவாரியான வாசகர்கள் இலக்கியத்தையும் கடந்து அவரின் அணுக்கத் தொண்டர்களாகவே மாறினர். இந்த அணுக்கம் ஒரு வழிமுறையாக நிறைய மனிதர்களை உயர்த்தியது. அதில் ஒருவரான சரஸ்வதி சுவாமிநாதன் “ஆம்., அவரால்.., அப்படித்தான்..” என்பதை தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் கம்பீரமாய் வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட ( மொழியாக்கங்கள் உட்பட) நூல்களை எழுதியுள்ளார். அதில் அவர் காட்டும் நன்றி கொள்ளல் என்பதன் நேர்மை அவரது வழியாகவும் மலரக்கூடும்.
இந்நூல் வாசிக்கும் போது இதில் உள்ள அத்தனை விஷயங்களும் நம் மூளையை கனக்கச் செய்வதாய் இல்லாமல் ஒரு வெறுமையை விட்டுச் செல்கிறது. இது வாழ்வின் மீதான நோக்கம் பற்றிய தெளிவான யோசிப்பிற்கு வாசகனை நகர்த்துகிறது.
வாசித்து மகிழுங்கள். உங்களுக்கான வழிமுறைகள் புலப்படக் கூடும்.
– மஞ்சுநாத்
நூல் :விஷாதயோகம் (எழுத்தாளர் பாலகுமாரனின் உள்முக தரிசனம்)
பிரிவு: நேர்காணல்
ஆசிரியர் : சரஸ்வதி சுவாமிநாதன்
வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
வெளியான ஆண்டு : முதல் பதிப்பு 2017
விலை: ₹ 300
நூலை வாங்க : 📱 70101 39184
26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு - 603 001
Kindle Edition :
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.