வாசிப்பவருக்குக் கதை வாசிக்கிறோம் என்கிற எண்ணத்தை நீக்கி கதாபாத்திரங்களுள் ஒன்றாகவோ அல்லது கதைக்குள் நுழைந்து கதைப் போக்கை ரசித்து வேடிக்கை பார்ப்பவராகவோ வைக்க வேண்டியது கதாசிரியரின் பொறுப்பு என்பது என் கருத்து. இந்த கருத்தை இவர் கதைகளை வாசிக்கும் போது சரியென்று உணர வைத்திருக்கிறார் நண்பர் சிவக்குமார்.
கதைக் களத்திற்கான நிகழ்வுகளை கருவாகப் பின்னி சரியான உரையாடல்களோடு கதை நகர்த்தியிருக்கிற விதமும் கதையை சரியான இடத்தில் முடிக்கிற விதமும் மிக இயல்பாய் அழகாய் கை கூடியிருக்கிறது இவருக்கு.
புத்தகத்தின் பெயர் முதல் கதையாக வந்து விடுகிறது. பிரிந்த ஒற்றை யானையைத் தேடி இவர் பயணிக்கும் போது என்னையும் இவர் கூடவே பயணிக்க வைத்திருக்கிறார். அலைபேசி உரக்க ஒலித்த அந்த முக்கியமான தருணத்தில் கதைக்குள் அவரோடு இருந்த நான் அழைத்தவரைத் திட்டாமல் இருக்க முடியவில்லை.
இந்த அனுபவத்தை வாசிக்கும் மற்றவர்களும் உணர நேரிடும்.
இறந்தவனின் அலைபேசியிலிருந்து வரும் அழைப்பு இந்தக் கதை எளிய நடை,சிறப்பான கதை போக்கால் நிறைவைத் தருகிறது.
நண்பர் சிவக்குமார் ஒரு கவிஞர் என்பதால் ஆங்காங்கே கவிதைக்குரிய சொல்லாடல்கள் வருவதும் அவைகளைப் பிரயோகித்திருப்பதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
ஜானகி என்கிற பெயர் அவரின் மனதின் அண்மையிலோ அல்லது ஊடுருவியோ இருக்க வேண்டும் என நினைக்கறேன்.
நிறம் மாறும் தேவி:
இந்தச் சிறுகதை வாசிக்கும் போதே அவரவர் தேவிகள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நம்மால் நிறம் மாறியிக்கும் காட்சிகள் கட்டாயம் விரியும்.
நமக்கும் நம்மை புரிந்த ஒரு சீத்தாராமன் வாசிக்கும் போதே மனக்கண்ணில் வந்து நிற்பதை தவிர்க்க இயலாது.
இப்படியே ஒவ்வொரு சிறுகதையாக வாசித்து முடிக்கையில் கதாசிரியர் கட்டமைத்திருக்கிற, தனக்கே உரித்தான கதைக் களங்களில் நான் எப்படி கதைத் தளத்தில் நின்று ஒவ்வொன்றையும் ரசித்தேனோ அதே உணர்வு வாசிப்பவர்களுக்கும் வருவது திண்ணம்.
கதைப் பிரியர்கள் வாசித்து அனுபவிக்க வேண்டிய தொகுப்பு.
வாழ்த்துகள்.!
நூல் : வெம்பு கரி
பிரிவு: சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் :ஜி.சிவக்குமார்
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.
வெளியான ஆண்டு : 2021
விலை : ₹ 110