பேரன்பு ராஜ்ஜியமெனும் பெருவெளியாய் விரியும் கவிதைத்தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரை நகர விடாமல் பிணைத்துக் கட்டி போட்டு வைக்கிறது. அதற்கு பொருத்தமான ஆங்கில மொழிபெயர்ப்பு அதிசிறப்பு. புலம் பெயர்ந்து, வேர் நினைந்தே காலம் கடத்தும் எங்களைப் போன்றோருக்கு, தமிழில் நல்ல படைப்பு ஒன்றைப் படிக்கும் போது பெரும் ஏக்கமொன்று தாக்கும். நாம் பெறும் இந்த இன்பத்தை நம் பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லையே என்பதுதான் அது. அயலகத் தமிழ்ப்பள்ளிகள் வாயிலாக தமிழ் பேச, எழுத. படிக்க அறிந்திருக்கும் தமிழ்க் குடும்பத்துப் பிள்ளைகள், தாங்கள் வாழும் சூழலால் அதிகம் ஆங்கிலம்பால் தான் ஈர்க்கப்படுகிறார்கள். அதுவும். பதின்ம வயதில் தொடங்கும் ஆங்கிலப் புதினங்கள், இசை இவற்றின் தாக்கம் மற்றும் ஆர்வம், நம் தமிழ்நாட்டிலேயே நகரங்களில் வளரும் பிள்ளைகளிடம் பரவலாக இருக்கும் போது, இங்கு வளரும் சூழலில் அவற்றின் ஆதிக்கம் அதிகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இவ்வாறு தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு படைப்புகள், அதுவும் நவீனக் கவிதைகள் வெளிவருவது மனதிற்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் வாழும் குடும்பங்களில் வளர்ந்த பிள்ளைகளுடன் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து,பேசி கலந்துரையாட வாய்ப்பாக அமைகின்றது. இதுவொரு மிகச் சிறப்பான அழகான முயற்சி. நூலாசிரியர் கவிஞர்.மதுரா அவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர் திரு. ஸ்ரீவத்ஸா அவர்களுக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
அட்டை வடிவமைப்பு தொடங்கி பக்கங்கள் ஒவ்வொன்றும் அதிலுள்ள அழகான கவிதைகள் போலவே அழகாக அக்கறையாக வடிவமைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. படைப்புப் பதிப்பகத்தின் ஆழமான ஈடுபாட்டிற்கும் நேர்த்திக்கும் இந்நூல் சான்றாக. விளக்குகின்றது. இலங்கையின் சிறந்த இலக்கியவாதியும் இலங்கை அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான திரு. சாந்தன் ஐயாத்துரை அவர்களின் அணிந்துரை இந்நூலுக்கு மகுடமாய் விளங்குகிறது. கவிஞர் சல்மா அவர்களின் வாழ்த்துரை மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.
முதல் கவிதையிலேயே…
அன்பு ஊற்று
பரிமாறவேயன்றி
பங்கிடுவதற்கு அல்ல .
என்ற வரிகளின் வாயிலாக தன் முத்திரையைப் பதித்து முழுவீச்சில் அன்பை அகலமாய் விரித்து தன் கவிதை ராஜபாட்டையை தொடங்கியுள்ளார் கவிஞர். முகமூடிகள் கவிதையில் நித்திய நிதர்சனங்களை எவ்வளவு நுணுக்கமான சொல் தெரிவில் செதுக்கியுள்ளாரென வியப்பாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் இக்கவிதையின் மொழிபெயர்ப்பில் மொழி ஆளுமையை elude என்ற சொல்லால் சுட்டிச் சென்றுள்ளார்.
பாழ் கதவிடுக்கு வழியே படபடத்து பறந்த பட்டாம்பூச்சியால் வசந்த வாசல் திறப்பொன்று என்ற “காராக்கிருகம் “வரிகளில் அழகியலும் ஆழமும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டியிடுகின்றன. ஒன்றுமில்லாததில் ஒளிந்து விளையாடும் வாழ்க்கையை இதைவிட அழகாய் சொல்ல முடியுமா? மீட்பு கவிதை எத்தனை எதார்த்தம்? நட்புக்கு மட்டுமா பொருந்தி வருகிறது? ஒவ்வொரு உறவுக்கும் உள்ளோடும் உணர்வு பேசி வருகின்றது. மௌனத்தின் வாசல் கூறும் வனவாசம் இன்றைய விரைவு வாழ்க்கை முறையை, வீடுதோறும் நடைபெறுவதை சிறப்பாக படம் பிடித்துள்ளது. “சொற்கள்” சொல்லும் வீரியம் யாமத்தின் மௌனத்தில் மனப்போரில் ..
உதிர்த்துப் போட்டவையும்
பெற்றுக் கொண்டவையும் ..
………………………………….
.மறுநாள் வீரியமாய்
எழுந்து கொள்கின்றன.
அளவான சொற்களில் அபரிமிதமான வீச்சு. ஆழமாய் மனதை ஊடுருவிச் செல்கின்றன..
குறுகிக் குறுகி நோக்கும் குற்றப் பார்வைகளுக்கு மத்தியில் பப்புக்குட்டியின் பரந்து விரிந்த மனம் அன்பை மட்டும் காணும் திறனை உடையது. இதனை விடியும் நாளுக்கு நாலு வயதுக் கவிதையொன்று தரும் நம்பிக்கை என்பேன்.
இதயம் வரை இடைவெளிகளை நீட்டித்து விடும் நாவுகள் “உரையாடல்” கவிதை வழி புகுந்து, மனிதன் தனித்தீவாய் வாழ்தல் கூறி சகமனிதனை சொல்லால் தீண்டும் வேகம் நெஞ்சில் தைக்கிறது.
“சொற் குஞ்சுகள்” புதுச் சொல்லாக்கம் கொண்ட கவிதை. ஆன்மாவின் ராகத்திற்கு மொழிபெயர்ப்புத் தேடும் கவிஞரின் எண்ணப் பரப்பளவு அளவற்றது.
கட்டுடைத்துக் கரம் வீசியலையும்
ஏவாள்களுக்கு
இப்போதெல்லாம்
சாத்தான்களையோ ஆதாம்களையோ
பொருட்படுத்த நேரமில்லை.
பெண்ணியம் பேசும் பேரலைக் கவிதையின் வரிகளே அதற்கு சாட்சியாகி நிற்கின்றன.
‘பெண் பறவைகளின் மரம்’ பேசும் உரத்த உண்மை உளம் நனைந்து உட்புகுந்து ஆரவாரிக்கிறது.
பூக்கவோ காய்க்கவோ
புகலிடம் அளிக்கவோ வேண்டாம்.
புன்னகைத்தால் போதும்
ஸ்நேகத்துடன்…
பெண் பறவைகளின் மரமாய்.
பெண் மனத்தை காட்சிப்படுத்தும் வரிகள் நூலின் முத்தாய்ப்புப் பக்கங்களில் இடம் பெறுவது வெகுப் பொருத்தமாக அமைந்துள்ளது.
இந்நூல் பல்வேறு வாசகர்களை பெற்று அவர்தம் மனச்சாளரங்களில் வசந்தமாய் வீசும் என்பது நிச்சயம்.
ராஜி வாஞ்சி
நூல்: | பெண் பறவைகளின் மரம் | Tree of Female Birds |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர்: | மதுரா |
ஆங்கிலத்தில் : | N.Srivatsa |
வெளியீடு: | படைப்பு பதிப்பகம் |
வெளியான ஆண்டு | 2020 |
பக்கங்கள்: | |
விலை : | ₹ 100 |