நீண்ட நாட்களுக்குப் பின் கண்கலங்கவைத்த ஒரு மலையாள, தமிழ் மொழிமாற்றம் பெற்ற நாவல் ஒன்று வாசித்தேன்.

அப்பாவிற்கு எந்தவித மாற்றமும் இல்லை, எல்லோரிடமும் விபரம் சொல்லி வடுங்கள். யமன் பாசக் கயிற்றுடன் ஆஸ்பத்திரி வாசலில் வந்துவிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்துவிட்டது, மன்னிக்கவும் என்கிறார் தலமை டாக்டர். அம்மா நீங்கள் நாளைக்கு வாங்கோ அப்பாவைப் பார்க்கலாம். என்று சொல்லி டெலிபோனைத் துண்டிக்கிரார் மகன்.

ஒரு டம்ளர் தண்ணீரை கொடுத்து விட்டு அப்பாவுக்கு ஊட்டி விடும் படி கூறுகிறார் தலைமை டாக்டர் என்னால் நம்பவே முடியவில்லை. இறுதியாக, அம்மாவும் எங்களுடைய உறவினர்களும் வரும் வரைக்கும் அப்பாவின் உயிர் இருக்க வேண்டும் என்று என்னுடைய மனம் பதட்டத்துடன் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கின்றது. கடைசியாக எல்லோரும் வந்துவிட்டனர். அம்மாவை மட்டும் தனியாக அப்பாவின் அறைக்கு அனுப்புவதற்கு முன், அவருக்கு சில புத்திமதிகள் சொல்லி அனுப்பினேன்.

அம்மா அப்பாவின் அறையை விட்டு வெளியே வந்ததும் பயப்பட வேண்டாம் அப்பாவிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். காலையில் கோவிலில் சென்று வழிபட்டு பிரசாதம் அப்பாவின் நெற்றியில் வைத்து தலையை தொட்டு பிரார்த்தனை செய்தேன் என்று அம்மா சொல்லும் பொழுது, என்னை அறியாது நான் திகைப்பில் ஆழ்ந்து போனேன். என்கிறார் ஆசிரியர் ஹரிஹரன் பங்காரப்பிள்ளி

நண்பர்களே! இந்த நாவல் ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான போராட்டத்தைப் பற்றிய நாவலாகும். போராட்டம் என்றால், அன்புக்கும் பாசத்துக்கும் எவ்வளவு உறுதியான பெருமைகள் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் மிகச் சிறந்த நாவல்.

இதனை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் பத்மகுமார் பரமேஸ்வரன் என்பவர். அவருடைய மொழிநடை வாசிப்போரை தூங்க வைக்காமல், இன்னும் விழிப்படையச் செய்வதை இந்த நாவல் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. தமிழ் வசன நடைகளை மிக அற்புதமாக நகர்த்தி இருக்கின்றார் மொழிபெயர்ப்பாளர்.

கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்கு முன்பு நடந்த தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட, அதிலும் தனி ஒருவனாக இருந்து அனுபவித்த விடயங்களை ஆசிரியர் இங்கே குறிப்பிடுகிறார். அன்பு என்றால் என்ன? பாசம் என்றால் என்ன?  ஒரு கூட்டுக்குடும்பம் என்றால் என்ன? ஒரு மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய முக்கியமான  கடமைகள் என்ன போன்ற பல கேள்விகளுக்கு, தன் அனுபவங்களை எங்களுடன் பகிர்கிர்ந்து கொள்கிறார் ஆசிரியர்.

நண்பர்களே! இந்த நாவல் முழுக்க முழுக்க வைத்தியசாலையில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து ஆசிரியர் நகர்த்தியிருக்கிறார். கிட்டத்தட்ட 50 நாட்கள் வைத்தியசாலையில் அப்பாவோடிருந்து, அவரது ஆப்பரேஷன் முடிந்து, பின்னர் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கொண்டது தான் இந்த நாவல்.

ஆசிரியர் ஹரிஹரன் இங்கே இரண்டு கடவுளைக் குறிப்பிடுகின்றார். ஒன்று நாங்கள் வழிபடும் குருவாயூரப்பன் கடவுள், இன்னென்று அவருடைய அப்பாவை குறிப்பிடுகின்றார். இது சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் தான், அத்துடன் மற்றவர்களோடு பழகும்போது தான் என்ன சிந்திக்கிறார் அது கூட மற்றவர்களுக்கு இருக்கலாம் தானே என்று ஒரு நல்ல ஒரு சிந்தனையை இங்கே முன்வைக்கின்றார்.

இருதயத்திலிருந்து உடல் உறுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கும் இரத்த குழாயில் ஏற்பட்ட தடைகளை நீக்குவதற்கு, தனது அப்பாவை ஆப்பரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும், 95 வீதமான நாளங்கள் அடைபட்டு இருப்பதாலேயே கண்டிப்பாக ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்று சொன்ன டாக்டர் கூட கடைசி நிமிடத்தில் இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்பதனப் பதிவு செய்கிறார்.

கண்டிப்பாக ஒரு மனிதன் எல்லாவற்றையும் புறக்கணித்தாலும் ஒருவனுடன் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான விடையங்களை உரையாடிக் கொண்டு தான் இருக்கின்றான். அது யாரென்று பார்த்தால், மனம். தனது மனதில் ஏற்பட்ட பல சிந்தனைகளை அப்படியே இங்கு தருகிறார் ஆசிரியர்.

அத்துடன் இந்தக் காலகட்டத்தில் அவருக்கு வேண்டிய பண உதவிகளை அவரது அம்மாவும், அவரது உறவினர்களும், தாங்களாகவே முன்வந்து கொடுத்த உதவியை, அவருடைய அப்பா எப்படி எல்லாம் ஆரம்ப காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்தாரோ, அது தற்சமயம் அவரது உடல்நிலை நல்லபடியாக வரவேண்டுமென்று ஆண்டவனால் அனுப்பப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புள்ளது என்று எழுதுகிறார் ஆசிரியர்.

ஒரு ஆபரேஷனுக்கு உரியச் செலவுகளை வைத்தியசாலைகளும், அங்கிருக்கும் டாக்டர்களும், எப்படியெல்லாம் மக்களிடமிருந்து பணத்தை பிடுங்குகிறார்கள் என்பதனையும், எதற்கெடுத்தாலும் பணத்தை செலுத்தினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலைப்பாட்டை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.

நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில் பணம், பதவிகள் ஆகியவற்றின் பின்னால் அலைந்து, மனிதநேயம் மறந்த தலைமுறைக்கு நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தைக்கு அருகதைப்பட்ட அன்பும் அரவணைப்பும் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நல்ல சிந்தனையை முன்வைத்து, இந்த நாவலை எழுதுகிறார் ஹரிஹரன்

அப்பாவின் ஆரம்ப வாழ்க்கை, அவருடைய திருமணம், கேரளாவில் இருந்து சென்னையை நோக்கி சென்ற பயணங்கள், அதில் ஏற்பட்ட கஷ்டங்கள், சென்னையில் அவர்கள் வாழ்ந்த இடத்தில் உள்ள மக்கள் அனைவரையும் நன்றி உடன் நினைவு கூறுகின்றார்.

இந்த நாவலில் ஆரம்பத்தில் கேரளாவில் இருந்து புறப்பட்டு சென்னையில் வசித்து மீண்டும் கேரளாவுக்கு திரும்பி பல பின்னோக்கிய நிகழ்ச்சிகளை இடையிடையே எங்களுக்குத் தந்து, எப்படி நாம் எல்லோரும் வாழ்க்கையில் நம்பிக்கை வைத்து வாழவேண்டும் என்று, எங்களுக்கும் ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறார் ஹரிஹரன் அவர்கள்.

இப்போது அப்பாவையும் அம்மாவையும் நன்றாக கவனித்தால் நாளை நம் குழந்தைகளும் அதைப் பின்பற்றி நம்மை கவனிப்பார்கள், அத்துடன் குடும்பதில் நன்மை விளையும். என்கிறார் ஆசிரியர். சிந்திக்க வேண்டிய வரிகள். வாசிப்போர்களாகிய நாம் சிந்திப்போமா???

அறிவியலை தோற்கடித்து மீண்டு வந்த நிகழ்ச்சியையே இந்த நாவல் எங்களுக்கு தரும் செய்தியாக அமையுமென்று (என்னைப் பொறுத்த வகையில்) நான் கருதுகின்றேன்.

நண்பர்களே! இறுதியாக ஹரிஹரன் பங்காரப்பிள்ளி அவர்களுடைய அப்பாவை நல்ல முறையாக கேரளாவிற்கு அழைத்துச் சென்றார்களா? கடவுளுக்கு நன்றி செலுத்தினார?. தந்தை சேதுமாதவன் என்ன ஆனார்? என்ற விபரம் அறிய ஆவலாக இருக்கும் வாசிப்பாளர்கள், புத்தகத்தை வாசித்துப்பாருங்கள் உங்களுக்கு அதிர்ச்சியான தகவல் அதிலே காத்திருக்கின்றது.


பொன் விஜி

– சுவிஸ்

நூல் தகவல்:
நூல்: மீட்புகள்
பிரிவு : நாவல்
ஆசிரியர்: ஹரிஹரன் பங்காரப்பிள்ளி
தமிழில் : பத்மகுமார் பரமேஸ்வரன்
வெளியீடு: ஓவியா பதிப்பகம்
வெளியான ஆண்டு  2021
 பக்கங்கள் : 112
விலை : ₹129

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *