ஒரு பத்திரிக்கை ஆசிரியர் வாயிலாகக் கதை சொல்லப்படுகிறது. தேர் பற்றிய ஆதிக்கதை சோமப்பா தாத்தாவால் அவருக்கு அறிமுகமாகிறது. ஆழமான ஈர்ப்பு கதையில் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட ஊரோடும் மனிதர்களோடும் சேர்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது.
ரங்கோ பட்டவர்த்தன தேசாய் தனது குலதெய்வமான விட்டலர் சாமிக்கு ஒரு அழகான கோவிலோடு ஒரு தேரையும் கட்டமைத்துத் தருகிறார். தரமனட்டி விட்டலர் கோவிலின் தேரோட்டமும் அதன் பின்புல கதையும் சுவாரஸ்யமானதும் பதில்களற்ற கேள்விகளுமாய் திகைக்க வைக்கிறது.
தேரின் வரலாற்றோடு இரத்தத் திலக சேவையின் வரலாறும் தொடங்குகிறது. தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவு தேரின் பெருமைகளையும் புராணக்கதைகளையும் இணைத்து கொந்தலிகர்கள் சொல்கிற வில்லுப்பாட்டு வடிவிலான கதையமைப்பில் பேசுகிறார்.
புதிய தேர் நகரவில்லை. நரபலி வேண்டுமாம் அதுவும் கீழ்சாதி மனிதன்.18 சாதிகளில் யாராவது ஒருவர் கிடைக்க மாட்டார்களா? மேல்தட்டு சாஸ்திர பிடி இறுக்கத்தை அறிந்த அந்த புத்திசாலி 18 சாதி மக்கள் இரவோடு இரவாக ஊரிலிருந்து கிளம்பி விடுகின்றனர். அவர்கள் சென்றதும் ஊரின் சுற்றுச்சுழல் குப்பை குளமாகி நாற்றமெடுக்கிறது.
விதிவசமாக வறுமையில் தன் ஒன்பது பிள்ளைகளையும் கர்ப்பிணி மனைவியையும் உணவில்லாமல் மரணத்திற்கருகில் வைத்திருக்கும் பொம்மலாட்டக்காரன் தேவய்யா தனது ஐந்தாவது மகனை மனைவியின் மறுப்பையும் மீறி தேருக்குப் பலி தர இசைகிறான். அதற்கு பதிலீடாய் கள்ளிக்குத்தி பகுதியில் எட்டு ஏக்கர் நிலம் அவன் பெயருக்குச் சாசனமாக்கப்படுகிறது. அதன்பின் தொடர்ச்சியாக ஒவ்வோரு ஆண்டு தேரோட்டத்தின் போதும் தேவய்யா குடும்பத்திலிருந்து யாரவது வந்து தேர் சக்கரத்தில் தலையை மோதிக் கொண்டு, மண்டை உடைந்து வழியும் இரத்தத்தைத் தேரின் முன் திலகமாக இட வேண்டும் என்ற வகையிலான தொடர் வழக்கு முறை ஒன்று ஏற்படுத்தப்படுகிறது.
மக்களின் நம்பிக்கை மற்றும் சமூகத்தின் மாற்றத்தைப் போல் நியதி நியமங்களோடு நீண்டகாலம் பின்பற்றி வந்த இந்த வழக்கு முறை மாறுபட்டு நின்று போகிறது. அதுவும் 150-வது தேரோட்டத்தின் கொண்டாட்டத்தை காணப் பத்திரிகை ஆசிரியரை சோமாப்பா தாத்தா தனது விருந்தினராக அழைத்திருந்த போது தான் தேரோட்டம் நிற்கிறது. அப்போது இரத்தத் திலக சேவையிலிருந்தவன் தேவப்பா. அவன் சமீபத்தில் புரட்சிகர கொள்கைப்பற்று கொண்டவனாக மாறி விட்டான். முதலாளித்துவத்தின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புரட்சி தீ எளிதாகப் பற்றிக் கொள்கிறது. மேலும் இந்த தேவப்பா தார்மீக ரீதியான ஒரு காதல் உணர்வில் இருப்பவன். அவன் வராமல் போன அந்த வருடம் கோவிலின் விலை மதிப்பான தங்க நகைகளும் கொள்ளை போகின்றன.
சோமப்பா தாத்தா தனது குடும்ப மதத்தின்படி ஜைனராக இருந்தாலும் விட்டல் சாமி மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். தேரோட்டம் நின்ற பின்பு ஒவ்வொன்றாக நிகழ்ந்த ஊர் விஷயங்கள் அவரை மீள முடியாத கவலைக்கு இழுத்துச் சென்று விடுகிறது. சூனிய திரைகளுக்குப் பின்னால் இருக்கும் காட்சியின் முடிச்சுகளைப் பத்திரிகை ஆசிரியர் தனது கேள்விகளாக்கி அதன் பதில்களை தேடியடைந்தாலும் வாசகனின் கேள்விகள் மிச்சமிருக்கவே செய்கின்றன.
நாட்டுப்புறக் கதையாக துவங்கி புரட்சி உணர்வையும் காதல் உணர்வையும் கலந்து கதையை முடித்திருப்பது வித்தியாசமான சாயலை நாவலுக்கு அளிக்கிறது. நிறைய நுண்மையான விஷயங்களும் குறியீடுகளும் கையாளப்பட்டுள்ளன. கதை சொல்லும் போக்கு அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு இயல்பாகவே கூட்டிச் செல்கிறது.
சிறு வயதிலேயே எனக்குத் தெரிந்த ஒரு விஷயம், கர்நாடகாவில் உள்ள கிராம காவல் நிலையங்களைப் பொறுத்தவரைச் சந்தேகம் மற்றும் சிறு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்களுக்கு இரண்டு நாள் அங்குத் தங்க வைத்து நல்ல பூசை தரப்படும். வயது வித்தியாசம் எல்லாம் இதில் கிடையாது. பேச்சு வழக்கில் வடகர்நாடக கிராம மக்கள் மட்டுமல்ல நாட்டில் பல கிராமங்களிலும் கெட்ட வார்த்தை வசவுகள் சகஜமானது. குறிப்பாக இது ஆண்களின் பிறப்பையும் பெண்களின் ஒழுக்கத்தை குறித்ததுமான கெட்ட வார்த்தைகள். சிறுவயதில் கர்நாடகாவில் வசித்த எனது மாமன் கூட எனக்குக் கன்னட மொழியை அதன் கெட்ட வார்த்தைகள் அறிமுகத்திற்கு பிறகே பேசக் கற்பித்தார். இப்படிக் கெட்ட வார்த்தைகளைப் பேசினாலும் பாமர மக்கள் முக்திக்கான ஆசையும் அதற்கான ஆர்வத்தை வாழ்வின் போக்கில் வெளிப்படுத்துவது நிதர்சனமானது. அதற்கான செயல்முறைகளில் சிலர் வாழ்வின் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் ஈடுபடுத்திக் கொள்வதையும் காண முடியும் .
வடக்கிருந்து உயிர் துறந்தல் போல் ஜைன மதத்தில் சல்லேகண உபவாச விரதம் மூலம் சோமப்பா தாத்தா உயிர் துறந்த குறிப்பைத் தருகிறார். இதில் உபாசகர் உணவையும் நீரையும் படிப்படியாகக் குறைத்து இறுதியில் நீர் மட்டும் அருந்தி பின்பு அதையும் முற்றிலுமாக நிறுத்தி உயிர் விடும் முறை. இம்முறை ஜைன மதத்தின் முரண்பாடகவும் சிலரால் கருதப்படுகிறது. அதே சமயம் சந்திரகுப்த மெளரியர் இம்முறையைப் பிரயோகித்ததாகவும் சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மரபு கட்டமைப்பும் அதன் சிதைவின் வரலாறும் ஒரு குடும்பத்தின் தலைமுறை வரலாற்றோடும் சமூக கருத்தியல்களோடும் தொடர்பு கொண்டதாகி விடுகிறது.
தேரின் கதை திரெளபதி கதைக்கலாட்சேபம் போல் துவங்கி பக்தி முறைகளையும் தீர்த்த யாத்திரைகளையும் விவரித்து நவநிர்மாண் , குண்டு வைத்தல் போன்ற புரட்சிகர செயல்பாடுகளையும் கருத்தியல்களையும் முன்வைத்து ஐந்து தலைமுறைகளின் வரலாற்றை நீட்டித்து பொறுப்புணர்வைப் பிரதிபலிக்கும் காதல் கடிதம் மூலம் நிறைவுறுகிறது. இந்த கதையின் சாரமானது இரு சாத்தியங்களைக் கொண்டது. இதைச் சிறுகதையாகவும் கட்டமைத்து விட முடியும் பெரும் நாவலாகவும் நீட்டிக்க முடியும்.
நவீன இலக்கிய பரிசோதனை முறைகளைப் பிரதிபலிக்கும் கதையமைப்பு இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கிய விவாதம் சிற்றிதழின் ஆசிரியர் ராகவேந்திர பாடீல் கன்னட பின்நவீனத்துவ கதையாசிரியர்களில் முக்கியமானவர். அவரது சிறுகதைகள் கவனம் பெற்றவை. அவரது வட்டாரம் (கதை தொகுப்பு), மாயையின் முகங்கள் , தேர் ஆகியவை மாறுபாடான அணுகுமுறைகளை மேற்கொண்டவை.
பாவண்ணன் தமிழ் இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமானவர். கன்னடத்திலிருந்து பலரது முக்கிய படைப்புகளைச் சிறப்பான தமிழாக்கம் செய்தவர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் , குறிப்பாகக் குழந்தை இலக்கியங்கள் என இவரது எழுத்துலகம் விரிவடைகிறது.
மஞ்சுநாத்
நூல்: | தேர் |
பிரிவு : | மொழிபெயர்ப்பு நாவல் |
ஆசிரியர்: | ராகவேந்திர பாடீல் |
தமிழில்: | பாவண்ணன் |
வெளியீடு: | சாகித்திய அகாதெமி |
வெளியான ஆண்டு | 2011 |
பக்கங்கள்: | 177 |
விலை : | ₹ 100 |
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.
மிகச் சிறப்பு ,அருமை, வாழ்த்துக்கள்..தொடருங்கள் தோழர் .