நிலா காட்டி அமுதூட்டிய காலம் மறைந்து யூடியூப் காட்டி சோறூட்டும் இன்றைய காலகட்டத்தில் கதை சொல்வது கேட்பது அரிதான ஒன்றாகவே மாறி வருகிறது. விளையாட்டுப், உடற்பயிற்சியும் தெரியாது முழுநேரமும் படிப்பு படிப்பென்றே சுழன்று வரும் குழந்தைகளின் உலகமானது அறைக்குள்ளேயே அடங்கிப் போனதில் இயற்கையை கண்டும் உணர்ந்தும், கதைகள் பாடல்கள் கேட்டும் சொல்லியும் பண்பட வேண்டிய சிறார்களின் மனோவியலும் சுருங்கிவிடுமோ என்ற கவலை என் போன்ற தாத்தா, பாட்டிகளுக்கு உண்டாதென்னவோ உண்மையே.
குழந்தைகளின் உளவியலை வருங்காலத்திலான அவர்களின் வாழ்வியலை கட்டமைக்கும் முக்கியமான ஒன்றாக சிறுவர் உலகம் திகழ்கிறது. எளிய தமிழ் வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கும் கதைகள் பாடல்களை கேட்டும், சொல்லியும் வளரும் குழந்தைகளின் மனநிலை சீர்படும். கற்பனை வளம் பெருகும். கவனிக்கும் திறன் மேம்படும். மொழியைக் கையாளும் திறன் வளரும். அமைதியும் ஆனந்தமுமாய் மலர்ந்த முகத்துடன் வலம் வருவர்.
தீநுண் கிருமியின் தாண்டவத்தில் தடுமாறிய மனித இனம் தாம் மறந்து வந்த பண்டைய பாரம்பரிய பண்பாட்டை நோக்கி நகரத் தொடங்கியது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணில் வழிவழியாக முன்னோர்களால் சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதைகள், விடுகதைகள், பழமொழிகளின் தொடர்ச்சியாக சிறார் கதைகளும் பாடல்களும் துளிர்க்கத் தொடங்கியிருப்பது மகிழ்வைத் தருகிறது.
கவிதை, கதை, கட்டுரையென இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவரும் தமிழக அரசின் ‘ தமிழ்ச் செம்மல்’ விருதாளருமான உழவுக்கவிஞர் உமையவன் அவர்கள் சாகித்திய அகாதமியின் ” பாலபுரஸ்கர்” விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள் உள்பட ஆகச்சிறந்த 31 சிறார் இலக்கியப் படைப்பாளர்கள் தற்காலத்தில் எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு நூலாக “தற்கால சிறார் கதைகள்” என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார்.
இந்நூலில் தாய் சொல்வதையும் கேட்காது குள்ளநரியை நம்பிய குட்டிக்குரங்குக்கு என்னவானது என்பதை எஸ்.அபிநயா அவர்களின் ‘கன்னம் வீங்கிய குட்டிக் குரங்கு’
ஊரடங்கு காலத்தில் பள்ளியின் வாசலில் பசியோடு இருந்த நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்கச் சென்ற சபாவை அறிய ஆயிஷா இரா.நடராஜன் அவர்களின் சபாஷ் சபாநாயகி,
ஊராரின் கேலியையும் பொருட்படுத்தாமல் கற்கள் சேகரிக்கும் மண்ணாங்கட்டியின் வாழ்வில் நடத்தது என்னவென உணர்த்தும் ஆலா அவர்களின் ‘ மண்ணாங்கட்டி மும், விண்கல்லும்
காசுக்குப் பதிலாக அன்பின் அடையாளமான முத்தங்களை உண்டியலில் சேகரித்த சீமா அவற்றை என்ன செய்தாள் எனக் கூறும் கொ.ம.கோ. இளங்கோ ஐயா அவர்களின் “சீமா சேகரித்த சக்கரை முத்தம்’
பசி மயக்கத்தில் இருக்கும் ரோசி பூனை கண்ட கனவென்ன … மனிதர்கள் குறித்த ரோசியின் எண்ணமென்ன அறிய உதயசங்கர் ஐயா அவர்களின் ‘பூனையின் கனவு’
மரமேறும் தொடர் முயற்சியில் சீனுவுக்கு விளைந்ததென்ன , உயரமான விலங்கால் ஆபத்து நேர்ந்ததா தெரிந்து கொள்ள உமையவன் அவர்களின் ‘சீனு பார்த்த டைனோசர்’
புகழுக்கு ஆசைப்பட்டு கைப்பணத்தை செலவழித்ததுடன் சிறு பொய்யும் கூறிய குணசீலனுக்கு நிகழ்ந்தது என்னவென விளக்கிடும் குழ.கதிரேசன் ஐயா அவர்களின் ‘புகழாசை’
முதியோர்களின் நிலை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் மா.கமலவேலன் ஐயா அவர்களின் ‘கல்யாணச் சாப்பாடு’
ஒற்றுமையான இருவர் சண்டையிட மூன்றாமவரின் தலையீட்டால் நிகழ்ந்தது என்ன அறிய கன்னிக்கோவில் இராஜா அவர்களின் ‘சண்டை போட்ட தொட்டி மீன்கள்’
பொன்நகையா புத்தகங்களா எது சிறந்த செல்வமென உணர்த்தும் கிருங்கை சேதுபதி ஐயா அவர்களின் ஏழு ஏழு எழுநூற்று எழுபத்தேழு’
பறவையைப் போல பறக்க ஆசைப்பட்ட குட்டி யானை பறந்ததா இல்லையா எனக் கூறும் கீர்த்தி அவர்களின் ‘சிறகடித்த குட்டி யானை’
இயற்கை அழிவிலிருந்து நம்மைக் காக்கும் பவளப்பாறைகள் உள்பட அரிய கடல்வாழ் உயிரினங்களின் சிறப்பை கூறும் கொ.ம.கோதண்டம் ஐயா அவர்களின் ‘பவளப்பாறை’
சேதுவின் அவசரத்தால் பட்டு மாமிக்கு நேர்ந்ததென்ன? அதனால் சேதுவிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன அறிவதற்கு எஸ்.ஆர்ஜி சுந்தரம் ஐயா அவர்களின் ‘ரவா லட்டு’
பொட்டலங்களில் இரசாயணம் கலந்து விற்கப்படும் சிப்ஸ் போன்ற திண்பண்டங்களை உண்பதால் உடலுக்கு நேரும் தீங்குகளை உணர்த்தும் சுப்ரபாரதிமணியன் அவர்களின் ‘மொறு…மொறு’
காணாமல் போன ஆட்டுக்குட்டியை தேடும் மேரி இறுதியில் கண்டுபிடித்தாளா அறிய சுகுமாரன் ஐயா அவர்களின் ‘மேரியின் ஆட்டுக்குட்டி’
விரதம் இருப்பதாக பொய் கூறிய நரியின் கள்ளம் உணர்ந்ததா காட்டுப் பூனை தெரிவதற்கு சென்னிமலை தண்டபாணி ஐயா அவர்களின் ‘நரியின் விரதம்’
நீர்நிலை வற்றியதால் வாழ்விடம் தேடிய தவளை மற்றும் ஆமை இருவரில் நரியிடம் மாட்டிய ஆமையின் நிலையென்ன அறிய ‘கு.அ. தமிழ்மொழி அவர்களின் ‘நகரும் கற்கள்’
வீட்டிலேயே கிளி, லவ்பேர்ட்ஸ், மீன்களை வளர்த்து வரும் பாலா ஊரடங்கு காலத்தில் செய்ததென்ன தெரிந்து கொள்ள சகோதரி தேவகி இராமலிங்கம் அவர்களின் ‘பறவைக்கில்லை ஊரடங்கு’
பறவைகள் சரணாலயம் போன்ற பொதுவிடங்களில் மனிதர்களின் அலட்சியத்தால் தங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உண்டாகும் கேடிலிருந்து தற்காக்க பறவைகள் எடுத்த முயற்சிகளை அறியத்தரும் முனைவர் தேவி நாச்சியப்பன் அவர்களின் ‘அதோ அந்த பறவை’
ஊரடங்கால் பள்ளிக்கு வராத தங்களின் மாணவ நண்பர்களைக் குறித்து காகம் கனியும் வேம்புவும் பேசிக்கொண்ட மலரும் நினைவுகளாய் பஞ்சு மிட்டாய் பிரபு அவர்களின் ‘கனியும் வேம்புவும்’
கடல்நீரெல்லாம் வழிந்து எங்கே விழுமென அறிவியல் பூர்வமாக உணர்த்தும் ஆர்.வி.பதி அவர்களின் ‘மாயப்படலம்’
சோம்பேறித் தனத்தாலும் கோபத்தாலும் உண்டாகும் நிதானம் தவறுதலால் நிகழ்வதென்ன என்பதை தெளிவு படுத்தும் பல்லவி குமார் அவர்களின் ‘காற்றுக்கும் சூரியனுக்கும் என்ன ஆச்சு’
மரக்குதிரையின் மேலேறி கற்பனையிலேயே உலகை வரும் சிறுவர்களின் மகிழ்ச்சிப் பரவலாக பாவண்ணன் ஐயா அவர்களின்’நல்ல குதிரை’
மெல்லினாவைக் கடத்திச் சென்ற பக்கத்து நாட்டு தலைவனிடமிருந்து விண்மீன், மேகம் குயில், வைரம், மின்மினி எல்லாமும் ஒன்று சேர்ந்து எவ்விதம் காப்பாற்றின என்பதற்கு பூவிதழ் உமேஷ் அவர்களின் ‘மெல்லினா’
காட்டுக்குள் பூதத்திடம் மாட்டிய முருகனும் மூர்த்தியும் தப்பிய விதமறிய முனைவர் மரியதெரசா அவர்களின் ‘குகைக்குள் பூதம்’
கொரானா தொற்று காலத்தில் முகக்கவசம் வாங்க வசதியில்லாத தனது நண்பர்களுக்கு முகக்கவசம் கிடைக்க எழில் செய்ததென்ன அறிவதற்கு மு. முருகேஷ் அவர்களின் “யாருமற்ற நிழலும் கொஞ்சம் புளியம்பூக்களும்’
சுற்றுப்புற சுகாதாரமின்மையே நோய் பரவலுக்கான காரணமென உணர்ந்த செந்திலும் அவரின் நண்பர்களும் எடுத்த முன்னெடுப்புகளில் தெரு மக்கள் திருந்தினரா அறிவதற்கு பாவலர் மலரடியான் ஐயா அவர்களின் ‘தேடி வந்த பரிசு’
தன் ஆடு நண்பனை கொத்திய பாம்புக்கு காகம் உணர்த்திய பாடம் வ.வெ.இராஜாமணி அவர்களின் ‘பாம்புக்கு பாடம் புகட்டியக் காகம்’
இரும எண்களின் நாட்டுக்குள் மாட்டிக் கொண்ட நோவா எவ்விதம் தன்னை தற்காத்துக் கொண்டு தப்பித்து வந்தது என்பதினை சுவராசியத்துடன் விளக்கும் விழியன் அவர்களின் ‘ஒன்றாம் எண்ணிற்கு சலாம்’
அப்பா செய்து தந்த கத்திக் கப்பலில் தனது தோழி செங்கொடியின் வீட்டிற்கு செல்லும் ஓவியாவை ஒருவர் வேண்டாமெனத் தடுக்கிறார்..ஏனெனத் தெரிவதற்கு விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் ‘ஓவியா ஐந்தாம் வகுப்பு, பக்கத்தில் செங்கொடி’
மெழுகுவர்த்தி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மற்றவர்களின் திறனை குறைத்து மதிப்பிடும் பென்சிலுக்கு நேர்ந்ததென்ன என்பதனை ஹாரிங்டன் ஹரிஹரன் அவர்களின் ‘காணாமல் போன பென்சில்’ கூறும்.
இந்நூலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் மனிதநேயம் பேணல், பறவைகள் விலங்குகள், மனிதர்கள் இடத்தில் அன்பு செய்தல், முதியோர்களை மதித்தல், நட்பு பாராட்டல், கொண்ட கொள்கையில் உறுதியாய் இருத்தல் , முயற்சியைக் கை கொள்ளல் , சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வாழும் வழிமுறைகள், சோம்பல் அகற்றி சுறுசுறுப்புடன் உழைத்தல், பல்லுயிர் நேசித்தல், பகைமை பாராட்டாது நேசமுடன் வாழ்தல் , எளிமையே உயர்வு எனக் கொள்ளல் போன்ற நல்கருத்துகளுடன் கதைகள் விதைக்கப்பட்டிருக்கின்றன.
ஊரடங்கு காலகட்டத்தில் உருவான கதைகள் ஆனதால் காலத்தின் கண்ணாடியாக கொரானா குறித்தக் கதைகளும் பரவலாக உள்ளன. பூதம், மந்திரம் குறித்தான கதைகள் குழந்தைகளிடையே சிறு அச்சத்தையோ மூடநம்பிக்கையையோ விதைத்து விடுமோ என்று சிறு சிந்தனை மனதிலோடுவதை தவிர்க்க இயலவில்லை.
31 ஆகச்சிறந்த சிறார் படைப்பாளிகளின் தற்காலக் கதைகளை தொகுப்பது எளிதல்ல. அதைத் திறம்படச் செய்த உமையவன் அவர்களுக்கும் , வித்தியாசமான சிந்தனைகளில் எளிய நடையில் கதைகள் தந்த மேதகு படைப்பாளர்கள். அனைவருக்கும் கதைக்கேற்ற அழகிய படங்களுடனும் தலைப்பிற்கேற்ற அட்டைப்படமுடனும் வாசிக்க எளிதாக இருக்கும் எழுத்துருவுடனும் சிறப்புற வடிவமைத்து அச்சிட்டு வெளியிட்டுள்ள பயில் பதிப்பகத்தாருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகள். நிச்சயமாக இந்நூல் வாசிக்கும் குழந்தைகளிடையே ஒரு மகிழ்வின் அதிர்வை உண்டாக்கும்.
– அன்புச்செல்வி சுப்புராஜூ
நூல் : தற்கால சிறார் கதைகள் (இதுவரை வெளிவராத சிறார் கதைகளின் தொகுப்பு)
பிரிவு: சிறார் கதைகள்
ஆசிரியர் : உமையவன்
வெளியீடு : பயில் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2021
விலை: ₹ 222