னிதனுக்கும் தாவரத்திற்கும் இடையிலான பந்தம் மிகவும் நுட்பமானது.

மருத்துவத்தைச் சார்ந்த வகையில் மட்டும் தாவரங்களை அறிந்து வைத்திருக்கும் வாசகர்களுக்கு இப்புத்தகம் தாவரங்களின் பன்முகத் தன்மையை மட்டுமல்லாது சமூகம் அதனுடன் கொண்டுள்ள பந்தத்தின் மாட்சிமையை ஆழ்ந்த விளக்கத்துடன் பேசுகிறது.

நொச்சி, ஆவாரை, மஞ்சணத்தி, எருக்கு, ஆமணக்கு ,எள், விளக்குமாறாகும் தாவரங்கள் , ஒட்டப்பிடாரம் கத்திரிக்காய், பருத்தி, தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய், பெரு மரம் என்ற தலைப்புகளில் புதிய தகவல்களையும், நிறைய ஆய்வு தரவுகளையும் பன்னோக்கு சிறப்புப் பார்வையில் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவற்றில் சில..,

நொச்சி இலைகள் ஒரு பூச்சி விரட்டி என்பதைச் சிலர் அறிந்திருப்போம். ஆனால் கோழி மூடி வைக்கும் “பஞ்சாரக் கூடை” முடையவும், மேலும் இத்தாவரத்தைக் கொண்டு திருடர்கள் ஆடுகளை மந்தையிலிருந்து பிரிக்கப் பயன்படுத்தும் நூதனமும் புதிய செய்தி.

ஆடு பயிர் காட்டும், ஆவாரை நெல் காட்டும் என்பது ஆவாரைக் குறித்த ஒரு பழமொழி.

கம்பளத்து நாயக்கர்களின் திருமணம், பூப்பு சடங்கு, கோவில் திருவிழாக்களில் ஆவாரைச்செடியின் பங்கு எவ்வகையிலிருந்தது என்பதையும் தென்மாவட்டங்களில் அருந்ததியர்கள் செருப்பு தைக்கும் தொழிலுக்குத் தோல் பதனிட இதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார்.

தற்போது நோனி என்கிற பெயரில் அதிக விற்பனை குறியீட்டை அடைந்த திரவ மருந்து, நுணா என்கிற மஞ்சணத்தியை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. (இது புத்தகத்தில் இல்லை).

நுணாவிற்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. மாட்டு வண்டி நுகத்தடிக் கால் செய்ய இம்மரத்தை விரும்பி பயன்படுத்தக் காரணம் மாட்டின் கழுத்தில் இம்மரம் காயத்தை ஏற்படுத்தாது .மேலும் இம்மரத்தின் மிருதுத் தன்மைக் காரணமாகப் பாதக்குறடு எனப்படும் காலணி செய்யவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் இம்மர வேரிலிருந்து சிவப்பு சாயம் தயாரிக்கப்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகளையும் தருகிறார்.

எருக்கு பூ மாலைகள் விநாயகருக்கு அணிவிப்பதை நாம் அறிவோம். ஆனால் ஆற்காடு நவாபின் ஆட்சிக் காலத்தில் தண்டனை கைதிகளுக்கு எருக்கம்பூ மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்வார்களாம். கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்த வெள்ளையர்கள் அந்த இடத்தில் ஆமணக்கை விதைத்தார்களாம்.அத்தகைய ஆமணக்கு மருத்துவ நோக்கிலும் விவசாயத்திலும் விளக்கு எரிக்கவும் பயன்படும் வகைமைகளைத் தருகிறார்.

நான் ஒரு முறை பரம்பிக்குளம் (டாப்சிலிப்) சென்றிருந்த போது அங்க வாழும் படித்த பழங்குடி இளைஞரிடம் பேசுகையில் நிறையத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் யானைகள் பற்றி அதிகம்.குறிப்பாக யானைகளுக்கு இந்த ஆமணக்கு தாவரத்தின் அணுக்கம் பிடிக்காதாம். யானையின் வலசைப்பாதையில் விவசாயம் நிலங்கள் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்ட சூழலில் இயற்கை வேலி முறையில் சுமார் ஆறடி பரப்பில் ஆமணக்கு செடிகளை நெருக்கமாக வளர்த்து பார்த்ததில் யானைகள் பாதைகளை மாற்றிக் கொண்டதாம். இதில் இரு தரப்பிற்கும் சேதமில்லை. கூடுதலாக ஆமணக்கு விதைகள் உபரி வருமானமாக வருகிறது என்று கூறினார். இது பல இடங்களில் சோதித்து வெற்றி கண்டுள்ளனர் .இப்புத்தகம் வாசிக்கும் போது இது என் நினைவிற்கு வந்தது.

“தவ்வை” என்கிற பெண் தெய்வம் மூத்தவள். கால வழமையில் மூதேவியாக்கப்பட்டவள். இத்தெய்வத்தின் படைக்கலனாக “பெருக்குமாறு” அமைந்துள்ளதாம். (வன்படை துடைப்பம் – பிங்கல நிகண்டு) சில கோவில் (ம) தேவாலயங்களில் விளக்குமாறு காணிக்கை பொருளாக ஏற்கும் முறைகள் குறித்தும் எழுதியுள்ளார்.

ஒட்டப்பிடாரத்தின் விவசாய முறைகள், பயிர்கள், பயிரிடுதல் (ம) விவசாய வணிக முறைகள் காலச்சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல் நோக்கு பிரச்சினைகள் பற்றி நீண்ட கட்டுரையையில் விவரித்துள்ளார்.

“அறுவை ( துணி) வணிகன் ” (கி.மு 100) என்கிற பதம் தொடங்கி அகநானூறு குறிப்புகள் தந்து தமிழகத்தின் பருத்தி சாகுபடி மற்றும் வணிக முறைமைகளை வரை இந்நூலில் விவரித்துள்ளார்.இதில் கூறப்பட்டுள்ள பருத்தி நெசவுத் தொடர்பான நிறையத் தரவுகளை நெசவாளர்களும்_துணி_வணிகர்களும்(ஆசிரியர் : எஸ்.ஜெயசீல ஸ்டீபன்) ஆய்வு நூலிலிருந்து கையாண்டுள்ளார்.

பெரும் மரமான “ஆடன் சோனியா டிஜிட்டா” என்கிற ஆப்பிரிக்க மரம் தமிழில் பப்பரப்புளி, இராட்சதப்புளி, தொதி,பெருக்கமரம் என அழைக்கப்படுவதையும் இந்த அயல் மரத்தின் பரவல் மற்றும் பயன்களையும் கூறுகிறார்.இப்பெருமரத்தில் துளையிட்டு அதில் இறந்த மனிதரை வைத்து அந்த சடலத்தைப் பதனிடும் (எகிப்து பிரமிடு போல்) மத்திய ஆப்பிரிக்காவின் பழங்குடிகள் வழக்கமுறை வியப்பாக இருக்கிறது.

சோ.தர்மனின் “சூல்” நாவலில் வெள்ளையர் ஒருவர் கள்ளிச் செடிகள் அழிப்பதற்கான ஒரு பூச்சியை கள ஆய்வு செய்து பார்ப்பார். பிற்பாடு இது விவசாயத்திற்குப் பாதகமாய் எவ்வாறு அமைந்தது என்பது பற்றியும், முத்துநாகு அவர்களின்  “சுளுந்தீ” என்கிற வரலாற்று நாவலில் பல வகை தாவர எண்ணெய்கள் ஆட்டும் மரச்செக்குகள் நூற்றுக்கணக்கான வகையில் அமைந்திருந்ததின் நுணுக்கத்தையும் எழுதியுள்ளார்.

தாவரத்திற்குப் பின்னால் உள்ள பொதுவான பயன்பாடுகள், சமூக கலாச்சார முறைகள், நம்பிக்கைகள், விவசாயத்துடனான தொடர்புகள், மருத்துவக் குறிப்புகள், வணிக செயற்பாடுகள் மற்றும் வரலாறு, வாய்மொழிக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கியங்கள், விடுகதைகள் என அத்துடன் பிணைந்த அனைத்தையும் குறித்த தரவுகளை இந்நூல் தருகிறது.


– மஞ்சுநாத்

நூல் தகவல்:
நூல் : தமிழரின் தாவர வழக்காறுகள்
பிரிவு : கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: உயிர் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2019
பக்கங்கள் : 222
விலை : ₹ 210

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *