புத்தகம் வாங்கியே குவிப்போருக்கு அதிலிருந்து விடுதலை கிடைப்பது அரிது. எங்கே புத்தகத்தைப் பார்த்தாலும் அதில் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து ரசித்து, வாங்கிக் குவிப்பது ஒரு போதை. அப்படி அலசும்போது நம்மிடம் சில சமயம் எதேச்சையாக நல்ல புத்தகங்கள் மாட்டி விடும். அப்படி நான் பாரதி புத்தகாலயத்தில் துழாவிக் கொண்டிருந்த போதுதான் இந்தப் புத்தகம் மாட்டியது. ஜோல்னா ஜவஹரின் “சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்”.
ஆசிரியர்கள் என்பவர்கள் தனி இனம். எப்போழுதுமே தனது மாணவர்களைப் பற்றியும், அவர்களது கல்வி, எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் ‘உண்மையான’ ஆசிரியர்கள். தம்மையறியாமலேயே தமது மாணவர்களைச் செதுக்கியபடியே இருப்பார்கள். அந்த மாணவர்களிடம் இருக்கும் குறைகளை அகற்றி நிறைவுகளை மேலும் மெருகூட்டி உலகத்திடம் ஒப்படைப்பார்கள். பல மாணவர்களும் தமது ஆசிரியர்கள் பற்றிப் பெருமிதம் கொண்டு தமது பெயரையே மாற்றியிருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர், பாரதிதாசன், சுரதா, கல்கி என்று அந்தப் பெயர் மிக நீளம்.
எல்லாம் சரிதான். மாணவர்கள் ஆசிரியரைப் பட்டை தீட்ட முடியுமா? இதென்ன கேள்வி என்கிறீர்களா? அநேகமாக எல்லோரும் ஆயிஷா நடராஜனின் சிறுகதையான ஆயிஷாவைப் படித்தவர்களாகவே இருப்போம். அதில் வரும் ஆயிஷா தனது அறிவியல் ஆசிரியைக் கேள்வி கேட்டே சரி செய்து படிக்க வைத்து விடுவாள். நமது மனதிலும், இரா.நடராசனின் பெயருக்கு முன்னாலும் ஆசனம் போட்டு அமர்ந்து விட்டவள் ஆயிஷா. இதை ஒரு ஆசிரியரே பதிவு செய்தால்? அதைத்தான் செய்திருக்கிறார் ஜோல்னா ஜவஹர் தனது புத்தகத்தில்.
மாணவர்களுக்கு என்ன தெரியும்? கேள்வி கேட்டால் தட்டி உட்கார வைப்பது, முடிந்தால் மதிப்பெண்ணைக் குறைத்துப் பழி வாங்குவது என்று இருக்கும் சில தவறான முன்னுதாரணங்களுக்கெதிராக தன்னை எப்படி மாணவர்கள் செதுக்கினார்கள் என்ற வித்தியாசமான கோணத்தில் இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் ஜவஹர். அவர் சுட்டிக் காட்டும் மாணவர்களில் பலரும் அவரது பெயரையே தன் பெயரில் இணைத்திருக்க, இவரோ, அவர்களைத் தூக்கிக் கொண்டாடுகிறார், அவர்கள்தான் தம்மைச் செதுக்கினார்கள் என்று. அவர் ஒவ்வொரு சம்பவமாகச் சொல்லிச் சொல்லி, மாணவர்களின் புகைப்படங்களுடன் எழுதிச் செல்லச் செல்ல, நமக்கு உற்சாகம் பீறிடுகிறது.
ஒரு மாணவன், அடிப்பது தவறு என்று மண்டையில் அடித்தாற்போல் சொல்லிக் கொடுக்கிறான். நடுபெஞ்சு மாணவர்கள் தம்மால் முடியும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்; ஆசிரியர் உற்சாகம் கொடுத்தால் தம்மால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லிக் கொடுக்கும் மாணவர்கள்; தாமே முன்னின்று பள்ளிக்கே தலைவனாகச் செயல்பட்டு ஒழுங்கு படுத்தும் மாணவன், கட்டுரை, பேச்சு, கலை என்று கலக்கும் மாணவர்கள். ஆசிரியர் இதைத்தான் பேச வேண்டும் என்று சொல்ல, இடையில் இவர் ஏற்கனவே பதிவு செய்து வைத்தது தகறாறு செய்ய, மாணவர்களோ கலக்கு கலக்கு என்று கலக்குகிறார்கள். ஆசிரியரின் ஆணவம் தகர்கிறது. மாணவனை நம்பி விட்டால் ஒரு பெரும் விழாவையே நடத்தி விட முடியும் என்று செய்து காட்டிய மாணவர்கள். அதிலும் சிறப்பு அவர்கள் மேசை துடைக்கும் பணியில் ஈடுபட்டு நிதி திரட்டி அந்த விழாவை நடத்தியது.
இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும், தமக்கும் ஆசிரியராக இருந்து தம்மை வழிநடத்திய மாண்புமிகு மாணவர்களைப் பற்றிப் பெருமிதம் பொங்கப் பேசிக் கொண்டே செல்கிறார் ஜவஹர். அவரைப் பின்பற்றிய மாணவர்கள் மேலும் மேலும் நல்ல தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். ஆசு + இரியர் அதாவது மாசு நீக்குபவர் ஆசிரியர் என்றால் அவரிடம் இருக்கும் மாசுக்களை நீக்கி சுத்தம் செய்பவர்களாக மாணவர்களே இருக்கிறார்கள். இதைத் தமது புத்தகத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். இந்தப் புத்தகத்தை தன்னைத் தூண்டி விட்டு எழுத வைத்ததே ஒரு மாணவர்தான் என்பதையும் பெருமையாகப் பேசுகிறார். இந்தப் புத்தகத்தைப் படித்தால், மேலும் பல ஆயிஷாக்கள் உண்மையிலேயே இருப்பதையும், அவர்களால் ஆசிரியர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் காண முடிகிறது.
கரோனா வந்து நேரடி வகுப்புக்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகக் கெடுத்துள்ளது. ஆனால் ஆயிரம் ஆன்லைன் வகுப்பு வந்தாலும், நேரடி வகுப்பை அடித்துக் கொள்ளவே முடியாது, ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை ஆன்லைன் வகுப்பு உருவாக்கவே முடியாது. அதன் சாட்சியாக நிற்கிறது ஜவஹர் அவர்கள் உருவாக்கி இருக்கும் இந்தச் சிற்பம். வாழ்த்துகள்!
Unknown Reviewer. This review was received from Su Ma Jeyaseelan
நன்றி : சூ.ம.ஜெயசீலன்
நூல் : சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்
வகை : கல்வி
ஆசிரியர் : ஜோல்னா ஜவகர்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு: 2022
பக்கங்கள் : 112
விலை: ₹ 100