இத்தொகுப்பில் பெண்ணியக் கருத்துகள் அடங்கிய கவிதைகள் பல உள்ளன.  பெண் எழுத்தாளர் என்றாலே, பெண்ணியம் என்ற வட்டத்துக்குள் இருந்துதான் எழுதுவார் என்பது பொதுவான விமர்சனம்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை, மனம், உடல் சார்ந்த வன்முறைகள் தொடர்கதையாக நிகழும் ஒரு சமூகத்தில், பாதிப்புக்குள்ளானவர்களின் வலியை, வேதனையை எழுத வேண்டிய பொறுப்பும், கடமையும் பெண் எழுத்தாளர்களுக்கு உள்ளது.  ஒரு பெண்ணின் வலியை, ஒரு பெண்ணால் தானே அனுபவ பூர்வமாக உணர்ந்து, வெளிப்படுத்த முடியும்? பெண்கள் எழுதத் துவங்கி, இருநூறு ஆண்டுகள் ஆன பின்னரும், நிலைமை இன்னும் சீராகாமல், இதையே திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருப்பது, எவ்வளவு துரதிர்ஷ்டமான வேதனையான விஷயம்?

“அடிக்காதீங்கண்ணா! வலிக்குது; கழட்டுறேன்!” என்ற பொள்ளாச்சி பெண்ணின் கதறல், நம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டவில்லையா?

பொள்ளாச்சி சம்பவம் குறித்து, “ ஒளியைப் பார்ப்பேன்” என்று, இதில் ஒரு கவிதை இருக்கின்றது.  அது பாதிப்பிற்குள்ளான பெண்ணின் புலம்பலாக இல்லாமல்,  “வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்ற நம்பிக்கையுடன் அந்தத் துயரைக் கடந்து, ஒரு பெண் வெளி வருவதாக எழுதியிருப்பது, சிறப்பு.

நாற்புறமும் இருளிருப்பினும்

எங்கோ சுடரும் ஒற்றைப் பொட்டு ஒளியின்

துணைகொண்டு வெளிவருவேன்……….”

“பேருந்தில் இறங்கிய சிரிப்பு,” என்ற கவிதையின் இவ்வரிகளும் .

எல்லாவற்றுக்கும்

விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கும்

அவளுக்கு அழகிய பல்வரிசை.

இல்லான் எத்தியதில் இல்லாமற்போன

பக்கவாட்டுப் பல் ஓட்டைக்காக

கைமறைத்து சிரிக்கும் இவளுக்கும்

அப்படித் தான் இருந்தது…………………..……...”

இன்னொரு கவிதையின் இவ்வரிகளும்

ஒரு கோடிழுத்தாய்

எப்படியும் வரலாம் ஒரு சதுரம், செவ்வகம், முக்கோணம்

என்று நின்றபோது

என்னைச் சுற்றி வட்டம் முடித்துவிட்டாய்;

உள்ளே நிற்பது என்றானபின்

சதுரமென்ன, வட்டமென்ன

கால்மாற்றி நிற்குமளவு

இடம்விட்டாயே தர்மபிரபு

இவை பெண்ணின் உடல், மனம் சார்ந்த வலியைப் பேசும் கவிதைகளுக்கு, சில காட்டுகள்,.

அடுத்து இயற்கையுடனான நேசத்தை வெளிப்படுத்தும் பல கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இது.  நாம் பெற்று வளர்த்த பிள்ளைக்கு, எத்தனை வயதானாலும், நமக்குக் குழந்தை தானே?  அது போல, கவிஞருக்கு வேப்பங்கன்று!

எதிர்மனையில் ஒரு வேப்பங்கன்று

நான்பார்க்க எழுந்தது தான்

ஒரு மாடிஉயரம் தாண்டும்போதும்

எனக்குக் கன்றுதான்.

உளைச்சல்களின் போது உரையாடத்

தோதான துணை………..”

 

நம் பால்ய கால மலரும் நினைவுகள், எல்லோருக்குமே ஏக்கம் கலந்த மகிழ்வைத் தரக் கூடியவை.  அந்தக் காலத்தில் நாம் படித்த, ஒவ்வொரு பள்ளியின் வாயிலிலும், குழந்தைகளுக்கான தின்பண்டங்களை விற்பதற்காக, ஒரு பாட்டி அமர்ந்திருப்பார்.

அருநெல்லிக்காய்,உப்பு, மிளகாய்த்தூள்

கொய்யா, பெருநெல்லி, கமர்கட்

கடலை உருண்டை பாட்டில்களோடு

சாக்கு விரித்துப் பாக்கு மெல்லும்

சவுந்தரம் அத்தைக்கு

முன்னூற்றைம்பது பேரக்குழந்தைகளை

,மேய்க்கும் வேலை இருந்தது.

அரசுப்பள்ளி வாசலில் அத்தனை

பஞ்சாயத்துக்கும் நடுவில்தான்

பெத்த யாவாரம்”…………..”

இந்தக் கவிதையை வாசித்த போது, பாட்டியிடமிருந்து வெல்லப்பாகில் ஊறிய நெல்லிக்காயைப் பூவரசு இலையில் வாங்கிச் சாப்பிட்டது நினைவுக்கு வந்து, வாயில் எச்சில் ஊறியது!

இந்நூலில் இன்னும் சிறந்த கவிதைகள் பல இருப்பினும், ஒன்றிரண்டை மட்டுமே கோடிட்டுக் காட்டியுள்ளேன்.  முழுமையான வாசிப்பின்பம் பெற நூலை வாங்கி வாசியுங்கள்.


நூலாசிரியர் குறித்து:

உமா மோகன் திருவாரூரில் பிறந்து பாண்டிச்சேரியில் வசிப்பவர். இவரது  ’டார்வின் படிக்காத குருவி’ ,  ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’ ,  ‘துயரங்களின் பின் வாசல்’ ,  ‘நீங்கள் உங்களைப் போலில்லை’ ,  ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’ ,  ‘கனவு செருகிய எரவாணம்’
முதலிய கவிதைத்தொகுப்புகள் ’வெயில் புராணம்’ என்ற பயணக்கட்டுரை
 ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பு  முதலியன இதுவரை வெளிவந்தவை.
நூல் தகவல்:
நூல்: சிப்பத்தில் கட்டிய கடல்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: உமா மோகன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு  டிசம்பர் 2019 ( முதற்பதிப்பு)
பக்கங்கள் : 96
விலை : ₹ 180
தொடர்புக்கு : +91 87545 07070

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *