இமயம் எழுதி வெளிவந்து சாஹித்ய அகாதமி விருது பெற்ற நாவல், ’செல்லாத பணம்”. தொடர்ந்து நல்ல படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கும் படைப்பாளியின் இன்னொரு நாவல். அதன் உருவமும் உள்ளடக்கமும் இயைந்து செதுக்கப்பட்ட ஒரு சிற்பம். அவலங்களும், நமது பண்பாட்டு இழிவுகளும் வெளிப்படும் யதார்த்தச் சித்திரம்.
எதைப்பற்றி நாவல் முழுவதும் விவாதமும், சண்டைகளும், வருத்தங்களும், சமரசங்களும், கையூட்டுக்களும், ஏளனச் சிரிப்புகளும், பிச்சைக்காரத்தனங்களும், மேன்மைகளும் நிகழ்கின்றனவோ அந்த நிகழ்வு நேரடியான காட்சியாக நாவலில் வருவதில்லை. இதுவே இந்த நாவலின் மிகச் சிறப்பான அம்சம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நாம் நாவல்கள் கதைகளைப் படிப்பது அவற்றின் நிகழும் சம்பவங்களின் சித்திரத்துக்காக அல்ல. அவை மிகச் சாதாரணமாக நமது சமூக வெளியில் காணக்கூடியதாக இருக்கின்றன. எல்லா வகையான பொது ஊடகங்களிலும் அவை விவரிக்கப்படுகின்றன. அதன் கொடூரங்களைக் கற்பனை செய்துகொள்வது நமது நோக்கம் அல்ல. அந்நிகழ்வின் பின்னே ஒளிந்திருக்கும் நமது வக்கிரங்களை வெளிப்படுத்துவதே இலக்கியவாதியின் பணி.
(எதார்த்தம் என்று கொடூரமான ரத்த வெள்ளத்தைக் காட்டுவது நமது தமிழ் சினிமாவின் ஒரு பொய்யான யதார்த்தம்). ஏனெனில் நாவலைவிட வாழ்க்கை கொடூரமானது, ஆனந்தமானது இன்னும் சுவராஸ்யமானது. அதைமீறி, நாவலைச் சுவராஸ்யமாக ஆக்கச் செய்வது, அதைச் சுற்றி நிகழும்/அரங்கேறும் நாடகங்கள். கண்ணதாசன் சொன்னது போல ’எழுதாத நாடகங்கள்’. (நாமாக வரித்துக்கொண்ட) பாவனைகள், அணிந்து கொண்டிருக்கும் முகமூடிகள், போட்டுக்கொண்ட திரைகளை விலக்கிப் நம்மை நாம் பார்க்கிறது செல்லாத பணத்தின் கதைக்களம்.
ஒரு திருமணமான பெண் தீயில் கருகிவிடுகிறாள். அவள் எப்படிக் கருகினாள் என்பதைச் சொல்வது செய்தி. ஏன் கருகினாள்? அதற்கான உடனடிக் காரணம் கூட எல்லோருக்கும் தெரிந்திருக்கும்; கணவனின் கொடுமை. ஆனால் அதன் நீண்டகாலக் காரணங்கள் என்ன? அந்தக் கொடூரமான நிகழ்வு நடப்பதற்காக குடும்பமும் சமூகமும் அமைத்துக் கொடுக்கும் குடும்பம், பண்பாடு, மரபு போன்றவற்றின் பங்களிப்பு என்ன என்பதையே இந்த நாவல் துல்லியமாக விவரிக்கிறது. ஒரு சிறந்த நாடகமாக, சிறந்த திரைப்படமாகக் கூடிய சாத்தியங்கள் நிறைந்த கதை. எல்லா சாத்தியப்பாடுகளும் விவாதங்கள் உரையாடல்கள் மூலமே வெளிவருகின்றன. எழுத்து என்பது எவ்வளவு அதிர்ச்சியும் திகிலும், அதே சமயம் உணர்ச்சியும், அறிவார்ந்த செயலுமாக விரிகிறது என்பதை இந்த நாவலில் காணலாம்.
திருமணத்தின் போது வசதி வாய்ப்புக்கள், வருமானம் என்பதே முக்கியத் தேடலாக இருக்கும் போது, பண்பாடு, மரபு என்ற போர்வைகளைப் போர்த்திக் கொண்டு, (மாடு விற்பதற்கும் திருமணத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை) அது ஒரு குடும்ப நிகழ்ச்சியாக இல்லாமல் ஒரு பொருளாதார நடவடிக்கையாக இருக்கிறது. இந்த நாவலில் ஜாதி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால் அதுவும் குறிப்பால் உணர்த்தப்படுவதுபோல் இருக்கிறது. மறைபொருள். இது மிகவும் தேர்ந்த செய்கை. இந்தக் காலத்திலும் மத்தியவர்க்கம் இதைத்தானே நாடகமாக்கி நடித்துக் கொண்டிருக்கிறது. (பொருளாதாரத்தில் கீழிருக்கும் மக்களிடம் சாதியும் வர்க்கமும் பெரும்பாலும் சேர்ந்தே இருக்கின்றன. விதிவிலக்குகளும் ஏராளம்). சாதியை குறிப்பிட்டிருந்தால், வாசகனின் கவனம் முழுவதும் அதில் குவிந்து, நாவலின் மையக்கரு தடம் மாறிப்போயிருக்கும் வாய்ப்புண்டு.
மருத்துவமனையை ஒரு மேடையாக நாம் கற்பித்துக் கொண்டால், அங்கே நிகழும் நாடகங்கள் ஓராயிரம். மருத்துவர்கள், மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நிகழ்த்தும் செயல்கள், வெளியிலிருந்து வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு அதிகாரத்தின் செயல்களாகவே கற்பிக்கப்பட்டிருக்கிறது. தேவைகளின் அடிப்படையிலான விதிகள் என்பதை நாம் புரியவைக்கவில்லை. அது இன்றைய சூழலில் முடியாது. ஏனெனில் நமது அரசுப் பணியாளர்கள், அரசுகள் இன்னும் காலனிய மனநிலையிலேயே இருக்கிறார்கள். மக்களும் அதற்கு ஏற்றாற்போலவே நடந்து கொள்கிறார்கள். சிபாரிசுகள் என்பவை இவற்றின் விளைவுகளில் ஒன்று. இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் கரோனா தொற்றுநோயின் விளைவுகளை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். எல்லாப் பொறுப்புகளும் குடிமக்களின் தலைமீதே சுமத்தப்படுகின்றன.
ரேவதியின் கணவன் குடிகாரன், முறையாக உழைத்து மனைவி மக்களைக் காக்கத் தெரியாதவன் என்னும் போதே, அவனுடைய மனைவியின் வீட்டார் அவனுடைய பொருளாதார, பண்பாட்டு நிலை காரணமாக அவனை ஒதுக்கிவைத்து அவமானப்படுத்துவது அவனுடைய சினத்தை இன்னும் அதிகரிக்கிறது. பொருளாதார நிலையில் அடித்தளத்தில் இருக்கும் அவன் தன்னுடைய எதிர்ப்பை இன்னும் மோசமாக நடந்து கொள்வதன் மூலமே வெளிப்படுத்துகிறான். குடிக்கிறான். மனைவியை அடிக்கிறான். மகள் இறக்கும் தருவாயில் புலம்புகிற, தாயும், குறிப்பாகத் தந்தையும், சகோதரனும், அவளுக்குத் திருமணம் முடித்துக்கொண்ட பிறகு அவர்களைக் கண்டுகொள்வதேயில்லை. இது என்ன பண்பாட்டுக் கௌரவம் என்பதை அவர்களால் கூட விளக்க முடியாது. இவ்வளவு பாசத்துடம் பேசுகிற அவர்களை, தனது மகள் விருப்பத்துக்கு மாறான ஒருவனுடன் திருமணம் முடித்துக் கொண்டதும், அதுவும் அவர்களாலேயே நடத்திவைக்கப்பட்ட பின்னரும், அவளையும் அவளது குடும்பத்தையும் பாசத்துடன் அணுகுவதிலிருந்து தடுத்தது எது? என்ற கேள்வியை நம்முள் பெரிதாக இந்த நாவல் நிறுத்துகிறது.
அவர்களிடம் தன் மகளுக்கென பாசம் இருந்ததென்றால் அவர்களுக்கு அதைக் காட்டத் தெரியவில்லையா? அல்லது அவள் இறக்கும் தருவாயில் பாசம் இருப்பதுபோல் நடிக்கிறார்களா? அவர்கள் உணர்ச்சிகள் உண்மையாகவே வெளிப்படுகின்றன. அவர்கள் நடிப்பது போல் தெரியவில்லை. மீண்டும் அதே கேள்விதான். பாசம் இருந்தால் அதைக் காட்டத் தயங்குவதன், மறுப்பதன், அவளையும், அவளது குடும்பத்தையும் ஒதுக்கி வைப்பதன் காரணம் என்ன? பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு காரணம் என்றாலும், ஒரே ஜாதியாக இருந்தால் இப்படி நடந்திருக்குமா என்ற கேள்வி வாசகனிடம் எழுந்துகொண்டே இருக்கும். இந்தியச் சூழலில் இது மறுக்க முடியாத கேள்வி. ஏனேனில் ரேவதியின் கணவனை சகித்துக் கொள்வதை, ஏன் காணக் கூட தந்தையும், மகனும் விரும்புவதில்லை. ஜாதி அதில் மறைந்து கிடக்கிறது. ரேவதியின் தந்தை வசதியாக இருந்தாலும் அவர்களுக்கு உதவிசெய்ய அவர் விரும்பவில்லை. அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்? கடைசியில் மகள் இறந்துபோகும் தருவாயில் அதைவைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடிவதில்லை. முதலில் கொடுத்திருந்தாலும் ஏதாவது உதவியாக இருந்திருக்கும். பிள்ளைகள் நாம் சொன்னபடி கேட்கவில்லை என்பதனால் நமக்கு ஏற்படும் வெறியை என்னவென்று சொல்வது?
இந்த நாவலில் நிகழ்வதும் ஒருவித கௌரவக் கொலைதான். மகள் விரும்பியவனுக்குத் திருமணம் செய்து தரும் மனம் உள்ள பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும், அவனை வெறுப்பதை நிறுத்த முடியவில்லை. அதனாலேயே அவர்களது மகளும் அவர்களை விட்டு ஒதுங்கி வாழ முயற்சி செய்கிறாள். பொருளாதார ரீதியாக அப்பாவுக்குத் அரைகுறையாகத் தெரிந்தும் தெரியாமலும் அம்மா உதவி செய்கிறாள்.
ஆனால் பெற்றோர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தைகள் ‘நம்மை இப்படி அலைய வச்சிட்டாளே, இப்படிப் போலிஸ் ஸ்டேஷனுக்கு வர வழைச்சிட்டாளே’ என்பதுதான். கடைசியில் அவள் செத்தாள் தேவலை என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். அவள் படும் வேதனையை அவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அழுகிறார்கள். ஆனால், இவ்வளவு அக்கறை உள்ளவர்கள் அவள் உயிரோடு இருக்கும் போது கொஞ்சம் அக்கறை அதிகம் காட்டியிருந்தால் அவள் வாழ்ந்திருப்பாள். அவளுடைய கணவனும் ஒழுங்காக இருந்திருக்கலாம். ‘லாம்’ தான். கடைசியில் மகளை இவ்வளவு நேசித்தும் அவள் மரணத்தில்தான் கதை முடியவேண்டியிருக்கிறது. அவர்கள் அக்கறை காட்டாததால் புறக்கணிப்பால் நிகழ்த்தப்பட்ட ஒருவிதமான கௌரவக் கொலைதான். அந்தப் பெயரில் வரவில்லை என்றாலும் நிகழ்வது அதுதான். பெற்றோரின் கௌரவத்தைக் காப்பாற்றவே அவள் சாகிறாள். அதற்குத் தள்ளப்படுகிறாள். கண்ணுக்குத் தெரியாமல் ஜாதி கௌரவம் நாவல் முழுவதும் மறைந்திருக்கிறது.
பெற்றோர்கள் என்ன கடவுள்களா? அவர்கள் நினைப்பதெல்லாம் சரியாக இருப்பதற்கு. அல்லது அவர்கள் சொன்னதுதான் நடக்கவேண்டும் என்பதற்கு அவர்கள் எல்லாம் அறிந்த ஞானிகளா? ஞானிகளாகத்தான் இருக்கட்டுமே, பிள்ளைகள் அனுபவம் பெற்று அதே ஞானத்தை அடைந்து கொள்ளட்டுமே? இப்படிப் பல அதிர்வுகளை இந்த நாவல் மனதில் ஏற்படுத்துகிறது.
எழுத்தாளர் அப்படி நினைத்தாரா இல்லையா என்பது என்னுடைய பார்வையில் ஒரு பொருட்டல்ல. அந்த இடைவெளியை எதைக் கொண்டு நிரப்பினால் கதையும் அந்தச் சூழலும் பொருந்தும். மத்திய தர வர்க்கம் இல்லையில்லை என்று சொல்லிக் கொண்டு, நடித்துக் கொண்டு ஆனால் எல்லாவிதங்களிலும் தம்மை அதற்கு ஒப்புக் கொடுத்துக்கொண்டு, விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தொண்டையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஜாதி. பண்பாடு பழக்கம் என்பதெல்லாம் அதன் அடிப்படையில் ஏற்படும்/ஏற்படுத்திக் கொண்ட வேறுபாடுகளே.
உறவினர்களும், நண்பர்களும் வழக்கம் போல வந்து நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கும் புளித்துப் போன வாசகங்களையே பேசுகிறார்கள். இவையெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டு, பலமுறைகள் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள். அவற்றில் எதுவும் புதியவை அல்ல. எல்லோருக்கும் நாம் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட அரங்கேற்றத்தை நிகழ்த்துகிறோம் என்று தெரியும். போலிசும் இவற்றில் ஒன்று. மனிதத் தன்மைகள் விதிவிலக்காகவே வெளிப்படுகின்றன. இப்படி ஒரு இழிந்த போலிச் சமூகத்தைக் கட்டமைத்து நாம் என்ன கண்டுவிட்டோம்.
நாவலின் தலைப்பை இன்னும் விரித்து, பொருளாதார வளர்ச்சி ஒன்றே சமூகத்தின் லட்சியம் என்றிருக்கும் இன்றைய நிலையின் மீது எழுப்பப்பட்ட கேள்வியாகவும் கொள்ளலாம். கடைசியில் நமக்குத் தெரியவரலாம், வெற்றுப் பொருளாதார வளர்ச்சியில், எந்த விழுமியங்களும் இல்லாத இந்தச் சமூகத்தில் நமக்குக் கிடைப்பது ‘செல்லாத பணம்’
(நாவலைப் படித்த இந்தக் கொரோனா காலத்தில் தொலைக்காட்சியில் நேரில் பார்த்த நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தந்தையின் பிணம், மருத்துவமனை வாசலில் ஆம்புலன்ஸில் இருக்கிறது. மருத்துவமனையில் இடமில்லை, படுக்கையில்லை, ஆக்ஸிஜன் இல்லை. அவருடைய மகன் அழுது கொண்டே ‘இதைவத்துக் கொண்டு என்ன செய்வது?’ என்று ஹிந்தியில் சொல்லிவிட்டு கையிலிருந்த பணத்தைத் தரையில் வீசிவிடுகிறான்).
பலவருடங்களாக தமது அன்பைத் தெரிவிக்காத, அல்லது அன்பே இல்லாத ஆனால் இருப்பது போல் கடைசி நேரத்தில் நடிக்கின்ற (ஏனெனில் அது பொதுவெளியில், மருத்துவமனையில் அரங்கேறுகிறது) அவர்களிடம் கொஞ்சமேனும் குடும்ப விழுமியங்கள் இருந்திருந்தால் மகளை, மருமகனை, பேரர்களை இன்னும் நன்றாக நடத்தியிருக்கலாம். அவர்களிடம் இருக்கும் பணம் அந்தநேரத்தில் ‘செல்லாத பணம்’. மிக நல்ல நாவல்.
நூல் : செல்லாத பணம்
பிரிவு: நாவல்
ஆசிரியர் : இமையம்
வெளியீடு : க்ரியா பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2017
விலை: ₹ 325
Kindle Edition: