நூல் விமர்சனம்புனைவு

மனாமியங்கள்


மனாமியம் என்ற சொல் அரபிமொழி. இதற்குக் கனவுகள் என்று‌ அர்த்தம்.

இந்நூலின் ஆசிரியர் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற நாவல் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது . இவரின் வாழ்க்கையை ஆவணப்படமாய் எடுத்து 14 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

பெண்களின் மனப் போராட்டங்களை‌ மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது இந்நூல். பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைப் பற்றிய மிகப் பெரிய ஆதங்கமும் ஆவேசமும் நாவல் முழுக்க மெஹர், பர்வீன், சாஜிதா மூலம் வெளிப்படுத்துகிறார்.

மதத்தின் மீதான நம்பிக்கையைக் கண்மூடித்தனமாகப் பெண்கள் மீது மட்டும்  பிரயோகப்படுத்துவது ஆண்களின் அதிகாரப் போக்கைக் காட்டுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வெவ்வேறு சிக்கல்களில் தவிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அந்த வீட்டின் ஆண் அளவுக்கு மீறிய மதத்தின்‌ மீதான நம்பிக்கைகள் அதை தன்‌ தாய், மனைவி, தங்கை, மகள் என இவர்களின் மீது‌ திணிக்க முயல்கிறான். இவ்வூரில் உள்ள பெண்களுக்கும் இதைப் போதிக்கிறான்.

வெளிநாட்டிற்குப்‌ போகும் வரை எல்லோரைப் போல் இயல்பான வாழ்வை வாழ்ந்த ஹசன் அதற்குப்பின் தீவிர மதப்பற்றாளனாய் மாறுகிறான். எப்பொழுதும் எல்லா‌வற்றிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் ஹசன் மனைவி பிள்ளைகளை‌ விட்டு இன்னொரு பெண்ணை‌ மணந்தது அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை. அதற்கு மதத்தைக் காரணம்‌ சொல்லுபவன், அதே மதத்தில் முதல் மனைவி‌ சம்மதம் வேண்டும் என்பதை வசதியாய்‌ மறந்து போகும் வக்கிர புத்தியுள்ளவன், ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானால் மணக்கலாம் என்பது மட்டும் நினைவில் நிற்கிறது.

தங்கையின் வரதட்சணை பாக்கி, கார் வாங்கி‌ தருவதை‌ப்‌ பற்றி தாய்‌ பேச வரதட்சணை‌ தருவதை‌ அல்லா விரும்ப மாட்டார் அதனால் தர மாட்டேன் என்பதும், பர்வீனின் கணவன் தன்னால் மனைவியுடன் வாழ முடியாது என்று‌ தெரிந்தும் தான் ஆண் என்று நிரூபிக்கும் முயற்சியில் அவளை வரதட்சணையைக் காட்டி துரத்தி விடுவது ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டம். ஆனால் பெண்ணின் நிலை பேடியாய் இருந்தாலும் வாழாவெட்டியாய் பிறந்த வீட்டில் இருப்பதை விட இவனுடன் இங்கேயே காலம் தள்ள நினைக்கும் பேரவலம்.  சமூகத்தின் கொடிய நாக்கை விட இது மேல் என்கிற எண்ணம்.

பர்வீனின் சகோதரனை‌ எதிர்த்து தனியாய் வாழும் பர்வீன் துணிச்சலாய் வெளியில் சென்று‌ கிராம பெண்களுக்காய் குழுவை நடத்துவது சரியான சவுக்கடி ஹசனுக்கு. திடீரென்று ‌வெளியுலகைச்‌ சந்திக்கும் பர்வீன் சுதந்திர பறவையாய் உணர்கிறாள். அவளைப் பற்றி பேசுவதையெல்லாம் புறம் தள்ளி கிராம மக்களுக்காய் சுய உதவிக் குழுவை நடத்த ஏற்பாடு‌ செய்வதும், சுய தொழில் பயிற்சிக்காகச் சந்திக்கும் அதிகாரியின் மேல் எழும் உணர்வு காதலா, நிறைவேறா காமத்தின் வெளிப்பாடா எனத் தவிக்கும் அவளின் உடலின் இயற்கை உணர்ச்சிகளை வெல்ல முடியாமல் படும் அவஸ்தையை மிகவும் இயல்பாகப் பதிவு செய்கிறார்.

சகோதரனின் கட்டுப்பாடுகள்‌ மூச்சு திணறடிப்பதைப்‌ போன்று உள்ளது. குழந்தை திருமணத்தை நிறுத்திய பர்வீனை எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் ஹசனின் கோபம் அவளிடம் பேசுவதைத் தவிர்க்கிறான். தாயின் ஓயாத அழுகையும் புலம்பலும் கணவனைப் பழிவாங்கும் வெறியுடனும் மறு விவாகம் செய்யும் மெஹர் குழந்தைகள் மீதான உரிமையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

மெஹருன்னிசாவின் துணிச்சலான முடிவை ஜீரணிக்க முடியாத ஹசனின் “பொட்டச்சிக்கு இந்த‌ திமிரா” என்ற ஆத்திரமும், அவன் செய்த தவறை மதத்தின் பெயரால் நியாயப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கென்னவோ மெஹருன்னிசாவின் மறுமணத்தை வெற்றியாய் காட்டியிருந்தால் ஹசனின் ஆணாதிக்க திமிரை அடித்த மகிழ்ச்சி கிடைத்திருக்கும்.

எல்லா மத நம்பிக்கையையும் ஆண்களுக்குச் சாதகமாகவே பேசும் ஹசன் மறு விவாகத்திற்குப்‌ பின் அவன் மீதான மரியாதை‌ குறைவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் மறுக்கிறான்.
தாய் தந்தையின் பழி வாங்கும் போக்கால் குழந்தைகளின் மனப்போராட்டம் அவர்களின் தாய் தந்தையைப் பற்றிய பயமும், தாயின்‌இரண்டாம் கல்யாணமும் அவர்களைப் பீதிக்கு உள்ளாக்குகிறது.

பிள்ளைகளை ஒருவரிடம் இருந்து இன்னொருவர் பிடித்துக் கொள்ளும் போட்டியில் பிள்ளைகளின் மனதில் தவறான பிம்பத்தை ஏற்படுத்த நினைப்பது ஹசனின் ஒழுக்கம் எங்கே போனது.
70 வயது ஆமீனாவின் மனதைத் திறப்பது தான் இந்நாவலின் சிறப்பான இடம் என்று சொல்லலாம். பிறவிக் குருடான ஆமினாவின் ஒலிகளை ஈர்த்துக் கொள்ளும் செவியும், வாசனைகளை‌ நுகர்ந்து அதை வைத்தே கிழமைகளையும்‌ நேரத்தையும் அறிந்து கொள்ளும் திறமையும் தனக்குள்ளே உருவங்களை உருவாக்கி இது சிவாஜி, இது எம் .ஜி.ஆர் என்று மற்றவர்களின் வர்ணனையில் இவளின் உருவங்களை வடிவமைத்தல், பதின்ம வயதில் ஆணின் ஸ்பரிசத்திற்காய் ஏங்கியதும் அதை நாவலில் வெளிப்படுத்தும் இடம் பர்வீனுக்கான ஆதரவாய் தெரிகிறது. பர்வீனின் நிலையறிந்து வெம்புகிறார். இதே வயதில் தான் அனுபவித்த உடல் ரீதியான ஏக்கங்களை நினைத்து அவளுக்கு ஆறுதல் தருகிறார்.

குடும்ப கௌரவம், மானம் மரியாதையைத்‌ தாண்டி‌ பர்வீனை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆமினா, ஆனால் எல்லை மீறாமல் பார்த்துக் கொள் என்பதில் அவரின் கட்டுப்பாடுகளின் தளர்வும் பர்வீனை நெகிழ்ச்சியுறச் செய்கிறது.

சாஜிதா தந்தையின் ஆதரவில் படித்தாலும் தன் குடும்பம் உடைந்ததையும் தாய் தந்தையின் அருகாமைக்காய் ஏங்குவதும்,குழந்தைகளின் நிலையை எண்ணி சுபைதா மகனின் மேல்‌ ஆத்திரத்தை‌ வெளிப்படுத்துகிறார். மகனின் தவறை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், விட்டுத் தரவும் முடியாமல் தவிக்கும் சுபைதா எக்காரணம் கொண்டும் இரண்டாம் மனைவி தன் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதில் உறுதியாய்‌ நிற்பது முதல் மருமகளின் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது.

தான் நினைத்த பாடத்தைப் படிக்க முடியாமல் போனதும் அத்தை பர்வீனின் ஆதரவில் போய் விடுகிறாள்.அப்பா தன் படிப்பை நிறுத்தி விடுவாரோ என்ற அச்சத்துடனே படிக்கும் சாஜிதாவின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. அந்த வயதிற்கே‌ உரிய எதையும் தன்னாலும் தம்பியாலும் அனுபவிக்க முடியாமல் போனதற்குக் காரணமான இரண்டாவது மனைவி மீது கோபமும் வெறுப்பும் வருகிறது. ஆனால் தந்தைக்குப்‌ பயந்து வெளிக்காட்ட முடியாமல் தவித்து உள்ளுக்குள் புழுங்கும் பிஞ்சு மனம்.

கடைசியில் மதரஸாவில் படித்த பெண் யாருடனோ போய் விட்டாள் என்பதற்காக இவளையும் படிப்பை விட்டு வரச் சொல்லும் மெஹருன்னிசாவின் அழுகை சாஜிதாவை பயம் கொள்ள வைக்கிறது.

கருப்பு பர்தாவுக்குள் கனன்று கொண்டிருக்கும் சிறு‌நெருப்பு பொறிகளைப் பதிவு செய்திருக்கிறார் சலமா.

சுகந்தி

நூல் தகவல்:

நூல் : மனாமியங்கள்

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : சல்மா

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2016

விலை: ₹ 290

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *