இந்த தலைப்பைப் பார்த்த போது சவரம் செய்பவரின் வாழ்வியல் மட்டும் இருக்கும் என்ற என் நினைப்பைச் சுக்கு நூறாக்கி விட்டது இந்த நூல். நாவல் தளத்தில் ஒரு புதிய பரிமாணத்தைத் தந்து செல்கிறது. நாவல் பல சமூக பிரச்சனைகளை ஆங்காங்கே பதிவு செய்து இருப்பது அதிக சுவாரசியத்தைத் தருகிறது.
“ஆனந்தன் முருகையா” சிறு வயது முதல் தான் கடந்து வந்த வாழ்க்கையில் சவரம் செய்பவர்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்து இருக்கிறார். சிறுவயதில் மதுரையில் செல்வம் அண்ணன். பள்ளிப் பருவத்தில் முத்தையா தாத்தா. கல்லூரி பருவத்தில் மாணிக் பாஷா, தன் கல்லூரி மாணவன் சேரன், பணிக்குச் சென்ற பிறகு டெல்லியில் சந்தித்த மோகன் தாகூர், பின்பு .நாகண்ணா. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் வாழ்வியலோடு சேர்ந்து தொழில் செய்யும் போது, நிறையப் பழக்க வழக்கங்கள் நாவிதர்களுக்கே கிடைக்கிறது. அந்த அன்பில், அவர்கள் தரும் அன்பும் பாசமும் இந்த நாவலில் நிறைந்து வழிகிறது.
இதோ கதைக்குள் புகுவோம். தன்னோடு வேலை பார்க்கும் “கேத்தரின்” என்ற வெளிநாட்டுப் பெண்ணிடம் அவர் வியந்து பார்க்கும் இடங்களில் அப்படி ஒரு நட்பு வேண்டி மனம் ரசிக்கிறது. கேத்தரின் “பெண்கள்” அடிமைகளாய் வாழ்வதையும், அவர்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்குத் தீர்வு வேண்டிப் போராடத் தான் வேண்டும் என்று சொல்லும் கேத்தரின் வீரம் மிகக் கவர்ந்தது. திருநம்பிகள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்றும், அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும், அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் விதமாகக் கதையில் ஒரு CEO ஆகக் கதாபாத்திரம் அமைத்து ஆசிரியர் அழகு பார்த்து இருக்கிறார்.
இந்த சமயத்தில் கண்ணில் சிறிது பிரச்சனை ஏற்படுகிறது ஆனந்த்துக்கு. மருத்துவரின் ஆலோசனைப்படி மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை முடிந்த அளவுக்குத் தொட வேண்டாம் என்று உத்தரவு இடுகிறார். இந்த நாவலுக்கு மத்தியில் இது போன்ற தொழில்நுட்பத்தைக் குறைந்த அளவு தான் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புகுத்திய விதம் அற்புதம்.
வாஷிங்டன்னில் வேலை முடிந்து டெல்லிக்கு விமானம் ஏறுகிறார். அப்போது பழைய நினைவுகளில் அவரின் நினைவுகள் மிதந்திடச் செல்வம் செல்வம் அண்ணன் மரத்தடியில் முடிவெட்டும் முறையும், அந்த குளிர்ந்த காற்றும் சில்லென்று தெறிக்கும் தண்ணீரும், சிறிது மதுவின் வாடையும் கலந்த அனுபவங்கள்.
முத்தையா தாத்தாவின் கடையில் பள்ளி இடைவேளைகளில் வந்து தலை வாருவதும், கிருதா ஒதுக்குவதும், அவர் செய்யும் சமரச சண்டைகளும், பெற்றோர்களுக்கு புரிய வைக்கும் தன்மையும் ஆனந்த் அவர்களை இன்னும் லேசாக நினைவுகள் பறக்க வைத்தது.
மாணிக் பாஷாவின் துடுக்குத்தனமான பேச்சும், அந்த பேச்சின் ஊடாக முடி கொட்டுதலுக்கான காரணத்தையும் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற முறைகளையும் அசை போடும் பொழுது நமக்கே சில வழிகளை மாணிக் பாஷா சொன்ன விதம் ஆனந்தனுக்குப் பிடிக்காமலா போகும்.
தன்னோடு படித்த சக மாணவனான சேரன் இலவசமாய் முடி வெட்டுதலும், அந்த வெட்டுதலோடு அவனின் நட்போடு ஏற்பட்ட அதீத ஒட்டுதல் அவனை மறக்கவா செய்திருக்கும்.
நாகண்ணா தனக்குத் திருமலையில் அங்கீகாரம் கிடைக்காது போராடியதும், தனக்கென்று தனிக் கடை வைத்து மிகப்பெரிய உயரத்தை அடைந்ததும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டதும் புரட்சி செய்த நினைவுகள் ஆனந்தை அசைத்துப் பார்த்தது.
மோகன் தாகூரின் தன்மையான பேச்சும் நினைவில் நீச்சல் அடித்தது.
சவரம் செய்பவர்கள் முன் காலத்தில் மருத்துவமும் பார்த்தார்கள் என்ற செய்தியையும் புகுத்தி இருப்பது சிறப்பு. தனது கற்பனையில் கனவாக இந்த 5 பேரும் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்ற பெரும் கற்பனையே இந்த புத்தகத்தின் மிகச் சிறந்த பாகமும் மற்றும் சமூகத்தைப் பார்த்துக் கேட்டு இருக்கும் கேள்வியும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
நவநாகரீக கடைகளால் பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்த தொழிலைச் செம்மையாகச் செய்யும் நிலை இருப்பதை மிகச்சிறந்த எழுத்துக்களால் பதிவு செய்திருக்கிறார். ராஜா போல் வாழ்ந்த அனைவரும் இன்று ஏதோ ஒரு கடையில் ஒரு முதலாளிக்குக் கீழ் பணி புரிவதைக் கண்டு காலத்தின் ஓட்டத்தில் குலத்தொழிலை விட்டு ஓடும் அவல நிலையைப் பதிவு செய்து இருப்பது அவர்களின் மீதும் குலத்தொழில் செய்பவர்கள் மீதும் ஒரு மதிப்பைத் தந்து செல்கிறது.
ஒரு IAS அதிகாரியின் நூல் இப்படி ஒரு தளத்தில் எழுதி இருப்பது என்னைப் போன்றவர்களை உற்சாகப் படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
வாழ்த்துக்கள் ஐயா !
– சிவமணி
நூல் : |
சலூன் |
பிரிவு : | நாவல் |
ஆசிரியர்: | க. வீரபாண்டியன் |
வெளியீடு: | யாவரும் பதிப்பகம் |
வெளியான ஆண்டு | 2018 |
பக்கங்கள் : | 152 |
விலை : | ₹ 175 |