வாழ்க்கை நல்மனம் கொண்டவர்கள் சக மனிதர்களைச் சேமிக்கிற வங்கிக் கணக்காகவே எடுத்துக் கொள்ளப் படவேண்டியது. நண்பர் விஜய் மகேந்திரன் மனிதர்களைச் சம்பாதிப்பதில் கில்லாடி. அதற்கான அணுகுமுறையை அவரிடமிருந்து எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டியது. அவருக்குள் இருவிதப் பேனாத் திறமை இருக்கக் கூடும்.ஒரு சிறந்த கதைசொல்லியாகவும் கச்சிதமாக எழுத விழைந்திடும் பத்திரிகைக்காரராகவும் அவரைப் பார்க்க இயலும். இலக்கிய வாதமும் ஜர்னலிசமும் பாய்ந்து திரும்புவதற்கான இருவேறு கூடுகள். அந்த முயற்சியில் எல்லோரும் வென்றுவிடுவதில்லை.விஜய் மகேந்திரன் ஒரு தேர்ந்த ரசவாதியின் கதாமொழியும் கட்டுரைகளுக்குத் தேவையான உலர்ந்த மொழியும் வசப்பட்டவர். தமிழில் இப்படி இரண்டையும் பிரித்துச் செய்பவர்கள் குறைவானவர்களே.அந்த வகையில் விஜய் மகேந்திரனது அ-புனைவு எழுத்துகள் வாசிப்பவர்களை இலகுவான அணுகுமுறையோடு கை பற்றி அழைத்துச் சென்று கற்பித்துத் தருகிற பாங்குடன் இயங்குபவை.
முழுமையான பத்தி எழுத்து என்று இவரது எழுத்தைச் சுட்டமுடிகிறது விட்டேற்றி இலக்கியமாகவே தமிழில் பத்தி எழுத்துகள் வறண்டு போயிருக்கிற காலமாகத் தற்காலத்தைக் காண வேண்டி இருக்கிறது. பத்தி எழுதுவோரது பட்டியலில் என் மனதுக்கு இணக்கமானவர்களாக மகரம் தேவன் இந்திரா பார்த்தசாரதி அசோகமித்திரன் சுஜாதா சாருநிவேதிதா எனச் சொற்பமானவர்களையே உணர்கிறேன்.மனுஷ்ய புத்திரன் எழுதிய நிழல்கள் நடந்த பாதை 2000ஆவது ஆண்டுக்கப்பால் எழுதப்பட்ட மிகச் சிறப்பான பத்தித் தொகைகளில் ஒன்று.பத்தி எழுத்துக்கான வரையறைகளுக்கு உட்பட்டுச் செறிவான பத்தி எழுத்தைத் தரக்கூடியவராக விஜய் மகேந்திரனைச் சொல்வதற்குரிய சான்றாகவே சாமானிய மனிதனின் எதிர்க்குரல் தொகுதி திகழ்கிறது.
வாசிக்கிறவர்களோடு எந்த நிரடலுமின்றிப் பயண கால நண்பன் ஒருவனைப் போன்ற உலர்ந்த உறுதியான எழுத்து விஜய் மகேந்திரனுடையது. மனிதர்கள் நிகழ்வுகள் காலம் ஆகியவற்றை முன்பின்னாக்கிக் கலைத்துப் போடுகிற ஞாபக ஆட்டமாகவே தன் மனதிலிருந்து எடுத்தெழுதுகிற பாணி நன்றாகக் கைகூடி இருக்கிறது. இந்த நூலோடு நின்றுவிடாமல் இன்னும் தன் தொகுப்பெழுத்தைத் தொடர்ந்து சக எழுத்தாளர்களுக்கான எழுத்தாகவும் இவ்வகை தொகைகளை விஜய் அளிக்க வேண்டும்.தான் வாழ்கிற காலத்தின் மீது மாபெரும் வாஞ்சையுடனே தீர்மானம் கொண்டு எழுதப்படுகையில் பத்தி எழுத்துக்கள் புனைவின் அதே விலகாத பிரமிப்புடனும் குன்றாத வெளிச்சத்துடனும் பின் வருகிற காலங்களுக்கும் எடுத்தெழுதப்படுவது நிகழும். இந்த நூலுக்கு அப்படியான தகுதி நிச்சயமாக இருக்கிறது.
குமரகுருபரன் மற்றும் ராம்பால் ஆகிய இருவரைப் பற்றிய அவர்கள் மறைவிற்குப் பின்னலான விஜய் மகேந்திரனின் கட்டுரைகள் யதார்த்தமானவை. எவ்விதமான போலித்தனமோ பாவனைகளோ அரிதாரப் பூச்சுக்களோ இல்லாமல் மனதிலிருந்து நேரே நிகழ்ந்திருப்பது கண்ணீர் துளிர்க்கச் செய்கிறது. குமரகுருபரனோடு நெருக்கமாய்ப் பழகியவன் எனும் அடிப்படையில் ஒரு மனிதனின் நீங்குதலுக்கு அப்பாலான ஞாபகங்களைப் பிரித்துக் கொள்கிற அவரவர்த் தன்மையை விஜய்யின் எழுத்துக்களிலும் என்னால் உணரமுடிகிறது.
விஜய்யின் எழுத்து முறை வடிவ நேர்த்தி கட்டுரையின் துவக்கத்தில் காட்டுகிற துல்லியம் மொழியின் அனாயாசம் எல்லாவற்றையும் தற்கால தரிசனத்தின் விள்ளல்களாகவே இக்கட்டுரைகள் விளங்குகின்றன.பழமையோ பம்மாத்தோ சிறிதும் இன்றிப் புத்தம் புதிய திரட்டெனவே விரிகிறது இந்த நூல். தன் வாழ்வில் கடந்து சென்ற மனிதர்கள் கணங்கள் ஆகியவற்றைக் கொண்டு உன்னதமான உணர்வுச் சித்திரங்களை வடித்திருக்கிற விஜய் மகேந்திரனின் இந்த நூல் சலிப்பற்ற கதைகேட்டல் அனுபவமாகவே வாசிப்பவர்களின் மனதில் நிரந்தரமான ஓரிடத்தைக் கோருபவை. தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்பது பொன்மொழி மாத்திரமல்ல அது பேருண்மை. இந்த நூல் நதி நெடுந்தொலைவு செல்லும்.
வாழ்தல் இனிது
அன்போடு
– ஆத்மார்த்தி
நூல்: | சாமானிய மனிதனின் எதிர்க்குரல் |
பிரிவு : | கட்டுரைகள் |
தொகுப்பாசிரியர்: | விஜய் மகேந்திரன் |
வெளியீடு: | புலம் வெளியீடு |
வெளியான ஆண்டு : | 2021 ( முன்றாம் பதிப்பு) |
பக்கங்கள் : | 120 |
விலை : | ₹ 130 |
தொடர்புக்கு: | 98406 03499 |
Kindle Edition : |
நூலாசிரியர் குறித்து:
விஜய் மகேந்திரன்
நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ''இருள் விலகும் கதைகள்'' என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.
அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ''நகரத்திற்கு வெளியே'' இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ''நகரத்திற்கு வெளியே'' பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ''படி''அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ''ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ''புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ''சாமானிய மனிதனின் எதிர்குரல்'' இவரது நாவல் ''ஊடுருவல்'' ஆகியனவும் வெளிவந்துள்ளது.
இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ''அசோகமித்திரன் படைப்பூக்க விருது ''கொடுத்துள்ளது.