ஆசிரியர் குறிப்பு:

புதுக்கோட்டையை பிறப்பிடமாகவும், அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்டவர். தமிழ்சாரல் இதழின் ஆசிரியர். சங்க இலக்கியத்தை சமகாலப் பார்வையில் பார்க்கும் கட்டுரைகள் அடங்கிய இதுவே இவரது முதல் நூல்.


ங்ககாலப் பாடல்களைப் படிப்பது ஒரு பயிற்சி. ஆங்கிலம் தெரியாதவர்கள் தொடர்ந்து Hindu நாளிதழ் படித்து ஆங்கிலம் அவர்கள் அறியாது வளர்வது போல. சங்கப்பாடல்களில் பிரமிப்பை ஏற்படுத்தும் பல காட்சிகள் வந்து போகும். கல்லில் மோதினால் தோன்றி மறையும் நுரையை போல் மறைவேன் அவனில்லாவிடில், பாரி மகளிரின் சோகம் என்பது போல் எத்தனை நூறு காட்சிகள்! சிலவற்றை எடுத்து சமகாலத்துடன் பொருத்தி இனிப்புத் தடவிய குளிகைகளாய்க் கொடுக்கிறார் ராஜி வாஞ்சி.

முதலாவது நன்கணியார் பாடல்.  இருவேறுலகம் இது.  இந்தப்பாடலின் கருத்தையே எளிமையாகக் கொடுத்திருப்பார் கண்ணதாசன். “செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குபொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி”. இறங்கல் பறையது நெய்தல் கறங்கிக்கிடக்க, அல்லவை அகற்றி நல்லன கண்டு என்ற சங்கப்பாடலை எளிமை செய்திருக்கும் இவரது கவிதையும் நன்றாக இருக்கிறது.

கதம்பசாதம், கூட்டாஞ்சோறு முதலியவை நம்மிடையே காலங்காலமாய் இருந்தவை. பெரும்பாணாற்றுப் படையில் இருந்து பாடல் எடுத்து, பிரியாணியின் முன்னோடி இது என்கிறார்.

நீளிடைக்கங்குல் எல்லாவற்றிற்கும் பயப்படும் பெண், நெஞ்சத்தைத் தொலைக்கையில் பயத்தையும் சேர்த்துத் தொலைக்கும் கட்டுரை. 

உடன்போக்கு பற்றிய கட்டுரை அன்றைய சூழலை இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்க்கிறது. செம்புலப்பெயர் நீரும் கூட இப்போது மீரா எழுதியது போல் வாசுதேவநல்லூரா என்று பார்த்துத்தான் கலக்கிறது.

ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல் என்ற கலித்தொகைப் பாடலை இங்கு நடந்த சம்பவத்துடன் பேசுகிறார். நான் இன்றும் மறக்காது நினைவில் வைத்திருக்கும் வரி அடுத்தவரி:  போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை.

பன்னிரண்டு கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. வெளிநாட்டில், வேறு சூழலில் வாழ்வோர் எழுதுகையில் Halloween ஐயும் சங்க இலக்கியப்பாடல்களில் வரும் பேய்களையும் ஒப்பிடமுடிகிறது. போகஹண்டஸ்ஸூடன் சங்ககாலத்தில் கட்டாயப்படுத்தி நடந்த மணங்களைப் பேச முடிகிறது. மன்னரின் மகள்களும் நாட்டைப் பாதுகாக்க விருப்பமில்லாது செய்த மணங்கள் இங்கே பல்லாயிரம். டெக்ஸாஸில் பயணம் செய்கையில், பென்சில்வேனியாவைப் பேசுகையில் தூரங்களையும் காலங்களையும் கடந்து பயணிக்க முடிகிறது. 

இவருக்கு எழுத்தும், சிந்தனையோட்டமும் சரளமாக இருக்கின்றன.  வால்பாறை சம்பவம் ஒன்றைப் பேசுகையில் சட்டென்று சிந்தனை ஐங்குறு நூறுக்குத் தாவுகிறது. Associative Memory. திருக்குறளைக்கூட சினிமாப்பாடல் வரிகளுடன் தொடர்புபடுத்திப் பேசினால் எளிதாக மனதில் தங்கும். இந்தக் கட்டுரைகளில் இவர் சில இடங்களில் சங்கப்பாடல்களில்  முழுப்பாடலையும் கூட எடுக்காது ஒரிருவரிகளுடன் நடப்பு விசயங்களைப் பேசுவது மேற்சொன்ன அதே உத்தி. பலன் அளித்திருப்பதாகவே நம்புகிறேன்.

சங்கச்சித்திரங்கள் மட்டுமன்றி குறுக்கு கலாச்சாரத்தின் விளைவுகள் போல இவருக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கின்றன. ஒரே அமர்வில் படிக்கக்கூடிய சிறியநூல் இது. நிறைய எழுத வேண்டும். பாராட்டுக்கள்.

 

நூல் தகவல்:
நூல் : நீளிடைக் கங்குல் – சங்க காலமும் சமகாலமும்

பிரிவு: சங்க இலக்கியக் கட்டுரைகள்

ஆசிரியர் : ராஜி வாஞ்சி

வெளியீடு : படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2020

விலை: ₹ 100

நூல் வாங்க:  097908 21981