யாவரும் பதிப்பகம் வெளியிட்ட எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் “பாகன்” நாவல் குறித்து ‘விமர்சனம்’ இணையதளத்தின் சிறப்பு விமர்சனக் குழுவிலுள்ள சாய் வைஷ்ணவி எழுதிய விமர்சனம் இது.
அவசர கதியில் நம்மை நாமே தொழில்நுட்பத்திற்குள் தொலைத்துக்கொண்டு நிரந்தரமற்ற பொருட்களைத் தேடி நாளும் ஓடுகிறோம். இந்த நிலையில் உறவுகளை நினைப்பதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் நாம் பெற்றவர்களையும் , நம்மைப் பெற்றவர்களையும் எந்த நிலையிலும் அரவணைத்து வாழ்வதென்பது எட்டாக்கனியாகி விட்டது. மொத்த ஜனத்தொகையில் பாதி மக்கள் தங்கள் பெற்றோரை ஏதேதோ காரணங்களுக்காகப் பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஆண் பெண் விதிவிலக்கல்ல. இவர்களிடம் , அப்பா பற்றிப் பேசச் சொன்னால் பொதுவாகப் பெண்கள் மணிக்கணக்கில் பேசுவர். ஆனால் ஆண்களிடமிருந்து ஒன்றிரண்டு வார்த்தைகளை உதிர்ப்பதே பெரும் விஷயமாக இருக்கும். அப்படிப்பட்ட ஆண்கள் தான் மனதில் தங்கள் தந்தைக்காக அதிகப்படியான இடம் தந்திருப்பார்கள்.
அவ்வகையான ஒரு மகனின் கதைதான் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாகன். மிகவும் இளம் எழுத்தாளரான கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கதையும் சுற்றிச் சுற்றி சேலத்தில் தான் நடக்கிறது. அதனால் தான் என்னவோ நாவல் படிக்கும் போது பக்கத்து வீட்டு தம்பி திண்ணையில் நம் அருகில் அமர்ந்து கதை சொல்வதைப் போல இருந்தது. இந்த கதைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தோன்றியது. கதையில் வரும் ஊர், பெயர் , கதாபாத்திரங்களின் மனநிலை எல்லாம் என்னைச் சுற்றியே நடந்ததாகத் தோன்றியது. இந்நாவல் படிக்கும் அனைவருக்கும் ஏற்படும் சகஜமான மனநிலை தான்.
பொதுவாக நினைத்ததைச் சொற்களாக மாற்றம் செய்து அதை எழுத்துகளாகக் கொணரும் போது அது ஆதி சிந்தனைக்கு முற்றிலும் மாறாக இருக்கும். ஆனால் ஒரு சில எழுத்தாளர்களுக்கு நினைத்ததை அசலாக எழுதும் அசாத்திய திறன் இருக்கும். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவ்வகையறா. ஒரு அப்பாவின் இறப்பில் தொடங்கும் கதையை மகனின் வாழ்க்கைக்கான அர்த்தம் உணரும் அத்தருணத்தில் நிறைவு செய்திருப்பார். பக்கத்து வீட்டு அன்பு போல அன்பான மனிதர்கள் நம்மைச் சுற்றியும் இருந்தால் வாழ்வும் வாழ்வுக்கப்பால் இறப்பும் கூட நிம்மதியாக இருக்கும் எனத்தோன்றும்.
ஆண் சமையல் செய்வதெல்லாம் ஒரு குற்றமா?அதற்கெல்லாம் ஒரு குடும்பம் சிதைந்து நாசமாகுமா ? என்று கேள்வி எழலாம். அதற்கான விளக்கத்தையும் தெளிவாகக் கதாபாத்திரங்களே விளக்கி விடுகிறது. மகன் இருப்பு பற்றியும் மனைவி தங்கியிருக்கும் இடம் பற்றியும் தெரிந்தும் கடைசிக் காலங்களில் அவர்களோடு இணைந்து கொள்ளாமல் அப்படி என்ன இவருக்குப் பிடிவாதம் என்று செல்வத்தின் மேல் கோபம் வந்தால் தவறில்லை. அது அவர் சுபாவம். உண்மையில் இது போன்ற நிலையில் தான் பெரும்பாலான முதியவர்கள் இறுதிக் காலங்களில் தனித்து விடப்படுகின்றனர். எத்தனை சொத்து, சுகங்கள் இருந்து என்ன பிரயோஜனம்? ஏன் என்று கேட்க உடன் மனிதர்கள் இல்லாத வாழ்வு வெகு விரைவில் கசந்து போகிறதல்லவா?
எந்த இடத்திலும் குழப்பம் ஏற்படுவதாக இல்லை. கதை உள்ளங்கை அமுது போலத் தெளிவாக இனிக்கிறது. கூடவே காலத்தின் கசப்பும் சேர்ந்துகொள்கிறது. கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கண்முன்னே கற்பனையில் பாவனை செய்து சண்டையிடுகின்றன. அவைகள் பேசிக்கொள்ளும் வசனங்கள் யாவும் ஆழ் மனதில் அழுந்த பதிந்து சொல்ல வந்ததை நம்முள் லாவகமாகப் புதைத்துப் போகின்றன. செல்வம் அப்படி இறந்திருக்கக்கூடாது என மனம் தவித்தது. இறந்தும் கேட்பாரின்றி கிடந்திருக்கக்கூடாது. பிரேமா செல்வத்தை அனுசரித்திருக்க வேண்டும். கஜேந்திரன் அப்பாவுடன் இருந்திருக்க வேண்டும். எல்லாம் நடந்து விட்டது. அவரவர் விதி என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான். கதை படித்து முடித்த சில நாட்களுக்கு அதன் தாக்கம் நம் தனிமையையும் ஆட்கொண்டிருக்கும்.
ஒரு மனிதனுக்கு எப்போதாவது தனிமை அத்தியாவசிய தேவைதான். ஆனால் அதுவே வாழ்க்கை ஆகிப் போனால்? படிக்கும் காலத்தில் ஏதோ ஒரு வெறுப்பில் அப்பாவின் ஓய்வூதிய பணத்தைத் திருடிக்கொண்டு வெளியூர் சென்று நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா? இடைவிட்ட படிப்பே தொழிலையும் பாதிக்க இடையில் பார்த்து வந்த டெலிவரி என்கிற தொழிலை கீழ்த்தரமாகப் பார்க்கும் மனிதர்களின் மத்தியில் வாழ்க்கை தினம் தினம் நரகம்தான்.கணவனின் ஆசைகளுக்கு சமூகத்தைக் காரணம் காட்டி முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருந்தால் அவன் எல்லை தாண்டும் பட்சத்தில் அங்கு பெரும் பிரளயம் வெடித்து வாழ்வே மாயமாகிப் போனதென்ன?
கஜேந்திரன் விரும்பும் பெண் வைஷ்ணவி. அவள் சொல்வாள் “பொதுவாகப் பெண் பிள்ளைங்க தான் கட்டிக்க போற கணவன்கிட்ட அப்பாவோட குணம் தேடுவாங்க. எனக்கு தெரிஞ்சு நீ மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்குற பொண்ணுகிட்ட அப்பாவோட குணம் எதிர்பாக்குற” என்று இத்தனை பிரியமுள்ள அப்பாவை ஒருமுறையாவது சந்தித்திருக்க வேண்டும் என்று கஜாவை போலவே நம் மனமும் ஏங்கும். கஜேந்திரன் இறுதிச் சடங்கு முடித்துவிட்டு ஊர் திரும்ப எண்ணும்போது கையில் பணம் இருக்காது. வீட்டில் துழாவும் போது அப்பாவின் சட்டை பாக்கெட்டில் கட்டாகப் பணமும் கடிதமும் இருக்கும். நாவலின் இறுதிக் கட்டத்தில் வரும் அக்கடிதம் உச்சம். அவன் வெடித்து அழுவது நம் காதில் சீராகக் கேட்கும். அவனோடு ஒன்றரை ஆண்டுகள் அவனுக்கே தெரியாமல் அவன் தந்தை வாழ்ந்து அவனுடைய எல்லா நடவடிக்கைகளையும் கவனித்திருக்கிறார். இதைவிட அவனுடைய குற்ற உணர்வைத் தூண்டி விட வேறென்ன வேண்டும்?
ஒரு கதை படிக்கும் போது ஏற்படும் தாக்கம் அதைப் படித்து முடித்துக் குறைந்தது சில நாட்களுக்காவது இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். அப்படிப்பட்ட கதைகளால் தான் மனதைக் கீறி அதைக் காயமாக்கவும் அதே , காயங்களை மருந்திட்டுக் குணமாக்கவும் முடியும். அதை இந்நாவல் சிறப்பாக செய்துள்ளது. பிள்ளைகளின் வாழ்வில் தந்தையானவர் பாகன் போல அவர்களை வழிநடத்தி கொண்டு செல்கிறார். கதைக்கேற்ற தலைப்பு. தலைப்புக்கேற்ற கதை. குடும்ப கதைகளை விரும்புவோருக்குப் பாகன் விருந்து.
நூல் : பாகன்
வகை : நாவல்
ஆசிரியர் : கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு : யாவரும் பதிப்பகம்
வெளியான ஆண்டு: அக்டோபர் 2021
பக்கங்கள் : 128
விலை: ₹ 155
நூலைப் பெற : Be4Books
நூலாசிரியர் குறித்து:
கிருஷ்ணமூர்த்தி 1994இல் சேலத்தில் பிறந்தவர். விமானப் பொறியியல் பட்டதாரி. இலக்கிய வாசகர். 2012 முதல் எழுதி வருகிறார். பிருஹன்னளை, அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் ஆகிய நாவல்களும், சாத்தானின் சதைத் துணுக்கு, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.
பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)