கங்கை என்று கானலை காட்டும்.. காதல்
கானல் என்று கங்கை காட்டும்..

இந்த பாடல் வரிகள்தான், எழுத்தாளர் தி. ஜா அவர்களுடைய “அன்பே ஆரமுதே” புதினத்துடைய one line story.

இரண்டு காதல் கதைகள்.ஒன்று கிட்டதட்ட முப்பதாண்டுகளுக்கு மேல் கானல் நீர் மாதிரி தோன்றி அலைக்கழித்த ஒன்று காதலாக மாறும் கவிதை.

இரண்டாவது பொங்கி பிரவாகமா ஓடுகிற மாதிரி தோன்றி கானலா பொய்த்துப்போகிற கதை.

முதலில் கதை மாந்தர்களை பார்ப்போம்
கதை நாயகன்: அனந்தசாமி
கதாநாயகி : ருக்கு என்கிற ருக்மினி
மற்ற முக்கிய மாந்தர்கள்:
டொக்கி என்கிற குஸுமா
சந்திரா
ரங்கன்

துணை கதா பாத்திரங்கள்
சுப்புசாமி.
அவர் தங்கை நாகம்மாள்.
ருக்குவின் சித்தி அவயம்பாள்.
சினிமா நாயகன் அருண்குமார் என்கிற காசிலிங்கம்.
அவரை அறிமுகம் செய்விக்கற பாகவதர்.
டொக்கியின் தந்தை.

இவர்கள் தவிர கதையின் போக்குக்கு ஏற்றவாறு அங்கங்கே விருந்தினர்களாக சில கதாபாத்திரங்கள் கையாளப்பட்டிருக்கிறார்கள்.

கதை, முக்கியமான ஐந்து கதாபாத்திரங்களை சுற்றிதான் பின்னப்பட்டிருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்திலிருந்து கல்யாணத்தன்று பதினேழு வயது இளைஞனான கதாநாயகன் அனந்தசாமி தப்பித்து ரயிலேறிவிடுகிறார். பதிமூன்று வயது மணப்பெண்ணான ருக்குவை சில நொடிகள் கூட அவர் பார்த்திருக்கவில்லை. மணப்பெண் மீது மட்டுமல்ல, கல்யாண வாழ்க்கையிலேயே அவருக்கு நாட்டமில்ல. அதற்குப்பிறகு அவர் பல இடங்களில் சுற்றி மருத்துவம் கற்றுக்கொள்கிறார். சந்நியாசி ஆகி தீக்ஷையும் பெற்று மக்கள் தொண்டு செய்கிறார்.

கல்யாணப்பெண் ருக்கு அதற்கு பிறகு வேறு திருமணம் எதுவும் செய்துக்கொள்ளாமல் மேற்படிப்பு படித்து டில்லியில் கல்லூரியில் விரிவுரையாளராக பணிசெய்கிறார்.

இவர்கள் இருவரையும் விதி நாகம்மாள் ரூபத்துல வந்து மீண்டும் சந்திக்க வைக்கிறது. அதற்கு பிறகு அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது? அன்றலர்ந்த மலராகவே முப்பதாண்டுகளுக்கு மேலாக தவ வாழ்க்கை வாழ்கிற ருக்கு மீண்டும்  அனந்தசாமியை சந்தித்த பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி பயணிக்கிறது??

இரண்டாவது, நாகம்மாளின் மகள் சந்திராவை, ரங்கன் என்கிற வாலிபன் சுற்றி சுற்றி வந்து அன்பை பற்றிய நம்பிக்கையை விதைக்கிறான். ஒரு புள்ளியில் முன்னறிவிப்போ விளக்கங்களோ ஏதுமின்றி ஒரேயடியாக விலகிவிடுகிறான். அவனை மறக்க முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சந்திரா தடுமாறி தத்தளிக்கிறாள்.

விலகிய ரங்கன் சினிமாவில் நட்சத்திரமாகிவிட துடிக்கும் இளம்பெண் டொக்கி மீது ஆர்வம் கொள்கிறான். அவளை மணந்து கொள்ளவும் விரும்புகிறான்.  தன் எண்ணத்தை அவளிடமும் வெளிப்படுத்துகிறான்.

டொக்கியையும் சந்திராவையும் ரங்கனையும் இணைக்கும் புள்ளியாக அனந்தசாமியும் ருக்குவும் சிக்கி கொள்கிறார்கள். இந்த இடியாப்ப சிக்கலான காதல்கதையில் ரங்கன் யாரை மணக்கப்போகிறான்?

இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடையை ஐநூற்று சொச்சம் பக்கங்களில் தி.ஜா அந்தந்த கதைமாந்தர்களின் நியாயத்தோடு எடுத்துரைக்கிறார்.

பொதுவாவே தி.ஜா கதைகளில் கதை மாந்தர்கள் பற்றிய விவரணைகள் விவரமா இருக்கும். அது நம்முடைய மனக்கண்களில் அந்த கதாபாத்திரங்களை கண்டு காட்சிகளை கற்பனை செய்து கதையோடு ஒன்றி நாமும் ஒரு சாட்சியா மாறிவிட்ட உணர்வை தந்துவிடும்.

அன்பே ஆரமுதேவிலும் கதாபாத்திர விவரணைகளை கதாசிரியர் அற்புதமா செய்திருக்கிறார்.

அனந்தசாமியை பற்றி இப்படி சொல்கிறார்.

மொட்டை தலை. கடுக்கனற்ற காதுகள். நரைத்த கருப்பு, அகலமான உருண்டை முகம். பலகை போன்ற கட்டுமஸ்தான உடல்வாகு. அதை மூச்சை அடக்கி பிராணயாமம் செய்ததனால் விரிந்த மார்பு என்று வர்ணிக்கறார். முழங்கையை மடக்கினால் இரும்பு குண்டு முண்டுகிற புஜங்கள். இருபதாண்டுகள் நடையாய் நடந்து தேய்ந்த பாதங்கள். தென்னங்கீற்றின் அடிமட்டையை போல வலிமை கொண்ட கால்கள். பழுப்பேறிய தட்டுசுற்று வேஷ்டி, மார்பின் குறுக்கே நாலுமுழ துண்டு. கையிலே மருந்து பொட்டலங்கள் அடங்கிய மூட்டை. கண்ணாடி வைக்கிற குடுவை. ஒரு கருப்பு குடை.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான இரண்டு விவரணைகள் அவரை பத்தி இருக்கு. ஒன்று. நிரந்தரமாக மலர்ந்த அவருடைய முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகை. இரண்டாவது அவருடைய அனுபவ அறிவு. வடக்கே ரிஷிகேசம் முதல் தெற்கே அநுராதபுரம் வரை சுற்றித்திரிந்து அவர் பெற்ற அநுபவங்கள். பயண அநுபவங்கள் அவரை விசால பார்வை கொண்டவராக மாற்றி விடுகிறது. அனந்தசாமியின் விசால குணத்தை, அந்த குணம் கொடுக்கிற மலர்ச்சியை அந்த ஒற்றை வரியில் ஒளித்து வைத்து விடுகிறார் தி.ஜா. அனந்தசாமி தீஷை பெற்ற பிறகும் தன் தாயாருக்குரிய பணிவிடைகள் கர்மகாரியங்களை செய்வதை பார்க்கும்போது ஓரளவுக்கு அந்த கதாப்பாத்திரத்தை ஓரளவுக்கு ஆதிசங்கரரை நினைவில் வைத்து படைத்திருப்பாரோ என்று யோசிக்கும்படியாக இருக்கிறது.

அடுத்தது ருக்கு. ருக்மினி ஓரளவுக்கு நன்றாகவே அனந்தசாமியை பார்த்திருக்காங்க. ஆனால் அதை காதல்னு வகைப் படுத்திட முடியாது. ஆனால் தன்னை ஒருத்தர் எந்த காரண காரியமும் சொல்லாம அப்படி கல்யாணத்தன்று விட்டுவிட்டு ஓடி, மற்றவர்களின் இரக்கத்துக்கும் ஏளனத்துக்கும் ஆளாக்கிவிட்டு  போனது அவர்களை அவர்களின் ego வை சுட்டுவிடுகிறது. முப்பது வருஷங்களாக யாராலேயும் மறுக்க முடியாத தகுதிகளோடு தன்னை உருவாக்கிக்கொள்கிறார். தன் தகுதிகளை வளர்த்துக்கொள்கிறார். அனந்தசாமியை மறுபடி சந்திக்க வேண்டும் என ஆழமா விரும்புகிறார். அப்படி சந்திக்கும்போது அவரை கேள்வி கேட்கிற தகுதியோட தான் இருக்க வேண்டும் என தன் வாழ்வை ஒரு தவம் போல வாழ்கிறார். காத்திருக்கும் காலத்தில் இந்த காரணங்கள் நீர்த்துப்போய் விட்டாலும் கூட தவம் குலையாமல்தான் இருக்கிறது.

ஆனால் நேர்ல சந்திக்கும்போது அவர் தன்னை மறுத்து ஓட தன் மீது பிரத்யேகமான காரணங்கள் ஏதுமிருக்கவில்லை என்பதையும், அது முழுக்க முழுக்க அவரோட சுயவிசாரம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு அவங்க ego முழுமையா திருப்தியடைந்து விடுகிறது. அதுவரைக்கும் தகித்துக்கொண்டு இருந்த ego அவர்மேல பக்தியாக காதலாக மாறிவிடுகிறது. தன் வாழ்க்கை போக வேண்டிய திசை அவர்தான் என தீர்மானித்துக் கொள்கிறார். இயல்பாகவே ஒரு சந்நியாசிக்கேத்த சந்நியாசினி தான் அவர் என்று வாசிப்பவர்க்கு  புரிய வைப்பதற்காகவே அவருடைய குணாதிசயங்களை சில இடங்கள்ல தி.ஜா விளக்குகிறார். உதாரணமாக “தன் பொருள், தன் அறைன்னு வைத்துக்கொள்ள தெரியாத பேதபாவம் இல்லாத குணாதிசயம் கொண்டவர் அவர்” என அவரை அவருடன் கூட வேலை செய்கிற மிஸஸ் கங்கூலி ஓரிடத்தில் சொல்வதாக வருகிறது. இது அனந்தசாமிக்காக அவர் வளர்த்துக்கொள்ளும் குணம் அல்ல. அவருடைய இயல்பே அதுதான். அதேபோல் சந்திராவையும், டொக்கியையும், தன்னோட பிற மாணவிகளையும் கூட மகள் போல, தோழி போலவே தான் அவர் பாவிக்கிறார். தான் முதலில் சந்திக்கிற, தன் அன்புக்கு பெரிதும் பாத்திரமாகிற,  சந்திராவுடைய துக்கத்துக்கு மறைமுகக் காரணமாகிற டொக்கிமேலே கூட சந்திரா மேல் வைக்கும் அதே அளவுக்கு பாரபட்சமில்லா அன்பை காட்ட முடிகிறது அவர்களால். இருவர் மேலேயும் அளவுக்கதிகமாக அன்பு வைத்திருந்த போதிலும், இருவரும் தங்கள் வாழ்க்கையில் நடக்கிற உண்மைகளை பிரத்யட்சமாக தெரிந்துகொண்டு சுயமாகவே முடிவெடுக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறாரே தவிர, தனது முடிவுகளை அந்த அன்புக்குரியவர்கள் மீது ஏதாவது ரூபத்தில திணிக்கிற “ஆள்கிறவகை” அன்பாக அவருடையது இருக்கவில்லை.  இதெல்லாம் பெண்களில் அசாதாரண குணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தன் நடத்தை பற்றி பழித்தவன் கூட நல்லாயிருக்க வேண்டும் என விரும்புகிறார். இவை எல்லாவற்றுக்கும் மேல் அனந்தசாமியைப் போலவே மென்மையான உள்ளமும் திண்மையான வைராக்கியமும் உள்ளவராக இருக்கிறார். அவர்கள் இருவரும் பொருத்தமான ஜோடி என்பது வாசிக்கும்போது மனதில் எளிமையாக விழுந்துவிடுகிறது. ஆனாலும் அவர்கள் காலப்போக்கில் கூட லௌகீக வாழ்வில் ஈடுபடுவதாக வாசகர்கள் கற்பனை செய்துவிடக் கூடாது என்பதில் தி.ஜா சரியாக அணை கட்டி விடுகிறார்.

சுப்புசாமியை பற்றி சொல்லும்போது விவரனையில் ஆறடி உயரத்தில் தடித்த தேகத்தோடு பழுத்த முலாம்பழ நிறத்தில் பெரிய பழம்போலவே இருக்கிறார் என சொல்லும்போதே நமக்கு மனசுல picturize ஆகிவிடுகிறது.

வாழ்க்கை முழுதும் ஒருவர் எதையோ துரத்தி கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறார் எனில், அவரை எதுவோ துரத்திக்கொண்டு இருப்பதாகத்தான் அர்த்தம். சுப்புசாமி பணம் ஸம்பாதிக்க ஊர் ஊரா நாடு நாடா சுற்றுகிறார். ஆனால் அப்படி அவரை விரட்டி சுற்ற வைப்பது இளம் வயதில் திட்டமிட்டு ஒரு ரவுடியை அவர் செய்த கொலை. சட்டபூர்வமா அவர் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டாலும் தார்மீக ரீதியில் அவர் நிரந்தரமாக குற்றவுணர்வுக்கு ஆளாகிறார். அதனாலேயே தன் ஒரே மகனை ஆண்டு கணக்கில் பார்க்க முடியாமல் இருப்பதை கூட ஒரு poetic justice ஆக மௌனமாக ஏற்கிறார் என அர்த்தம் செய்துக்கொள்ள தோன்றுகிறது.

தன் தங்கை மகளான சந்திராவுக்கு நேர்ந்த ஏமாற்றமும், ஏமாற்றத்தினால் தன்னை போலவே அவள் ஓரிடத்தில் தரிக்காமல் ஓடிக்கொண்டிருப்பதுவும்  அந்த இளைஞன் ரங்கனை சந்தித்து அவரை பேச வைக்கிறது. ரங்கனுடன் பேசும்போது கடுமையான கோபமும் வெறியும் ஏற்பட்டாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொள்றார். ஏன்? ஒரு முறை தான் உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறை மறுபடியும் செய்துவிடக் கூடாதென்கிற நிதானத்தை காலம் அவருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.  முன்பு செய்த பாவத்துக்குரிய  தண்டனையாக இதுவும் ஆகிவிடுமோ என்கிற பயமும், மிரட்டியோ அடித்தோ அன்பை வாங்க முடியாதென்கிற யதார்த்தம் புரிவதனால் வருகிற கையாலாகாத கோபமும் அவரை செயலிழக்க வைக்கிறது. பணம் பதவி என்கிற விஷயங்களை எளிமையாக கையாள தெரிந்தவர் மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என வருகிறபோது அனந்தசாமியையும் ருக்மினியையும் தான் நாடி ஓடிவர வேண்டியிருக்கிறது.

அதாவது மனதுக்கு பயந்து ஓடி ஒளிகிற யாரும் ஏதோ ஒரு கட்டத்துல “அன்பு” என்கிற ஒன்றை சரணடைவதுதான் விதி என்பதை இதைவிட தெளிவாக சொல்லிவிட முடியுமா? சுப்புசாமியை கட்டி வைக்கிற ஆட்டி, வைக்கிற அன்பு, அவர் சந்திரா மேல வைத்திருக்கற பாசம்.

ரங்கன் – அழகன். ஆனால் தன்னை பத்தி உயர்வா நினைத்துக்கொள்ள காரணம் ஏதும் கிடைக்காதவன். Infact தன்னை பற்றி மிகத் தாழ்ந்த மதிப்பீடுகள் தான் அவன் கொண்டிருக்கிறான். தகாத காரியங்களை செய்பவர்களை என்னதான் சமூகமே காரணகாரியங்களோடு ஏற்றுக்கொண்ட போதும் “தன்னெஞ்சே தன்னை சுடும்” என்கிறது போல அவர்களின் சுயமதிப்பீட்டில் தாழ்ந்து தான் போய்விடுகிறார்கள். அந்த விஷயத்தில் களங்கள் வேறுவேறானாலும் Ideology யில் சுப்புசாமியுடைய நிகழ்கால வார்ப்பாகவே ரங்கன் இருக்கார். படித்த, அதிலும் நல்ல விஷயங்களை தேடி படிக்கிற குணாதிசயம் கொண்டவனாகதான் தி.ஜா அவனை சித்தரிக்கிறார். ஆனால், நியாய தர்மங்களை கற்றவர்களுக்கு, அதை உள்வாங்கிக் கொண்டவர்களுக்கு அவற்றுக்கு எதிரான விஷயங்களை செய்ய நேர்வதால் ஏற்படுகிற குற்றவுணர்வு அவர்களை உயர்ந்த இடங்களுக்கான வழியில் போகவிடாம தடுத்துவிடும் என்பதை இதைவிட அழகாக சொல்லிட முடியுமா? இறைவனிடம் வேண்டி மாம்பழம் வாங்கிய தெய்வப்பெண்மணி காரைக்காலம்மையாரை அவருடைய கணவர் பரமத்ததன் கைவிட்டுவிட்டு ஓடிப்போக எது காரணமாக இருந்ததோ அதுவேதான் சந்திராவை ரங்கன் கைவிடவும் காரணமாக இருக்கிறது. “தகுதிக்கு மீறிய” பொருளை கையாளுகிறபோது வருகிற பயம். தாழ்வுணர்வு. அந்த பயம் மற்றும் தாழ்வுணர்வோடு, ஒருவரோடு ஆயுள் முழுதும் வாழ்வது சாத்தியமில்லை என்ற உண்மையை உணர்ந்துவிட்ட அறிவு, உண்மையில் அந்த பயம் கூட எல்லாருக்கும் வந்துவிடாது. அந்த பொருளுடைய அருமையை உணர முடிந்தவர்களுக்கு மட்டும் தான் வரும். ஆனா ஆக்கபூர்வம் இல்லாத பயம் என்ன செய்யும்? பயந்தவன் எவ்வளவு ஆபத்தானவன் என்கிற யதார்த்தம்… அதையும் எழுத்தாளர் முடிவில் சொல்லிவிடுகிறார்.

டொக்கி ஒரு அழகான புத்திசாலி பெண். இன்னொரு பெண்ணான சந்திராவே வியந்து மனமார பாராட்டும் அழகுடையவள். அவளை வெறுக்க போதுமான காரணம் கொண்ட சந்திரா கூட அவள் மீது வாஞ்சை கொண்டு நட்பு பாராட்டும் அளவுக்கு நற்குணம் உடையவள். ஆனால் வழிதவறிய ஆடு போல அவள் ஒரு தப்பில் சிக்கிக்கொண்டுவிடுகிறாள்.

டொக்கி மேல தப்பே இல்லை என்று சொல்லிட முடியாது. அவள் அறியாமல் தவறு செய்தவள் இல்லை. அவளுக்கு தன் லட்சியம் பற்றிய தெளிவு இருக்கிறது. அதற்கு விலையாக தன் பெண்மையை கொடுக்கிற தவறை அவள் செய்கிறாள். அவள் அறிந்தே செய்கிற தவறுதான் அது. அருண்குமாரும் சரி, ரங்கனும் சரி அனந்தசாமி மேல இருக்கிற மரியாதையினால், அவர் அன்பு வைத்திருக்கிற டொக்கி மீது வெளிப்படையாக குற்றம் சுமத்தவில்லை என்றாலும் இழுத்த இழுப்புக்கு வரக்கூடிய பெண்ணாகத்தான் அவளை அவர்கள் எடை போட்டு வைத்திருக்கிறார்கள். இது டொக்கியுடைய உண்மையான இயல்பா? அல்லது ஒரு பெண் எளிமையாக அணுகக்கூடியவளாக இருந்தால் இந்த ஆண் சமூகம் அவளை எப்படி எடை போடும் என்பதற்கான பொது குறியீடா என்று முடிவு செய்கின்ற உரிமையை அவர் வாசகர்களுக்கே விட்டுவிடுகிறார்.

சத்சங்கம் வழிதவறிய ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி செம்மை படுத்துகிறது என டொக்கியை கொண்டு  உணர்த்துறார் தி.ஜா. ரங்கனும் அனந்தசாமியும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் டொக்கி போக்கிடம் இல்லாமல் சேற்றிலேயே உழன்றிருக்கக் கூடும். தன்னை முதலில் தடுத்து காப்பாற்றுவது ரங்கன்தான் என்றாலும் நன்றியுணர்வுக்கும் காதலுக்கும் ஆன வேறுபாடு, இயல்பிலேயே புத்திசாலியான டொக்கிக்கு புரிந்திருக்கிறது. அதோட நன்றிக்கடனுக்காக தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவும் அவளுக்கு விருப்பம் இல்ல. சொத்துபத்தை விட்டுட்டு வர தயாராக இருப்பதால் தன்னை “தியாகராஜன்” என்று ரங்கன் தன்னை சொல்லிக் கொண்டாலும், கண்ணிமையை பறிகொடுத்த தன்னை மணக்க தயாராக இருப்பதால்தான் அவன் தன்னை அப்படி சொல்லிக்கொள்கிறான் என டொக்கிக்கு புரிந்துவிடுவதால் அவள் ரங்கனுடைய காதலையும் கல்யாண பேச்சையும் நிர்தாட்சன்யமாக மறுத்து விடுகிறாள்.

கல்வியை துணையாக கொண்டு தவம் போல தன் வாழ்க்கையை வாழ்கிற ருக்மினியை உணர்ந்த பிறகு ஏற்பட்ட பிரமிப்பினால், டொக்கி, தனக்கான வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், என்ன செய்தால் தன் சுயமதிப்பீட்டில் உண்மையான உயர்வை எட்ட முடியும் என்பதை உணர்ந்துக் கொள்கிறாள். முதல்ல சினிமா நடிகையாகிற லட்சியத்துக்காக எப்படி தன் பெண்மையை பலியிட துணிந்தாளோ, அதே பிடிவாதத்தையும் வைராக்கியத்தையும்  தன் சுயமரியாதையை மீட்கிற லட்சியத்திலும் அவள் கடைபிடிப்பாள் என்று கதாசிரியர் நம்ப தூண்டுகிறார்.

முதல்பார்வைக்கு கண்ணியக்குறைவான ரசக்குறைவான மனிதனாக அருண்குமார் என்கிற காசிலிங்கம் தெரிந்தாலும், பல மனிதர்களின் வயிற்றெரிச்சலையும் நன்றி கெட்டவன் என்கின்ற பெயரை சம்பாதித்திருந்தாலும் அவன் கொண்டிருக்கிற தேடல் உண்மையானது. சுயவிசாரம் நேர்மையானது. அவனுடைய சுயமதிப்பீடு பாரபட்சமில்லாதது.  படித்தவனான ரங்கன் நிலை தடுமாறும்போது கூட படிப்பறிவில்லாத அருண்குமார் ஸ்திரமானவனாக இருக்கிறார். பட்ட படிப்பை விட பட்டறிவே ஒருவனுக்கு ஆழ்ந்து சிந்திக்கும் திறனையும் நிதானத்தையும் தரும் என புரிய வைக்கிக்கிறார். துடுப்பில்லாத படகாக சுற்றிக்கொண்டிருக்கிற அருண்குமாரின் வாழ்வில் தன் மகனோட நோயும் அனந்தசாமியின் வருகையும் அவர் சொல்கிற ஒற்றை மந்திரமும் அவர் வாழ்க்கையுடைய போக்கை மாற்றிவிடுகிறது.

கதாபாத்திரங்கள் தாண்டி காட்சிகளின் விவரணைகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒருநாளின் ஒவ்வொரு நொடியையும் விழிப்புணர்வு நழுவாமல் பார்க்க முடிகிற ஒருத்தரால்தான்  இதுபோல விவரணைகளை இத்தனை நுட்பமாக உணரவும் எழுதவும் முடியும். விவரணைகள் மட்டுமில்லாமல் அவற்றை படமாக்க அவர் பயன்படுத்துகிற உதாரணங்களை ஒரு தனி புத்தகமாகவே போடலாம். அந்த வகைல அவரை “உதாரண” புருஷர் என்றே சொல்லிவிடலாம்.

சென்னை வெய்யிலை ஓரிடத்தில் விளக்குகிறார். வெயிலால் வதங்கி இருக்கும் காட்சியை அணு அணுவா விளக்கிட்டு சொல்றார், “உலகமே கிழடு தட்டி உயிருக்கு மன்றாடுவது போல இருக்கு” என்று.

சந்திராவின் இளமை பொலிவை மாங்கொழுந்தின் தற்காலிக தாமிர நிறத்தோடு ஒப்பிடுகிறார். மாங்கொழுந்து இளம் பச்சை நிறத்துல தோன்றும், பிறகு தாமிர வண்ணத்தை எட்டி மீண்டும் இளம்பச்சை நிறத்துக்கு மாறிடும். அதுபோலதான் ஒரு பெண்ணின் பருவ சௌந்தர்யமும். அதுக்கு முன்னால பால்முகம் கொண்ட பிள்ளையாக இருப்பாள். “அந்த” பருவத்துக்கு பிறகு முற்றாக பெண்ணாக மலர்ந்துவிடுகிறாள். எவ்வளவு அழகான உதாரணம் இல்லையா??

சாதாரணமாக நாம் அசைவற்று நின்றிருந்தாலோ உட்கார்ந்திருந்தாலோ இரத்தவோட்டம் காரணமாக நம் உடலில் ஒரு மெல்லிய அசைவு உண்டாகும். அதை கூட ஓரிடத்தில் சிறைபிடிக்கிறார்.

வாழ்கையோட நிதர்சனங்களை, படிப்பினால், படித்த மனிதர்களுக்கு உண்டாகிற அசௌகர்யங்களை சில இடங்களில் பொட்டில் அறைவது போல சொல்லிவிடுகிறார். படிக்கும்போது பல இடங்களில் “அட… ஆமாம்ல?” என்று நம்மை நாமே சுயவிசாரம் செய்துக்கொள்ள முடிகிறது.

உதாரணமாக.. ஒரு இடத்துல இப்படி சொல்கிறார், “படிக்கறதுனால ஒரு சிலருக்கு பயமும் சந்தேகமும் அறைகுறை நம்பிக்கையும் தான் படிகின்றன!” ங்கறார். இன்னொரு இடத்துல ” பிறர் நம்மை பார்த்து நல்லவர்கள், கண்யமானவர்கள் னு சொல்லும்படியா வாழ்வது ஒன்றும் கஷ்டமில்லை. துளி அறிவும் நல்ல பயமும் இருந்தால் போதும்” என்று சொல்றார். இன்னொரு இடத்தில் “நேர்மையும் வெகுளித்தனமும் நிறைந்தவர்கள் தனியாளாகவே நின்றுவிடுவார்கள்” என்கிறார். எவ்வளவு யதார்த்தமான வார்த்தைகள்!? இதுபோன்று நாவல் முழுதும் வாழ்வின் யதார்த்தங்கள் விரவிக்கிடக்கின்றன.

தி.ஜா வின் எழுத்துகளுக்கு அழகு சேர்க்கும் மற்றோர் விஷயம் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் அக்காலத்தில் பேச்சு புழக்கத்தில் இருந்த சமஸ்கிருதம் கலந்த சொற்பிரயோகங்கள். அவற்றை பொருத்தமான இடங்களில் உபயோகிக்கும்போது கதையின் அழகு ஒருபடி மேலேறிவிடுவதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

 1. அவியாஜனம்
 2. அலமலந்து
 3. ஏகதேசமாக
 4. அசக்தமான
 5. நபும்சகலிங்கம்
 6. நிசிப்பிசகு
 7. ஜீரணோத்தாரண கைங்கர்யம்
 8.  திடுதண்டி
 9. வியாஜ்யம்
 10. தரித்தல்
 11. பராபரிக்கை
 12.  உக்கிராணக்காரன்
 13.  திருவாழத்தான்

இதெல்லாம் அவர் நாவல் முழுதும் பிரயோகம் பண்ணியிருக்கிற சில வார்த்தைகள்.

இவை தவிர நிறைய இரட்டை கிளவிகளும், அடுக்குத்தொடர்களும் சந்திலே சிந்தாக ஊடாடியிருக்கின்றன.

உதாரணமாக சில.
ஊத்தப்பம் இலையில் விழும் சத்தம் “நொத் நொத்” என்பதாகவும், ஓரிடத்தில்
இளகிய தார் ரோடில் செருப்புடன் நடக்கும் ஓசையை “சப்பு சப்” என்றும்”, அதன் உறவை “விடேன் தொடேன்” என்றும் ஓரிடத்தில் சொல்கிறார். “இள இள” வென்று மென்மையான பாதம் என்றொரு இடத்தில் வருகிறது.

தேர்ந்தெடுத்த வார்த்தை பிரயோகங்கள், கதைமாந்தர் விவரணைகள், சூழல் விவரணைகள், சூழ்நிலை நியாங்கள், கதைமாந்தர் நியாயங்கள்னு மொத்தத்துல ஒரு சம்பிரமமான விருந்துண்ட திருப்தியை தருகிற நாவல். எத்தனை முறை படித்தாலும், படிக்க படிக்க புதுப்புது சுவைகளை காட்டக்கூடிய பொக்கிஷம். வாசகர்கள் ஒவ்வொருக்கும் அவரவர் வயதுக்கேற்ற, மனநிலைக்கேற்ற, பிரத்யேக செய்திகளோடு காத்திருக்கிற மந்திரப்புத்தகம் தி.ஜா வின் “அன்பே…!! ஆரமுதே…!!


நூல் தகவல்:

நூல் :  அன்பே ஆரமுதே

வகை : நாவல்

ஆசிரியர் : தி.ஜானகிராமன்

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம் (மறுவெளியீடு)

வெளியான ஆண்டு:  முதல் பதிப்பு 1965

மறுபதிப்பு : 2019

பக்கங்கள் :  456

விலை:  ₹ 500

அமெசான் கிண்டில் பதிப்பு : 

நூலாசிரியர் குறித்து:

தி.ஜானகிராமன் (1921 – 1982)

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங் குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப் பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது.

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *