தாயாய், பிள்ளையாய் பழகி வரும் ஒரே ஊரைச் சார்ந்தவர்களான பல்வேறு சாதிக்காரர்களே இந்நாவலின் கதை மாந்தர்கள்.
தாழையா நாடார் – நிச்சயமாய் இந்நாவலை வாசித்து முடித்த நீண்ட நாட்களுக்கு உங்களுக்கு இப்பெயர் நினைவை விட்டு அகல்வது கடினமே.
ஒடிசலான தேகம், செப்புப் போன்ற கணீர் குரல், சம்சாரி (விவசாயி) குடும்பம் தான் என்றாலும் தரகு வேலையே தொழிலாகிப் போனது தாழையாவிற்கு.
தரகு வேலையிலும் வியாபாரிகளை விட விவசாயிகளுக்கே சாதகமாய் இருப்பதாலும், வாய்ப் பேச்சிலேயே தரகு முதற்கொண்டு ஊர்ச் சண்டை வராமல் காப்பது, நீதியின் பக்கம் மட்டுமே நிற்பது போன்ற காரணங்களாலும் வாயடி நாடார் என்ற பெயரே காரணப்பெயராய் நிலைத்து விடுகிறது.
கணவனுக்கு மனைவியாக மாத்திரமல்லாது நல்ல உற்ற தோழியாய் செம்பகம் , கிராமத்து அப்பழுக்கற்ற பெண்ணாய் இவர்களது மகள் பொற்கொடி, சாதி வெறியனாய் திரிந்து பட்டாளத்தில் சேர்ந்த பின் முழுமையான- அறிவுள்ள- சாதி, மத பேதம் கடந்த மனிதனாய் மாறும் சிந்தாமணி ….. இன்னும்- இன்றும் நம்மிடையே வாழும் நம்மூர்க்காரர்களை பலரையும் நீங்கள் இந்த நாவலில் சந்திக்கலாம்.
சாதி ரீதியாய் ஊர் இரண்டுபடுகையிலும் கூட சொந்த சாதி என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டுமே தன் சாதியை ஆதரிக்க இயலாது என்று நியாயத்தின் பக்கம் நிற்பதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் தாழையா நாடார், அவரும் அவரது மனைவியும் ஒன்றாய் இறந்து போகையில் ஊர் விலக்கின் காரணமாய் இறுதிச் சடங்கு செய்யவும் ஒருவர் முன் வராத நிலையில் அவ்வூர் இளைஞர்களே (ஜனநாயக வாலிபர் சங்கம்) ஈமச் சடங்குகளை முன்னின்று செய்கையில் எதேச்சையாய் கிடைக்கும் தாழையாவின் இறுதி உயிலில் – அவர் மொத்த ஊரையும் ஒன்று சேர்த்து விடுவது மிகப் பெரிய சமூக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதே.
பொதுவெளியில் அதிகம் கவனிக்கப்படாத நாவல் என்பது நூலாசிரியர் தனது இரண்டாவது பதிப்பிற்கான முன்னுரையில் வருத்தத்துடன் குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ள இயலுகிறது.
எளிமையான எழுத்து நடை. நம் கைபிடித்து உடன் வரும் கிராமத்து மனிதர்கள். நினைவில் நின்று அசைபோட வைக்கும் அருமையான நாவல்….
~ ஜெ. திவாகர்