• அபிநயா ஸ்ரீகாந்த் எழுதிய  “ஏழு ராஜாக்களின் தேசம்” நூலுக்கு எழுத்தாளர் முகில் எழுதிய அணிந்துரை.

ம் பெரிய பையன் துபாய்ல இருக்கான்’, ‘எல்லாம் துபாய் சம்பாத்தியம்’, ‘பாஸ்போர்ட் மட்டும் எடுத்துட்டா துபாய்க்கு வேலைக்குப் போயிருவேன் மச்சான்’, ‘எங்க வீட்டுக்காரரு துபாய்ல இருக்காரு. இன்னும் பிள்ளையைப் பாக்குறதுக்குக்கூட வரல!’ – இதெல்லாம் நம் காதில் அடிக்கடி விழுந்த / விழுகின்ற இயல்பு வாழ்க்கை வசனங்கள். துபாய்க்கும், பிற அமீரக தேசங்களுக்கும் அங்கே சம்பாதிப்பதற்காகச் செல்லும் நம் மக்களுக்குமான பிணைப்பு என்பது விசேஷமானது.

பாஸ்போர்ட், விசா, விமானக்கட்டணம் இன்றி, துபாய் உள்ளிட்ட ஏழு ராஜாக்களின் தேசங்களையும், அதாவது ஏழு அமீரகங்களையும் சுற்றிக் காட்டுகிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் அபிநயா ஸ்ரீகாந்த், எங்கு எங்கு வரலாறு தேவையோ அங்கெல்லாம் அதனைப் பரிமாறுகிறார். எங்கெல்லாம் எதற்கெல்லாம் கூடுதலாக வரலாற்றுத் தகவல்களைத் தர இயலுமோ அதையும் செவ்வனே செய்திருக்கிறார். ஆக, இது பயண நூல், அனுபவ நூல் மட்டுமல்ல. அமீரகங்களின் சரித்திரத்தையும் பேசும் நூல்.

Abinaya Srikanth
அபிநயா ஸ்ரீகாந்த்

உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபா குறித்த பிரத்யேக அனுபவத் தகவல்களையும் பேசுகிறார். அதேசமயம் அங்குள்ள ரங்கநாதன் தெருவான மினா பஜாரில் சமோசா விற்கும் சாதாரணரைப் பற்றியும் பேசுகிறார். ‘மிராக்கிள் கார்டனுக்கு அமீரகப் பேரங்காடியின் மெட்ரோ நிறுவனத்திலிருந்து 105ஆம் எண் கொண்ட பேருந்தில் ஏறிப் பயணமானோம்’ என நல்லதொரு வழிகாட்டியாகவும் செயல்படுகிறார். பல இடங்களில் எதற்கு எவ்வளவு செலவாகும் என்று பட்ஜெட்டும் போட்டுக் கொடுக்கிறார். ஒட்டகப்பால் சாக்லேட்டும் சுவைக்கத் தருகிறார். எருதுச்சண்டையில் கிளம்பும் புழுதியையும் உணர வைக்கிறார். கூடவே, அங்கெல்லாம் நிலவும் உடைக்கட்டுப்பாட்டின் சங்கடங்கள் குறித்தும், இயல்பு வாழ்க்கையில் நிலவும் கட்டுப்பாடுகள் குறித்தும் எச்சரிக்கத் தவறவில்லை.

ஆங்காங்கே வரலாறு பேசுவதோடு மட்டுமன்றி, போகிற போக்கில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி நடந்த விளையாட்டு அரசியலையும் தொட்டுச் செல்கிறார். ஷார்ஜா சர்வதேச புத்தகக்காட்சி குறித்து இவர் எழுதியிருக்கும் விஷயங்கள் எல்லாம், ஒருமுறையாவது அதைக் கண்டுகளித்துவிட வேண்டுமென்ற ஆசையைத் தூண்டுகிறது. குறிப்பாக முசண்டம் கடற்பயணம் பகுதி பேராவலைத் தூண்டுகிறது. டெஸர்ட் சஃபாரி எனப்படும் பாலைவன திகில் பயணங்களின் நவீன வடிவம் குறித்து விவரித்திருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் சுவாரசியமூட்டுகின்றன. வரைபடங்கள் எல்லாம் இல்லாத வரலாற்றுக் காலத்தில் இதே பாலைவனங்களை வெற்றிகரமாகக் கடந்த அந்நாள் பயணிகளின் திறமையையும் வலிமையையும் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டுப் பயணியான இபன் பதூதாவின், வரலாற்று அனுபவங்களையும் இதில் அபிநயா ஸ்ரீகாந்த் சிறப்பாகவே பதிவு செய்துள்ளார்.

ஒட்டகங்களுக்கு இருட்டில் கண்பார்வை குறைவு என்பதால், வெளிச்ச நேரத்திலேயே ஒட்டகச் சவாரிகளை முடித்துக் கொள்கிறார்கள் என்பது போன்ற நுட்பமான தகவல்களையும் இந்தப் புத்தகம் தருகிறது. புர்ஜ் அல் அராப் போன்ற துபாயின் தனித்துவமான கட்டடங்கள் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல்களும் இதில் கொட்டிக் கிடக்கின்றன. அமீரகங்களின் நூற்றாண்டுப் பழைமையான கோட்டைகளின் வரலாறும் பதியப்பட்டிருக்கிறது. தங்கு தடையற்ற மொழிநடையும், வார்த்தை வளமும் அபிநயாவுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. அதுவே பல பக்கங்கள் தாண்டிய அலுப்பற்ற பயணத்தை நம் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.

வெறும் இடங்களைச் சுற்றிக் காட்டுவதோடு நில்லாமல், அந்தந்தப் பிரதேசங்களின் பழங்குடி மக்களின் வாழ்வியலையும் கலாசாரத்தையும் பதிவு செய்கிறார். அந்த மண்ணின் இலக்கியம், கவிதைகள் குறித்தும் சொல்கிறார். பொருளாதாரம், தொழில்கள், பிற துறை வளங்கள் குறித்து சிறு அறிமுகம் தருகிறார். ஸ்டஃப்ட் கேமல், லுகைமத், ஹலீம், குனாஃபா, சவர்மா, ஃபிலாபில், ஹம்மஸ், மந்தி பிரியாணி என்று அமீரக உணவுக் கலாசாரம் குறித்து விருந்தே பரிமாறுகிறார்.

மொத்தத்தில் இந்தப் புத்தகம் வார்த்தைச் சிறகுகளில் பறந்தபடி, ராஜாளிப் பார்வையில் அமீரங்கங்களைச் சுற்றி வந்த அனுபவத்தைத் தரவல்லது. நவீனமாகச் சொல்ல வேண்டுமென்றால், அமீரகங்கள் பற்றி எழுத்தால் அறிந்துகொள்ள, இந்தப் புத்தகத்துக்குள் ஸ்கை டைவிங் செய்யலாம். ஆம், மம்சார் கடற்கரையில் கிடைக்கும் ஏலக்காய் மணக்கும் ஃபீலிஸ் குங்குமப்பூ தேநீரின் இதமான சுவையை நான் உணர்ந்தேன்.

வாழ்த்துகள் அபிநயா ஸ்ரீகாந்த்.!

– முகில்

எழுத்தாளர்

மே 23, 2019.

நூல் தகவல்:

நூல் : ஏழு ராஜாக்களின் தேசம்

பிரிவு:  பயணக் கட்டுரைகள்/ வரலாற்றாய்வு நூல் ,

ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த்

வெளியீடு :  யாவரும் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2019

விலை: ₹  275

நூலை வாங்க : Be4Books.com

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *