அன்று வனத்தில் படிந்த பனிநீர் இமைக்குமிழ்களாகத் திரண்டிருந்த வேளையில் எருமைகள் மேய்த்துப் பாடிவந்தாள் தொதவச்சி. வழிதப்பி உச்சி மலைப்பள்ளத்தில் வீழ்ந்த எருமை கண்டு கானகம் அலறக் குலவையிட்டு அவளும் மரிக்க, குலவைக்குள் எழுந்துவந்த காடு அவைகளின் உடலுக்குள் இறங்கிக் கூட்டமாய் அவளைத்தேடி வீழ்ந்து மரித்தது. எருமைக்குருதி படிந்த செவமடையில் ஊர் ஊரென உறுமியழைக்கும் மறு ஜனனம். எருமை திராவிடப் பூர்வத் தொன்மத்தின் குறியீடு.
வைகையின் நீரடி மணற்துகள்கள் வெட்டுண்ட வாத்துக்கால்களால் சொற்களாகும் மாயம். நீர்மையின் சொப்பனங்களோடு வெடிப்புற்ற குளங்களின் கானல்வரிகளைத் தேடிக் கரைகளில் கண்ணீரை விதைகளாகப் பெற்ற கன்னிமார்களின் துணை இங்கே சொற்களுக்குள் இறங்கியிருக்கிறது.
தரித்திரியத்தை உடையாகயுடுத்தியவர்களை நோக்கி நீளும் ஆளுயர லத்தி பிடித்த கைகள் விரட்டும் காலத்தில் இருக்கிறோம். அரளிமலர்கள் பார்த்த நெடுஞ்சாலைப் பயணத்தில் அப்டேட் அகமரணக் கருவிகளோடு திரியும் தலைமுறையினருக்கான வாக்குகள் இங்கே காத்திருக்கின்றன. சடங்காற்றுதல் திறக்கும் நைந்தாடையுடுத்திய கொலையுண்ட அம்மன்களும், வன்கொலைச் சிந்து பாடும் ஓடைகளும், வறக்கஞ்சா இலைகடித்து அணங்குறுபவர்களும், பசியை மொழியாகப் பெற்றவர்களும், திணிக்கப்படாத அ – கல்வியின் ஞானத்தைக் கொண்டவர்களும் முத்துராசாவின் கவிதைவழி நம்மைத் தழுவ வருவார்கள்.
-எழுத்தாளர்/ நாடக கலைஞர் ச.முருகபூபதி
பிரிவு - கவிதைத் தொகுப்பு
கவிஞர் - முத்துராசா குமார்
வெளியீடு - சால்ட் • தன்னறம்
விற்பனை உரிமை- தமிழ்வெளி
+919094005600
வெளியான ஆண்டு - டிசம்பர் 2020