இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லோ நெரூடாவின் நாட்குறிப்புகள் தான் “பாப்லோ நெரூடா நினைவுக் குறிப்புகள்” என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றிருக்கிறது. இதனை மொழிபெயர்த்தவர் சா. தேவதாஸ். “லடாக்கிலிருந்து கவிழும் நிழல்” என்ற மொழிபெயர்ப்புக்காக 2014-ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

காதல் கவிதைகள் எழுதிக் குவித்த குதூகலமான கவிஞர் என்பது நெரூடாவைப் பற்றிய ஒரு பிம்பம். ஆனால் அரசியல் தளத்தில் நின்று எழுச்சி கொள்ளச் செய்யும் வகையில் எழுதக்கூடியவராகவும் விளங்கியிருக்கிறார்.
இதில் நெரூடாவைப் படிப்போம் என்ற எஸ்.வி. ராஜதுரையின் கட்டுரையும், யூமா வாசுகியின் மொழி பெயர்ப்பில் நெரூடா நேர்காணல் பகுதியும் இடம் பெற்றுள்ளது.

உலகப்புகழ் பெற்ற கவிஞராக அறியப்படும் நெரூடா முதலில் எழுதியது கட்டுரைதான். அவர் வசித்து வந்த டெமூகோ என்ற நகரத்தில் பிரசுரமான செய்தித்தாளில் நெரூடாவின் முதல் கட்டுரை வெளியானது. அப்போது அவருக்கு வயது பதிமூன்று. அதற்கு அடுத்த ஆண்டில் அவர் எழுதிய கவிதைகள் பிரசுரமாகின. சரியாகப் படிக்கக்கூடத் தெரியாத வயதில் ஒரு நாள் ஒரு கொந்தளிப்பான உணர்வு, சில அறிமுகமில்லாத சொற்கள் அவருள் தோன்றின, தினசரி புழங்கும் வழக்கமான சொற்களல்ல அவை, அதற்குமுன் அனுபவித்திராத உணர்வை அனுபவித்த நெரூடா தனக்குள் தோன்றிய அந்தச் சொற்களை ஒரு காகிதத்தில் எழுதிவைக்கிறார். அதுதான் அவரது முதல் கவிதை. (தன் சித்திக்காக எழுதியது).

நான் எழுதிய முதல் கவிதையை என் அப்பாவிம் நீட்டினேன் அவர் அதை ஞாபகம் மறதியாய் வாங்கி ஞாபக மறதியாய் வாசித்து ஞாபக மறதியாய் என்னிடம் திருப்பி தரும்போது எதிலிருந்து நகல் எடுத்தாய்” என்று கேட்டார் என்பதாக பதிவு செய்கிறார்.

வால்ட் விட்மனும், மாயகோவ்ஸ்கியும் சேர்ந்து உருவானவன் நான் என்று பிரகடனப்படுத்துகிறார். கவிஞன் ஒரு கலகக்காரன் என்று எழுதும் நெருடா அவனது வசந்தமும் கலகத் தன்மையானது என்கிறார்.
‘என் கவிதையும், என் வாழ்வும் அமெரிக்க நதியென, தென் மலைகளின் மறைவான இதயத்தில் தோன்றி சிலியின் வெள்ளமென கடல் நோக்கி முன்னேறியபடியே இருக்கிறது. தன் போக்கில் எடுத்துச் செல்லக்கூடிய எதனையும் அது தடுக்கவில்லை, அது வேட்கையை ஏற்றது. மர்மத்தை அவிழ்த்தது, மக்களின் இதயங்களுக்குள் சென்று சேர்ந்தது என்கிறார்.

தனது இருபத்து மூன்றாவது வயதில் பர்மாவுக்கான சிலி நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்ட அவர் சிங்கப்பூர், இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பணியாற்றினார். அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவரது வாழ்வில் மட்டுமல்ல கவிதையிலும் அரசியல் ஓர் அங்கமாக மாறியது.

இலக்கியம், அரசியல் ஆகியவற்றைப் போலவே விதவிதமான உணவுகளின் மீதும், பெண்களின் மீதும் நெரூடாவுக்கு அளவுகடந்த விருப்பம் இருந்தது. அவரது நினைவுக் குறிப்புகளைப் படிக்கும்போது எந்த விதமான தயக்கமுமின்றி அவர் தனது வாழ்வைத் திறந்து வைத்திருப்பதை உணரலாம். கவிஞன் குறைவாக வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவன் ஏராளமானவற்றைப் புகைப்படம் போல தன்னுள் பதிந்துவைக்கிறான். நமக்காக மிகுந்த கவனத்தோடு அவற்றை மீளத் தருகிறான். கவிஞன் தன் காலத்தின் தீயாலும், இருட்டாலும் அலைக்கழிக்கப்பட்ட அனுபவங்களையே நமக்குத் தருகின்றான்” என்கிறார் நெரூடா, நான் எனக்குள் மட்டும் வாழவில்லை, மற்றவர்களது வாழ்வையும் வாழ்ந்திருக்கிறேன் என்கிறார்.

வேலைச் சுமைகளை மீறி, கனவுகள் தரும் இடைவெளிதான் நம்மை எழுந்து நிற்கவைக்கிறது என்பார் நெரூடா . நெரூடாவின் கனவுகளிலும் கவிதைகளிலும் வாழ்வோடு தொடர்பில்லாத எதுவுமே இருந்ததில்லை. சுடர்மிகு தீபங்களைத் தன் கவிதைகளால் ஏற்றிவைத்தவர், அதன் வழியே சாதாரண மக்களின் காயங்களையும் தழும்புகளையும் கண்டவர், நமக்கும் அந்த வலிகளை இரத்தமும் சதையுமாக கடத்தியவர்.

கவிதை, கட்டுரை, விமர்சனம் எனப் பலவாறாக எழுதிக் குவித்த நெரூடாவின் ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட போது.உலகமெங்குமிருந்து எழுத்தாளர்கள் நேரில் சென்று வாழ்த்தினார்கள்.

தனிமையில் சிலியின் கடற்கரை மீதான நுரையின் யுத்தம் என் வாழ்வை வளமாக்கிற்று, போரிடும் நீரையும் அவை முட்டிமோதிடும் பாறைகளையும் நெருக்கி, அடிக்கின்ற கடல் வாழ்வையும் அலைந்து திரியும் பறவைகளின் அப்பழுக்கற்ற அமைப்பையும், கடல் நுரையின் அற்புதத்தையும் வேட்கையுடன் நேசித்துள்ளேன் என்கிற நெரூடாவை வாசிப்பவர்கள் அவரது கொந்தளிக்கும் வரிகளால் அடித்துச்செல்லாமால் இருக்க முடியாது.

பர்மாவிலிருந்தபோது ஜோஸி ப்ளிஸ் என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தார். தன்னை நெரூடா கைவிட்டுவிடுவாரோ என்ற பயத்தில் இரவெல்லாம் கத்தியோடு நெரூடாவின் படுக்கையைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருப்பார். தன்னை மட்டுமே நெரூடா நேசிக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு மந்திரச் சடங்குகளைச் செய்வார்.அந்த நேரத்தில் நெரூடாவுக்கு இலங்கைக்கு மாறுதல் வந்தது. ஜோஸியிடமிருந்து விலகி இலங்கைக்குச் சென்றுவிட்டார் நெருடா. ஆனால் சில நாட்களில் அவரைத்தேடி ஜோஸி இலங்கைக்கு வந்துவிட்டார். அவரை நெரூடா வீட்டுக்குள் சேர்க்கவில்லை. அந்தக் காதலின் தீவிரத்தை தாங்க முடியாதவராகவே நெருடா இருந்திருக்கிறார். ஜோஸி தெருவிலேயே கிடந்து தோற்றுத் தனது ஊருக்குத் திரும்ப முடிவுசெய்து நெரூடாவை வழியனுப்ப வரும்படி கேட்கிறார். கப்பல் புறப்படும் நேரம் கண்ணீர் வழிய நெரூடாவை முத்தமிடுகிறார். அவரது ஷுக்களை முத்தமிடுகிறார். ஷு பாலிஷ் ஜோஸியின் முகமெங்கும் அப்பிக் கொள்கிறது . “அடக்கமுடியாத துக்கம், அவளது முகத்தில் உருண்ட கண்ணீர்த் துளிகள் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளன” என்கிறார் நெரூடா.

அவர் தேடிச்சென்ற பெண்களும் அவரை தேடி வந்த பெண்களும் என்று அவரது பொழுதுகள் பெண் உடல்கள்ல் நிரம்பி வழிவதாகவே இருந்திருக்கிறது. இலங்கை வெள்ளவெத்தையில் இருந்தபோது கழிப்பறை சுத்தம் செய்ய வந்த பெண்ணைக் கூட தன் வேட்கைக்குப் பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான் தன் காதலை அழிக்க அழிக்க கிளைத்துக் கொண்டே இருக்கும் புதர் என்கிறார்.

நான் ஒரு கார் வைத்திருப்பதை கூட என் எதிரிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை காரணம் அது வியாபாரிகள், ரவுடிகள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது என்று அவர்கள் நம்பினார்கள் அவர்கள் இன்னும் ஆத்திரம் கொள்ளும் விதத்தில் இஸ்ரா நெக்ராவில் உள்ள எனது வீட்டினை மக்களுக்காக விட்டுச் செல்லப் போகிறேன் என்றார். உங்கள் நூலகம் தீப்பிடிக்கிறது என்றால் என்ன செய்வீர்கள் ? என்று அவரிடம் கேட்டபோது அந்த நேரத்தில் ஒரு சிறுமியை காப்பாற்றுவேன் என்றார்.

இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளும் புத்தகங்களும் தவிர எதுவும் இல்லாதவன் நான் என் வீட்டிற்கு தீ வைக்கிறார்கள், நான் துன்புறுத்தப்பட்டு இருக்கிறேன், ஒன்றுக்கும் அதிகமான தடவை ஜெயிலில் அடைப்பட்டிருக்கிறேன், நாடு கடத்தப் பட்டிருக்கிறேன், ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறேன், ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்கள் விடாமல் என்னை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த வீடு இருபது வருடம் கம்யூனிஸ்ட் கட்சியினுடையதாக இருந்தது. அவர்கள் எனக்கு விட்டுக் கொடுத்துதான் இது. என் கட்சியின் பெருந்தன்மையால் நான் இங்கு வசிக்கிறேன். என்னைப் பொருத்தவரை ஏகாதிபத்தியமும் முதலாளித்துவவாதிகளும் தான் என் எதிரிகள், வியட்நாமில் நாபார்ம் குண்டுகளை வீசியவர்கள் தான் என் எதிரிகள், போர்ஹேஸ் அல்ல என்று பிரகனப்படுத்துகிறார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே நான் பறவைகள் மீதும் கிளிஞ்சல்கள் மீதும் தாவரங்களிடமும் ஆர்வம் கொண்டிருந்தேன் கடல் சிப்பிகளை தேடி நான் பல இடங்களுக்கு சென்று இருக்கிறேன் அவற்றின் நல்ல சேமிப்பு என்னிடமிருந்தது இயற்கையிடம் இருந்து பிரிந்து வாழ என்னால் முடியாது கொஞ்ச நாட்களுக்கு நான் ஹோட்டல்களை விரும்பலாம் விமானங்களை ஒரு மணி நேரம் வரை விரும்பலாம் ஆனால் காட்டிலும், மலை, நிலம், கடல் பயணத்திலும் தான் எனக்கு மகிழ்ச்சி, தீ, நிலம் தண்ணீர், காற்று இவற்றுடன் நேரடியாக பழகவே நான் விரும்புகிறேன். பசுமையான கிராமப்புறங்கள் மஞ்சள், சிகப்புப் பூக்கள், எங்கள் தேசிய கீதத்தின் நீலவானம் எல்லாமே எனது நெஞ்சுக்கு நெருக்கமானவை என்கிறார்.

தாமிர தாதுவை தேசியமயமாக்கிய போது தொடங்கியது சிலியின் புதிய சுதந்திரத்தை நோக்கிய எங்கள் பயணம் என்ற நெருடா சிலி அதிபர் ஆலண்டே பற்றி எழுதிய குறிப்புகள் மிக முக்கியமானது. சிலி நாட்டின் தாமிரம். நைட்ரேட், நிலக்கரி போன்ற கனிம வளங்களை பெருமுதலாளிகள் சுரண்டிக் கொழுத்துக் கொண்டு இருந்தார்கள் அதனை எதிர்ப்பதற்கு அந்த வளங்களை மீட்பதற்கு சிலியின் அதிபர் பொறுப்பிற்கு ஆலண்டே பொருத்தமானவராக இருப்பார் என்று கிளர்ச்சியாளர்கள் நம்பினார்கள். அவர் அதிபரானதும் செய்த முதல் வேலை தாமிரத்தைத் தேசியமயமாக்கியது, இதனால் எதிரிகளின் கடும் கோபத்திற்கு ஆளானார். ராணுவக் கைக்கூலிகளால் ரகசியமாகக் கொல்லப்பட்டு, ரகசியமாகவே புதைக்கப்பட்டார். அம்மகத்தான போராளியின் உடலுடன் உலகின் மொத்த துயரையும் சுமந்தபடி ஒரு பெண் (அவரது மனைவி) மட்டுமே கல்லறைவரை அனுமதிக்கப்பட்டாள் என்ற துயர சம்பவத்தை நினைவு கூர்கிறார் அதை வாசித்த போது சமகால அரசியல் போராட்ட நிகழ்வுகள் நெஞ்சை உறுத்தியதைத் தவிர்க்க முடியவில்லை.

1945-ல் சிலி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுகிறார். சுரங்க தொழிலாளர்களை ஆடு மாடுகளைப் போல எந்த வசதியும் இல்லாத சிறையில் அடைத்து வைத்திருக்கும் கொடுமையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் “குற்றம் சாட்டுகிறேன்” என்னும் புகழ்பெற்ற உரையை நிகழ்த்துகிறார். அதனைத் தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியும் தடை செய்யப்படுகிறது, 13 மாதம் தலைமறைவாக வாழ்கிறார்.

பாரிஸில் வெளிநாட்டு தூதுவராக இரண்டாண்டுகள் பணியாற்றியவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்புகிறார். தனது இளம் வயதில் தான் எழுதிய கவிதைகளில் கற்பனையாகச் சித்தரித்திருந்த தனிமை, இறக்கும்போது தன்னையும், ராணுவத்தினரால் உடைத்து நொறுக்கப்பட்ட தனது வீட்டையும் சூழ்ந்திருக்கப் போகிறதென்று நெரூடாவுக்குத் தெரியாது. சிலியில் நடந்த ராணுவப் புரட்சியும் அலெண்டேயின் மரணமும், நெரூடாவின் இறப்புக்கு ஒரு துயரார்ந்த பின்னணியைத் தந்துவிட்டன. சோதனையிட வந்திருந்த ராணுவத்தினரிடம் நெருடா கூறினார் நாலாப்பக்கமும் நன்றாக தேடிப்பாருங்கள் உங்களுக்கு அபாயகரமான ஒரே ஒரு பொருள் இங்கே இருக்கிறது அது என்னுடைய கவிதைகள் தான் என்றார்.

நெரூடா 1973 செப்டம்பர் 23 புற்றுநோயின் தாக்கத்தின் காரணமாக காலமானார். சான்டியாகோ நகரில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டிருந்தன. அதையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ராணுவ சர்வாதிகாரி பினோஷெவின் ஆட்சிக்கு எதிராக சிலி நாட்டு மக்கள் காட்டிய முதல் எதிர்ப்பு போராட்டமாக அந்த இறுதி ஊர்வலம் அமைந்தது.
பாப்லோ நெருடா தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டாலும், அவரை நாம் அரசியல்வாதியாகவோ, தத்துவக் கோட்பாடுகளை கொண்டவராகவோ பார்க்கவேண்டியதில்லை. அவர் முழுக்க முழுக்க ஒரு கவிஞர். பெண்ணிய கண்ணோட்டத்தில் இருந்து அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர் உழைக்கும் மக்கள் மீது வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும் மகத்தானது
நெருடா புற்றுநோயால் இறந்தார் என்று அவரது மரண அறிக்கை கூறுகிறது. ஆனால் அவரது அந்தரங்கச் செயலாளர் மானுவெல் ஆரயா நெருடாவுக்கு ஊசி மருந்து ஒன்று தரப்பட்டது அதுதான் அவருக்கு மாரடைப்பைத் தூண்டியது என்று கூறுகிறார். இப்படி மர்மங்களும் விசித்திரங்களும் கொண்டாட்டங்களும், அதே அளவு சம பங்கு துயரங்களும் நிறைந்த ஒரு விந்தை மனிதனோடு பயணித்த அனுபவத்தை தருகிறது பாப்லோ நெரூடா நினைவுக் குறிப்புகள்.


நூல் தகவல்:
நூல் : பாப்லோ நெரூடா: நினைவுக் குறிப்புகள்
ஆசிரியர் : பாப்லோ நெரூதா
மொழிபெயர்ப்பாளர்: சா. தேவதாஸ்
வெளியீடு – கருத்து பட்டறை
வெளியான ஆண்டு : 2021
விலை: ₹ 380

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *