சிக்மண்ட் பிராய்டின் உளவியல் படி ஆணின் ஒவ்வொரு அசைவும், எ‌தி‌ர்‌ முனை பெண்ணை கவருவதற்காக தான். அதே போல தான் பெண்ணும்.. இது நியதி. நீங்கள் இந்த உலகில் பார்க்கும் ஒவ்வொரு பொருள், கலை, கட்டிடம், எழுத்து, எல்லாவற்றிற்கும் பின்னால் காமம் தான் உள்ளது. ஊடுருவல் நாவலின் நாயகன் மனோவும் இந்த ரகம் தான். இந்த நியதி புரியாமல் அல்லாடும் ஒரு ஜீவன்.விஜய் மகேந்திரனின் நாவல் படிப்பதற்கு கணவன் மனைவிக்கும் இடையே நடக்கும் கதை போல ஏதோ மேலோட்டமாக சுகம் போல தோன்றும்.ஆனால் நன்றாக கவனித்தால் ஆண் பெண் காம உளவியல் கட்டமைப்பை, மிக நன்றாக ஊன்றிக் கவனித்துக் கதை போல் விவரித்து உள்ளார். ஆண் பெண் மன அறையின் அந்தரங்க விசும்பல்களை வார்த்தைப்படுத்தியிருக்கிறார். பெண்ணுக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் ஆண் மனத்தின் மின் அலைகளை ”ஊடுருவல்” வெளிப்படுத்துகிறது. விஜய் மகேந்திரனின் எழுத்து நடை பாரமில்லாமல் உணர்வுக்குள் இழுத்து செல்கிறது.அது தானே ஊடுருவல். இன்றைய இளம் தலைமுறையினரின் ஆழமானதொரு மனப்பக்கத்தை ”ஊடுருவல்” நாவல் தொட்டுச் செல்கிறது.

– ஒளிப்பதிவாளர் ஜி‌.ஏ.சிவசுந்தர்


நூல் தகவல்:

நூல் : ஊடுருவல்

வகை :  நாவல்

ஆசிரியர் : விஜய் மகேந்திரன்

வெளியீடு :  கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு:  டிசம்பர்- 2021

பக்கங்கள் : 125

விலை:  ₹ 160

 

நூலாசிரியர் குறித்து:

விஜய் மகேந்திரன்

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ”இருள் விலகும் கதைகள்” என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ”நகரத்திற்கு வெளியே” இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ”நகரத்திற்கு வெளியே” பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ”படி”அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ”ஏ.ஆர்.ரஹ்மான் – நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ”புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ”சாமானிய மனிதனின் எதிர்குரல்” இவரது நாவல் ”ஊடுருவல்”ஆகியனவும் வெளிவந்துள்ளது.

இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ”அசோகமித்திரன் படைப்பூக்க விருது ”கொடுத்துள்ளது.  கடல் பதிப்பகத்தை  நிறுவி  நூல்களை பதிப்பித்து வருகிறார்