இந்தப் புத்தகத்தை திரு. ஈஸ்வர மூர்த்தி அவர்கள் (கே. சாதாசிவன் அவர்களுக்கு இப்புத்தகத்தை மொழிப்பெயர்க்க உதவியாக இருந்தவர்) பரிந்துரைந்ததன் பெயரில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். இதன் ஒரு பிரதி ஏற்கனவே என்னிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர் மோசஸ் அவர்களால் கொடுக்கப் பட்டிருந்தது. இப்புத்தகத்தின் அவசியம் குறித்த ஒரு பதிவு தேவை என்பதால் எழுதுகிறேன்.
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஆயித்தரை என்கிற ஊரில் பிறந்த சுதீஷ் மின்னி தன்னுடைய சுயம் சேவக அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பதிவு தான் இந்தப் புத்தகம். ஒருவர் தன்னுடைய கருத்தியலை வளர்த்துக் கொள்ள அடிப்படையாக அமைவது அவருடைய குடும்பம் மற்றும் குழந்தைப் பருவத்தில் பிறரால் ஏற்படுத்தப் படும் தாக்கம். அவ்வாறு இவரது குடும்பத்தில் தொடக்கத்தில் தாத்தா மற்றும் அம்மாவின் முன்னெடுப்பால் தான் இவர் சாகா எனப் படும் ஆர். எஸ். எஸ் அமைப்பின் பால கோகுல வகுப்புகளில் சேர்த்து விடப் படுகிறார்.
சிறு வயதில் இருந்து புராண இதிகாசங்களை படித்து வளர்ந்தவர் அந்த வகுப்புகளிலும் பல இந்து மத கருத்துக்கள், புராணங்கள் குறித்து கற்கத் தொடங்குகிறார். அதோடு சேர்த்து உடற்பயிற்சி, ‘நியுத்த’ என்கிற எதிரிகளை தாக்கும் முறையையும் கற்கத் தொடங்குகிறார். கபடிப் போட்டியின் போது கோட்டை தாண்டி முசுலீம் தீவிரவாத மையம் உள்ளதாக கற்பனை செய்து கொண்டு தொட வேண்டும். பிடிபட்டவர் இறந்ததாக கருதப் படும் என்று சுதீஷ் மின்னி பதிவு செய்கிறார். வட்ட வடிவமாக அமர்ந்து கொண்டு முசுலீம், கிறிஸ்தவ, கம்யூனிச சக்திகளின் எதிர்மறை குணங்கள் பற்றி கற்றுக் கொடுப்பார்கள். இந்து ராஷ்ட்ரம் எனப் படும் தேசிய உணர்வை ஊட்டும் பாடல்களை கற்றுத் தருவார்கள். பச்சை நிற முசுலீம்கள் உடையை அணிந்து கொண்டவர்களை தண்டா பயிற்சியின் போது தாக்கும் படியாக கற்றுத் தருவார்கள் என அடுக்கடுக்காக தன்னுடைய குழந்தை பருவதில் விதைக்கப் பட்ட விஷங்களை பற்றி குறிப்பிடுகிறார்.
இந்த பகுதி தான் இந்தப் புத்தகத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன். மதவாத அமைப்புகள் பள்ளிகளின் மூலம் எவ்வாறு தங்களுக்கு தோதான மன நிலையை, மனோதத்துவ ரீதியில் வளர்க்கின்றன என்கிற உண்மையை இலங்கையை மையப் படுத்தி நான் எழுதியுள்ள புத்தகம் வரவுள்ளது. இந்த புத்தகத்தை படிக்கும் போது, நான் பதிவு செய்ய எண்ணிய கருத்தின் மற்றுமொரு வடிவத்தை கண்டேன்.
கோல்வால்கரின் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை குழந்தைகளுக்கு 6 வயதில் சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு சாகாவால் வளர்த்து விடப் பட்ட சுதீஷ் மின்னி அடுத்ததாயக ஆர். எஸ். எஸ்-ன் அமைப்பு குறித்து பதிவு செய்கிறார். பயிற்றுவிப்பாளர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள். செயலாளர்கள், விளையாட்டு மேற்பார்வையாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் தொடங்கி சார் சங் சாலக் என்கிற உயர் பதவி வரை உள்ள படிநிலைகளை விவரிக்கிறார்.
இதன் பிறகு சுதீஷ் மின்னி, சில கம்யூனிஸ்ட் ஊழியர்கள் மற்றும் தலைவர்களை கொல்வதற்கான சதித் திட்டங்கள் தன் முன்னிலையில் தீட்டப் பட்டதை பற்றியும், ஆயித்தரை சுற்றுவட்டாரத்தில் நடந்த குற்றச் செயல்கள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதுகிறார். கம்யூனிஸ்ட் ஊழியரை கொல்ல திட்டம் தீட்டியவருக்கு 15000 சன்மானம் அளித்தது, தய்யம் என்கிற கேரள ஆட்டக் கலை குறித்த பிரச்சனையில் ஆர். எஸ். எஸ் செயல்பாடுகளுக்கு இடம் தருவார் என்கிற நோக்கில் உயர் சாதி நிலவுடமையாளர் தம்பூரானின் பக்கமாக நின்று விவசாய சங்கத்தினரை எதிர்த்தது, ஆர். எஸ். எஸ் ஊழியரின் மனைவியுடன் ஒருவர் இருந்ததை தற்செயலாக பார்த்த சத்தியன் என்கிற தடகள வீரர் கொல்லப் பட்டது, ஈ. பி. ஜெயராஜன் என்கிற கம்யூனிஸ்ட் தலைவரின் மீதான கொலை முயற்சி, போன்ற அடுக்கடுக்கான குற்றச் செயல்கள் பற்றி எழுதுகிறார்.
மதுரையில் நடந்த முகாமில் அகண்ட பாரதம் என்கிற வரைபடத்தை காட்டி, அதில் சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூட்டான் போன்ற நாடுகளை இணைத்து அதன் சிறப்புகளை பற்றி சொல்லித் தந்ததாக சுதீஷ் மின்னி தெரிவிக்கிறார். பொதுவாக இங்குள்ள நடுநிலை இந்துக்கள் இத்தகைய ஒரு திட்டம் முசுலீம் தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமே உள்ளதென்று எண்ணிக் கொண்டிருக்கும் வேலையில் இந்த தகவல் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.
இதன் பிறகு சங் பரிவார அமைப்புகளின் பெயர்கள் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்து விரிவாக பேசப் படுகிறது. சங் பரிவார அமைப்புகள் பூஜை, கல்வி, அறிவியல், விளையாட்டு, போட்டிகள் என பல்வேறு ரூபங்களில் குழந்தைகள் மற்றும் சமயத்தின் மீது பற்று கொண்டவர்களை எவ்வாறு ஆர். எஸ். எஸ்-ன் அஜெண்டாவுக்கு உபயோகிக்கிறது என்பதை கண்ட பிறகு தான் சுதீஷ் மின்னி, தன்னை மெல்ல அன்னியப் பட்டவன் போல உணரத் தொடங்குகிறார். இதன் பிறகு வாங்கும் கோடிக் கணக்கான நன்கொடைகளை சரிவர கணக்கு காட்டுவதில்லை என்கிற ஒரு குற்றச் சாட்டை முன்வைக்கும் போது அதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதை பதிவு செய்கிறார். வேதக் கணித வகுப்புகளை எடுத்த வந்த சுதீஷ் இந்த கணித முறையை ஆர். எஸ். எஸ் அமைப்பு உறுப்பினர் சேர்க்கையாக எப்படி மாற்றிக் கொள்கிறது என்பதையும் தனியே விவரித்திருக்கிறார்.
இப்புத்தகத்தின் முகப்பில் இருந்து நான் எதிர்பார்த்தது ஆர். எஸ். எஸ் அமைப்பின் செயல்திட்டங்கள், அவர்களின் சேவை முயற்சிகள் மற்றும் நோக்கங்கள் குறித்த விரிவான தர்க்கங்கள். அவை ஓரளவிற்கு ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. மற்றும் வரலாற்றுப் பின்னணியில் இருந்து ஆர். எஸ். எஸ் –ஐ சுதீஷ் எப்படி அணுகுகிறார் என்பதை. அத்தகைய விவாதங்கள் இந்தப் புத்தகத்தில் பெரிதாக இல்லை.
அதோடு, அவருடைய மாற்றம் எத்தளத்தில் இருந்து நிகழ்ந்தது என்பதையும். ஆனால், அவர் தன்னுடைய அனுபவங்கள், பெயர்கள், கேரளம், வட இந்தியாவில் அவர் பார்த்தவை என்கிற விவரணையுடன் இந்த புத்தகத்தை முடித்துக் கொண்டார். அவர் தன் கருத்தியலை மாற்றிக் கொள்ள கூறும் காரணங்களான மக்கள் விரோத, சட்ட விரோத, மானுட விரோத செயல்களை எல்லாம் தாண்டி, மனதளவில் அது அவருடைய கருத்தியலை எந்த அளவிற்கு பாதித்தது? எத்தகைய கருத்துக்களால் ஈர்க்கப் பட்டு அவர் தன் கருத்தியலை மாற்றிக் கொண்டார் போன்ற தெளிவான விளக்கங்கள் இல்லை. அது தான் எனக்கு இருந்த ஒரே ஏமாற்றம்.
ஈ. பி ஜெயராஜன் மீதான கொலை முயற்சி தன் முன்னிலையில் நடந்த காரணத்தால் அவர் முன்னிலையில் சென்றே கம்யூனிஸ்ட்-ஆக மாற வேண்டும் என்று சுதீஷ் மின்னி முடிவு செய்கிறார். அவருடைய உயிருக்கு பல ஆபத்துக்கள் இருந்தும் அதையெல்லாம் மீறி இந்த முடிவை எடுக்கிறார். எந்த அமைப்பு அவரை போன இடம் எல்லாம் வரவேற்றதோ, அதே அமைப்பு அவரை திட்டி பக்கங்கள் நிறப்பி தன் வெறுப்பை தணித்துக் கொண்டதாக அவர் தலைமைக்கு எழுதிய மடல் மூலமாக நமக்கு சொல்கிறார்.
காந்தியின் கொலையை இறப்பு என்கிற ரீதியில் காணத் துணிந்து விட்ட இந்த சமூகத்தில், இத்தகைய புத்தகங்கள் நிகழ்கால அரசியலை பேசுகின்றன. நிகழ்காலத்தில் நாங்கள் தான் காந்தியின் சமாதானப் போக்கை கட்டிக் காக்கிறோம் என்று ஒரு புறம் காட்டிக் கொள்ளும் சிலர் திரைமறைவில் செய்யும் காரியங்கள் இப்புத்தகத்தின் மூலமாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.
நூல் : நரக மாளிகை -முன்னாள் ஆர். எஸ். எஸ் ஊழியரின் 25 வருட கால அனுபவங்களின் ஒப்புதல் வாக்குமூலம்
வகை : நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு, மொழிபெயர்ப்பு
ஆசிரியர் : சுதீஷ் மின்னி
தமிழில்: கே.சதாசிவன்
வெளியீடு : மேழி புக்ஸ்
வெளியான ஆண்டு: ஜனவரி -2022
பக்கங்கள் : -
விலை: ₹ 120
அமெசானில் நூலைப் பெற்: