புனைவுமொழிபெயர்ப்பு

மாக்ஸிம் கார்க்கியின் “மீளாத காதல்” – ஒரு பார்வை


காதல் புனிதமானது, காதல்  ஒரு முறைதான் வரும், ஒருவர் மீது வருவது மட்டுமே காதல்,நாம் காதலிப்பவர் வேறு யாரையுமே காதலித்திருக்கக் கூடாது. நம் காதலை யாரும் பறித்துக் கொள்ளக் கூடாது என்பதெல்லாம் காதல் குறித்த சம்பிரதாயக் கருத்துகளாகவும், பேராசைகளாகவும் இருக்கின்றன. காதல் குறித்த உணர்தலென்பது மிகவும் அலாதியானது. நாம் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்த ஒருவர்  நம் நினைவு அலமாரியின் கடைசி வரிசையிலிருந்து கொண்டே இருப்பார் வருடங்கள் கழிந்தோ.. நாட்கள் கழிந்தோ மீண்டும் அவரைச்  சந்திக்கும் நாட்களில் எழும் உணர்வு, அவர்மீதெழும் பிரியம் காதலை பிரகடனப்படுத்திவிடும். இது போல் காதல் எங்கு நிகழுமென்பது வரையறையில் அடங்காது. நாம் எப்போதும் காதல் ஒரு பக்கமிருக்கிறதா ?! இருவரும் உடன்பட்டதா?!  என்றெல்லாம் ஆராய வேண்டியதில்லை காதல் எப்போது  எங்குக் காதலாகவே நிலைத்து வாழ்கிறது என்றே ஆராயத் தேவையுள்ளது. இங்கு ஒரு காதலன் தன் கதையைக் கூறுகிறான்.

அவனது காதலி ஒரு நடிகையாக வாழ்ந்து இறந்து போனவள். அவள் அழகில் மயங்காதவர்களே இல்லை என எண்ணும்படியான உடற்கட்டமைப்பும் தோரணையும் கொண்டிருந்தவள். அவளுக்கு நாடகத் தொழில் மீது அளவு கடந்த வேட்கை. தன் உழைப்பை முழுவதுமாக நாடகத் தொழிலுக்காகச் செலவிட்டாலும் அவளால் சொற்ப வருமானத்தையே ஈட்ட முடிந்திருந்தது. அந்தக் காதலன் அவளின் நாடக அரங்கேற்றத்தில்தான் அவளை முதலில் சந்திக்கிறான். உடனிருந்த அவனது சகோதரனும் அவள்மீது பிரியமுடையவனாகிறான். தன்னைச் சுற்றிலும் ஈக்கள் போல ஆண்கள் மொய்த்தாலும் அவள் அதை விரும்பாதவளாகவும், அவளுக்கென்று ஒரு மிடுக்கு உடையவளாகவும் வலம்வருகிறாள். இது அந்தக் காதலனுக்கு அவள் மேலிருந்த மயக்கத்தை அதிகப்படுத்தியது. அவன் அவளுக்காக தனக்கு நிகழவிருந்த திருமணத்தை இழக்கிறான். தந்தை விட்டுச் சென்ற சோப்புக் கம்பெனியை இழக்கிறான்.  இறுதியில் தனது சகோதரனையும் இழந்துவிடுகிறான்.ஆனாலும் அவள்மீதான காதல் குறையவில்லை. அவளுக்காக அவன்  ஏதொன்றையும் செய்துவிடுபவனாக இருக்கிறான்.

இதற்கிடையே தனது நாடகப் பயணத்தில் சந்திக்கும் வேறு இருவரோடு அவளுக்குக் காதல் மலர்கிறது. தன் நாடகக் கம்பெனியின் சரிவால் அவள் மனம் மாறியவளாய்  தன் நாற்பதாவது வயதில் மேடைகளில் ஆபாசமாகத் தோற்றமளிக்கிறாள். அப்போதும் அந்தக் காதலன் அவள் ஒருநாள் தன்னிடம் திரும்பி வருவாள் என்று நம்புகிறான். அவளுக்குப் பிரியமானவர்களுடன் அவளது இரவைக் கொடுத்துவிட்டு அவன் விடியும் வரை ஊர்சுற்றி வருகிறான்..வாழ்வின் கடினமான சூழ்நிலைகளிலெல்லாம் தன்னோடிருக்கும் அவனை அவள் நல்ல நண்பன் என்றே கூறி வந்தாள். அவனது துணை அவளின் கம்பெனியை நடத்தவும் ,அவளைப் பாதுகாக்கவும் உண்மையோடிருப்பதாகச் சொல்லி வந்தாள். அந்தக் காதலன் அவளை நாடகத் தொழிலை விட்டுவிட்டுத் தன்னோடு வந்துவிடும்படி மன்றாடியும் அவள் நாடகத்தின் பின்னே தான் சென்றுகொண்டிருந்தாள். இறுதியாக அவளுக்கு இருதய நோய் ஏற்படுகிறது.

அப்போது அவள் நாடக கம்பெனியை விற்றுவிட்டு அவனோடு தன் இறுதி நாட்களைக் கழிக்கிறாள்.

இந்தக் கதையின் நாயகன் பீட்டர். நாயகி லாரிஸா. பீட்டரின் தம்பி தற்கொலை செய்து கொண்ட நாளன்று லாரிஸா உணர்ச்சிவசப்பட்டவளாகப் பேசியதாக  வரும் ” ஆண்டவன் எனக்கு அழகைக் கொடுத்திருக்கிறான்.அதற்காக அழகை விரும்புகிறவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்துவிடுவதா?! எனக்குப் பிடித்தமில்லாதவர்களால் வேறு எனக்குத் தொந்தரவு” இந்த சொற்கள் நாடகத் துறையோ எந்தத் துறையோ பெண்களுக்குள்ள வலிகள் ஒன்று தானென்பதைக் காட்டுகிறது. மேலும் ஓரிடத்தில் “இன்றைய பெண் உலகத்தில் உயரிய பண்பை உலகறியச் செய்யவேண்டும்” என்று கூறினாளென்பது அவளின் பெண்ணியப் பார்வையைக் கூறுகிறது.

இந்தக் கதையில் வரும் பீட்டரின் காதலைக் குறித்து நினைக்கும்போது மீளாத காதல் அலை மேலெழுகிறது.அத்தோடு இந்தக் கதை நடைபெற்றதாக மாக்ஸிம் கார்க்கி குறிப்பிடும் வருடங்கள் வேண்டுமானால் பழமையாகி இருக்கலாம் ஆனால் அந்தக் காதல் இன்னும் புத்துயிர்ப்போடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்ற எண்ணமும் திண்ணமாகத் தோன்றுகிறது.


நூல் தகவல்:

நூல் : மீளாத காதல்

வகை :   நாவல்

ஆசிரியர் : மாக்ஸிம் கார்க்கி

தமிழில் :  டி.என்.ராமச்சந்திரன்

வெளியீடு : நியூ சென்சுரி புக் ஹவுஸ்

வெளியான ஆண்டு: 

பக்கங்கள் :  –

விலை:  ₹  30

 

 

இந்த மீளாத காதல் ரஷ்ய மொழியில் முதன்முறையாக 1925ஆம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை இந்திய மொழிகளில் எதிலும் வெளிவராத இக்கதை மாக்ஸிம் கார்க்கியின் உன்னதங்களில் மிகச்சிறந்தது.

 

 

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *