நூல் விமர்சனம்புனைவு

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – விமர்சனம்


ழக்கறிஞர் திரு.பாவெல் சக்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. வழக்கறிஞராக இருந்தாலும் நீதிமன்றத்தின் நடைமுறைகளை, எளிய மனிதர்களுக்கு எட்டாக்கனியாகிய நீதியை, அதன் சிக்கல்களை ஒரு சாமானியனின் பார்வையில் சொல்லப்பட்டது தான் இதன் சிறப்பு. இந்நூலின் வடிவமைப்பு சிறப்பு. அட்டை படம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அட்டையைத் திறந்ததும் முதல் பக்கத்தில் “செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த ” என்ற குறுந்தொகை பாடலோடு தொடங்குகிறது சிறுகதைத் தொகுப்பு. புத்தகத்தின் தலைப்பும் அதைத் தேர்ந்தது ஏன் என்றும் பின் அட்டையில் குறிப்பில் சொல்லியுள்ளார் சக்தி.

எட்டு தஸ்தாவேஜ்களாக விரிகிறது சிறுகதைகள். ஒவ்வொன்றும் மறுக்கப்பட்ட நீதியையும், துரோகம், பழி, பாவம், ரத்தம் எனத் தெறிக்க விடுகிறது. பாவெல் சக்தி இந்த 8 சிறுகதைகளின் வழியே நம் மனசாட்சியை உலுக்கி கேள்வி கேட்கிறார். ஒவ்வொரு கதையும் கடந்துவருவது சுலபமன்று. இதில் வரும் கதை மாந்தர்களை சர்வ நிச்சயம் நாம் வாழ்வில் சந்தித்து கடந்திருப்போம்.. கண்டிருப்போம். மனம் காயப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு கதையையும் அடுத்தடுத்த சம்பவங்களைச் சொல்லிச் சட்டென்று கோர்த்த விதம் அருமை. ஆனால், இதுவே வாசிப்பு பழக்கத்துக்கு உள்ளாகும் புதியவர்களைத் தொடர்ந்து வாசிக்கக் கடினமாக்கும்.

1 ) பட்டாளத்தார் இறந்துவிட்டார்.

இதை வாசிக்கும் போது பிள்ளைகளால் கைவிடப்பட்டு வயோதிகத்தில் நடைப்பிணமாய் நீதிமன்றத்துக்கும் வக்கீல் அலுவலகத்துக்கும் நடந்தே ஓயும் முதியவர்கள் நம் கண்முன் வருவார்கள். மனைவி அழகம்மை நோய் படுக்கையில் விழுந்த போதே பட்டாளத்தார் சிதைய ஆரம்பித்துவிட்டார். தவிர எப்போது “ராஜதுரை” இல்லத்தை விட்டு நீக்கப்பட்டாரோ அப்போதே அவர் பாதி இறந்துவிட்டார். அதன் பிறகான நாட்களில் மனைவியை நோய்க்குப் பறிகொடுத்து .. சொத்துக்களைப் பிடுங்கி உனக்கு அவ்வளவுதான் என மகன் சொன்னபோதே முற்றிலுமாய் இறந்தே விட்டார். மீதி நாட்களில் மனநலம் பிறழ்ந்து திரிந்தது வியப்பில்லை.

இந்த கதையின் வழியே காலத்தை விழுங்கும் ஒரு சிவில் வழக்கு, அதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள். சலிப்பூட்டும் .. திருத்தப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளை எளியோர் பார்வையில் அருமையாகக் காட்சிப்படுத்துகிறார் சக்தி.

2) விஜயன் : பகை பாவம் அச்சம் பழி.

தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது .. ஒரு துரோகம் .. அதன் வழி விழையும் தொடர் எதிர்வினைகள்.. என நீள்கிறது. குறிப்பாக, காவல்துறையின் வேறு முகத்தைக் கிழித்துக்காட்டுகிறது இந்த கதை. புனையப்பட்ட வழக்கு, அதை ஒப்புக்கொள்ள வேண்டிச் செய்யப்படும் அரக்கத்தனம் எனக் கதை முழுக்க குருதி வாடை…!  சமூக படிநிலைகள் கொண்டு காவல்துறையும் நீதித்துறையும் மக்களை நடத்தும் விதங்களையும் இயல்பாகக் காட்சிப்படுத்துகிறார் சக்தி.

3) அமீரின் நாட்குறிப்பு : கொலைக்களத்து மாலை.

ஒரு மறுக்கப்பட்ட நீதிக்கான போராட்டத்தில் மலரும் காதல் கதை.
சிவில், கிரிமினல் வழக்குகளை முந்தைய இரு கதைகளில் சொன்ன சக்தி இதில் விபத்து வழக்கைக் களமாக்கிச் சொல்லியிருக்கிறார். நீதிமன்ற நடைமுறைகள்.. வழக்கறிஞர்களின் அன்றாடம்.. நீதிமன்றத்தின் கதவு, மின்விசிறி போன்றவற்றை வெகு அழகாக, கதையின் இடையே வரும் நெடுநல்வாடை பாடல்கள் சிறப்பு.. நுணுக்கமாக விவரித்த எழுத்தாளர் காதல் உணர்வைச் சொல்லும் போது சற்று குழம்பிவிட்டார் போலும். சில இடங்களில் வர்ணனைகள் திணிப்பாகத் தெரிகிறது .. எளிய பின்னணியில் வாழும் ஆணின் காதல் உணர்வைப் படம் பிடித்துக் காட்டிய சக்திக்கு பெண்ணின் மெல்லுணர்வு புரிபடாமல் போனது சோகம். காதல் களத்தில் எழுத்தாளருக்கு இன்னும் தேர்ச்சி வேண்டுமென எண்ணத் தோன்றுகிறது.

4) பொச்சுக்கிள்ளி

பணி மாற்றலாகி வரும் நீதிபதி அதுவரை கேட்டறியாத விநோத பெயர்களைக் கேட்டு ஆச்சரியத்தில் சிரிக்கிறார் வழக்கில் தொடர்புடையோர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்வியல் பற்றியும் அறிந்து கொள்ள ஆவலோடு முனையும் அவருக்குக் காவல் துறை அதிகாரி ஒருவர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை அவர்கள் செயலால் வந்த புனைபெயரை.. விளக்குகிறார். ஒவ்வொரு பெயர்களின் வழி விரியும் கதையும் அவர்கள் வாழ்வும் சமூகச் சூழலும் நகைச்சுவையோடு சொல்லப்படுதல் சிறப்பு. இதைப் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் அவர்களைச் சுற்றியுள்ள அல்லது அவர்களுக்கேயான புனைபெயர் நினைவு வரும்.

5) மூன்று பெண்கள் : செய்யத்தக்கச் செய்யாமை யானும் கெடும்.

தலைப்பே கதை சொல்லி விடுகிறது. வாழ்க்கைத் துணைத் தேர்வில் தவறினால் நிகழும் சிதைந்த வாழ்வை மூன்று பெண்களின் பார்வையில் சொல்கிறது. ஒரு குழந்தையின் பார்வையில் விரியும் கதை .. நீதிமன்றம்.. அதன் அமைப்பு .. விவரணை எனக் காட்சிப்படுத்தப்படுகிறது. நீதிமன்றம் போவதைத் தவிர வேறு பயணமே அறியாத குழந்தைக்கு அந்த அவலத்தைச் சந்தோஷமாக எல்லோரிடமும் சொல்லும்போது மனம் இருளுகிறது .. சமூகத்தில் துணையின்றியோ கணவனால் கைவிடப்பட்டோ தனித்து வாழும் பெண்களின் துயரத்தைச் சொன்ன விதம் சிறப்பு.

6) மார்ச் 18 : நிழல் தன் அடிவிட்டு நீங்காது.

ஒரு எளியவன் வாழ்வில் எதிர்பாராமல் எதிர்கொள்ளும் காவல்துறையின் கோரமுகமும் .. அதனால் ஏற்படும் அறச்சீற்றத்தை.. எதிர்த்து கேள்வி கேட்ட இயலாத கையாலாகத்தனம்.. எளியோரின் உள்ளக்குமுறலாய் கட்டமைத்திருக்கிறார் சக்தி.காவல் துறையில் பணியாற்றும் சில மோசமான நபர்களால்.. அவர்களின் செயலால் ஒரு சாமானியன் எத்தனை பாதிக்கப்படுகிறான் என்பதும். அதன் விளைவும்.. சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

7) சோபியா.

காலஞ்சென்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரின் நினைவேந்தல் கூட்டமாகத் தொடங்குகிறது கதை. அதில் மூத்த வழக்கறிஞரிடம் பயின்ற முக்கிய மாணவர்கள் பங்கேற்கும் கூட்டமும் மூத்தவர் சந்தித்த முக்கிய வழக்குகளும் அதை எதிர்கொண்டு நடத்தி வென்ற விதமும் என விரிகிறது. சட்டம் பயில்வோருக்கு இந்த புத்தகம் நன்கு உபயோகப்படும்.

8) நான்கு பேர்கள் இரண்டு சம்பவங்கள்.

நாடொறும் நாடு கெடும். முன்யோசனையில்லாத எந்த ஒருமுடிவும் நம்மை இன்னலுக்குள்ளாகும் போது அதையே அரசு செய்தால்..?? பணமதிப்பிழப்பும் அதனால் அத்தனை தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டதும். அதில் சதுரங்க ஆட்டம் படப் பாணி குற்ற வழக்கில் தொடர்புடையோரை எப்படிப் பாதித்தது என்று மட்டுமல்லாது. அவர்கள். வாழ்க்கை சமூகச் சூழல் என அழகாய் சற்று பகடியாக விவரிக்கிறது கதை.. முழுக்க வட்டார வழக்கில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


நூல் பற்றி :
இந்த புத்தகம் எளிய பின்னணி கொண்ட மக்களின், அவர்கள் வாழ்க்கை பாடுகளை, சமூகப் பொருளாதார கட்டமைப்பை அதன் வலிகளை, எட்டாக்கனியான நீதியை ஒரு சாமானியனின் பார்வையில் சொல்லப்படுவது சிறப்பு. வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் சக்தி. குறுந்தொகையில் தொடங்கி லேவ் தல்ஸ்தோய்-யில் முடித்தது அழகு. சம்பவங்களை முன்பின் எனக் காட்சிப்படுத்திச் சட்டென நகர்த்தும் விதம் வாசிப்புக்கு புதியவர்களைத் தடுமாற வைக்கும் . ஆனால் கூர் வீச்சாய் உள்ளிறங்குகிறது எழுத்து நடை. சிறப்பு.! காட்சியமைவுகளை இன்னும் கச்சிதமாக்கலாம். இவரின் எழுத்து அடுத்தடுத்த கதைகளில் இன்னும் மெருகேறுமென தெளிவாகுகிறது.

வாழ்த்துகள் திரு.பாவெல் சக்தி !


நூல் பின் அட்டையிலிருந்து:

நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப் பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவர்களை கொலைகளுக்கு பலிகொடுத்து விட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக்கொண்டு இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களும், தோல்வியடைந்த திருமணங்களினால் கைவிடப்பட்டவர்களும், அவர்கள் தூக்கிச் சுமக்கும் குழந்தைகளும், கடைசிக்காலத்தில் கைவிட்டுப்போன பிள்ளைகளிடம் கையேந்தும் வயதானவர்களும் என... போர்க்களம்போல காட்சியளிக்கும் நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும்தான் அனுதினமும் கொத்துக்கொத்தாக குவிகிறார்கள். அவ்வாறு குவிகின்றவர்களின் இறுதி நம்பிக்கையும் அரசினால், அதிகாரங்களினால், அலட்சியங்களினால், சட்டங்களின் நுணுக்கங்களினால் நெரித்துக் கொல்லப்படும்போது, சிவப்புநிறக் கட்டிடங்களான இவை எனக்கு, குறிஞ்சிநில முருகன் அமர்ந்திருக்கும் செங்கோட்டு யானைகளாகவும், அசுரர்களின் ரத்தத்தால் மூழ்கிப்போன அதன் கூர்மையான தந்தங்களாகவும்தான் தெரிகின்றன..

நூல் தகவல்:

நூல் : நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : பாவெல் சக்தி

வெளியீடு :  எதிர் வெளியீடு

 ஆண்டு :  செப்டம்பர் 2020

பக்கங்கள் : -

விலை:  ₹  399

நூலைப் பெற :

பாவெல் சக்தியின் மற்ற நூல்கள்

பின்நவீனத்துவமும் அடையாள அரசியலும்

ஆசிரியர் :  அய்ஜாஸ் அகமது
தமிழில் : பாவெல் சக்தி
வகை :  மார்க்சியம்
பதிப்பகம் : பொன்னுலகம்
ஆண்டு : 2016
விலை : ₹ 70

என்.ஜி.ஓ-க்கள்: ஓர் ஏகாதிபத்திய அபாயம்

ஆசிரியர் :  ஜேம்ஸ் பெட்ராஸ்
தமிழில் : பாவெல் சக்தி
வகை :  மார்க்சியம்
பதிப்பகம் : பொன்னுலகம்
ஆண்டு : 2018
விலை : ₹ 100

தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக் குறிப்புகள்

ஆசிரியர் :  பாவெல் சக்தி 
வகை : சிறுகதைகள்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
ஆண்டு : 2022
விலை : ₹ 450

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *