Let's Chat

வினிதா மோகனின் “பீனிக்ஸ் பெண்கள்” – ஒரு பார்வை


னது முதல் ஆட்டத்திலேயே சதமடித்த கிரிக்கெட் வீரர் போல, தனது முதல் படைப்பையே முத்தான படைப்பாக, “பீனிக்ஸ் பெண்கள் ‘ என்னும் தலைப்பில் எழுத்தாளர் வினிதா மோகன் கொடுத்திருக்கிறார். பீனிக்ஸ் பெண்கள் என்னும் இந்த நூல், 20 பெண்களின் சாதனை வரலாறு.அந்த 20 பெண்கள், உலகத்தின் பல பகுதியைச் சார்ந்தவர்கள். அவர்கள் தங்கள் செயலால், மேன்மை மிக்க நோக்கத்திற்கான போராட்டத்தால், தனித்துவமான எழுத்தால், விண்ணில் பறந்த சாதனையால், சோதனைகளைத் தாண்டி மீண்டும் எழுந்ததால் அவர்கள் ‘பீனிகஸ் பெண்கள்’.

வினிதா மோகன், பீனிக்ஸ் பெண்களாக எழுந்த பெண்களின் சாதனைக்கு முந்தைய துன்பங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். 65 சதவிகிதத் தீப்புண்கள் அடைந்த உடம்போடு, குணமடைந்து மீண்டும் உயிர்ப்பாய், துடிப்பாய் ஒரு பெண் இயங்கமுடியுமா?.. முடியும்! என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ‘துரியா பிட்’ வியப்பைத் தருகின்றார்.துரியா பிட்டின் வாழ்க்கை வரலாற்றை, உணர்ச்சி ததும்பும் தனது விவரிப்புச்சொற்களால் வாசிப்பவரின் மனதிற்குள் புகுத்தி விடுகிறார் வினிதா மோகன்.

அமெரிக்காவின் கறுப்பு நிறத்துப்பெண், பேருந்தில் வெள்ளை நிறத்து ஆட்கள் உட்காருவதற்காக எழுந்திருக்கச் சொன்னபோது, எழுந்திருக்க மறுத்து, ஒரு எழுச்சிமிக்க போராட்டத்திற்கு வழி வகுத்த ‘ரோசா லூயிஸ் பார்க்கஸ் ‘சரியான ஒன்றை நீ செய்யும்போது அதைச்செய்வதற்கு நீ ஒருபோதும் பயப்படக்கூடாது ‘ என்று சொன்னதை, அவரின் சொற்படியே அவர் வாழ்ந்ததை நன்றாகவே கட்டுரையாக ஆக்கியுள்ளார் நூலாசிரியர்.

உலக அழகியாக உயர்ந்த திருநங்கை ஏஞ்சலா போன்ஸ் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பு எப்படியெல்லாம் துன்பப்பட்டார், ஆனால் அதனை எப்படித் தனது உழைப்பால், மதி நுட்பத்தால் வசப்படுத்தினார் என்பதனை விவரித்து ‘புதிய சமுதாயம் என்பது அனைத்துப் பாலினத்தவரும் சமமாக மதிக்கப்படுவதாகும்’ என்று குறிப்பிட்டு அந்த நோக்கத்தை நோக்கி நம்மைச் சிந்திக்க வைக்கிறார். இவை சில எடுத்துக்காட்டுகள்.

“வாழ்வில் உங்களுக்குச்சோர்வை நீக்கி,அறிவையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து, துடித்து எழத்தூண்டும் ஒரு உற்சாக டானிக்’ என்று இந்த நூல் பற்றி முன்னுரையில் வினிதா மோகன் குறிப்பிடுகின்றார். உண்மைதான். ‘சிறப்பு மிக்க நூலினை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம் .’ எனப் பதிப்புரையில் எழிலினி பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளனர். ஆமாம், சிறப்பான நூல், சிந்தனையைத் தூண்டும் நூலே ‘பீனிக்ஸ்பெண்கள்’.

வாழ்த்துகளும், பாராட்டுகளும் நூலாசிரியர் வினிதா மோகன் அவர்களுக்கு.


முனைவர் வா.நேரு

தலைவர்,

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை.

வினிதா மோகன்

திருமதி. வினிதா மோகன் கரூர் மண்ணின் புதல்வி, பி.எஸ்.ஸி. பட்டம் பெற்றவர், பள்ளி, கல்லூரி நாட்களில் வாழ்வில் “தனித்தடம்” பதிக்கவேண்டும் என்ற கனவுடன் வலம் வந்தவர். சமூகத்தின் மீதான அக்கறையையும் அப்போதே வளர்த்துக்கொண்டவர்.

இன்று ஒரு சிறந்த இல்லத்தரசி, வளர்ந்துவரும் தொழிலதிபர், கவனம் ஈர்க்கும் ரோட்டரி நண்பர், 2018-2019ஆம் ஆண்டில் ரோட்டரி மாவட்டம் 3000 இல் மாவட்ட உதவி ஆளுனராகச் சிறப்பாகப் பணியாற்றியவர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மாலத்தீவு, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்குச் சென்று வந்தவர். நூல் வாசிப்பு இவரது சுவாசம்; மக்கள் சேவை இவரது நேசம்.

நூலிலிருந்து:

“பீனிக்ஸ் பெண்கள்” இந்த நூல், தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை வென்று, தத்தம் துறைகளில் வரலாறு படைத்த 20 போராளிப் பெண்களின் வாழ்க்கைப் பதிவாகும். பல்வேறு நாடுகள்… பல துறைகள்… மாறுபட்ட சூழல்கள். எந்தவித வசதிவாய்ப்பும் இல்லாமல் ‘துணிவு’ ஒன்றையே துணையாகக் கொண்டு, தடைகளைத் தகர்த்து ‘சாம்பலில் இருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவைகள்’. கடந்த 1980ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை உலகின் கவனத்தை ஈர்த்த சாதனைப்பெண்களை இந்த நூலில் மையப்படுத்தி உள்ளேன். மற்ற சுயசரிதை நூல்களிலிருந்து இது ஒரு மாறுபட்ட படைப்பாகும்.

வாழ்க்கையில் நிறையச் சாதிக்க விரும்புபவர்களுக்கும் வாழ்வில் எதையாவது சாதித்தே தீரவேண்டும், என்ற இலட்சியதாகம் கொண்டவர்களுக்காகவுமே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த தங்கமங்கையரின், வாழ்க்கையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் இந்நூலில் நிறைய உள்ளன. இந்த நூலை வாசிப்பதால் உங்கள் பிரச்சனைகளுக்குத்தீர்வு கிடைக்கும்; உங்கள் வாழ்வும் சிறப்படையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

‘நாம் ஏன் பிறந்தோம்?’ என்ற கேள்விக்கான விடைகள் நூலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. நூலை வாசித்துப்பாருங்கள்; வானத்தில் பறப்பதைப் போல் உணர்வீர்கள்.

நூல் தகவல்:

நூல் : பீனிக்ஸ் பெண்கள்

வகை :   வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்

ஆசிரியர் : வினிதா மோகன்

வெளியீடு :  எழிலினி பதிப்பகம்

 ஆண்டு : 2020

பக்கங்கள் : –

விலை:  ₹ 250

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

close
www.vimarsanam.in
பதிவுகள் குறித்து அறிய

We don’t spam! Read our privacy policy for more info.

Share >

Leave a Reply

Your email address will not be published.

மேலே செல்ல
%d bloggers like this: