ஒருவர் நீதிபதி ஆகிறார். அவர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? தனக்கு முன்னால் செங்கோல் ஏந்திய ஊழியர் செல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கிறார். “மைலார்ட்” என்று தன்னை விளிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை சார் என்று அழைத்தால் போதும் என்கிறார். தன் நீதிமன்ற வாசலில் இவ்வாறு எழுதுகிறார், “இங்கு தெய்வங்கள் ஏதும் இல்லை, பூக்கள் வேண்டாம். இங்கு யாருக்கும் பசியில்லை, இனிப்பு வேண்டாம். இங்கு யாருக்கும் குளிரவில்லை, சால்வை வேண்டாம்.” மேலும் தனக்கும் தன் வீட்டுக் காவலுக்கும் அளிக்கப்பட்ட 300 காவலர்களை வேறு உபயோகமான பணிகளில் அமர்த்த ஆலோசனை வழங்குகிறார்.
இப்படிப்பட்ட மாண்புகளுக்குச் சொந்தக்காரர் நீதிபதி கே. சந்துரு அவர்கள். அவர் தன் சுயசரிதையைக் கூறுவதன் மூலம் தான் சட்டத்துறையில் சந்தித்த, நிகழ்த்திக் காட்டிய பல அனுபவங்களைக் கூறுகிறார் இந்த நூலில். அவரின் மனிதாபிமானம் மிக்க தீர்ப்புகள், எளியோரின் நியாயத்தின் பக்கம் நிற்கும் பண்பு, அறம் சார் வாழ்க்கைக்குத் துணை போகும் வழி, அதில் சக நீதிபதிகளே ஆனாலும் தவறைச் சுட்டிக் காட்டும் வல்லமை நம்மைக் கட்டிப்போடுகின்றன. கரம் பற்றி சந்துரு சார் – ஐக் கட்டிக் கொள்ளவும் தோன்ற வைக்கின்றன.
நானும் நீதிபதி ஆனேன் என்ற இந்த நூல் 22 அத்தியாயங்களில் தோழர் சந்துரு சந்தித்த முக்கியமான வழக்குகளைப் பேசுகிறது. நூலின் தலைப்பில் உள்ள நானும் என்ற ‘உம்’ காரத்திலேயே ஒரு அழுத்தம் உண்டு. அந்தக் கட்டுரை கடைசிக் கட்டுரை. நமக்கு முதல் தரமானது. அவருடைய பெயர் நீதிபதி நியமனத்திற்காக மூன்று முறை பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டு முறை மாநில அரசால் அனுமதி மறுக்கப் படுகிறது. இங்கு கொலேஜியம் பற்றி விளக்குகிறார். மூன்று நீதிபதிகள், ஒருவர் வேற்று மாநிலத்தவர், மற்ற இருவர் சொந்த மாநிலம். இந்த அமைப்பு முதலில் பரிந்துரைக்க வேண்டும். பின்னர் மாநில அரசு, நுண்ணறிவுக் குழு (IB) வின் வழிகாட்டுதல் பேரில் பரிந்துரைக்கும். பின்னர் உச்ச நீதி மன்ற கொலேஜியம்.. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் ஆணையை வழங்குவார். இவர் பெயர் மூன்றாவது முறை ஜெயலலிதா ஆட்சி மாறி, கலைஞர் வந்த பிறகுதான் பரிந்துரைக்கப் படுகிறது.
எந்தக் கலைஞர் அனுமதித்தாரோ அவரைப் பற்றியே முதல் கட்டுரை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கலைஞருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவெடுக்கிறது. பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் எதிர்ப்பு, காவலர் தடியடி.. மாணவன் உதயகுமார் மரணம். அப்போது சந்துரு மாணவர் சங்கத் தலைவர். உதயகுமாரின் தந்தையே கிடைத்த மாணவனின் உடல் உதயகுமார் அல்ல என்று சொல்ல வைக்கிறார்கள். மாணவனாக சந்துரு தினமும் விசாரணைக்கு அலைகிறார். கடலூரில் தங்குவதற்கு விடுதிகள் மறுக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து சிதம்பரம் ஆஜராகிறார். இறுதியில் இறந்தது உதயகுமாராக இருக்க வாய்ப்பில்லை என்று “நீதி” வழங்கப்படுகிறது. சட்டசபையில் தன்னைக் கொல்ல நடந்த முயற்சி என்று கலைஞர் பதில் சொல்கிறார். ஆகையால்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினையானது என்கிறார். இவை போன்ற அனுபவங்கள் சந்துருவை சட்டக் கல்லூரி நோக்கி நகர்த்துகின்றன. சட்டப்படிப்பில் நுழைகிறார்.
பிறகு வரும் அத்தியாயங்கள் அவர் சட்டம் முடித்து, வழக்குரைஞர் ஆகுதல், ஜுனியராகச் சேர்ந்த அனுபவங்கள், சந்தித்த மிகச் சிறந்த வழக்குரைஞர்கள், அவர்களின் வாழ்வு தன்னைப் புடம் போட்டது என்று விரிகிறது. தனியாக வழக்குரைஞராக உருமாறும் போது சிறப்பியல்புகள் வெளிப்படுகின்றன. நமக்கு மிகவும் தெரிந்த ஜெய்பீம் கதை போன்ற பல ஏழை மக்களின், பழங்குடிகளின் நியாயங்கள் வெளியே வருகின்றன. தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாதாடி, வெற்றி பெற்ற நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. மீனாட்சி பெண்கள் கல்லூரி ஊழியர்கள் போராட்டம் அறிவிக்க, காவல் துறை அதை அனுமதிக்கக் கூடாது என்று வழக்கு போடப்படுகிறது. சந்துரு ஊழியர்களுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார். விசாரணைக்கு வரும் நீதிபதி சற்று காலதாமதமாக வர, காரணம் அன்றைய முதல்வர் MGR கடற்கரையில் திடீர் உண்ணாவிரதம் என்ற செய்தி வருகிறது. சந்துரு இதைத் திறமையாகப் பயன் படுத்தி, முதல்வருக்கே அனுமதி வாங்காமல் போராடலாம் என்னும் போது ஊழியர்களை அனுமதி மறுத்தல் நியாயமா என்று வாதாடுகிறார். அனுமதி அளிக்கப் படுகிறது. மற்றொரு முறை ஒரு தொழிலாளர் பிரச்சினையில் வாதாட வேண்டுமெனில் அந்த ஊழியர் சங்க உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும், என்ற விதி இருந்ததால், சங்கப் பொதுக்குழுவை உடனே கூட்ட வைத்து, தன் சீனியரை துணைத் தலைவராக்கி வாதாட வைக்கிறார். இப்படி சிந்தனை முழுவதும் எளியவர்கள் பக்கமே நிற்கிறது.
அவசரநிலை பற்றி நாம் அறிவோம். அந்த மிசா அனுபவங்கள், அதற்கு அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன், அதன் பரிந்துரைகள், அது குப்பையில் போடப்பட்டதன் பின்னணி, அதற்காகத் தான் வாதாடிய விவரங்கள், சிட்டிபாபுவின் கடிதம் அதை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற ஜட்ஜ் முடிவு என்ற பல விஷயங்களை ஒரு அத்தியாயம் பேசுகிறது.
நீதிபதியான பின்னர் இவர் கொடுத்த தீர்ப்புகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்து படிக்கத்தக்கது. மறைந்த கிருஷ்ணய்யர் வாழ்த்துத் தெரிவித்ததை நெகிழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார்.
“எம் மடல் பாசத்துடன் கூடிய எதிர்வினை. பிரமாண்ட நாளையை எதிர்கொள்ள விழையும் உனக்கு நேர்மை, ஞானம், தைரியம் மட்டுமன்றி பழங்குடியினர் உள்ளிட்ட சாதாரண மக்கள் மீது அக்கரை வர வேண்டும். நீதிபதிகள் வர்க்கமே தர்மத்தினின்று பிறழ்ந்து செல்லும் இவ்வேளையில் நீ போக வேண்டிய தூரமோ மைல் கணக்கில். காக்க வேண்டிய உறுதிகளோ ஏராளம். “
பணி ஓய்வு பெறும் வரை, அவரின் வார்த்தைகளை மறக்கவில்லை சந்துரு.
நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், யார் யார் இவர் வழக்குரைஞராக இருக்கும் போது பாராட்டினார்களோ அவர்களே இவர் நீதிபதி ஆனதும் வெறுத்தார்கள். இவர் வழக்குகளை முடித்து வைக்கும் வேகம் அவர்களை மலைக்க வைத்தது. ஒரு வழக்கு எடுக்கப்படும் போது நோட்டிஸ் அனுப்புதல் என்பார்கள். அது முதல் படி. அது வந்தாலே வழக்குரைஞர்களுக்குக் காசு வர ஆரம்பித்து விடும். ஆனால் சந்துரு பெரும்பான்மை வழக்குகளை, முன்னால் உள்ள அதே போன்ற வழக்குகளின் முடிவைக் கொண்டு ஆராய்ந்து தள்ளுபடி செய்து விடுவாராம். இது அவர்களின் எரிச்சலுக்குக் காரணம். மதுரை நீதி மன்றம் வந்த வரலாறு, அங்கே தன்னை மாறுதல் செய்ய வேண்டிய அவசியம் (ஜெ. காலத்தில் நீதிமன்ற விழாக்கள் அதிக பொருட்செலவில் நடத்தப்பட்டன ;சந்துரு அதை எதிர்த்தார்) பின்னணி பற்றி விளக்கமாகச் சொல்கிறார். இருந்தும் அதைக் கூட மதுரையில் பத்தாண்டுகளுக்கு மேல் விசாரணைக்கே வராத பல வழக்குகளைத் தீர்த்து வைத்ததைக் கூறுகிறார். கிட்டத்தட்ட 96000 வழக்குகளை 7 வருடங்களில் முடித்து வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இவர் காலங்களில், தீர்வையில் இருக்கும் வழக்குகளைத் தீர்த்து வைப்பதில் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்ததும் வியப்பல்ல.
தான் பணி புரிந்த காலத்திலிருந்த காலத்தில் உடன் இருந்த நீதிபதிகளை, அவர்களின் அறம் பிறழ்ந்த வாழ்வைக் கூறிச்செல்கிறார். தான் நீதிபதி ஆனால் தனக்கு முன் செங்கோல் ஏந்திச் செல்ல ஊழியர்கள் வேண்டும் என்று கேட்ட நீதிபதியைக் காட்டுகிறார். இதுதான் அவர் பின்னால் எடுத்த முடிவிற்கும் காரணமாகி இருக்கலாம். தன் பதவியைப் பயன்படுத்தி இலாபம் அடைந்த நீதிபதி, அவரைப்பற்றி கம்ளெயிண்ட் கொடுத்தும் நிரூபிக்க முடியாமல் போனது என்று சில அத்தியாயங்கள் செல்கின்றன.
இது போலச் சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவு, பின்னர் இலங்கைப் பிரச்சினை காரணமாகத் தன்னை வெளியேற்றிய நிகழ்வு, ஜெய்பீம் வெற்றி விழாவிற்குத் தன்னை அழைக்காமல் விட்டது என்று தன்னைப்பற்றியும் கூறுகிறார். முன்னுரையில் தான் பல பொது தீர்ப்பாயங்களுக்குத் தலைமை ஏற்பதையும், அதைத் தடுக்கவும் சிலர் முயல்கிறார்கள் என்றும் கூறுகிறார்.
அவருடைய கூற்றிலேயே முடிக்கிறேன். நூலைப் படிப்பதுதான் நாம் அவருக்குக் கொடுக்கும் கௌரவம்.
“குதிரையில் அமர்ந்திருந்தாலும் லகான் கையில் இல்லை என்று பதவியேற்கும் போது கூறினேன். அப்படிப்பட்ட லகானைக் கைப்பற்றி, இறுகிப் பிடித்து சேணப்படியில் காலை அழுத்தியதில் குதிரை பஞ்சாகப் பறந்தது. பயணமும் விரைவில் முடிந்தது.”
நூலின் இறுதியில் கொடுக்கப்பட்ட இணைப்புகள், அவை சொல்லும் வரலாறு பற்றி தனியே எழுதலாம்.
நூல் : நானும் நீதிபதி ஆனேன்! ஆசிரியர் : கே.சந்துரு வகை : சுயசரிதை & வாழ்க்கை வரலாறு வெளியீடு :அருஞ்சொல் வெளியீடு வெளியான ஆண்டு : ஜனவரி 2022 பக்கங்கள் : 443 விலை : ₹ 500 Buy on Amazon :