இரண்டு மாதங்களுக்கு முன்பு நானும் நண்பர் அருணாச்சலம் அவர்களும் திருநெல்வேலி புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டிருந்தோம். காரை ஒட்டியபடியே சமீபத்தில் படித்த புத்தகங்கள், பிடித்த எழுத்தாளர்கள் என்று பேசிக்கொண்டே வந்தார். விருதுநகர் பக்கத்தில் ஒரு மோட்டலில் தேநீர் குடிப்பதற்கு ஒதுங்கினோம். பஜ்ஜியும், சாமோசாவும் சூடாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஆளுக்கு இரண்டு சமோசா மற்றும் பஜ்ஜிகளைச் சட்னி வைத்து எடுத்துக் கொண்டு டேபிளில் உட்கார்ந்த போது திடீரென்று பேச்சு எழுத்தாளர் பாலகுமாரன் குறித்துத் திரும்பியது. குறிப்பாக அவரது ‘’கண்ணாடி கோபுரங்கள்’’ நாவல் குறித்து அதில் இருக்கும் கதை சொல்லல் உத்தி குறித்து அருணாச்சலம் பேச ஆரம்பித்தார். பாலகுமாரனின் நாவல்களில் முக்கால்வாசி படித்திருந்தாலும் இந்த நாவலை நான் படித்திருக்கவில்லை. நான் அவரது தாயுமானவன் நாவலைப் படித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டேன். கணவன் House Husband ஆக இருக்க மனைவி வேலைக்குப் போகும் சூழலை முதலில் எழுதிய நாவல் அது. பிடித்த நாவல்களில் ஒன்று. எழுத்தாளர் பாலகுமாரனே இயக்கி நடிகர் சந்திரசேகர் நடிக்கச் சென்னை தொலைக்காட்சியில் வாரத் தொடராக வந்து வரவேற்பையும் பெற்றது. வழக்கம் போல நாவல் அளவுக்கு தொடர் தாக்கத்தைத் தரவில்லை என்று சொன்னவர்களும் உண்டு. திருநெல்வேலி புத்தக சந்தை சென்றவுடன் புலம் பதிப்பக ஸ்டாலுக்கு எதிரே திருமகள் நிலையம் ஸ்டாலும் அமைந்து இருந்தது. நானும் அருணாச்சலம் அவர்களும் உள்ளே சென்று புத்தகங்களைப் பார்க்கத் தொடங்கினோம். உள்ளே பாலகுமாரனின் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. முன்கதை சுருக்கம், கண்ணாடி கோபுரங்கள் என்று இரண்டு புத்தகங்களை ‘’நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்’’ என்று நண்பர் அருணாச்சலம் வாங்கியும் கொடுத்தார். முன்கதைச் சுருக்கம் பாலகுமாரனின் சுருக்கமான சுயசரிதை எனலாம். தாய் வார இதழில் தொடராக 1989 ஆம் ஆண்டு வந்த போது சில வாரங்கள் படித்திருக்கிறேன். ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனாக இருந்த எனக்கு அப்போது அந்த தொடரின் அருமை புரியவில்லை. சொந்த வாழ்க்கையில் நடந்த சில முக்கிய அனுபவங்களை எழுதுகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பின்னர் புத்தகம் வந்த போது கூட நூலகத்தில் அவரது நாவல்களை எடுத்துப் படித்த நான் இந்த புத்தகத்தை எடுத்துப் படிக்காமல் விட்டு விட்டேன்.
கொரானோ விடுமுறை நாட்களை முன்கதை சுருக்கம் புத்தகத்தில் இருந்து ஆரம்பித்தேன். இரவு முழுவதும் கீழே வைக்காமல் படித்து முடித்தேன். பல அவமானங்கள், போட்டி, பொறாமை, கூட இருந்து குழி பறிக்கும் கயமை, நம்மிடம் உதவி பெற்றும் கூட மற்ற இடங்களில் புறம் பேசும் தன்மை, நண்பர்கள் போலப் பழகிவிட்டு காலை வாரி தொழிலில் முன்னேற விடாமல் தடுத்தல் போன்ற எல்லாவிதமான அனுபவங்களையும் இந்த 40 வயதுக்குள் பெற்று நிற்கும் எனக்கு முன்கதை சுருக்கம் புத்தகம் பல விஷயங்களுக்குக் கண் திறப்பாக இருந்தது. எனவே தான் புத்தகம் குறித்து எழுதியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் வெகுஜன வாசகர்களிடம் அதிகமான தாக்கம் செலுத்தியவர்கள் சுஜாதா மற்றும் பாலகுமாரன் இருவர் மட்டுமே. இவர்கள் காலத்தில் எழுதி வந்த பல வெகுஜன எழுத்தாளர்களின் புகழ் ஒரு காலத்தில் மங்க இந்த இருவர் மட்டுமே இறுதிவரை எழுதிப் புகழ் மற்றும் செல்வாக்குடன் வாசகர்களிடம் இருந்தார்கள்.. இருவரின் எழுத்து பாணியும் முற்றிலும் வேறானது. சுஜாதாவின் எளிமையான வேகநடையும், தி.ஜானகிராமனின் இலக்கிய உரைநடையும் இணைந்து உருவானதுதான் தனது உரைநடை என்று பாலகுமாரனே பல இடங்களில் எழுதி இருக்கிறார். தீவிர இலக்கியத்தில் ஆரம்பக் கட்டத்தில் எழுத வரும் இளம் எழுத்தாளர்கள் சிலர் அவரது படைப்புகளைப் படிக்காது “அவர் வணிக எழுத்தாளர்” என்று சொல்வதுண்டு. அவர்களுக்குப் பாலகுமாரனின் படித்தே ஆக வேண்டிய ஆக்கங்களான ‘மெர்குரிப் பூக்கள்’, ‘இரும்பு குதிரைகள்’, ‘கரையோர முதலைகள்’ ஆகியவற்றைப் படிக்கும் படி சொல்லியிருக்கிறேன். Plot Building எனப்படும் ஒரு கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதற்கான கதாபாத்திரங்களை உருவாக்கிக் கதை நடக்கும் களனை பொருத்தமாக உருவாக்கி உளவியல் ரீதியாக நாவலைச் சுவாரஸ்யம் குறையாமல் எடுத்துச்செல்வதில் பாலகுமாரன் வல்லவர். இத்தனைக்கும் அவரது பெரும்பாலான நாவல்கள் இதழ்களில் தொடர்கதையாக வந்து புத்தகமாக உருமாற்றம் அடைந்தவை. அவரது நாவல்களில் தாயுமானவன், நிழல் யுத்தம், ஆனந்த வயல், இனியெல்லாம் சுகமே, திருப்பூந்துருத்தி, மரக்கால், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்றவை பல்வேறு தளங்களில் அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள் பட்டியலில் சேர்க்கலாம். அதே போல அவரது நாவல்களை எளிதாக ஷாட் பிரித்து படம் பிடிக்கக் கொண்டு போகும் அளவுக்கு வடிவமும், உரையாடல்களும் இருக்கும். அவர் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு வசனம் எழுதி வெற்றிகரமாக இருந்ததற்குக் காட்சி வடிவமாகச் சிந்தித்து எழுதியது முக்கிய காரணம்.
நாயகன், பாட்ஷா, காதலன், மன்மதன், முகவரி, புதுப்பேட்டை ஆகிய படங்களை அவர் எழுதிய படங்களில் முக்கியமானது எனலாம். “நாலு பேரு சாப்பிடறதுல எதுவும் தப்பில்ல” என்ற நாயகன் வசனம் இன்றளவும் நினைக்கப்பட்டு வருகிறது. “கோபமோ, சந்தோஷமோ எதுவும் இருந்தாலும் 10 வினாடி தள்ளிப்போடு” என்ற காதலன் படத்தில் வரும் வசனம், “நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன், இரண்டு பேரும் ஊதி ஊதிச் சாப்பிடலாம் என்பது வாழ்க்கைக்கு உதவாது” என்னும் முகவரி படத்தில் வரும் வசனமெல்லாம் அவரால் மட்டுமே எழுத முடியும். அவர் வாழ்க்கையில் பார்த்த, அனுபவித்த அனுபவங்களைத் தான் பல இடங்களில் வசன தெறிப்புகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
முன்கதை சுருக்கம் புத்தகத்தில் தனது இளம் பிராயம் தொட்டு ஆரம்பிக்கிறார். பக்தி இலக்கியங்கள் அவரது அம்மா மூலம் அறிமுகமாகி வாசிக்கத் தொடங்கி வாசக பருவம் ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் கல்கி, புதுமைப்பித்தன், பி,எஸ்.ராமையா, மௌனி என்று அவரது இலக்கிய ஆர்வம் விரிவடைகிறது. ஜெயகாந்தன் எழுத்துக்களைப் படிக்கும் போது அவருக்குள் எழுதும் பொறி உருவாகிறது. ஜெயகாந்தன் எழுத்துக்கள் தனக்கு ஆதர்சமாக இருந்ததைப் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். கவிதைகள் எழுதத் தொடங்குகிறார். முதல் இரண்டு கவிதைகள் கணையாழியில் வெளிவருகிறது. கசட தபற இலக்கிய இதழின் குழுவினரின் நட்பைப் பெறுகிறார். முக்கியமாகக் கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களை பல்வேறு விஷயங்களைக் கவிதையில் அறிமுகப்படுத்தியவர் என்றே குறிப்பிடுகிறார். சுப்ரமணிய ராஜுவுடன் நட்பு ஏற்படுகிறது. இருவருக்குள்ளும் பல கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தாலும் நட்பு மாறாமல் இருக்கிறது. சிறுகதை எழுதத் தொடங்குகிறார். இரண்டாவது கதையான சின்ன சின்ன வட்டங்கள் இலக்கிய சிந்தனை பரிசை பெறக் கவனிக்கப்படும் எழுத்தாளராக மாறுகிறார். அதன் பின் குமுதம் ஆசிரியரின் அறிமுகம் கிடைத்து அவரது கதைகள் குமுதத்தில் வரத் தொடங்குகிறது. அவரது முதல் நாவலான மெர்குரிப் பூக்கள் தொடராக வெளிவரச் சாவி வார இதழில் வாய்ப்பு தரப்படுகிறது. அந்த நாவலின் வெற்றிதான் தான் பாலகுமாரனைத் தமிழ்நாடு முழுக்க தெரிந்த எழுத்தாளராக மாற்றியது. அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட போட்டிகள், பொறாமைகள் என அனைத்தையும் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். இளம் வயதில் அவருக்கிருந்த காதல் உறவுகள், வண்ணநிலவன் கதையை அவரின் அனுமதி பெற்று தனது கதையாகக் குமுதத்தில் வெளிவந்த சம்பவம் என எதையும் மறைக்காமல் எழுதத் தனி தைரியம் வேண்டும். வண்ணநிலவனுக்கும் அவருக்கும் இருந்த நட்பு, சூழ்நிலை காரணமாக முதல் மனைவியின் சம்மதத்துடன் சாந்தா அவர்களை மணமுடித்த கதையையும் விரிவாக எழுதியிருக்கிறார். அவரது குடும்பம் எவ்வாறு தொடர்ந்த எழுத்து செயல்பாடுகளுக்குத் துணை புரிந்தது, எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஆத்ம சுத்தி, ஒழுக்கங்கள் என அத்தனையும் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். சிறுகதை எழுதச் சொல்லிக்கொடுத்த சுஜாதாவிடமே ஒரு பார்ட்டியில் மது போதையில் ‘’உங்களை எழுத்தில் அடித்துக் காட்டுகிறேன்’’ என்று சவால் விட்டதையும் எழுதியிருப்பவர் அதன் பின்னர் மது பழக்கத்தை முற்றிலும் விட்டு எழுத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தியதைப் படிக்கும் போது பல்வேறு சோதனைகளை கடந்து தான் ஒரு எழுத்தாளன் வளர வேண்டியிருக்கிறது என்று நிரூபணமாகிறது. ஒரு எழுத்தாளனுக்கு வரும் சோதனைகள், அதைச் சாதனைகளாக மற்ற அவர் காட்டிய உழைப்பு என்று அத்தனை விஷயங்களையும் இந்த நூலில் சொல்லியிருக்கிறார். எழுத்தாளராக விரும்பும் ஒருவர் அவசியம் முன்கதை சுருக்கம் படிக்கவேண்டும்.
சென்னைக்கு வந்த புதிதில் அவரை சந்திக்க விரும்பி, திருமகள் நிலையத்தில் அவரது எண் வாங்கி பேசியிருக்கிறேன். என்னைப் பற்றி விசாரித்தார். அப்போது கணையாழி, விருட்சம் இதழ்களில் இரண்டு கதைகள் எழுதி இருந்தேன். கதைகளை அனுப்பி வைக்கச் சொன்னார். கொரியர் மூலம் இதழ்களை அனுப்பி வைத்தேன். அடுத்த வாரம் பேசிய போது கதைகளைப் படித்திருந்தார். ‘’மகேந்திரா, கதைகளை படிச்சேன்யா , உனக்கு எழுத வருது, தொடர்ந்து எழுது’’ என்றார். அவரை சந்திக்க விரும்புவதாக சொன்னேன். ‘’யோவ் நான் ஒரு சமையல்காரன், நீ ஒரு சமையல்காரன் இரண்டு பேரும் சந்திச்சு என்ன பேசப்போறோம், உனக்குள்ள உன்னைத் தேடு, உனக்குச் சொல்ல வேண்டியதை என் புத்தகங்கள் மூலமா சொல்லிட்டேன், நிறையப் பயணப்படு, எழுது, நல்ல வருவ, எனது ஆசீர்வாதங்கள்’’ என்று முடித்துக் கொண்டார். புத்தக வெளியீட்டு விழாக்களில் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவேன். மின்னம்பலத்தில் வேலை பார்த்த காலத்தில் எங்கள் ஸ்டாலுக்கு எதிரே சென்னை புத்தகக் கண்காட்சியில் திருமகள் நிலையம் ஸ்டால் அமைய நான் தினமும் சென்று கொண்டிருந்தேன். ஒருநாள் அங்குப் பாலகுமாரன் வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக எங்கள் ஸ்டாலுக்கு வரும்படி அழைத்தோம். அன்புடன் வருகை தந்து புத்தகங்களைப் பார்த்தார். சிறிது நேரம் அமர்ந்துவிட்டுப் புறப்படத் தயாரானார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். அதுதான் அவருடன் எடுத்துக் கொண்ட ஒரே புகைப்படம். அவர் தலைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது ‘’கற்றுக்கொண்டால் குற்றமில்லை’’ எந்த நல்ல விஷயங்களையும் எப்போதும். அதையே தனது எழுத்துக்களின் வழி வலியுறுத்திச் சென்றிருக்கிறார்.
– விஜய் மகேந்திரன்
நூல் : | முன்கதை சுருக்கம் |
பிரிவு : | சுயசரிதை |
ஆசிரியர் : | பாலகுமாரன் |
வெளியீடு: | விசா பப்ளிகேஷன்ஸ் |
வெளியான ஆண்டு : | முதல் பதிப்பு : 1989 |
பக்கங்கள் : | 224 |
விலை : | ₹ 120 |
கிண்டில் பதிப்பு : |
பாலகுமாரனின் முன் கதை சுருக்கம் நூல் குறித்து நல்ல அறிமுகம். பாலகுமாரன் எழுத்துக்களை வாசித்த தொடர்ச்சிதான் சிற்றிதழ் எழுத்து நோக்கிய வளர்ச்சி. பாலகுமாரன், சுஜாதா இருவரும் கவனம் கொள்ளப்பட வேண்டிய எழுத்தாளர்கள். விஜய் மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழர்!