நூல் விமர்சனம்புனைவு

மனுஷியின் “முத்தங்களின் கடவுள்” – விமர்சனம்


முத்தங்களின் கடவுள்’ தொகுப்பின் தலைப்பே வெகு ஈர்ப்பாக இருந்தது. மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை ஸ்டாலில் புத்தகத்தைப் புரட்டாமல் வாங்கி வந்து எனது நூலக அலமாரிக்குள் வைத்துவிட்டேன். வாசிப்பதற்கான தருணங்கள் வாய்க்காத போதிலும், எனது மூளை அடுக்குகளில் அந்த தலைப்பு அவ்வப்போது என்னை பிராண்டுவதும், நமுப்பதுமாகவே இருந்து கொண்டிருந்தது. மனுஷியின் ஆழ்ந்த குரலொன்று என் படுக்கையருகே வந்து அவ்வப்போது முணுமுணுக்கும் குரலை நிராகரித்துவிட்டு, களைப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும் உடலோடு கவிதைகளை எப்போதுமே அணுக முடியாது. காரணம், கவிதை என்பது வலிந்து திணிக்கப்படுவது அல்ல. வாசிப்பினூடாக வாசக மனமொன்று கவி மனதின் நுண்மைகளோடு கரம் கோர்த்து பயணிக்க வேண்டும். பயணத்தில் இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்ள வேண்டும். உன்னுடைய குரலைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நானும், வாசிக்கும் என் மனதினூடாகவே பயணிக்கும் மனுஷியின் கவி மனமும் ஒருவரோடொருவர் உரையாடுவது கவிதைகளின் வழியேதான் சாத்தியமாகக் கூடும்.

புத்தனின் காதல் – தொகுப்பின் முதல் கவிதையே என்னை வியப்பில் ஆழ்த்தியது. வரலாற்றின் பக்கங்களில் நாம் வாசித்தறிந்த புத்தன் தனது சுகவாழ்வு, அரச போகங்கள் போன்ற எல்லாவற்றையும் துறந்ததொரு புத்தன் மட்டுமே. ஆனால், மனுஷியோ தனது கவிதைக்குள் புத்தனையும் சக மனிதனாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். எல்லாவற்றையும் துறந்த புத்தன் இவளின் கவிதையில் காதலோடு பேசுகிறான். யசோதைக்காக காத்திருக்கிறான், புத்தனை மிகுந்த நம்பிக்கையோடு காக்க வைக்கும் துணிச்சல் மனுஷிக்குள் எப்படி வந்தது? இதுதான் கவிதைக்கான சாத்தியப்பாடு என்று மனுஷி நிரூபித்திருக்கிறார். புத்தன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாலும், திடீரென்று சப்தமிட்டு சிரிப்பதும், கண்ணீர் பொங்க அழுவதும் அவளுக்குத் திகைப்பை மூட்டுகிறது. புத்தன் என்றாலும் அவனும் மனித உடல் எடுத்திருப்பவன்தான். சிரிப்பும், கண்ணீரும் மனித யதார்த்தங்கள். அதற்கும் மேலான ஒன்று காதல். ஆனால் இது மனித காதல் அல்ல. அதற்கும் மேலான ஒன்று என்பதைப் போலவே அவனது நடவடிக்கைகள்.

ஆம், புத்தன் யசோதையின் ஞாபகம்கொண்டு காதலோடு பேசுகிறான். தன் சிலைக்கு அருகே யசோதையின் சிலையையோ அல்லது ஓவியத்தையோ வைக்கச் சொல்கிறான். யசோதையின் உருவமோ யாரும் அறியாத ஒன்று. யாரும் அறியாத அவன் மட்டுமே அறிந்த அந்த யசோதைக்காக காதல் ததும்ப கண்மூடிப் புன்னகைக்கிறான் புத்தன். மனுஷியின் கவிதையில் அவளுடைய மனநிலைக்கேற்ற புத்த காவியம் ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. காவியம் என்றால் பெரிதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை தானே…!

சில நேரங்களில் சொற்கள் நம்மை மௌனிக்கச் செய்யும். சில நேரங்களில் மிகுந்த வலியையும், வார்த்தைகளற்றும் நம்மை இருக்கச் செய்யும் தருணங்களில் நாம் என்ன செய்து கொண்டிருப்போம்?  (பக்.36) நண்பனின் குரலில் வாசிக்கப்பட்ட கவிதைகளை அவன் குரலோடு ஆரத்தழுவி முத்தமிடும் மனுஷி, கடைசியில் ‘என் ஆன்மாவின் ஆண் வடிவம் அவன்’ என்று முடிக்கும் போது, இதைவிட வேறு ஒரு தருணத்திற்காகக் காத்திருக்க முடியாததொரு தவிப்பை வெளிப்படுத்துகிறார். சொற்களால் ஆன உலகத்தில் சொற்களின்றி வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல. மனுஷி தன் கவிதையுலகில் சொற்களை மட்டுமல்ல தன் ஆன்மாவையும் நிரப்புகிறார். ஆனால், இதே மனநிலையோடு ஒருவர் தொடர்ந்து இருக்க முடியாது. நமது உடலின் இயக்கங்களையோ மனதின் இயக்கங்களையோ தம்மால் கட்டுப்படுத்த இயலாமல் போவதற்கான காரணங்கள் இந்த உலகில் ஏராளமாயும் தாராளமாயும் இருக்கின்றன. நம்மைச் சுற்றியும் நமக்கு அருகிலேயும்கூட இருக்கலாம். மனுஷியும் அதற்கு அருகில் இருந்து பேசும் ஒரு கவிதைதான், “உன்னைக் கொலை செய்வது குறித்து” (பக்.44)

உன் புகைப்படங்களை

……………

தேடிக் கொண்டிருக்கிறேன்.”

அன்பிற்காகவும், காதலுக்காகவும் ஏங்கும் ஒரு பெண்மையை அதே அன்பின் பெயரிலும், காதலின் பெயரிலும் உரசிப் பார்க்கும் குரூர ஆண் மனங்களை, அதன் குரூரம் அறியாத நட்பு மனதுடன் பழகும் போது, ஏதோ ஒரு தருணத்தில் கிழியும் அந்த முகமூடி கண்டு, உடைந்த அவளது கண்ணாடி இதயம், உடைந்த சில்லுகளாய் அவள் உடல், சமாதானங்களுக்குள் சிக்காத அவளது நம்பிக்கைகள், காதலின் வழித்தடத்தில் வெற்றுக்கூடென நிற்கும் அவளின் பிரியங்கள்… தவிப்புகள்… ஏமாற்றங்கள்… துரோகங்கள் என கவிதைகளால் தன்னை நிரப்பிக் கொள்ளும் மனுஷி,

அன்பு வற்றிப்போன இடத்தில்

கண்களை இறுக மூடிக் கொள்கிறேன்

வழிந்தொழுகும் கண்ணீரின் சூட்டில்

கரைந்து ஆவியாவேன் (பக்.91)

என்று முடித்து விடுகிறார். எதையும் எதிர்கொள்ள முடியாத அன்பு மனம் ஆவியாகும் தருணத்திற்காகவே காத்திருக்கிறது போலும். பெரும் நம்பிக்கையோடு கவிதைகளை காதலும் கண்ணீரும் கொண்டே நிரம்பியபடி இருக்கும் மனுஷிக்கு, மொழி என்பது மழைத் தூறலா? அல்லது மழைப் பொழிவா? என்று நினைக்கும்படியாக தொகுப்பெங்கும் நிறைந்து கிடக்கிறது. மொழியைப் பற்றிக் கொண்டு குழந்தைபோல் குதூகலிக்கும். அதே வேளையில் தடுமாறாமல், தடமும் மாறாமல் கடந்து செல்ல முடிகிறது. கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் கனவுகளிலும்கூட கவிதை செய்யும் திறன் மனுஷிக்கு உண்டென்பதால்தான்,

அவளின் கல்லறையைச் சுற்றி

அவளின் நிறத்தில்

கனவுகள் முளைத்திருந்தனஎன்று எழுத முடிகிறது.

இந்த தொகுப்பில் தனித்து தெரிந்த ஒரு கவிதை உண்டென்றால், அது “கடவுள்கள் தியானத்தில் இருந்த போது…” (பக்.60) என்ற கவிதையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நாம் எந்த மாதிரியான ஒரு தேசத்தில் இருக்கிறோம்? நமது மதங்கள் புனிதங்கள் கடவுள்கள் நம்மைக் கைவிட்டுவிட்ட நேரத்தில், நாம் ஏன் அவற்றைக் காக்கப் போரிட்டு மடிகிறோம்? பெண் என்பதாலேயே ஒரு சின்னங்சிறுமியைக்கூட வன்புணர்வு செய்யும் மனிதர்கள் எங்கிருந்து வந்தனர்?

இந்த தேசத்தின் எல்லைகளைக் காக்கப் போரிட்டு வீரமரணம் அடையும் வீரர்கள், எவ்வித பாதுகாப்பும் இல்லாத போதும் தங்கள் சகோதரிகளை எந்த நம்பிக்கையில் இங்கே விட்டுச் செல்கிறார்கள்? ஒரு சிறுமி பலவந்தமாக தூக்கிச் செல்லப்படும் போது நமது கடவுள், நமது மதம், நமது புனிதங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன அப்போது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் விடை இருக்காது என்பது தெரிந்தும், நாம் மதம், சாதி, கடவுள், புனிதம் என்று பேசிக் கொள்வதில் நமக்குத் துளியும் வெட்கம் கிடையாது என்பதுதானே நமது முகத்தில் பளீரென அறையும் உண்மை. நமக்கு முன்னே இந்த உண்மை எத்தனை முறை வாய்விட்டு கதறினாலும் இந்த உண்மை நமக்குத் தேவையில்லை. ஏனென்றால், நாம் பொய் வேடம் தரித்தே பழகிவிட்டோம். மதம், சாதி என்ற அரிதாரங்கள் பூசிப்பூசி நமது அழுக்குகளை மறைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டோம்.

நமது வீட்டுப் பிஞ்சுகளை அடுத்த வீட்டுக்காரன் கொஞ்சி விளையாடி, போதையில் பலியிட்டாலும் நாம் வாய்விட்டு கதற  முடியாதபடி நமது சாதிகளும், புனிதங்களும், கடவுள்களும் ஒன்று சேர்ந்து நம் வாயை இறுக்கி தைத்து விடும்.

அதனால்தான் நண்பர்களே, (பக்.60, 61)

இனி

சிறுமிகளின் பஞ்சு யோனிக்குள்

விறைத்த குறிகளைத் திணிப்பதற்கு முன்

அச்சத்தில் உறைந்த அவர்களின் கண்களை

ஒருமுறை பாருங்கள்

அவர்கள் சொல்ல விரும்பும்

சக்தியற்ற சொற்களைக் கேளுங்கள்.

இதை கவிதை என்றளவில் மட்டும் வாசித்துவிட்டு விடலாமா? சகோதரர்களே, இதை வாசித்த பிறகு, நமது கடவுளையும், தியானத்தையும் தூக்கி எறிவதற்கு நாம் ஏன் இனியும் தயங்க வேண்டும்? நாம் இனி தியானம் செய்யலாகாது.

மனுஷியின் இந்த ஒரு கவிதை போதும், எனது கண்களிலிருந்தும் இந்தக் கவிதையிலிருந்தும் தப்புவதற்காகவே எனது கடவுள் இப்போது வீட்டிற்கு வெளியே நின்று கதறிக் கொண்டிருக்கிறார். இந்த தேசத்தின் ஒவ்வொரு பெண்ணும் வன்புணர்வால் கதறுவதைப் போலவே அவரும் கதறிக் கொண்டிருக்கட்டும். குரலற்ற ஆன்மாவைப் போல கதறட்டும்.

ஒரு பெண்ணைக் காக்கத் திராணியற்ற கடவுளும், மதமும், புனிதங்களும் என்னை விட்டு விலகட்டும் என்று ஒவ்வொரு மனிதனின் இதயத்திலிருந்தும் வலிமைமிக்க குரலொன்று எழும்பட்டும். என் சகோதரிகள் சுதந்திரக் காற்றை இன்னும் முழுமையாக சுவாசிக்காத போது, இந்த நாட்டு விடுதலையின் மீது எனது சந்தேகத்தின் இருள் ரேகைகள் படிந்தே இருக்கும் என்று ஒவ்வொரு இளைஞனின் நெஞ்சிலிருந்தும் உண்மையான குரலொன்றை எழுப்பட்டும். கடவுளின் தியானம் கலையட்டும். முத்தங்களினால் அல்ல, யுத்தங்களினால் உருவான புதிய தேசத்தில் என் சகோதரிகள், புதிய வாழ்வொன்றை பரிசாகப் பெறட்டும்.


  • கவிஞர் மஞ்சுளா.

நூலாசிரியர் குறித்து

மனுஷி என்ற பெயரில் எழுதிவரும் ஜெயபாரதி 1985ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில், ‘தாக்கக் கோட்பாட்டு நோக்கில் இரவீந்திரநாத் தாகூரும் பாரதியாரும் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் (2013)  இதனைத் தொடர்ந்து முத்தங்களின் கடவுள் (2014),  ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள் (2015), கருநீல முக்காடிட்ட புகைப்படம்  (2018), யட்சியின் வனப்பாடல்  (2019) உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

2017-ஆம் ஆண்டு ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள் என்னும்  நூல் யுவ புரஸ்கார் (இளம் சாகித்ய அகாடமி)   விருதினைப் பெற்றுக் கொடுத்தது.

நூல் தகவல்:
நூல் : முத்தங்களின் கடவுள்
பிரிவு : கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : மனுஷி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : டிசம்பர் 2014
பக்கங்கள் : 96
விலை : 80
கிண்டில் பதிப்பு :

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “மனுஷியின் “முத்தங்களின் கடவுள்” – விமர்சனம்

  • சிறப்பானதொரு விமர்சனம்.
    விரக்தியின் வீதியில் சொற்களால் வலம்வரும் மனுஷி(!)யின் நூலை, தன் அருமையான விமர்சனத்தால் அலங்கரித்து இருக்கிறீர்கள் சகோதரி!
    உங்கள் விமர்சனமே இந்நூலுக்கு சிறப்பு என்று எண்ணுகிறேன்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *