தாய் தந்தையருக்கு என்ற ஒற்றை வரியுடன் துவங்குகிறது இந்த புத்தகம்

“எப்போதும்

இடமறிந்து அமைந்துவிடுகிற வரைகோடாய் இருப்பதில்லை அவன் வருகை”

” மனிதன் என்பதை

மீற முடியவில்லை என்றுதான் அவன் பேச்சைக் கோர்த்த மாலையிட்ட பிறகு”

இப்படி கவிதை வரிகளில் யூமா வாசுகி அவர்கள் “கிருபாவுக்கு” என்று வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்.

…..
என்றெல்லாம்
பயம் பயமாய் இருக்கிறது
இம்மெழுகுவர்த்தியின்
உச்சியிலேறி வெளிச்சத்தை
திரியில் கட்டும் சுடர்
பதறி இடறும்போதெல்லாம்
தடுமாறித்
தரையில் விழுமோ
என்றெல்லாம்
பயம் பயமாய்
இருந்து விட்டுப்
போகட்டும்
வெளியில் அடிப்பது வெயில்
வீட்டுக்குள்
நுழைந்து கிடப்பது வெளிச்சம்.”

வெளியில் அடிக்கின்ற வெயிலின் வெளிச்சத்தை வீட்டுக்குள் நுழைத்து கண்முன்னே காட்சியமைப்படுத்தியிருக்கின்றார்.

“இமைகளுக்குள் பொதிந்திருந்த அல்லது அமைந்திருந்த

கண்ணின் கருவிழிகள் உதயத்தைப் பரிகசிக்கிறது

தலைகீழாய் அஸ்தமித்து”

 

“அக்கணத்தில் தடுமாறும்

என் மனவழியில்

எச்சில் நூலில் ஒரு சிரிப்பைப் பட்டம் விடுகிறது குழந்தை”

தலைகீழாய் அஸ்தமித்து உதயத்தை பரிகாசி உதடு மட்டுமல்லாமல் மனவழியில் பட்டம் விடும் குழந்தையினை அந்த நூலில் கோர்த்திருப்பது அழகு.

 

“காய்களாக்கப்பட்ட பின்னும் உடைந்த வளையலின்

ஒவ்வொரு துண்டிலும்

வளைந்து கிடக்கிறது

வானவில் நினைப்பு”

 

“விழு என்றால்

விழுகிறது

உடையாமல்

தாயம்”

பள்ளிக்கால விடுமுறைகளில் தாயக்கட்டை விளையாடும் போது அதில் காய்களாக வைக்கப்பட உடைந்த வளையல்களின் துண்டுகளைப் பயன்படுத்துவது உண்டு. அது வானவில் போலக் கிடப்பதாகக் கற்பனை பண்ணியிருப்பது சிறப்பு. விழு என்றால் உடையாமல் விழ வேண்டுமாம் தாயம் என்று தாயம் விழ நாம் படும் தொடர் முயற்சியை நையாண்டி செய்து வார்த்தைகளில் முடித்திருக்கின்றார்.

“இச்சன்னல் வழியே தெரிவது வானத்தின் ஒரு பகுதி தான்” என்றான்.

முழு வானமும் தெரியும் வசமாய் ஒரு ஜன்னல் செய்ய முடியுமா?

என்ன ஒரு அழகான கற்பனை. முழு வானத்தையும் ஜன்னலுக்குள் அடைத்து விட முடியுமா? என்று கேள்வி கேட்டுப் பரந்து விரிந்து இருக்கிறது வானம். நம் மனம் மட்டுமே அங்கே விரிந்து பறக்க வேண்டும் என்று கூறி வியப்புற வைக்கின்றார்.

“பகலில் எரியும் மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து இருந்து சுருள் சுருளாய் விரிகிறது இருள்” இதுவும் ஒரு கற்பனையின் உச்சமே. பகலில் எரியும் மெழுகுவர்த்தி உடைய திரியில் இருண்மை பொதிந்து கிடப்பதை வெளிப்படுத்தி நிற்கிறார்.

 

”ஒளிரும் சமுத்திரச்சிற்பம் நீ
உன்மீது கவியும்
எண்ணங்களெல்லாம்
சுவாசக் காற்றின்
இரக்கமற்ற புறக்கணிப்பில்
பறக்கும் கானல் தோணிகள்

பளிங்குவெளி மீது
பதி வைத்துப் பாயும் விழிக்கதிரோ
பச்சை உமிழும்
பசும் புதிரின் வாசலில்
குழையும் நாய் வால்.”

சமுத்திரச் சிற்பமாய் அவளை வர்ணனை செய்து கொண்டு, அவள் இரக்கமற்று புறக்கணித்துப் போகும்போது கானல் தோணிகளாய் தான் அசைந்து கொண்டிருப்பதாகப் பதிவு செய்கிறார். பசும் புதிரின் வாசலில் குழையும் நாய் வால் என்று திருப்பி திருப்பி அவளிடம் கொள்ளும் வாஞ்சையை வரிகளாக வடித்து இருக்கின்றார்.

“பாத்திரம் கூட அற்ற பிச்சைக்காரனாய்

சூரியனை எழுப்பும் குளிர்காலங்களில் பனித்துளிகளை

நிதானமாக தானமிட்ம்

ஒற்றை விரலே

யாரின் கையில் நீயிருக்கிறாய்?

தூரிகையின்றி நீ வரைந்த மகத்தான ஓவியத்தில்

நானிருக்கக் கூடுமோ வண்ணமாக வேணும்.

எழுதுகோலின்றி எழுதிச் செல்லும் இம் மகா காவியத்தில்

நான் பெறுவேனா

துளி பாத்திரமேனும்”

நிதானமாகத் தானமிடுவதை விரல் தூரிகையாய் இன்று வரைந்த மகத்தான ஓவியமும் தனக்காகவோ அல்லது தன்னைப் போன்றோ என்று ஐயமிட்டு, இறுதியில் பெரும் அந்த தொழில் எனக்காக இருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கிறார்.

 

“கடிதக்கட்டுகளும்

புன்சிரிப்புமாய்

நெருங்கி வந்தவன்

அன்றைய அவன் வருகைக்கான அத்தாட்சிக் கையொப்பம்

பெற்றுப் பிரிகிறான் தனித்தனியே செல்லவும் தெரியாமல்

பின்னிப் பிணையவும் முடியாமல் தொட்டும் விலகியும்

தொடர்ந்து செல்கின்றன

தபால்காரனின்

சைக்கிள் தடங்கள்”

கையில் தபால் கடிதக் கட்டுகளுடன் தபால்காரர் வந்து புன்னகை சிந்தித் தரும் பணத்தினை கையொப்பம் பெற்று பின்பு அங்கே இருந்த நகர்கின்றான். அவன் போகும் இடமெல்லாம் சைக்கிள் தடங்களாகத் தெரிவதாக வரைவு செய்து இருக்கின்றார்.


நூலாசிரியர் குறித்து

ஜெ. பிரான்சிஸ் கிருபா (1974 - 2021) :  திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சார்ந்த பிரான்சிஸ் கிருபா பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.

மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல்கள் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் கன்னி எனும் புதினத்தையும் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த நாவலுக்கான விருது பெற்றிருந்தது . 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர். மேலும் சம்மனசுக்காடு கவிதைத் தொகுப்பிற்காக சுஜாதா விருது (2017), மீரா விருது ஆகிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

பிரான்ஸிஸ் கிருபா16 செப்டம்பர் 2021 அன்று காலமானார். 

நூல் தகவல்:

நூல் :   மெசியாவின் காயங்கள்

ஆசிரியர் : ஜெ.பிரான்சிஸ் கிருபா

வகை :   கவிதைகள்

வெளியீடு : தமிழினி பதிப்பகம்

வெளியான ஆண்டு :   நவம்பர் 2002

பக்கங்கள் :  80

விலை : ₹  35

 

Courtesy :  Vikatan.com (J-Francis Kiruba Photo)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *