அபுனைவு

சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய “மார்க்சியம் என்றால் என்ன?” – ஒரு பார்வை


ப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் பற்றி மார்க்ஸ் சொல்லும்போது ” இன்னொரு நான்” என்றார் . மாற்றம் ஒன்றே மாறாதது என்கிற இயற்கை இயங்குவியல் தத்துவத்தை உலகிற்குச் சொன்ன தத்துவ மேதை.

ஞானப்பால் பருகாத ஞானி. ஊமை உழைப்பாளர்களின் உரிமைக் குரல். வறுமைyயையும் அறியாமையையும் பயன்படுத்தி மக்களைத் திசைதிருப்பச் செய்யும் சொர்க்கம் நரகம் என்ற கற்பிதங்களிலிருந்து மக்களை மீட்ட சமத்துவ போராளி.

ஒரு ஞானி உருவாக அசரீரியும் கேட்கவேண்டியதில்லை, ஞானப்பழம் அருந்த வேண்டியதில்லை, கலைகளில் ஆர்வமும் சமூக பார்வையையுமே ஒரு பண்பட்ட சமூக சேவகனை உருவாக்கச் செய்யும் என்பதற்குச் சிறந்த உதாரணம் மார்க்ஸ்.

சேக்ஸ்பியரின் மனித உணர்வைப் பொங்கச் செய்யும் எழுத்துக்களில் லயித்துப் போனதும், தொடர் வாசிப்புமே மார்க்ஸை தத்துவார்த்தமாக சமூகத்தை நேசிக்கச் செய்தது.

ஒரு காதலால் என்ன செய்துவிட முடியும் என்கிற கேள்விக்கு எல்லா பதிலுமாக இருந்தார் மார்க்ஸ். ஒரு காதல்தான் அவரை கவிஞனாக்கி இருக்கிறது . ” ஜென்னி மட்டும் இல்லை என்றால் நான் சாதாரண மனிதனாகவே வாழ்ந்து இறந்திருப்பேன் ” என்கிறார் கவிஞன் மார்க்ஸ்.

ஏங்கல்ஸின் 44 ஆண்டுக்கால நட்பு தொழிலாளர் வர்க்க பேராற்றலை உலகிற்குத் தெரிய வைத்தது. ஆனால் ரஷ்யக் குடியுரிமையைத் துறந்த மார்க்ஸ் கடைசி வரை எந்த நாட்டின் குடிமகனாகவும் வாழ முடியாமல் தவித்ததுதான் பெரும் கொடுமை.

ஏழு குழந்தைகளைப் பெற்ற மார்க்ஸ் ஜென்னி தம்பதியர் நான்கு குழந்தைகளை இழந்தும், குழந்தைகள் பிறந்த போது தொட்டில் வாங்கவும், இறந்தபோது சவப்பெட்டி வாங்கவும் இயலாத வறுமை இருந்தபோதும் கூட ஒரு நாளும் அவர்களின் தத்துவார்த்தத்தைக் காவு வாங்காதது பேரதிசயம்.

” உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் !
“நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை பெறுவதற்கோ பொன்னுலகம் இருக்கிறது ! “

என்ற முழக்கங்கள் தான் இன்று வரை வர்க்கப் போர்களின் சங்கநாதமாக இருக்கிறது.

கலைகள் மீது நாட்டம் கொண்ட மனம் தான் நாகரீகமான மனநிலையை, பண்பாட்டை உருவாக்க ஒருவனை உந்தித் தள்ளுகிறது . ” உலகே மாயம் வாழ்வே மாயம் ” என வாழ்வை வெறுக்கச் செய்யும் பழைய தத்துவ வேதாந்தங்களைப் புறம் தள்ளி விடுகிறது. எந்த கடவுளும் கொடுக்காத வரமாய், தவமும் பண்ணத் தேவையில்லாத தத்துவமாய் இருக்கும் மார்க்ஸியம் பற்றி நாம் அறிந்துகொள்ள ஒரு தொடக்கநிலை கையேட்டைத் தந்திருக்கிற சு.பொ. அகத்தியலிங்கம் நூலாசிரியருக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.

ஜெர்மனின் தத்துவம், பிரிட்டிஷ் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் இவை மூன்றையும் உள்வாங்கிய மார்க்ஸியம் ஒரு சமூகத்தை ஊடறுத்துப் பார்க்கும் பொதுத்தன்மையை சமூகப்பார்வையை நமக்குள் விதைத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

எந்திரத்தனமாக எதையும் அணுகாமல் இயக்கத்தோடு இணைந்து பார்க்கும் பொருள்முதல்வாத தத்துவமே மார்க்ஸியத்தின் தனித்துவமாக நாம் அறிந்து கொள்ள இந்நூல் மிக எளிமையாக நமக்கு வழிகாட்டுகிறது. கருத்து முதல்வாதம் என்பது எந்த விமர்சனமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளும் ,அதாவது குருட்டு நம்பிக்கையின் உச்சபட்ச மூடத்தனம். பொருள் முதல்வாதம் எதையும் சந்தேகிப்பதும் கேள்வி கேட்பதுமே ஆகும். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் மழையை எதிர்பார்த்துக் காத்திருப்பது கருத்து முதல்வாதம், பொழிகின்ற மழைநீரை எக்காலத்திற்கும் சேகரிக்கக் குளம் வெட்டி வைப்பது பொருள் முதல் வாதம் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

தான் தன்னை அறிந்து தனக்குள் ஒடுங்கிக் கொள்ளச் செய்யும் ஆன்மீகத்தால் சமூகத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை. சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட மனிதக் குலம் தான் இதுவரை முன்னேறி வந்துள்ளது. இந்திய மண்ணிற்கு மிக அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் தான். நம் உடலிலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. பழைய செல்கள் அழிவதும் புதிய செல்கள் உருவாவதுமான இயக்கவியல் தத்துவம் விஞ்ஞானப்பூர்வமானது.

மாற்றம் நிகழும் என்றால் ஒழுக்கத்திலும் மாறுமா என்கிற கேள்வி மிக நுட்பமானது.. ஆம் மாறும்… என்பதே பதில். சாதிய ஒடுக்குமுறையும், பெண் அடிமைத்தனத்தையும் நிறுவிய போது சாஸ்திரச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவளாகப் பெண் இருந்தாள். ஒழுக்க ரீதியாக அனைத்து அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடந்தாள். ஆனால் இன்று அதுவும் மாறிக்கொண்டிருக்கிறது. ஒழுக்கத்தின்பால் சொல்லப்பட்ட கற்பிதங்களை உடைத்தெறிந்துவிட்டு தன் சுயத்தையும் அடைந்து சமூகத்திலும் தன்னை பங்கெடுத்துக்கொள்ளத் தயாராகிவிட்டதும் மாற்றமே.

மனிதக்குலமும் அதன் வளர்ச்சியும் கூட நூலில் முன்னிறுத்திச் சொல்லப்பட்டிருக்கிற விதமும் அருமை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமி நம்முடையது அல்ல பல கோடி பேர் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்ந்து மறைந்து இருக்கிற வரலாற்றைச் சுமந்து நிற்கும் நிலமே. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விளைவும் நமக்கு முன்னால் வாழ்ந்துவிட்டுப்போன எச்சங்களே. ” நம் குழந்தைகள் நம் குழந்தைகள் அல்ல நம் வழியாகப் பூமிக்கு வந்தவர்கள் ” என்பதைப்போல ஒவ்வொரு தனி மனிதனும் தனியாகவும் சமூகத்தின் அங்கமாகவும் இருக்கின்றான் என்பதுதான் மெய்.

மொத்தத்தில் உலகமே மாயை என்கிற அஞ்ஞான பிதற்றைத் தவிடு பொடியாக்கும் மார்க்ஸியப் பார்வை கொண்ட இந்நூல் பல கற்பிதங்களைக் கட்டுடைக்கிறது. இரவில் தெரியும் நட்சத்திரம் பகலில் தெரியவில்லை என்றால் அது மாயை என்று பொருள் அல்ல , சூரிய பேரொளி தாண்டி நம்மால் பார்க்க முடியவில்லை என்பதே விஞ்ஞானம்.

ஒவ்வொரு விளைவுக்கும் காரணம் இருக்கிறது அவசியத்துக்கும் தற்செயலுக்குமான தொடர்பு பல நேரங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

சாராம்சம் மற்றும் தோற்றம் பற்றி விளக்கும்போது, பாலியல் துன்புறுத்தல் மிக மோசமானது. இது தோற்றம்தான் பாலின சமத்துவமின்மையே பெண்களைப் போகப்பொருளாகப் பார்க்கச் செய்கிறது என்பதே அதன் சாராம்சம் என்பது புரிந்து கொள்ளக்கூடிய விளக்கமாக இருக்கிறது.

மற்றொரு முக்கிய குறிப்பாக இந்நூலில் பார்க்க வேண்டிய அம்சமாக நான் நினைப்பது, வேத மறுப்பு என்பது தமிழர்களின் மரபாக இருக்கிறது என்பதை வலியுறுத்திச் செல்கிறது. அறிவென்பது ஏற்கனவே வடிவமைக்கப்பட்டதல்ல, சிந்தனை செய்தல், கற்பனை செய்தல், முடிவெடுத்தல், சரிபார்த்தல், என மனித வாழ்வின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவு வளர்ச்சியடைகிறது இருளை விரட்டிய மின்சாரத்தைப் போல.

முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்கிற வாதம் எல்லா காலத்திற்கும் பொருந்தாது. அறிவும் அறிந்துகொள்வதும், மனிதக் குலத்தின் தொடர் முயற்சியினால் நடப்பது. அறியாமையும், வேதங்களும், இதிகாசங்களும், இறைவனால் படைக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிற வேத நூல்கள் மக்களைப் பிளவுபடுத்தியும் பெண்களை அடிமைப்படுத்தியும் பார்த்தன. அறிவும் ஆராய்ச்சியுமே மனிதப் பண்பை வளர்த்தது. வாழ்வை சமூகத்தை மேம்படுத்தியது. மொத்தத்தில் தமிழர் மரபு என்பது அறிவு சார்ந்தது அறிவியல் சார்ந்தது என்பதை அறிய வைத்திருக்கிறது இந்நூல். வர்க்கப் பேயை மார்க்ஸியமும் சாதிப் பேயை விரட்ட பெரியார் போன்றோரும் கையில் எடுத்த அறிவியலின் தேவையே இனிவரும் மனிதக் குலத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் சரியான மருந்து என்பதை உணர்வோம்.

மனிதக் குலத்திற்கு எதிரான பாசிசத்தையும் பிளவுபடுத்தும் மதவாதத்தையும் துடைத்தெறிவோம். கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகச் சேவகம் செய்யும் முதலாளித்துவப் போக்கு இந்தியத் தேசத்தை விலை பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதனால்தான் மூலதனம், கூலி, உழைப்பு ,லாபம், என பல்வேறு பொருளாதார கட்டுரைகளில் மார்க்ஸ் சொன்னது எதுவும் பொய்யில்லை என்பது எல்லா காலகட்டத்திலும் நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தை ஊன்றிக் கற்பதும், அமைப்பாக ஒன்றிணைந்து செயல்படுவதுமே இன்றைய தேவை என்பதைப் புரிந்து அஞ்ஞானம் அகற்றி விஞ்ஞானம் நோக்கி விரைந்திடுவோம் தோழர்களே.


நூல் தகவல்:

நூல் : மார்க்சியம் என்றால் என்ன? -  ஒரு தொடக்கநிலைக் கையேடு

ஆசிரியர் :  சு.பொ.அகத்தியலிங்கம்

வகை :   கட்டுரை - அரசியல்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

வெளியான ஆண்டு :  2018

பக்கங்கள் : 136

விலை : ₹  120

நூலைப் பெற  : பாரதி புத்தகாலயம் இணையதளம் (Click Here)

 

One thought on “சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய “மார்க்சியம் என்றால் என்ன?” – ஒரு பார்வை

  • மிகச் சிறப்பான ஒரு விமர்சன முறை. நூலில் கூறப்பட்ட கருத்துக்களின் முக்கிய புள்ளிகளை தொட்டு நகரும் அணுகுமுறை சிறப்பு.*தனக்குள் ஒடுங்கி கொள்ளச் செய்யும் ஆன்மிகத்தால் சமூகத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் மனித குலமே முன்னேறியுள்ளது .*அவசியத்திற்கும் கற்செயலுக்குமான தொடர்பு பல நேரங்களில் முக்கியமானது . என்று விமர்சகர் தோழர் மகாலட்சுமி இன்னும் பல சிறப்பான புள்ளிகளை தொட்டு நகர்கிறார். சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *