தி ஜா வின் பெண்கள்… வெள்ளுடை அணியாத தேவதைகள்.
அவர்களின் வானில் எப்போதும் வளையாத வில் தான். எந்த எல்லைக் கோடுகளையும் தாண்டும் வைராக்கியம் மிக்கவர்கள். விதியின் நொடிகளை உடைத்து போட்டு சிரிக்கும் புன்னகை தேசக்காரிகள். அலங்காரமாகட்டும்… அம்மணியாகட்டும்… ருக்குவாகட்டும்…. கூண்டுக்குள் அடைபட விரும்பாத அற்புதத்தின் வழி நின்று தங்களை தாங்களே இயக்குபவர்கள்.
தி ஜா நாயகிகள் பெரும்பாலும் உயரமானவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி ஒரு பிம்பத்தை நாமோ அவரோ உருவாக்கிக் கொள்தல் அழகாகவே இருக்கிறது..
ஒவ்வொரு கால கட்டத்திலும் மற்றவர் ஒதுக்கிய, மற்றவர் கண்டு கொள்ளாமல் விட்ட… மற்றவர் கண்டும் காணாமல் கடந்த பாத்திரங்களை தேடி தேடி அடையாளப்படுத்துகிறார். எதுவெல்லாம் மறைக்கப்படுகிறதோ அதன் சாத்தியக்கூறுகளை பொதுவில் வைக்கிறார். அவரின் நிஜம் பேசும் யுக்தி பெரும்பாலும் சாதாரண மனதுக்குள் உட்புகுவதில்லை. அது அப்படியாகத்தான் வடிவமைக்கப்படும் பின்னொரு காலத்து முற்போக்கை முன்னொரு காலத்திலேயே முன் வைக்கும் துணிச்சல் அபாராமானது.
“அம்மா வந்தாள்” நாவலுக்காக அவரின் சொந்த ஊரிலேயே அவரை விலக்கி வைத்தார்கள் என்பதை அறிய நேருகையில் ஆகச் சிறந்த நுட்பவாதிகளை இந்த மேம்போக்கான உலகம் சற்று ஏளனப்படுத்தியே ஒதுக்கும் என்று நிஜத்தை அருகே நின்று உணர முடிகிறது.
எதை பார்த்தாலும் சிரிப்பு வருகிறது என்று தான் நாவலின் முதல் வரியே தொடங்குகிறது. எல்லாவற்றுக்கும் சிரிப்பவள் அம்மணி. சித்தப்பா செத்த போது கூட சிரித்துக் கொண்டிருந்தவள். ‘எனக்குன்னு வந்து பொறந்தியே’ என்று அம்மா திட்டும் போதும் அதே சிரிப்பு தான். மரை கழண்டவள் அல்ல. மனம் கழண்டவள் என்று வேண்டுமானால் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். உண்மையில் அம்மணிக்கு தன் அடையாளம்……..தானற்றும் இருப்பது தான். மாற்றி யோசிக்கையில் நேரும் சாத்திய கூறுகள்.. இப்படியும் தாமரை இலை நீரென உலகம் உருட்டும் சிரித்துக் கொண்டே.
நுட்பப் புள்ளியில் அப்பா அம்மாவை விட்டு பிரிந்திருக்கிறாள் அம்மணி. பெரியம்மா பெரியப்பாவின் அன்பில் உறவில் வாழும் அவள் ஒரு கட்டத்தில் அவர்களையும் பிரிகிறாள்.
இசையின் விசை…. தனக்குள் இருக்கும் தான் என்ற இம்சையின் திசை.. கல்லூரி படிப்பு முடிய முடியவே அவளை 50 வயதுகளில் இருக்கும் கோபாலி பக்கம் ஈர்க்கிறது. கோபாலி இசை மேதை. தனியே வீடு எடுத்து கோபாலி அம்மணியை குடி வைக்கிறார். வாரங்களில் இரண்டு மூன்று நாட்கள் வந்து போகிறார். தி ஜா வின் கதை நாயகிகள்.. இங்கு தான் மற்றவர்களிடம் இருந்து சற்று தங்களை நகர்த்திக் கொள்கிறார்கள். ஆழ்மன கீறலின் வடு பிடித்து தங்களை உலகின் எதிர் பக்கத்தில் இருந்து சுழல விட்டுப் பார்க்கிறார்கள். அதன் மூலமாக அவர்களுக்காகன சுய பரிசோதனையை நிகழ்த்திக் கொள்கிறார்கள்.
அன்போ…… காதலோ… அனுபவமோ…. மோகமோ… ஈர்ப்போ… இசையோ.. எது எப்போது எந்த வயதில் எவர் மீது எழும் என்றெல்லாம் தெரியாது என்ற உண்மையை உள்வாங்கும் பக்குவம் எப்போதும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. எல்லாரையும் கட்டிக் கொண்டு அன்பு கொடுக்க வேண்டும் என்பவள் அம்மணி. அவள் ரெக்கை முழுக்க முத்தங்களால் ஆகி இருக்கிறது. ஆரத் தழுவும் அதிசயங்களால் நெய்யப்பட்டவள் அவள். அதன் பொருட்டு வழக்கமான உலகத்தில் இருந்து அவள் தன்னை விடுவித்துக் கொள்கிறாள். ஆழ் மனதில் எப்போதோ விழுந்த கீறல் என்று சொல்வது கூட கதையோட்டத்துக்கு தான் என்று நினைக்கிறேன். அப்படி விழாமலும் அவளுக்கு அது தான் பிடிக்கிறது என்றால் அப்படியே இருக்கலாம் என்பது தான் தனிமனித விடுதலை என்றும் கருதுகிறேன்.
அவள் ஆன்மா அன்பின் அரூபத்தை தேடிக் கொண்டே அலைகிறது. ஒரு முறை பெரியம்மாவிடம் கிடைக்கிறது. கோபத்தில் அடித்து துவைத்து விடும் பெரியப்பாவிடம் ஒரு முறை கிடைக்கிறது. ஒரு முறை கோபாலியிடம் கிடைக்கிறது. ஒருமுறை பட்டாபியிடம் கிடைக்கிறது. ஒருமுறை வெளிநாட்டுக்காரன் ப்ரூஸ்- இடம் கிடைக்கிறது. ஒரு முறை கோபாலியின் வேலைக்காரன் மனைவியிடம் கிடைக்கிறது. ஆனாலும் போதவில்லை. அவளை போதாமை துரத்திக் கொண்டே இருக்கிறது. காலம் முழுவதும் தன்னை தன்னாய்வுக்கு உட்படுத்திக் கொண்டேயிருக்கிறாள். அன்பின் வட்டம் அவளுள் சுழன்று கொண்டேயிருக்கிறது. அதே நேரம்.. ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது. ஒரு காரியம் போதுமானதாக இருக்கிறது….எதிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ள. எவரிடமிருந்தும் தன்னை பிரித்தெடுக்க.
கோபாலியின் பார்வை… வேலைக்காரன் மனைவி மீது இருக்கிறது என்று தெரிந்த நொடியில் கோபாலியை உதறி விட்டு வருகிறாள். அம்மணிக்குள் இருக்கும் மரப்பசுவை அப்போது நாம் அறிகிறோம். அந்த மரப்பசுவுக்குள் அவள் உயிர் மிக லாவகமாக தன்னை வியாபித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிகையில்…..அம்மணிகள் மற்றவர்களிடம் இருந்து வெகு தூரத்தில் தங்கள் சிறகுகளை விரிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பற்றற்று இருப்பதில் பேரன்பு பூக்கிறது. ஆனால் அதுவே விட்டொழித்து நகரவும் செய்யும். அன்பின் அதீதம் சமநிலைப் படுத்த முடியாமல் அம்மணிகளையோ… அலங்காரங்களையோ இறுதியில் இருக்கும் இடம் விட்டு இடம் பெயர வைக்கிறது. இடப்பெயர்வு அப்போதைக்கான ஆசுவாசத்தை அவர்களுக்கு தருகிறது. அன்புக்குள் அடங்குந்தாழாக ஒருபோதும் அவர்கள் இருப்பதில்லை. அதுதான் தி ஜா வின் பாத்திர படைப்பின் அருகாமையும் தூரமும்.
பட்டாபிக்கு தவிக்கும் அம்மணியின் இரவுகள்.. மெழுகுவர்த்திகள். பின் அதிலிருந்தும் விடுபடுதல் இலை விடும் தருணம்.
தி ஜா நாயகிகளின் பேசு மொழியில் ஒரு கிறக்கம் இருப்பதை மிக அந்தரங்கமாக உணர்ந்திருக்கிறேன்.
பேசு பொருளாக ஏன்… சிந்திக்கும் பொருளாக கூட பெண்ணியம் இல்லாத அல்லது இருக்க விடாத காரணிகள் உள்ள காலகட்டத்திலேயே அது பற்றிய விவாதத்தை இந்த நாவல் தொடங்கி இருக்கிறது. உடன் படுதலையும் முரண் படுதலையும் மிக தெளிவாகவே சொல்லி விடுகிறார். வெளிநாட்டில் அம்மணியின் செயல்பாடுகள்.. மேம்போக்காக பார்த்தால் முகம் சுழிக்க வைத்தாலும்.. அந்த சுழிப்பு நமது பாரம்பரியம்.. பண்பாடு……. மற்றும் பல ப்ளா… ப்ளா…. கொண்டு வடிவமைக்கப்பட்டவையால் நம்மையறியாமல் நாம் நம்பப்படுவது அது. ஆழமாக உற்று நோக்குகையில் பெண்ணுள்ளே ஓர் உலகம் இருக்கிறது. அந்த உலகத்தில்தான் பெண் தன்னை தான் என்று நம்புகிறாள்.
அதை அப்படி நம்ப செய்ய தி ஜா போன்றவர்கள் தொடர்ந்து போராட வேண்டி இருக்கிறது.
மரப்பசு தலையாட்டி முகம் தூக்குகையில்… அம்மணிகள் கை அசைத்து சிரிக்கிறார்கள். சிரிப்பு தான்… எத்தனை பெரிய ஆயுதம்.
நூல் : மரப்பசு
பிரிவு : நாவல்
ஆசிரியர்: தி.ஜானகிராமன்
பதிப்பகம் : காலச்சுவடு (மறுபதிப்பு)
பக்கங்கள்: 256
வெளியான ஆண்டு : முதல் பதிப்பு - 1975 | மறுபதிப்பு - மே -2016
விலை : ரூ 290
அமெசானில் நூலைப் பெற:
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.